ஒரு கர்ப்பிணி என்று கூட பாராமல்! மனம் கனக்கச் செய்யும் உண்மைச் சம்பவம்!

கொத்தடிமை முறை: சமூக வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு சுரண்டல் சக்தி
ஒரு கர்ப்பிணி என்று கூட பாராமல்! மனம் கனக்கச் செய்யும் உண்மைச் சம்பவம்!

சமீபத்தில் கொத்தடிமையிலிருந்து காவல்துறையால் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் கதையைக் கேட்க நேர்ந்தது. மீட்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதுதான் அவர் வயிற்றிலிருந்த சிசு 48 மணி நேரத்திற்கு முன்பாக இறந்திருந்தது தெரிய வந்தது. அவர் கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக வேலை வாங்கப்பட்டதுதான் அக்குழந்தை இறப்பதற்கான காரணம் எனத் தெரிய வந்தது.

ஒரு கர்ப்பிணி என்று கூட பராமல் அதிக எடையுள்ள நெல் மூட்டைகளைத் தூக்கச் சொல்லி அரிசி ஆலை முதலாளி ஒருவர் கட்டாயப்படுத்தி வேலை வாங்கியுள்ளார். மருத்துவ பரிசோதனையின் முடிவு அவருக்கு வாழ்க்கையின் மீது விரக்தியையும் மீள முடியாத சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு சமூகமும் சீராக இயங்குவதற்கு வேலை வாய்ப்பும் பொருளாதாரமும் மூல காரணிகளாக இருக்கின்றன. சமூகத்தில் ஒரு வாழ்க்கை வாழ வேலை வாய்ப்பு முக்கிய பங்காற்றுகிறது. உலகம் முழுவதும் மனிதர்கள் தாங்களும் தங்கள் குடும்பம் உறுப்பினர்களும் ஒரு பாதுகாப்பான அதேசமயம் திருப்திகரமான வேலையைச் செய்ய விரும்புகின்றனர். இதனை நாம் ஒரு பாதுகாப்பு சக்தியாக பார்க்கிறோம்.

இதே போல மனிதர்களுக்குள் மற்றொரு இயக்க சக்தியாகச் சுரண்டல் முறையும் இருக்கிறது. அது தனி நபராகவோ அமைப்பாகவோ மக்களின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தேடலைத் தனி நபர் அல்லது ஒரு குழுவின் லாபத்திற்காகப் பயன்படுத்தி அதிக பயன் அடைகின்றனர்.

வறுமை, வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள், நீர்ப் பற்றாக்குறை போன்ற சூழலியல் மாற்றங்கள், போர்ச்சூழல் ஆகியவற்றால் வறிய நிலையில் உள்ள வேலை தேடுபவர்களே இதற்கு இலக்காகின்றனர். உழைப்புச் சுரண்டலில் ஈடுபடும் நபர்கள் பொதுவாக ஒரு யுக்தியைக் கையாளுகின்றனர். அதாவது எதிர்ப்பு காட்ட முடியாத நிலையில் உள்ள எளிய மனிதர்களைத் தேடி வேலைக்கு அமர்த்துவது. இவ்வாறு கிராமப்புறங்களில் உள்ள கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு இல்லாத நபர்கள், அடையாள ஆவணங்கள் ஏதுமற்ற நபர்கள் மற்றும் மொழி தெரியாமல் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயரும் மனிதர்களே உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர்.

மற்ற மனிதர்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது மற்ற மனிதர்கள் மீது எவ்வித கருணையும் இரக்கக் குணம் இல்லாமல் இருப்பதும் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆகும். கொள்ளையடிக்கும் கூட்டத்தினர் மற்ற மனிதர்களை வெறும் உற்பத்தி செய்யும் இயந்திரங்களாகக் கருதுவதாலும் இக்குற்றம் நிகழ்கிறது.

சிலர் தொழிலாளர்களை அடிமைப்படுத்தி அவர்களிடம் மனிதத்தன்மையற்ற வகையில் நடந்துகொள்கின்றனர். எந்த ஒரு வேலையும் ஏழ்மையில் இருப்பவரை அதிலிருந்து விடுவித்து ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ வழி செய்ய வேண்டும். ஆனால் கொத்தடிமை முறையானது இருக்கும் நிலையை மோசமாக்கி நம்பிக்கையான மற்றும் நிலையான வாழ்க்கையை ஒரு தொழிலாளியிடமிருந்து பறித்துக் கொள்கிறது.

தொழிலாளர்களின் உழைப்பைக் கொள்ளையடிக்கும் நபர்கள் தொழிலாளர்களை போதுமான உணவு, ஓய்வு இல்லாமல் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்காமலும் மோசடி செய்கின்றனர். மேலும் தொழிலாளர்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தி மருத்துவ தேவைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் முடக்கி வைக்கின்றனர்.

ஒருவர் வேலைக்குச் செல்வதே அவர் வாங்கும் சம்பளத்தைப் பயன்படுத்தி அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு, கல்வி, இருப்பிடம் மருத்துவ வசதி மற்றும் எதிர்கால சேமிப்பு போன்றவற்றிற்காக தான். ஆனால் கொத்தடிமையில் சிக்கும் தொழிலாளர்கள் இவை அனைத்தையும் இழ்ந்து விடுகிறார்கள்.

வறுமை மற்றும் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் இதுபோன்ற நபர்கள் தான் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக நிற்கின்றனர். மக்களிடம் ஏழ்மையை ஒழிக்கத் தேசிய, மண்டல மற்றும் வட்டார அளவில் முனைப்புடன் பணியாற்றும் அரசையும் சிவில் சமூகத்தையும் இக்கொள்ளையர்கள் எதிர்க்கின்றனர்.

கட்டாய உழைப்பு மற்றும் கொத்தடிமை முறை போன்ற உழைப்பு சுரண்டல் முறைகள் சமூக வளர்ச்சியைத் தடுக்கின்றன. தொழிலாளர்கள் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பயன்படுத்தி அவர்களின் உழைப்புக்கு ஏற்ற நியாயமான ஊதியத்தை முறையாக பெரும் பட்சத்தில் மனித சமூகம் முழுமையாக வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. ஓட்டப்பந்தயத்தில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் அவரது உடல்நிலை சீராக இருக்க வேண்டும். அவருக்கு ஏதேனும் காய்ச்சல், கட்டைவிரலில் வலி போன்ற உடல் நலக் கோளாறு இருப்பின் மொத்த செயல்திறனும் பாதிக்கப்படும். சமூகம் என்பதும் ஒரு உயிரோட்டமான உடலைப் போன்றது. அதில் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் மற்ற உறுப்புகள் சரிவர இயங்காமல் பாதிக்கப்பட்ட பகுதிக்கான வலியை உணரும்.

ஆதலால் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்புகளும் தாங்கள் செய்யும் வேலையின் மூலம் ஒரு இயல்பான வாழ்க்கையும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே சமூகம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

படங்கள் நன்றி - கூகிள் இமேஜஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com