சிறப்புக் கட்டுரை: சாஞ்சிவனம் யாத்திரை

மௌரியர்கள், குஷானர்கள், குப்தர்கள் என இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று பாராம்பரியத்துக்கான சாட்சியாக இருப்பது சாஞ்சி ஸ்தூபி.
சிறப்புக் கட்டுரை: சாஞ்சிவனம் யாத்திரை

மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலுக்கு அருகில் உள்ள சாஞ்சியின் பௌத்த ஸ்தூபிகள், அலங்கார வளைவுகள், செங்கல் கட்டுமானங்களை மட்டும் பார்வையிடுவதுதான் எங்களது திட்டம். மௌரியர்கள், குஷானர்கள், குப்தர்கள் என இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று பாராம்பரியத்துக்கான சாட்சியாக இருப்பது சாஞ்சி ஸ்தூபி. பௌத்த கட்டுமானங்களை நேரில் பார்த்து ஆய்வு செய்வதும் குறிப்பாக, முதலும் கடைசியுமான இந்தியப் பேரரசருமான அசோகரின் சிற்ப வடிவத்தை நேரில் பார்ப்பதுதான் குறைந்தபட்ச செயல்திட்டமாக இருந்தது.

குறைந்தபட்ச செயல்திட்டம், நாளடைவில் மெகா திட்டமாக உருவெடுத்தது. பௌத்த கலைச்சின்னங்கள் மட்டுமல்லாமல் இந்து, சமண வரலாற்று பொக்கிஷங்கள், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரசு வழி வந்த வரலாற்று சின்னங்கள், கலைப்பொக்கிஷங்களும் திட்டத்தில் இடம்பெற்றன. முதல் நாள் போபால் ஏரிக்கரை தொடங்கி, எங்களது யாத்திரை நிறைவு பெற்ற ஓர்ச்சா அரண்மனை வரை, போகுமிடமெல்லாம் ஒரு நதி எங்களை விடாமல் துரத்திக்கொண்டிருந்தது. அதுதான் பேத்வா! நதியில்லாமல் நாகரிகம் ஏது? கலையும் பண்பாடும் ஏது?

பிம்பேத்கா

முதல் நாள் சென்ற முதல் இடம். போபாலில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இடம். 1957-ல், வி.எஸ். வாகாங்கர் என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. ஏறக்குறைய 700 இடங்கள். இரண்டு மலைகளுக்கு இடையேயான பகுதிகளில் 178 இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டன. அனைத்தும், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அழகான, தத்ரூபமான ஓவியங்கள். குறிப்பாக குதிரை, யானை, மான், எருது, குரங்கு, மயில் போன்றவை சிறப்பான முறையில் வரையப்பட்டுள்ளன. வெள்ளை அல்லது சிவப்பு நிற வண்ணங்களில் சிவன், பிள்ளையார் போன்ற உருவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநில சுற்றுலாத் துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. அமைதியான பிரதேசம், ஆழமான வரலாற்றுப் பின்னணியோடு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

ஆஷாபுரி

கி.பி. 11 & 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரமரா ஆட்சியாளர்கள் வசம் இருந்த பகுதி. அவர்களுள் மகராஜ் போஜா முக்கியமானவர். போஜராஜாவை மத்தியப் பிரதேசத்தின் ராஜராஜ சோழன் என்று சொல்லலாம். உண்மையில், ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனுக்கு நெருக்கமானவர். போஜாவும் ராஜேந்திர சோழனும் இணைந்து ஒரு கூட்டுப்படையை உருவாக்கி, கலிங்கத்தின் மீது படையெடுத்திருப்பதை திருவாலாங்காட்டு செய்திகளும், திருமலையில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு செய்தியும் உறுதிப்படுத்துகிறது. போஜாராஜா காலத்தில் கட்டப்பட்ட பூமிஜா வகை கோயில் கட்டுமானங்களைப் பார்ப்பதற்குத்தான் சென்றிருந்தோம். பேத்வா நதிக்கரையில் 24 கோயில்கள் கொண்ட இடம், இன்று சிதிலமாகிக் கிடக்கிறது. அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட மிச்சங்களை, ஆஷாபூரி அருங்காட்சியகத்தில் கண்டோம்.

பிள்ளையாருடன் இணைந்து சப்த கன்னிகையர்களும் ஆடுவது போன்ற சிற்பம், இன்னும் கண்ணில் நிற்கிறது. சப்த கன்னிகையர் நிற்பதுண்டு, உட்கார்ந்து கொள்வதுண்டு. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் சப்தகன்னிக்கையர் கொஞ்சி குலாவுவதையும் பார்த்திருப்போம். ஆனால், ஒயிலாக ஆடுவது போன்ற சிற்பத்தொகுதி இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்றே சொல்லலாம்.

போஜ்பூர்

அடுத்து நாங்கள் சென்ற இடம், போஜ்பூர். மலை மீதுள்ள பிரம்மாண்டமான சிவன் கோயில். ராஜேந்திர சோழனின் சமகாலத்தில் போஜராஜாவால் கட்டப்பட்டது. எல்லா வகையிலும் தஞ்சாவூர் பெரிய கோயிலை ஞாபகப்படுத்தியது. பிரம்மாண்டமான லிங்க உருவம், உள்கட்டுமானங்கள், மேற்கூரை அமைப்பு என போஜ்பூரில் ஒரு தஞ்சாவூரை பாரக்க முடிந்தது. சமரங்கனா சூத்ரதாரா என்னும் போஜராஜாவின் நூல், நகரா வகை கோயில் கட்டுமானங்களுக்கு ஒரு வாஸ்து சாஸ்திர நூலாகக் கொண்டாடப்படுகிறது. 83 அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்த நூல்தான், அன்றும் இன்றும் கோயில் கட்டுமானங்களுக்குக் கையேடாக இருந்து வருகிறது. போஜ்பூர், இன்னும் வழிபாட்டில் உள்ள கோயில். தேங்காய், வில்வம், நவ்வாப்பழம் போன்றவற்றோடு புளியம்பழத்தையும் சிவனுக்குப் படையல் செய்கிறார்கள். பிரம்மாண்டான தோற்றத்தில் இருந்தாலும் போஜ்பூர், முற்றுப்பெறாத கோயில். ஒருவேளை கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தஞ்சாவூர் பெரியகோயில், ஒரிஸாவின் லிங்க ராஜா கோயில்களைவிட பிரம்மாண்டமாக இருந்திருக்கும்.

சாஞ்சி ஸ்தூபி

மறுநாள் முழுவதையும் சாஞ்சியில் செலவிட்டோம். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் வரை பௌத்தர்களின் முக்கியமான வழிபாட்டுத் தலமாக இருந்த சாஞ்சி ஸ்தூபி, புத்தரோடு எந்தவிதத்திலும் நேரடி தொடர்பு பெறாத இடம். சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் பௌத்த யாத்ரிகர்களின் இடமாகவும் சாஞ்சி இருந்ததில்லை. ஆனால், மஹாவம்சத்தில் சாஞ்சி பற்றிய ஏராளமான குறிப்புகள் இடம்பெறுகின்றன. சாஞ்சிக்கு அருகேயுள்ள விதிஷா என்னும் நகரத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரியின் மகளை அசோகர் மணம் செய்ததாகவும், பின்னர் அந்த ராணி கட்டிய ஸ்தூபி என்றும் சொல்லப்படுகிறது. அசோகரின் மகனான மகேந்திரன், இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் ஒரு மாத காலம் இங்கே தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வரலாற்றுப் பின்னணியைவிட ஸ்தூபியின் கட்டுமானங்களை ஆய்வதுதான் எங்களுடைய பயண நோக்கம். ஆகவே, நான்கு திசைகளிலும் உள்ள அலங்கார வளைவுகளை ஆய்வு செய்யத் தொடங்கினோம்.

அடுத்து வந்த 6 மணி நேரங்களும், அலங்கார வளைவுகளின் கட்டமைப்பு, அவை சொல்லும் கதைகள் என பல்வேறு விவாதங்கள், ஆய்வுகள் இடம்பெற்றன. ஒவ்வொரு வளைவும் 42 அடி உயரத்தில் உள்ளன. அவற்றின் காலம் கி.மு. 234 என்று கண்டறியப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளும், சாரநாத் குறிப்புகளை ஒத்திருக்கின்றன. ஸ்தூபிகளைப் பார்த்துவிட்டு, அதன் பின்னால் உள்ள செங்கல் கட்டுமானங்களையும் பார்வையிட்டோம். குப்தர்கள் காலமான கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் மடமும், அங்கு சிதைந்த நிலையில் உள்ள பௌத்த விகாரத்தையும் கண்டோம். இந்திய பண்பாட்டுச் சின்னமான சாஞ்சி பற்றி நிறைய விரிவாக எழுதவேண்டி இருக்கிறது. இந்தியாவின் புராதனமான, இன்னும் எஞ்சியிருக்கும் கட்டுமானமான சாஞ்சி ஸ்தூபி, இந்தியா என்னும் ஒற்றை தேசத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து இந்தியக் குடிமகன்களும் அவசியம் சென்று பார்த்தே ஆக வேண்டிய இடம்.

உதயகிரி

சாஞ்சிவன உலாவின் மூன்றாவது நாள், அதிகாலை 5 மணிக்கே ஆரம்பிமாகிவிட்டது. கடுங்குளிருக்கு நடுவே விதிஷாவிலிருந்து புறப்பட்டு உதயகிரி குடைவரைகளுக்குச் சென்றோம். உதயகிரியின் முக்கியமான வரலாற்றுச் சின்னம், வராஹா குடைவரைதான்.

13 அடி உயரத்தில் பிரம்மாண்டமான வாராஹா உருவம். பூமாதேவி அவரது இடது தோளில் உட்கார்ந்திருக்கிறார். மேற்புறம் தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா, காளை வாகனத்தில் சிவன், சூரியன், அக்னி, வாயு, ருத்ரர்கள், கணதேவர்கள், ரிஷிகள் என பெருங்கூட்டமே நின்ற கோலத்தில் இருக்கிறார்கள். உதயகிரியில், சிறிதும் பெரிதுமாக ஏறக்குறைய 20 குடவரைகள் உள்ளன. ஒரு சில இடங்களில் நகரி கல்வெட்டையும் காணமுடிகிறது. குப்தர்கள் காலம் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளும், குடைவரைகளையும் இங்கே பார்க்க முடிகிறது.

பீஜாமண்டல்

அடுத்து நாங்கள் சென்ற இடம், பீஜாமண்டல். ஒரு காலத்தில் விஜயமந்திர் என்னும் பிரம்மாண்ட கோயிலாக இருந்த இடம். ஒரிஸாவின் கோனார்க் போல் பிரம்மாண்டமான, தொடர்ந்து வழிபாட்டில் இருந்த இடம். இது நாற்புறமும் வாசலைக் கொண்டிருக்கும் சர்வதோபத்ரா வகையான கோயில் இது. பரமரா வம்சத்தைச் சேர்ந்த நாரவர்மான், இந்தக் கோயிலை சீரமைப்பு செயதிருக்கிறான். அடுத்து வந்த 300 ஆண்டுகளில், முஸ்லிம்களின் படையெடுப்பால் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கிறது. 1234-ல் இல்ட்டுமிஷ், 1293-ல் அலாவுதீன் கில்ஜி, 1526-ல் பகாதூர் ஷா, 1682-ல் ஔரங்கசீப் என அடுத்தடுத்த ஆட்சியாளர்களின் கொள்ளைக்கு இலக்காகியிருக்கிறது.

பின்னாளில் கோயில், மசூதியாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது சர்ச்சையின் காரணமாக கோயில் மூடப்பட்டு, பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தேவ்கர்

மறுநாள் முழுவதும் தேவ்கரில் இருந்தோம். முதலில் தசாவதாரக் கோயில். நம்மிடையே எஞ்சியிருக்கும் குப்தர் காலத்து கோயில்களில் பழமையானது இது. இந்தியாவிலேயே பழமையான இந்துக் கோயிலாக இதைச் சொல்ல முடியும்.

மேற்கே பார்த்த வாயிலைக் கொண்டுள்ள தசாவதாரக் கோயிலில் வடக்கு, கிழக்கு, தெற்குபுறச் சுற்றுச் சுவர்களில் பிரம்மாண்டமான புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கஜேந்திர மோட்சம், நரநாராயண உபதேசம், சயனத்தில் உள்ள விஷ்ணு போன்றவற்றின் அழகும், கட்டமைப்பும் குப்தர்களின் காலம், கலையின் பொற்காலம் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் உள்ளன.

அடுத்து நாங்கள் சென்றது, தேவ்கரில் உள்ள பிரசித்தி பெற்ற சமண ஆலயங்களின் தொகுதிக்கு. இந்து கோயில்கள் போன்றே நகர கோபுர அமைப்பில் பிரம்மாண்டமான கோயில் அதைச்சுற்றி ஏராளமான வரிசைகளில் சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள். நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் சமணர்களைப் பார்க்க முடிகிறது. கூடவே, யட்சிகளின் சிற்பத் தொகுப்புகள் வேறு தனி வரிசையில் உள்ளன.

ஓர்ச்சா

தேவ்கரில் இருந்து 70 கி.மீ. தூரம் சாலை மார்க்கமாகப் பயணம் செய்து ஓர்ச்சா சென்றடைந்தோம். ஓர்ச்சா, 12 முதல் 15-ஆம் நுற்றாண்டு வரையிலான காலகட்டங்களைச் சேர்ந்த பிரம்மாண்டமான அரண்மனை வளாகங்களைக் கொண்டிருக்கும் இடம். இங்குள்ள ராம்ராஜா கோயில் மற்றும் சில பிரசித்தி பெற்ற கோயில்களைப் பார்த்துவிட்டுக் கிளம்பினோம்.

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் கலை உலா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. வரலாறு, பண்பாட்டுச் சின்னங்களைத் தேர்ந்தெடுத்து, அது குறித்து ஆய்வுகளை ஆறு மாதங்கள் படித்துத் தெரிந்துகொள்வதுடன், நேரில் பார்வையில் அது குறித்து உரையாடல்களுக்கும் ஏற்பாடு செய்கிறது.

இந்தியாவில் ஆன்மிக யாத்திரைகள் நிகழ்வதுண்டு. ஆனால், அறிஞர்கள் புடை சூழ, கலை, பண்பாட்டு யாத்திரைகள் மேற்கொள்வது என்பது அரிதான நிகழ்வு. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் ஓரிடத்துக்குச் சென்று, அங்கேயே அமர்ந்து அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொள்ளும் வாய்ப்பை நாங்கள் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பெற்று வருகிறோம். பத்து நாள்களில் நாங்கள் பெற்றதை ஆண்டு முழுவதும் மற்றவர்கள் அறியச் செய்யும் வகையில் செய்வதுதான் எங்களது நோக்கம். இயன்றவரை அதைச் செய்து முடிப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com