சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே சிறந்த கலெக்டர் இவர்: யார் என்று தெரிகிறதா?

சென்னையில் அண்ணா சாலையைக் கடப்பவர்கள் கட்டாயம் மன்றோ சிலையைப் பார்த்திருக்க முடியும். குதிரை ஒன்றில் கையில் வாளுடன் கம்பீரத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் அந்த மன்றோ தான் அவர்.
சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே சிறந்த கலெக்டர் இவர்: யார் என்று தெரிகிறதா?

சென்னையில் அண்ணா சாலையைக் கடப்பவர்கள் கட்டாயம் மன்றோ சிலையைப் பார்த்திருக்க முடியும். குதிரை ஒன்றில் கையில் வாளுடன் கம்பீரத் தோற்றத்தில் அமர்ந்திருக்கும் அந்த மன்றோ தான் அவர்.
 
தாமஸ் மன்றோ(Sir Thomas Munro)


1761, மே மாதம், 27 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் ஸ்காட்லாண்டு கிளாஸ்க்கோ நகரத்தில் அலெக்சாண்டர் மன்றோ - மார்கிரட் ஸ்டார்க் ஆகியோருக்கு பிறந்தவர். இவரின் குடும்பம் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது. சிறுவயதில் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு  செவித்திறனை இழந்திருந்தார். கிளாஸ்க்கோ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். இதே காலகட்டத்தில் இவரது குடும்ப வியாபாரம் நொடித்துபோய் பெரும் கடன்சுமையில் வீழ்ந்தது. இவருடைய 18 வது வயதில் 1779 ஆம் ஆண்டு ஆங்கிலேய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிய இவர் 1780, ஜனவரி, 15 அன்று இந்தியாவுக்கு வந்தார். ஆங்கிலேயர்களுக்கும் திப்புசுல்தானுக்கும் நடைபெற்ற மைசூர் முதல் மற்றும் இரண்டாம் போர்களில் பணியாற்றினார். போரின் வெற்றியைத் தொடர்ந்து சுமார் 12 ஆண்டுகள் ஆங்கிலேய ராணுவத்தில் இருந்த மன்றோ போரை முன்னின்று நடத்திய கவர்னர் ஜெனரலான கார்ன் வாலிஸ், திப்புவின் ஆட்சியின் கீழ் இருந்த பாரமகால் பகுதியை நிர்வகிக்க கர்னல் அலெக்ஸாண்டர் ரீடுவுடன் தாமஸ் மன்றோவையும் 1792-ல் அனுப்பி வைத்தார். பின்னர் அன்றைய சென்னை மாகாணத்தின் சேலம் உட்பட "பாராமகால்" எனும் வடக்கு பகுதியான தருமபுரிக்கு உதவி ஆட்சியராக பணியாற்றினார். மைசூரின் கனரா பகுதிகளிலும் பின்னர் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்கு கீழே இருந்த பகுதிகளிலும் ஆட்சியராகப் பணியாற்றினார்.

பின்னர் இங்கிலாந்து சென்ற இவர் மீண்டும் இந்தியா திரும்பினார். 1817ல் மராட்டிய பேஷ்வாக்களுக்கு எதிரான போரை தலைமைவகித்து நடத்தி அவர்களைத் தோற்கடித்தார். 1820 ஆம் ஆண்டு  சென்னையின் கவர்னராக திரும்பி வந்தார். 

இவரது கீழுள்ள பகுதியில் அங்கு வாழும் மக்களின் பண்பாட்டையும் பொருளியலையும் புரிந்துகொள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் கற்றுக்கொண்டு, காடுமேடுகள், ஒதுக்குபுறமாக உள்ள கிராமங்கள் என பல பகுதிகளுக்கும் குதிரை சவாரி செய்து மக்களுடன் நேரடியாகவும் நெருக்கமாகவும் பழகினார்.  சென்ற இடங்களில் மக்களுக்கு அவசியமான குடிநீர் வசதி, பாசன வசதிகளை ஏற்படுத்திட தனிக்கவனம் செலுத்தினார்.

தாமஸ் மன்றோ 1792 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் 1799 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் வரை தருமபுரியிலேயே தங்கி பணியாற்றியுள்ளார். இவருக்கு தோட்டக்கலையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனாலேயே தருமபுரியில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தோட்டமும்  அமைத்திருந்தார். அந்த தோட்டம்  "மன்றோ சாப்புத் தோட்டம்" என்று அழைக்கப்பட்டது. (அந்த இடம் தற்போதுள்ள தருமபுரி வனச்சரக அலுவலகம் மற்றும் அவ்வையார் அரசு மேனிலைப்பள்ளியின் ஒருபகுதியாக இருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்).

மன்றோ இறந்தவுடன் அவரது மனைவி வில் ஹெல்மினா  தருமபுரியில் நினைவிடத்தை அமைத்துள்ளார். அந்த இடத்தில்தான் இப்போது மன்றோ நினைவுத்தூண் இருக்கிறது.  

சர் தாமஸ் மன்றோவின் நினைவுத் தூணில் எழுதப்பட்டுள்ள வாசகம்:

“சர் தாமஸ் மன்ரோ துரைக்கும் தருமபுரிக்கும் உள்ள சம்பந்தத்தைக் காட்டுவதற்காக சென்னபட்டணம் கவர்மெண்டார் இந்த ஸ்தம்பம் கட்டியிருக்கிறார்கள். மன்றோ துறை பாரமஹாலில் ரெவின்யு சூப்ரிண்டேண்டுக்கு உதியோகஸ்தராயிருந்து  1792  வருடம் ஏப்ரல்  மாதம் முதல் 1799 வருடம் மார்ச் மாதம் வரையில் இங்கே வசித்து வந்தார். இந்த ஸ்தம்பம் கட்டியிருக்கும் ஸ்தானத்திலிருந்து சிலகஜ தூரத்தில் அவருடைய வீடும் அவருக்கு இஷ்டமான தோட்டமும் இருந்தன".

தாமஸ் மன்றோ, தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி முழுவதுமாக ஆய்வு செய்து நிலத்திலிருந்து பெறப்படும் அரசின் வரிவசூல் மிகவும் அதிகம் என முடிவுக்கு வந்தார். இந்த முடிவு மன்றோவின் தலைமை ஆட்சியாளர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. மன்றோ அவர்கள் மிக நுட்பமான கணக்கீடு மற்றும் வசூல் செய்யும் முறையினால் அதிக அளவு வருமானம் பெற இயலும் என தன் வாதத்தை முன் வைத்தார். அப்போது நடைமுறையில் இருந்த வரிவசூல் செய்யும் முறைக்கு மாற்றாக ஒரு புதிய முறையினை அறிமுகப்படுத்தினார்

மேலும். நில உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே நேரடி பரிவர்த்தனை நிலவ வேண்டும் என்றும் இவர்களுக்கிடையே ஜமீன்தாரர்களாகிய இடைத்தரகர்களின் செயல்பாட்டை அறவே கூடாது எனவும் வாதிட்டார். 1807 ஆம் ஆண்டு மன்றோ இந்தியாவை விட்டு இங்கிலாந்து சென்ற காலத்தில் மன்றோவின் இரட்டை வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மன்றோவின் பரிந்துரைகள் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் மற்றும் பொது மக்கள் சபையின் தெரிவு குழுவினர் மன்றோவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டபின் இரயத்துவாரி முறை சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 1814 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய மன்றோ மாவட்ட நிர்வாகம் மற்றும் நிதித்துறை ஆகிய இருதுறைகளை சீர்திருத்தும் குழுவின் தலைவராக பணியேற்றுக் கொண்டார்.

மன்றோ 1820 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருடைய ஆட்சியின் பொழுது மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் ஆட்சியாளருக்கு (மாவட்ட ஆட்சியருக்கு அடிப்படைக் கடமையான வரிவசூல் தவிர), காவல் மற்றும் நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் திறம்பட செயலாற்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் மாவட்டங்கள், வட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டமும் வட்டாட்சியரின் கீழ் செயல்படுவதோடு வரிவசூலிப்பு மற்றும் வட்டத்தின் நீதித்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் செயல்பாடு சென்னை மாகாணம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது பரவியது.

தாமஸ் மன்றோவின் நிர்வாக செயல்பாடுகள் யாவும் வட்டார மொழியிலேயே இருக்க வேண்டும் என்றும் அம்மொழியில் புலமையில்லாதவர்களையும் பயிற்சி கொடுத்து நிர்வாகப் பதவிகளிலும் நீதித்துறைப் பதவிகளிலும் பணியிலமர்த்தினார். இது குறித்து அவர் எழுதியது “தனக்கு முன் அளிக்கப்பட்ட சாட்சியத்தின் மதிப்பினை இந்த மக்களையும், மக்களின் மொழியையும் குறித்த முழுமையான அறிவுடன், மதிப்பிடத்தக்க தகுதிபடைத்த எந்த ஒரு ஐரோப்பியனையும் நான் இதுவரை கண்டதில்லை, நமது அறிக்கைகளில் மிக முக்கியமானதாகவும். மதிக்கத்தக்கதுமாக தோன்றும் நமது நீதிமன்ற நடவடிக்கைகள். நானறிந்த வகையில் பெரும்பாலும் உள்நாட்டு மக்களின் நகைப்பிற்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது,”


சென்னை மாகாணத்தில் மன்றோவின் சீர்திருத்தங்கள்:
இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தியதுடன். நில உரிமையாளர்களுக்கும் அரசிற்குமிடையே நேரடி வரித் தொடர்பினை ஏற்படுத்தியதுடன் இடைத் தரகர்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி ஜமீன்தாரி முறையினை ஒழித்தார்.

இங்கிலாந்தில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரியினைக் குறைத்து ஒரு நிலையான வரிவிதிப்பு முறையினை இங்கிலாந்து மற்றும் இந்திய பொருட்களுக்கு நிர்ணயிக்கக் குரல் கொடுத்தார். இது தொடர்பாக 1823 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் நிலைக்குழுவின் முன் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்கள் குறித்து சான்றளிக்கப்பட்டு இந்திய வர்த்தகம் மேம்பட உதவினார் செய்தார்.

நீதித்துறை சீர்திருத்தத் தலைவராக இருந்தபோது, மாவட்ட ஆட்சியருக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு, மாவட்ட முதன்மை நீதிபதியாக செயல்படும் அதிகாரங்கள் யாவும் மாவட்ட ஆட்சியருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வரிவசூல் செய்ய உறுதி செய்யப்பட்டது, தாமஸ் மன்றோவால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலாக்கம் மற்றும் நீதித்துறைகள் அதிகாரங்கள் இன்றளவும் சிறிய மாறுதல்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாகாண ஆளுநராக செயல்பட்ட காலத்தில், மாவட்டங்களில் நிலவி வந்த கல்வித்தகுதி பற்றிய நிலைகளும் மொழியறிவு பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டு திண்ணைப்பள்ளிக் கூடங்கள் புத்துயிர்ப்பு செய்யப்பட்டு அப்பள்ளிக்கூடங்களுக்கு தொடர்ந்து நிதியுதவி அளிக்கப்பட்டது.

மேலும் அவர் இருவகையான பள்ளிக் கூடங்களை அதாவது இந்து மாணவர்களுக்கு தனியாக ஒரு பள்ளிக்கூடமும். முஸ்லீம் மாணவர்களுக்கு தனியாக ஒரு பள்ளிக்கூடமும் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் ஏற்படுத்தி ஆங்கிலத்தை ஒரு பாடமொழியுடன் போதனை செய்ய ஆணையிட்டார். மாவட்டப் பள்ளி கூடங்கள் தவிர வட்டார தலைமை அலுவலகங்களிலும் கூடுதலாக ஒரு பள்ளிக்கூடத்தினை மாகாணம் முழுவதும் ஏற்படுத்தியதோடு, பணியிலேயே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்திட மெட்ராஸ் ஸ்கூல் புக் சொஸைட்டியினை உருவாக்கினார்.

தாமஸ் மன்றோ இந்தியக் கலாச்சாரத்தினையும். இந்தியர்களின் பழக்க வழக்கங்களையும் ஆக்கபூர்வமான முறையில் அணுகியதோடு அவருடைய நிர்வாகத்தில் ஏராளமான இந்தியர்களுக்கு வாய்ப்பளித்திருந்தார்

மேலும், அவர் சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே பேதமின்றி அளவுகடந்த அன்பினை செலுத்தியதோடு அவர் ஏழை மக்களிடம் மிகவும் கருணையோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார், இது குறித்து தனது தந்தை மற்றும் சகோதாரி தனது மேலதிகாரங்களுக்கு எழுதிய கடிதத்திலும் தவறாமல் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாகாணத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளரான சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாண மக்களால் மிகவும் அன்புக்குரியவராக மதிக்கப்பட்டதோடல்லாமல் ஆண்டுகள் பல கடந்த பின்னரும் கூட அவர் நினைவாக தங்கள் குழந்தைகளுக்கு மன்றோலப்பா் என்று பெயர் சூட்டி சர் தாமஸ் மன்றோவிற்கு புகழாராம் சூட்டி வந்தனர்.

கி.பி 1800 இல் தற்போது உள்ள பெல்லாரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலத்தில் சென்னை மாகாண நிர்வாகம் ஆணையிட்டதின் பெயரில் பெறும் புகழ் பெற்ற துறவி இராகவேந்திரா சுவாமிகளால் ஏற்படுத்தப்பட்ட மந்த்ராலய கிராமத்தில் உள்ள பிருந்தாவன மடத்தினை விரிவான விசாரணை மேற்கொண்டார். அம்மடத்தின் துறவியோடு விவாதித்த பின்னர் அம்மடத்திற்கு சாதகமான ஆணைகளை பிறப்பித்தார். (மனச்சாலிஆடன் வட்டம் மெட்ராஸ் அரசாங்கத்தின் அரசிதழ் பாடம் 1 பக்கம் 213)

சர் தாமஸ் மன்றோ அவர்கள் இந்தியர்களின் மதவழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் மரியாதை செலுத்தியதோடல்லாமல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு அறக்கட்டளையினை உருவாக்கி அவ்வறக்கட்டளைக்கு சித்தூர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் வரிவசூல் முழுவதும் சென்றடைய வழிவகை ஏற்படுத்தினார். இன்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் நண்பகல் வழிபாட்டுக்குப்பின்னர் வழங்கப்படும் ‘நைய்வேத்தியம்’ மன்றோ பெயரில் அவர் ஏற்படுத்திய அறக்கட்டளை வழியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை கவர்னராக அவரது சிறப்பான பணியைக் கருத்தில்கொண்டு அவரை கவர்னர் ஜெனரலாக நியமிப்பதற்கான பரிந்துரை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இருந்தது. தாய்நாடு திரும்பும் முன்பு, தான் பணியாற்றிய கடப்பா மாவட்ட மக்களைப் பார்க்கச் சென்றார். ஆனால், அந்த நேரத்தில் அங்கே பரவி இருந்த காலரா நோய் தாக்கி, 1827, ஜூலை 6-ம் தேதி இறந்துவிட்டார். அவரது உடல் சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருக்கும் செயின்ட் மேரீஸ் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டது.  

இவர் சென்னை மாகாணம் மட்டுமல்ல, இந்தியாவிற்கே சிறந்த கலெக்டர் ஆவார். மன்றோவின் உண்மை, நேர்மை, திறமையையை இன்றைய இந்திய ஆட்சிப் பணியாளர்கள் தெரிந்து வழிநடக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com