சிக்கலில் சிக்கியுள்ள சிபிஐக்கான அதிகார வரம்பு என்ன..?

தேசியப் பொருளாதார நலனைக் காப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றும் இந்தியாவின் முதன்மைக்காவல் புலனாய்வு அமைப்பான சிபிஐ, ஊழல் 
சிக்கலில் சிக்கியுள்ள சிபிஐக்கான அதிகார வரம்பு என்ன..?


1946 ஆம் ஆண்டின் தில்லி சிறப்பு போலீஸ் படையின் கீழ், 1963 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த நிர்வாக ஆணையின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட புலனாய்வு அமைப்புதான் சிபிஐ. இதற்கு மத்திய அமைச்சரவையோ அல்லது குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கவில்லை. சிபிஐ முதல் இயக்குநராக, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் காவல்துறைகளில் உயர்பதவிகளையும், சிறப்புக்காவல் துறையின் தலைமைக் காவல் ஆய்வாளராக இருந்து வந்த டி.பி.கோஹ்லி ஏப்ரல் 1,1963-இல் பொறுப்பேற்றார். அவரது தொலைநோக்குப் பார்வையால் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பாக வளர்ச்சியடையத் தொடங்கியது சிபிஐ. 

1987ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்புப் பிரிவு மற்றும் குற்றப் பிரிவு (தனி) என்னும் இரண்டு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. பொருளாதாரக் குற்றங்கள் தவிர்த்து பொதுவான குற்றங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் குற்றப் பிரிவு (தனி) உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சிபிஐ மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால், குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யாமல் மத்திய அரசுக்கே அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. 

சிபிஐ செயல்பாடுகள்

முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, மாபியா கும்பல்களால் நிகழ்த்தப்படும் ஆள் கடத்தல், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், அந்நியச் செலாவணிக் கையாடல்கள், பேரளவிலான போதை மருந்து மற்றும் பதுக்கல், வங்கி மற்றும் நிதி ஏய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி  முதலான வழக்குகளில் புலனாய்வு செய்வது சிபிஐயின் செயல்பாடு. 

தேசியப் பொருளாதார நலனைக் காப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றும் இந்தியாவின் முதன்மைக் காவல் புலனாய்வு அமைப்பான சிபிஐ, ஊழல் எதிர்ப்புப் பிரிவு, பொருளாதாரக் குற்றப் பிரிவு, மாபியா கும்பல்களால் நிகழ்த்தப்படும் பணயத்துக்கான ஆள் கடத்தல், குண்டுவெடிப்பு, தீவிரவாதச் செயல்கள் தொடர்புடைய வழக்குகளை குற்றப்பிரிவு (தனி) என மூன்று பிரிவுகளில் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்கிறது. 

தனது அரசியல் எதிரிகளைப் பணியவைக்க சிபிஐயை ஒரு கருவியாக மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசு பயன்படுத்தியதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இதேபோல, தனக்குச் சாதகமான அரசியல் பிரமுகர்களைப் பாதுகாக்க, சிபிஐயின் செயல்பாட்டை மத்திய அரசுகள் முடக்கிவைத்த சம்பவங்களும் உண்டு.

2013 நவம்பரில் புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு மத்திய அமைச்சரவையோ அல்லது குடியரசுத் தலைவரோ ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால், அரசுத் துறை ஊழியர் ஒருவருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குவாஹாட்டி உயர் நீதிமன்றம்.

குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கெனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வரும் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான விசாரணையை நிறுத்திவைக்க வேண்டும் என்று கோருவதற்கு இந்தத் தீர்ப்பு வழிகோலும் என்பதால், அன்றைய மத்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. 

அதனால்தான், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. அதோடு, சிபிஐ சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் செயல்படுவதற்கு தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறும் அன்றைய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியது.

ஊழல்களும், முறைகேடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை விசாரிக்கப் பணிக்கப்படும் சிபிஐ உரிய அதிகாரங்களுடனும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகவும் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான சரியான தருணங்கள் கிடைத்தும் மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்கள் நடவடிக்கை எடுக்க தவறியதற்கான காரணங்கள் தெரியவில்லை. 

மாநில அரசின் ஆதரவு எதற்கு?

மத்திய புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை போல் இந்தியா முழுமையும் அதிகாரம் பெற்ற அமைப்பு இல்லை. மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது மத்திய புலனாய்வுத் துறையின் கட்டுப்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் தில்லியின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே செல்லுபடியாகும். சிபிஐயின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களையும் பட்டியலிட்டிருக்கும் சட்டம்தான் தில்லி சிறப்பு காவல் சட்டம் 1946, பிரிவு 6.

சிபிஐக்கான அதிகார வரம்பு என்ன?

தில்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் மூலம் சிபிஐ அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல் துறைக்கு இருப்பதை ஒத்த அதிகாரங்களையும், பொறுப்புகளையும் சிறப்புக் காவல் நிறுவனமான சிபிஐக்கு வழங்குகிறது. தில்லியை தவிர, எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசு, பொது ஒப்புதல் அளிப்பது அவசியம்.

பொது ஒப்புதல்

பொது ஒப்புதல் என்பது, மாநில வரம்புகளுக்குள் இல்லாத மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து துறைகளிலும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு உரிமை உள்ளது. அதாவது, தெற்கு ரயில்வே தொடர்பாக மதுரையில் இருக்கும் ரயில்வே அதிகாரியை விசாரிக்க சிபிஐக்கு எந்த தடையும் இல்லை. பொது ஒப்புதல் வாபஸ் பெறப்பட்டால், ஒவ்வொரு வழக்கிற்கும் சம்மந்தப்பட்ட மாநில அரசிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும்.

பொது ஒப்புதலை திரும்பப் பெற்றால் நடப்பது என்ன?

சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை மாநில அரசுகள் வாபஸ் பெற்றால், மாநில அரசின் அனுமதியின்றி யார் மேலும் சிபிஐ வழக்கு பதிவு செய்ய இயலாது.

பொது ஒப்புதலை திரும்பப் பெறுதல்

சிபிஐயின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளை மிரட்டப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிபிஐ மத்திய அரசின் கையில் ஒரு பொம்மை போல் செயல்படுவதாகவும், இதற்கு ஆதாரமாக சமீபகாலமாக சிபிஐ துறையில் பல குளறுபடிகள் நடந்து, உயர்மட்ட அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தை நாடியதே இதற்கு ஆதாரம் எனவும், இதனால், சிபிஐ இனி ஆந்திராவில் எந்தவித சோதனைகள் செய்ய வேண்டியதில்லை என சிபிஐயின் அதிகாரத்தினை தங்களின் மாநில எல்லைகளுக்குள் இருந்து நீக்கி ஆந்திரா அரசு புதிய அரசாணையை பிறப்பித்தது. ஆந்திரா அரசின் நடவடிக்கையை மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அன்று வரவேற்றதுடன் மேற்கு வங்கத்திலும் நீக்கி உத்தரவிட்டார். இதனால் மாநில அரசின் அனுமதியின்றி மாநிலத்தில் எவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்ய இயலாது. 

பொது ஒப்புதலை திரும்பப் பெற்றுள்ள மாநிலங்கள்

இதற்கு முன்பு சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை சிக்கிம், சத்தீஸ்கர், நாகலாந்து, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் திரும்பப் பெற்ற வரலாறு உண்டு. 1998 ஆம் ஆண்டு ஜனதா தளம் ஆட்சியின் போது ஜே.எச். பாட்டேல் கர்நாடகாவில் பொது ஒப்புதலை வாபஸ் பெற்றார். 1999 காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படியே தொடர்ந்தது. ஒவ்வொரு வழக்கிற்கும் மாநில அரசின் ஒப்புதலை பெற்று தான் சிபிஐ விசாரணை நடத்தியதாக மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார். 

சிபிஐ வழக்குகள் என்னவாகும்?

நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான சோதனைகள் மற்றும் விசாரணைகள் நடைபெறுவதற்கு எந்த தடையும் இருக்காது. நீதிமன்றங்களில் வாரண்ட்கள் வாங்கி, அந்த வழக்கு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படும். புதியதாக விசாராணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளை தில்லி நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்து, தங்களின் விசாரணையை இரண்டு மாநிலங்களிலும் மேற்கொள்வதற்கு தடையேதும் இருக்காது. 

சிபிஐ வழக்குகளில் முதன்மையானவை

சிபிஐ புலனாய்வு செய்த வழக்குகளில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு, பிரியதர்சினி மத்தூ கொலை வழக்கு, நிதாரி கொலைகள், தாவூத் இப்ராகிம் வழக்கு, சோதரி அபயா கொலை வழக்குகள் முதன்மையானவை. மேலும் ஜோகிந்தர் சிங், பி.ஆர்.சர்மா ஆகியோர் இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் இருந்த காலத்தில் சிபிஐயில் நடைபெற்ற ஊழல்களை தகவலறியும் உரிமைச்சட்டம் வெளிக்கொணர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, காவல்நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். அழைத்துச் செல்லப்பட்ட சிபிஐ அதிகாரிகள் பின்னர் போலீஸார் விடுவித்துவிட்டனர். கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ‘ரோஸ் வேலி', ‘சாரதா சிட்பண்ட்ஸ்' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கியவரும், தற்போதைய கொல்கத்தா மாநகர காவல்துறைத் தலைவராக ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜீவ் குமாரை இதுதொடர்பான வழக்குகளில் சிபிஐ விசாரிப்பதற்கு மேற்கொண்ட முயற்சியை அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்துடன், ராஜீவ் குமாரை விசாரிப்பதற்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா என்று சிபிஐ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, காவல்நிலையத்துக்கு அவர்கள் அழைத்துச் சென்றது தேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதனிடையே, மேற்கு வங்க மாநில அரசை கவிழ்க்க வேண்டும் என்று மோடி - அமித் ஷா அணி சதி செய்து வருவதாகவும்  குற்றம்சாட்டி, கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதிரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் மம்தா பானர்ஜி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசியல் கட்சியினரிடையேயும், தொண்டர்களிடேயும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மம்தாவின் தர்னா போராட்டத்திற்கு ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கேஜரிவால், லாலு, அகிலேஷ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை பரபரப்புகளுக்கு மத்தியில் மேற்கு வங்க விவகாரம் இந்திய அரசியலில் மேலும் பரபரப்பை கூட்டிள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்க போலீஸார் சிபிஐ அதிகாரிகளை கைது செய்து தங்களை பணி செய்யவிடாதது குறித்தும், சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க அனுமதி கோரியும் உச்சநீதிமன்றத்தில் இன்று சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நாளை வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவல் துறை ஆணையருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தால், அவர் வருந்தும் அளவுக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். 

இதனிடையே, சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து பணி செய்யவிடாதது குறித்து மேற்கு வங்க அரசு மீது தலைமை தேர்தல் ஆணையத்திடம் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, பூபேந்திர யாதவ் ஆகியோர் அடங்கிய பாஜக தலைவர்கள் குழு புகாரளிக்க உள்ளனர்.  

அண்மைக்காலமாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் சில குறிப்பிடத்தக்க வழக்குகளை நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சிபிஐயிடம் புலனாய்வு செய்யுமாறு பரிந்துரைத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பயமுறுத்த பயன்படும் சிபிஐ என்கிற வேட்டை நாயை அரசியல் தலையீடு இல்லாமல் தன்னிச்சையான சட்டபூர்வ அதிகாரங்களுடன் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆட்சி அதிகாரத்தில் அமரும் அரசுகள் தவறிவருவதுடன் தேர்தல் நேரத்தில் மட்டும் சிபிஐ குறித்த நடவடிக்கைகள் சர்ச்சைகளாகப்பட்டு வருவது வேடிக்கையாகவும் வேதனையுமாக தான் உள்ளது. 

நமது நாட்டில் ஏற்கெனவே மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பு, தேர்தல் ஆணையம், மத்திய தகவல் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாடின்றி, சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு உள்ளது போன்று நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சிபிஐக்கு இத்தகைய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு சட்டபூர்வ அதிகாரங்களுடன் சிபிஐயும் செயல்படும் விதத்தில், அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மத்தியில் ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வரும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

2013-ல் சிபிஐயின் பொன் விழாவையொட்டி, தில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சிபிஐ-க்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்கவும், அதன் கடந்தகால மற்றும் எதிர்காலப் பணிகளைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என உறுதியளித்தவர், சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதற்கு நாங்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்ததுடன், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான விவகாரங்களில் சிபிஐ தனது வரம்பை உணர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அந்த அமைப்பு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

சிக்கலில் சிக்கியுள்ள சிபிஐயின் புதிய இயக்குநராக, ரிஷி குமார் சுக்லா இன்று திங்கள்கிழமை முதல் (4.2.2019) பதவியேற்றுள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலும், இவரது செயல்பாடும் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com