தமிழகத்தில் 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத ஏரிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கி உள்ளது. மேலும், உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை பொதுப்பணித்துறையின் கீழ் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் உள்ளன. இதில் 14,098 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கரைகள் பலவீனமடைந்தும், மதகுகள் பழுதடைந்தும், நீர்பிடிப்பு பகுதிகள் தூர்ந்து கொள்ளளவை இழந்தும் காணப்படுகிறது.

இந்த ஏரிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் புனரமைக்கும் பணி பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் ரூ.1,250 கோடி செலவில் 21,250 சிறுபாசன ஏரிகள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதற்கான பணிகளை ஊரக வளர்ச்சித்துறை தொடங்கியுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புனரமைப்பு பணி நடைபெறாத ஏரிகளை கணக்கெடுக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக அந்த ஏரிகளின் புனரமைப்பு பணிக்காக நிதியை பெறவும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 50 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட ஏரிகள் மட்டுமே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கவும், பாசன வசதிக்காக கூடுதல் நீரை சேமித்து வைக்கவும் அனைத்து ஏரிகளும் புனரமைக்கப்படுகிறது. வரும் ஆண்டில் 5 ஆயிரம் ஏரிகளை பொதுப்பணித்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த ஏரிகளில் புனரமைப்பு பணி மேற்கொள்ள உள்ளது.

தற்போது அதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இருந்து விரைவில் அறிக்கை பெறப்பட்டு மத்திய அரசிடம் நிதி கேட்டு அனுப்பி வைக்கப்படும்’

ஒரே ஏரியை கணக்கு காட்டி மோசடி

தமிழகத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் முதல் பாகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் புனரமைக்கப்பட்டன. தற்போது இரண்டாவது பாகத்தில் ஏற்கனவே புனரமைப்பு பணி மேற்கொண்ட 1,200 ஏரிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதேபோல், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று ஒரே ஏரியை தொடர்ந்து புனரமைத்து பல கோடியை வீணடித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. புனரமைப்புப் பணிகள் காகித அளவில் உள்ளதாகவும், வழித்தடங்கள் முழுதும் ஆக்கிரமிப்பு, சாக்கடைகளாக மாறிப்போனதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனாலேயே மத்திய அரசு நிதி தர மறுப்பதாகவும் தமிழக பொதுப்பணித்துறை மீது புகார் எழுந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆறுகள், முக்கிய கடற்கரைகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள், சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து சூழலியலை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். வருவாய்த் துறையினர் இதுவரை அந்த ஏரியை சர்வே செய்து கொடுக்காததே இதற்கு காரணம் என சொல்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதே ஒழிய வேறில்லை. மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு தீவிரம் காட்டிவிட்டு வறட்சி காலத்தில் தூற்கும் அதிகாரிகளை என்ன தான் செய்வதோ கவனம் செலுத்தினால், மழை நீரை சேமிக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர் உயரும்; குடிநீர் பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com