பற்றி எரியும் அமேசான்: காடு அரசியலும் கார்பரேட் பேராசையும்..

உலகின் மிகப்பெரிய மழைக்காடு, மூன்று வாரங்களாக தீயினால் கருகி வருகிறது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் என பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள
அமேசான் காட்டுத் தீ ( நாசாவின் செயற்கைக்கோள் படம்).
அமேசான் காட்டுத் தீ ( நாசாவின் செயற்கைக்கோள் படம்).

உலகின் மிகப்பெரிய மழைக்காடு, மூன்று வாரங்களாக தீயினால் கருகி வருகிறது. சுற்றுசூழல் ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் என பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த விஷயம் சமூகவலைதளங்களில் இளைஞர்களால் அதிகம் பேசப்பட்டும், பகிரப்பட்டு வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டில் பற்றி எரியும் இந்த தீ, இன்று வரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் கவனத்தை பெறாததற்கு காரணமாக பல காரணிகள் கூறப்படுகிறது.

உலகின் தேவைக்கான 20 சதவீத ஆக்சிஜனை தரும் ஒரு காடு, 1100 நதிகளை கொண்ட ஒரு வனப்பரப்பு, 1 கோடிக்கும் அதிகமான விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சி வகைகளை கொண்ட ஒரு வனம் தீப்பற்றி எரிந்து வருகிறது. ஆனால் உலக நாடுகள் இதனை கண்டுகொள்ளவில்லை என்றால் அதற்கான முக்கிய காரணம், இதற்கு பின்னால் இருக்கும் சில பலம்வாய்ந்த கார்பரேட் நிறுவனங்கள் தான் என்ற கருத்தும் எழாமல் இல்லை.

அப்படி அமேசானை சுற்றி நிகழும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டுமாயின், அந்த அரசியல் தொடங்கிய காலகட்டமாக 2012 ஆம் ஆண்டு வரை நாம் செல்லவேண்டியுள்ளது. அமேசான் காடுகளின் பரப்பளவில் பெரும்பான்மையை கொண்டுள்ள பிரேசில் நாட்டில், கடந்த 2012 ஆம் ஆண்டு "நிலையான வளர்ச்சி" என்ற நோக்கில் ஐ.நா. மாநாடு நடந்தது. இதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, இயற்கையை அழிக்காத வழிகளில் உலகத்தை மேம்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்தன.

இந்த முடிவை அடிப்படையாகக் கொண்டு பிரேசில் நாட்டில் புதிய அனல்மின் நிலையங்கள் தொடங்கப்படுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நீர்வளம் அதிகம் உடைய நாடான பிரேசில் தனது மின் தேவையில் 80 சதவீதத்தை அனல்மின் நிலையங்கள் வாயிலாகவே பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் பல புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கவும், அவற்றை தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த புதிய மின்நிலையங்கள் பெரும்பாலும் அமேசான் காடுகளில் உற்பத்தியாகும் நதிகளை நம்பியே திட்டமிடப்பட்டன. இந்த அனல்மின் நிலையங்களை கைப்பற்ற அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பல முன்னணி கார்பரேட் நிறுவனங்கள் போட்டியிட்டதாக கூறப்படுகிறது.

அமேசான் காடுகளில் உள்ள நதி பகுதிகளில் அணைக்கட்டுகள் ஏற்படுத்தி நீரை தேக்கி வைத்து, அதன்மூலம் மின்னுற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்காக கடந்த 6 ஆண்டுகளாக வனப்பகுதி பெருமளவு அழிக்கப்பட்டு, 40 க்கும் மேற்பட்ட அணைகள் கட்டும் பணியும் நடந்தது. அணைக்கட்டுகள் அமைக்க அமேசான் காடுகளில் வசித்து வரும் பூர்வகுடிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி, வனத்தை அழிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்தன. இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான பூர்வகுடி மக்களும் அப்பகுதியை விட்டு வலுக்கட்டாயமாக இடமாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

இந்த சூழலில் தான் பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் நெருங்கியது. அப்போது இந்த தேர்தலில் போட்டியிட்ட சயீர் போல்சனார், பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குவதற்கான வழியாக, அமேசான் காட்டினை அழித்தல் என்ற முழக்கத்தை முன்வைத்தார். பொருளாதார வளர்ச்சி என்ற ஒற்றை முழக்கத்தை வைத்து மக்களை கவர்ந்த சயீர் போல்சனார், அதிபர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்டு வந்து அழிப்புகள் என்பது இரட்டிப்பானது. மரங்களால் சூழப்பட்ட அமேசான் முழுவதும், கட்டிட தொழில் பணியாளர்களும், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர். அந்நாட்டு புதிய அதிபரின் திட்டத்தின்படி, மரங்கள் வெட்டப்பட்டு விற்பனைக்கு தயாரானது, காலியான வனப்பகுதிகள் தொழிற்சாலைகளை தாங்கி நிற்க தயார்படுத்தப்பட்டன.

இப்படி வணிக பூமியாக மாறிப்போன அமேசான் தான் தற்போது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2018ம் ஆண்டு 7,500 சதுர கிலோமீட்டர் காட்டு பகுதி அழிக்கப்பட்ட நிலையில், புதிய அதிபரின் பொறுப்பேற்புக்கு பின்னர், காடுகள் அழிக்கப்படுவது பல மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாக கடந்த மாதம் மட்டும் 2,200 சதுர கிலோமீட்டர் நிலத்தில் காடு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அழிக்கப்பட்டதைவிட இது 280 சதவீதம் அதிகமாகும்.

இயந்திரங்கள் கொண்டு மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்படுவதை போல, காட்டின் பல இடங்களில் காட்டுத்தீ, மனிதர்களால் ஏற்படும் தீ விபத்து காரணமாகவும் வனப்பகுதி அழிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் அமேசான் வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளன. இந்த காட்டுத்தீ குறித்து பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி முகாமை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு 85 சதவீதம் அதிகமாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு முழுவதும் சேர்த்தே மொத்தம் 40,000 காட்டுத்தீ விபத்துகள்தான் ஏற்பட்டன.

ஆண்டுக்கு சராசரியாக 1800 மில்லிமீட்டர் மழைபொழிவை கொண்ட அமேசான் காடுகளில் ஜூன் முதல் செப்டம்பர் வரை வறட்சிக்காலம் என்பதால், இந்த காலகட்டத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் அதன்பின்னர் இயற்கையாகவே அந்த இடங்களில் தாவரங்கள் தோன்றுவதும் வழக்கம். இப்படிப்பட்ட இயற்கை அதிசயத்தினாலேயே 5.5 கோடி ஆண்டுகளாக இந்த காடு உயிர்ப்புடன் இருந்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்றைய சூழலில் அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்களில் பல மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்றும், அதற்கு காரணம் புதிய அதிபர் சயீர் போல்சனாரின் திட்டங்கள் தான் என்றும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கான விலங்குகள், கோடிக்கணக்கான தாவரங்கள், பறவைகள், பூச்சியினங்கள் அழிக்கப்படும் இந்த காட்டுத்தீக்கு பின்னால், வெறும் அனல்மின்நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுத்தல் என்ற காரணத்தை கடந்து, சோயா ஏற்றுமதிக்கான வழித்தடங்களை உருவாக்குதல், உணவு தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற பல காரணங்கள் மறைந்திருக்கின்றன என்றும் சிலர் கூறுகின்றனர்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சோயா ஏற்றுமதியாளரான பிரேசில், தனது பெரும்பான்மை சோயா உற்பத்தியை அமேசான் பகுதியில் இருந்தே பெறுகின்றன. அவற்றில் பெரும்பான்மை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சோயா ஏற்றுமதிக்கான புதிய வழித்தடத்தை அமேசான் காடுகளை ஒட்டியே அமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோல உலகின் நன்னீரில் 20 சதவீதத்தை தன்னுள் கொண்டுள்ள இந்த அமேசான் வனப்பகுதியில் பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும், கார் நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க ஆசைகொண்டிருக்குகின்றன. அந்த வகையில் இந்த வன அழிப்பு என்பதற்கு பின்னால் பல வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த, அதிகாரமிக்க நிறுவனங்களின் தொழில் ஆசை ஒளிந்துள்ளது என கூறுகின்றனர் அமேசான் பகுதி பூர்வகுடிகள்.

350 குழுக்களாக அமேசான் முழுவதும் பரவி காணப்படும் இந்த பூர்வகுடிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த வன அழிப்புக்கு எதிராக போராடி வருகின்றனர். ஒரே ஒரு காடுதானே... அழிந்துவிட்டுப் போகிறது.. அதனால் என்ன..? என்று இருந்த பல மக்களின் மனநிலை கடந்த சில நாட்களாக அமேசானின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவே தெரிகிறது. இதேபோல உலக நாடுகளும், பிரேசில் அரசும் உணர வேண்டும் என்பதே அமேசான் பூர்வகுடிகளின் கனவாக உள்ளது.

அமேசான் காட்டு தீயை அணைக்கும் பணியில் சூப்பர் டேங்கர் விமானம்: அமெரிக்கா உதவி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலுள்ள அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க அமெரிக்காவில் இருந்து டேங்கர் விமானம் களம் இறக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவதால், உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ள அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேசில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன.

கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைப்பதற்கு குளோபல் சூப்பர் டேங்கர் நிறுவனத்திடம் இருந்து போயிங் 747 ரகத்தை சேர்ந்த விமானத்தை வாடகைக்கு எடுத்திருப்பதாக பொலிவியா அதிபர் எவோ மாரல்ஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அதன்படி அந்த நிறுவன தலைவர் டேன் ரீசி தலைமையிலான 14 பேர் அடங்கிய குழுவினர் பொலிவியா வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சூப்பர் டேங்கர் விமானம் ஒரே தடவையில் சுமார் 71 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கீழே கொட்டும் வல்லமை கொண்டது.

சூப்பர் டேங்கருடன் இணைந்து தங்களது ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பொலிவியா அதிபர், இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


அமேசான் காடுகள் எதற்காக பாதுகாக்கப்பட வேண்டும் ?

அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அமேசான் காடுகளால் உலகிற்குக் கிடைக்கும் நன்மைகள் எவை? அவை அழிக்கப்படும் போது உலகுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

புவியில் வளி மண்டலத்தில் உள்ள 20% ஆக்சிஜன் வாயு அமேசான் காடுகளால்தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் அது ‘உலகின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகின்றது. 

உலகின் கார்பன் கிடங்கு - என்றும் அமேசான் காடுகள் அறியப்படுகின்றன. அமேசான் காடுகள் மட்டும் இல்லை என்றால் உலகில் பெருகும் கார்பனை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. உலகம் வெப்பமயமாதலால் அழிந்துவிடும்.

உலகின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கம் உள்ள காடாக அமேசான் உள்ளது. உலகில் இதுவரைக் கண்டறியப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வகைகளில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில்தான் வாழ்கின்றன.

அமேசான் காடுகளில் தட்பவெப்பநிலை தனித்துவம் வாய்ந்தது. இங்குள்ள 75% விலங்குகள் மற்றும் தாவரங்களை உலகின் வேறெந்தப் பகுதியிலும் நம்மால் காண முடியாது.

தாவரங்கள் மற்றும் விலங்குகளைத் தாண்டி மனிதர்களுக்கும் அமேசான் காடுகள் வாழ்க்கை அளிக்கின்றன. அமேசான் காடுகள் 3 கோடி மக்களுக்கு இருப்பிடமாக உள்ளது. இவர்களில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் அமேசானின் பூர்வகுடிகள் ஆவர்.

அமேசான் காடுகளில் தீவிபத்துகள் சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்து உள்ளன. பிரேசில் நாட்டின் விண்வெளி மையம் கொடுத்துள்ள தரவுகளின்படி, பிரேசிலிடம் உள்ள அமேசான் காடுகளில் இந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் 75 ஆயிரம் தீ விபத்துகள் நடந்துள்ளன.

வெனிசுலா நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் 26 ஆயிரம் விபத்துகளும், பொலிவியா நாட்டில் உள்ள அமேசான் காடுகளில் 17 ஆயிரம் விபத்துகளும் பதிவாகி உள்ளன.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, அமேசானில் மிக அதிக தீ விபத்துகள் பதிவான ஆண்டாக 2019ஆம் ஆண்டே உள்ளது. இது உலகத்திற்கு நல்லது அல்ல.

அமேசான் காட்டின் தீ விபத்துகளால் இவ்வாண்டு மட்டும் 2.28 லட்சம் கோடி கிலோ அளவுள்ள கார்பன் டை ஆக்சைடு வாயு காற்றில் கலந்து உள்ளது. 2010ஆம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்படும் கணக்கீடுகளின்படி இதுவே உச்சபட்ச அளவாக உள்ளது.

அமேசான் காடுகளில் தீ பற்றி எரிவதால், அங்கிருந்து 1,700 கிலோ மீட்டர்களுக்கு வானம் கருமையாகக் காணப்படுகின்றது. கருப்பு மேகங்கள் சூரிய ஒளியைக் கூடத் தடை செய்கின்றன.

அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள விபத்துகளில் 99% மனிதர்களால் தெரிந்தும், தெரியாமலும் ஏற்படுத்தப்படுபவை என்று தரவுகள் கூறுகின்றன.

ஏற்கனவே அமேசானில் சுரங்கம் தோண்டுவது, விவசாயம் செய்வது, பாதை அமைப்பது, மின்நிலையங்கள் கட்டுவது - போன்ற பணிகளால் 20% உயிரினங்கள் அழிந்துவிட்டன. இந்தக் காட்டுத்தீ மீதமுள்ள உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

இப்படியாக அமேசான் காடுகளை அழிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை மேய்ச்சல் நிலங்களுக்காகவே செய்கின்றனர். இது 80% காடழிப்புக்குக் காரணமாக உள்ளது.

அமேசான் காடுகளை மனிதர்கள் தீவைத்து அழிப்பதால் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் காற்றில் சுமார் 34 கோடி கிலோ அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு கலக்கின்றது. உலகின் ஒட்டுமொத்த மாசுபாட்டில் இது 3.4% ஆக உள்ளது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், அமேசான் அழிக்கப்படும் போதெல்லாம், உலகமும் அழிவை நோக்கி செலுத்தப்படுகிறது.

அமேசான் காடுகளைப் பற்றி அனைத்து மக்களும் அறிந்து கொள்வதும், மரங்கள் மற்றும் காகிதங்களின் தேவையைக் குறைத்துக் கொள்வதும், அமேசான் காடுகளைப் பாதுகாக்க ஒருங்கிணைந்து குரல் எழுப்புவதும் மட்டுமே அந்தக் காடுகளைக் காப்பாற்ற உதவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com