மெட்ராஸ் தெரியும்...  ஆனால் இந்த ‘சட்ராஸ்’ எங்கிருக்கிறது? 

14 நூற்றாண்டு கல்வெட்டு இங்கு கிடைத்துள்ளது. அப்போது இதன் பெயர் ராஜநாராயணன் பட்டினம். அப்போதே வணிகர்கள் நகரமாக இருந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதில்சுவர்கள் பீரங்கிகளுடன் நம்மை கம்பீரமாக வரவேற
மெட்ராஸ் தெரியும்...  ஆனால் இந்த ‘சட்ராஸ்’ எங்கிருக்கிறது? 

சதுரங்கப்பட்டினம் (Sathurangapattinam)

சதுரங்கப்பட்டினம் மிகவும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நகரம். பழங்கால பல்லவ தலைநகரான மாமல்லபுரத்தின் துணை துறைமுகநகரம். அதன் முக்கியத்துவத்துக்காகவே பல போர்களை சந்தித்தது. மதுரையில் இருந்து வந்த மொகலாய படை முதலில் தாக்கியது இந்நகரைத்தான். பிறகு கர்னாடக சாளுக்கியர்கள் வசமும் (அப்பொழுது ராஜநாராயணண் பட்டினம்) பிறகு நீண்டநெடுங்காலம் விஜயநகரப்பேரரசின் ஆளுமையின் கீழும் இருந்தது. (அப்பொழுது சம்பூர்வராயர் பட்டினம்) பிறகு அவர் தம்பி ராமராயரின் ஆளுகையின் கீழ் சதிரவசகன் பட்டினம் ஆயிற்று. அதுவே மருகி சதுரங்கப்பட்டினம் ஆயிற்று. அவர் காலத்தில் ஒரு பரிகாரத்திற்காக ஊரைச்சுற்றி 108 கோவில்களும் 108 குளமும் அமைக்கப்பட்டது. இப்பொழுது மிச்சம் இருப்பது விட்டிலாபுரம் கோவிலும், சதுரையில் ஒரு சில கோவில்கள் மட்டுமே!

சட்ராஸ் (Sadras)

சென்னைக்குப் புறநகரில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றுதான் சதுரங்கப்பட்டினம் கோட்டை. சென்னை-பாண்டிச்சேரி மாமல்லபுரம் வழியாகச் செல்லும் ரூட்டில் கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் அமைந்திருக்கிறது. இந்தக் கோட்டையை டச்சு மக்கள் ஆங்கிலத்தில் 'சட்ராஸ்' என அழைத்து வந்தனர். 

1606ம் ஆண்டு சென்னை வந்த டச்சுக்காரர்கள் என்று அழைக்கப்படும் நெதர்லாந்து நாட்டு வணிகர்கள் முதலில் புலிக்காட்டில் தங்களுக்கான இருப்பிடங்களை உருவாக்கினார்கள். இங்கு குடியேறி, ஆடை, நறுமண பொருட்கள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டனர். இங்கேயே நிரந்தரமாக வசித்து, வர்த்தகத்தில் ஈடுபட கருதி, செங்கற்களாலான கோட்டையை அமைத்தனர். சில நுாற்றாண்டுகள் வசித்து, ஏற்றுமதி வர்த்தகத்தில் செழித்தனர்.

இதன் பின்னர், 1612ல் சதுரங்கப்பட்டினத்தில் துறைமுகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைமுகம் மஸ்லீன் துணிகள் மற்றும் சுட்ட செங்கல்கள் உருவாக்கத்துக்கு புகழ்பெற்ற இடமாகும்.

ஒல்லாந்தக் கோட்டை
 
டச்சுக்காரர்கள் வணிக நோக்கத்துக்காகப் பெரிய கோட்டை ஒன்றை இங்கே கட்டினர். மிகப் பெரிய தானியக் கிடங்குகள், குதிரை லாயங்கள், யானைகளைக் கட்டுவதற்கான அமைப்புக்கள் போன்றவை இக்கோட்டைக்குள் இருந்தன. ஆனால் இவற்றுள் ஒன்று மட்டுமே இன்று காணப்படுகிறது. பெரிய மதில்களைக் கொண்டிருந்த இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் 1818 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றினர். தற்போது, இந்தக் கோட்டை இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சதுரங்கப் பட்டினக் கோட்டையில் 1620 க்கும் 1769 க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகிய வேலைப்பாடுகளுடைய சமாதிகளுடன் கூடிய இடுகாடு ஒன்றும் உள்ளது. 2003ம் ஆண்டுக்குப் பின்னர் இக்கோட்டையில் பெரிய அளவில் மராமத்து வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வேலைகள் பல தொல்லியல் கண்டுபிடிப்புக்களுக்கும் வழி வகுத்தன. விசயநகரப் பேரரசுக் காலத்தில் இங்கே துறைமுகம் ஒன்று இருந்ததற்கான சான்றுகளும் ஆய்வுகளின் ஊடாகக் கிடைத்துள்ளன.

இந்தக் கோட்டையை டச்சு ஆட்சியாளர்கள் சமையல் எண்ணெய், முத்துகள் ஏற்றுமதிக்காகவும் மிக மிருதுவான ஆடைகளை நெசவு செய்யும் மையமாகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும், இது தானியக் களஞ்சியமாகவும், யானைப் படையின் இடமாகவும் இருந்திருக்க வாய்ப்புகளும் இருக்கின்றன.

டச்சு மற்றும் ஆங்கில ஆட்சியாளர்கள் தங்கள் வணிகத்திற்கு இந்தக் கோட்டையைப் பெருமளவில் பயன்படுத்தினார்கள். இப்போது இக்கோட்டையை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது. சட்ராஸ் கோட்டையில் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட சில கல்லறைகளும் இருக்கின்றன. சதுரங்கப்பட்டினம் பல அழகிய கட்டுமானங்களைக் கொண்டது. 1620 முதல் 1769 வரை டச்சுக்கட்டுப்பாட்டில் இருந்த நேரத்தில் மிகச்சிறந்த கட்டுமானங்கள் இங்கு உருவாக்கப்பட்டன. காலப்போக்கில் போர்களாலும் இயற்கையின் சீற்றத்தாலும் கோட்டை சிதைந்திருப்பதை நம்மால் காணமுடிகிறது. 

சதுரங்கப்பட்டினப் போர்

ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி அனைத்து நாட்டினரும் சட்ராஸைக் கைப்பற்ற விரும்பியது ஏன் தெரியுமா? இங்கு உற்பத்தி செய்த உலகத்தரமான மஸ்லின் துணிகள் தான், உலகநாடுகள் பலவற்றிக்கும் குறிப்பாக யூரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கும் இங்கு இருந்து தான் ஏற்றுமதி ஆனது .இது பொறுக்காத ஆங்கிலேயர்கள் கி.பி 1782 பிப்ரவரி 17 ஆங்கிலேய கப்பற்படை தளபதி சர் எட்வர்டு ஹியூஸ் தலைமையில் 9 போர்க்கப்பல்கள் கொண்டு கோட்டையை தாக்க தொடங்கினர், ஒரளவு இதை எதிர்பார்திருந்த டச்சுக்காரர்கள் பிரெஞ்சு படைகளின் உதவியுடன் ஆங்கிலேய படைக்கு சிம்மச்சொப்பனமாக விளங்கிய பிரெஞ்சு தளபதி பெய்லி-டி- சஃப்ரான் தலைமையில் 11 போர்க்கப்பல்களில் திருப்பித் தாக்கினர் இரு தரப்பிலும் பலத்த சேதம், அதில் ஆங்கிலேயர்கள்  32 பேர் இறந்தனர், மேலும் 83 பேர் காயமுற்றனர். பிரெஞ்சு தரப்பில் இறப்பு- 30,காயமுற்றோர்- 10 ஆவர். இறுதியில் ஆங்கிலேயர்கள் தோல்வியை தழுவினர்,

இந்நிலையில், ஆங்கிலேய படையினர், 1796ல், இக்கோட்டையை அழிக்க, கடற்பகுதி வழியே குண்டு வீசினர். அதை எதிர்த்து போராடிய டச்சுக்காரர்கள், 1818ல் ஆங்கிலேயே படையிடம் வீழ்ந்தனர். முடிவாக, 1854ம் ஆண்டு சதுரங்கப்பட்டினம் முழுமையாக பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது. மேலும், ஆங்கிலேய அரசின் குள்ளநரித்தனமான குடைச்சல்களை தாங்க முடியாமல் கோட்டையை காலி செய்து விட்டு டச்சுக்காரர்கள் வெளியேறி விட்டார்கள். 


தொல்லியல் துறை அகழாய்வு

14 நூற்றாண்டு கல்வெட்டு இங்கு கிடைத்துள்ளது. அப்போது இதன் பெயர் ராஜநாராயணன் பட்டினம். அப்போதே வணிகர்கள் நகரமாக இருந்துள்ளது. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதில்சுவர்கள் பீரங்கிகளுடன் நம்மை கம்பீரமாக வரவேற்கும். இந்த கோட்டையானது மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். இதன் நான்கு சுவர்களின் முனைகளில் எதிரிகளை மூன்று பக்கமும் நின்று தாக்கும் படி அமைக்க பட்டிருக்கும்.பருத்தி உடைகள் முத்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன .

கோட்டையின் உள்ளே சில கல்லறைகள் உள்ளன. ஒவ்வொரு கல்லறை மேலும் ஒரு அழகிய சின்னத்தை காணலாம். பின்னர் இந்த கோட்டை கிழக்கு இந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டது. தற்போது மிச்சம் மீதிகளே வரலாற்றின் எச்சங்களாக டச்சுக்காரர்களின் பெயர் சொல்ல நிற்கிறது.

தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில், வசிப்பிட அறைகள், சமையற்கூடம், உணவு உண்ணும் அறை, நடன கூடம், பார்வை மாடம், தானிய கிடங்குகள், சுரங்க அறை, வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் என, இக்கோட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.சுவர், தரை, மேற்கூரை, உறுதியான செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க, நுழைவாயிலில் பீரங்கி, நாற்புற சுற்றுச்சுவர் என பாதுகாப்பும் இருந்தது.

இங்கு பயன்படுத்தப்பட்ட, சீனா, ஜெர்மன் நாட்டு சுடுமண் பாத்திரங்கள், புகைக்கும் குழாய், பீங்கான் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கி.பி., 1620 - கி.பி., 1769க்கு இடைப்பட்ட காலத்தில் வசித்து இறந்தோர் கல்லறைகள், தற்போதும் உள்ளன.கோட்டை சுற்றுச்சுவர், இடிபாடுகள் மட்டுமே உள்ளது. வசிப்பிட அறை, தானிய கிடங்கை, தொல்லியல் துறை புதுப்பித்து கட்டியுள்ளது.

கருஞ்சாம்பல் வானத்தின்கீழ் சிதிலமடைந்த கோட்டையின் புறத்தோற்றம். கோட்டைச் சுவரோரம் மேயும் வெள்ளாடும் கறுப்பாடும். சிதிலமைந்த கோட்டையின் அருகே தென்னைமரங்கள். அதனருகே சில நவீனக் கட்டடங்கள்.

இத்துறை, கோட்டை வளாகத்தை, தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத்துறை நிதி ஒதுக்கி மேம்படுத்திப் பராமரிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com