மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி?

மின்சாரம்.. சம்சாரத்தை விட, நினைத்தாலே அச்சம் கொள்ள வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது மின்சாரம்தான். 
மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் ஏசியைப் பயன்படுத்துவது எப்படி?

மின்சாரம்.. சம்சாரத்தை விட, நினைத்தாலே அச்சம் கொள்ள வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது மின்சாரமும் மின் கட்டணமும்தான். 

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாத பட்ஜெட்டில் துண்டு அல்லது வேட்டி விழாமல் தப்பிப்போமா என்று கலங்காத குடும்பங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மின்சாரக் கட்டணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்துவிட்டோம். ஏற்கனவே அதை பலரும் அனுபவப்பூர்வமாக அனுபவித்துக் கொண்டிருப்பதால், இனி மின் கட்டணத்தைப் பற்றி மேலும் புலம்புவதற்கு ஒன்றும் இல்லை.

அதற்கு என்ன பரிகாரம் உள்ளது, மின்சாரக் கட்டணத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

இப்போது நாம் பார்க்கப் போகும் விஷயங்கள் பல நூறு யூனிட் மின்சாரத்தை மிச்சம் செய்யாது. நிச்சயமாக மிச்சம் செய்யாது. ஆனால் மாதத்துக்கு ஒரு சில யூனிட் அல்லது ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தையாவது நிச்சயம் மிச்சம் செய்து கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை.

அதாவது, முதலில் ஏ.சி. எனப்படும் குளிர்சாதன இயந்திரத்தை இயக்கும் போது ஏற்படும் மின்சாரப் பயன்பாட்டைப் பற்றி பார்க்கலாம்.

குளிர்சாதன இயந்திரத்தை இயக்குவதற்கு முன்பு அதனை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அதன் பில்டர்களில் அதிகமான தூசு படிந்திருந்தால், ஏசியை 16ல் வைத்தாலும் உங்களுக்கு குளுமையைத் தராது. எனவே, அவ்வப்போது ஏசியைத் திறந்து பில்டர்களை மட்டுமாவது சுத்தம் செய்து மாட்டுவது நல்லது.

அடுத்து, குளிர்சாதன இயந்திரத்தை 16 டிகிரி அளவுக்கு வைத்தால், ஏசியில் இருக்கும் கம்ப்ரசர் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணம் எகிறும். அதுவே அறையின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப 26 முதல் 28 டிகிரியில் ஏசியை வைத்து இயக்கும் போது கம்ப்ரசர் தேவைப்படும் போது மட்டும் இயங்கும். இதனால் மின் கட்டணம் நிச்சயம் குறையும்.

குளிர்சாதன இயந்திரத்தை வைத்திருக்கும் அறையில் தேவையற்றப் பொருட்களை வைத்திருப்பதை தவிருங்கள். பரண் இருந்தாலும் அதில் தேவையற்ற பொருட்களை வைத்தால், அது அந்த குளிர்ச்சியை தொடர்ந்து கிரகித்துக் கொண்டே இருக்கும். இதனால் அறையை குளிர்ச்சியாக வைக்க குளிர்சாதன இயந்திரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.

குளிர்சாதன இயந்திரம் இருக்கும் அறையில் அலமாரிகளில் துணிகளை அடுக்கி வைத்திருந்தால், அதற்கு காற்று உட்புகாத ஸ்கிரீன்களை பயன்படுத்துவது ஓரளவுக்குப் பலனைத் தரும்.

கடைசியாக ஒரு விஷயம், ஏசியை ஆன் செய்யும் போது மட்டும் அதற்கான ஸ்டெப்லைஸரை ஆன் செய்யவும். ஏசியை ஆஃப் செய்யும் போதே கையோடு ஸ்டெப்லைஸரையும் ஆஃப் செய்து விடுங்கள். ஸ்டெப்லைஸர் ஆன் ஆகியிருந்தால்  என்ன? அதற்கு கரண்டு எவ்வளவு செலவாகிவிடப் போகிறது என்று கேட்க வேண்டாம். 

500 யூனிட் மின்சாரக் கட்டணத்துக்கும், 501 யூனிட் மின்சாரக் கட்டணத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் ஒரு யூனிட் மின்சாரத்தின் வலிமை புரிந்திருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com