Enable Javscript for better performance
அரசியல் கட்சிக்கு மாற்று தீவிரவாதமல்ல!- Dinamani

சுடச்சுட

  

  அரசியல் கட்சிக்கு மாற்று தீவிரவாதமல்ல!

  By - சாது ஸ்ரீராம்  |   Published on : 18th February 2019 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pulwamaattack-7

   

  சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வலம் வந்த ஒரு விடியோ பார்ப்போரின் மனத்தை கனமாக்கியது. ஒரு ராணுவ வீரர் தனது வருடாந்திர விடுமுறையில் வீட்டுக்கு வருகிறார். அது ஒரு கிராமம். மண் சுவற்றுக்கு வெளியில் நின்று கூப்பிடுகிறார். உள்ளிருந்து மனைவி வருகிறார். கணவனின் மேல் சாய்கிறார். ஒரு வருடத்திற்குப் பிறகான சந்திப்பு. இருவரின் கண்களிலும் கண்ணீர். இது பிரிவு தந்த வேதனைக் கண்ணீரா அல்லது அடுத்த முப்பது நாட்கள் இணைந்திருக்கப்போகிறோம் என்ற ஆனந்தக் கண்ணீரா? அதன் பின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளி வருகிறார்கள். எல்லோரும் அவருடன் கைகோர்த்து நடக்கிறார்கள். இப்படியாக முடிகிறது அந்த வீடியோ.

  காலை பத்து மணிக்கு அலுவலகம் சென்று விட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி மனைவி, குழந்தைகளுடன் நாட்களை கழிக்கும் நம்மைப் போன்ற பலருக்கு இந்தக் கண்ணீரின் சுகத்தையும், அழுத்தத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. குடும்பத்தாரின் மீது காட்டவேண்டிய அன்பு, பாசம், பரிவு, வேதனை ஆகிய எல்லாவற்றையும் அவ்வப்போது வெளிப்படுத்த முடியாமல் மூட்டையாகக் கட்டி எடுத்துவந்து இந்த முப்பது நாட்கள் விடுமுறையில் கொட்டிவிட்டு செல்ல வேண்டும். இதுதான் ராணுவ வீரனின் வாழ்க்கை. முப்பது நாட்கள் விடுமுறை முடிந்து கிளம்பும்போது, அனைவரின் கண்களும் குளமாகும். இனி இதுபோன்ற தருணத்திற்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அப்படி காத்திருக்கும் நாட்களில் இந்த முப்பது நாட்களில் கிடைத்த நினைவுகளே அவர்களை மகிழ்விக்கும், அழவைக்கும். ஒரு வருட காத்திருப்புக் காலமே இவ்வளவு துக்கத்தை கொடுக்கிறது என்றால், இனி சந்திக்க மாட்டோம், அவர் உடல் பெட்டியில் வருகிறது என்ற செய்தி அந்தக் குடும்பத்தை என்ன பாடுபடுத்தியிருக்கும்?

  கடந்த 14ம் தேதி ஜம்முவில் உள்ள புல்வாமா தற்கொலை படை தாக்குதலில் தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவச்சந்திரன் மரணமடைந்தார்கள். இந்த தாக்குதலை பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுத்தியுள்ளது.

  ஒரு குட்டிக்கதை!

  ஒரு தாய். மரணப்படுக்கையில் கிடந்தார். "என் மகன் வந்துவிட்டானா?" என்று அடிக்கடி கேட்டுக்கொண்டேயிருந்தார். மகன் போருக்கு சென்றிருக்கிறான். அவனை வெற்றி வீரனாக பார்க்க வேண்டும் என்பதே அந்தத் தாயின் இறுதி ஆசை. தன்னை பார்க்க வருவோரிடமெல்லாம், ‘என் மகனை பார்க்காமல் சாகமாட்டேன்', என்று அழுத்தமாக சொல்லிக்கொண்டிருந்தார் அவர்.

  ஒரு நாள் திடீரென்று வீட்டு வாசலில் ஒரு கூட்டம். வந்து நிற்பது அந்த நாட்டு அரசன். படுக்கையில் கிடந்த தாயின் அருகில் சென்று அமர்ந்தான்.

  ‘பாட்டி! அரசர் உங்களை பார்க்க வந்திருக்கார்!' என்று மற்றவர்கள் சொன்னார்கள். கைகளை குவித்து வணக்கம் சொன்னார் அந்தத் தாய். முகத்தில் ஒரு பிரகாசம், புன்னகை.

  ‘அம்மா! நலமாக இருக்கிறீர்களா! உங்களை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்' என்றான் அரசன்.

  ‘அரசே! மிகவும் மகிழ்ச்சி. இனி நான் நிம்மதியாகச் சாவேன்', என்று சொன்னார் தாய்.

  ‘என்னம்மா இது! சற்று முன்வரை உங்கள் மகனை பார்த்துவிட்டுத்தான் சாவேன் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது நிம்மதியாக சாவேன்', என்று சொல்கிறீர்களே! நான் உங்கள் மகனல்ல!' என்றான் அரசன்.

  சிரித்தார் தாய். அரசனைப் பார்த்து மீண்டும் வணங்கினார். அடுத்த நிமிடம் அவர் உயிர் பிரிந்தது. அரசனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓ. .வென அழுதான். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஆச்சர்யம். அரசனிடம் பேசினார்கள்.

  ‘அரசே! இவரின் மரணம் உங்களை இந்த அளவிற்கு பாதித்துவிட்டதா?', என்று கேட்டார்கள். அரசன் பேசினான்.

  ‘மக்களே! இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போரில் இவருடைய மகன் இறந்துவிட்டான். இறப்பதற்கு முன் என்னை சந்திக்க ஆசைப்பட்டான். நானும் அவனை சந்தித்தேன். அப்போது அவன், “அரசே! என் தாய் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். நான் இறந்ததும் நீங்கள் சென்று என் தாயை சந்தியுங்கள்”, என்று சொன்னான். ‘நான் சந்திப்பது இருக்கட்டும்! தாயை சந்திக்க நீ ஆசைப்படவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவன், 

  ‘அரசே! போருக்கு புறப்படும் முன் தாயிடம் ஆசி பெற்றேன். அப்போது அவர், “போரிடுவது வீரனுக்கு பெருமை. அதைவிட பெருமையான விஷயம் ஒன்றையும் நீ செய்ய வேண்டும். நீ உயிரோடு இருக்கும் வரை இந்த நாட்டுக்கும், அரசனுக்கும் எந்த சிறு தீங்கும் வந்துவிடக்கூடாது. அப்படி தீங்கு வந்துவிட்டால், நீ உயிரோடு இருக்கக்கூடாது”, என்று சொல்லி அனுப்பினார். நான் உயிரோடு இருக்கும்வரை உங்களையும், இந்த நாட்டையும் காப்பாற்றிவிட்டேன். இதை என் தாயிடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அவரை சந்தித்தால் போதும். நிலைமையை அவர் உணர்ந்துகொள்வார்', என்று சொல்லிவிட்டு இறந்துபோனான்.

  கூடியிருந்தவர்கள் அமைதியானார்கள். மீண்டும் பேசினான் அரசன்.

  ‘இந்தத் தாய், மகனை பார்க்க வேண்டும் என்று விரும்பியதற்கு காரணம் மகனின் நலத்தை அறிந்து கொள்வதற்காக அல்ல. அவன் நலமாக இருந்தால் நானும், நாடும் நலமாக இருக்கிறோம் என்று அர்த்தம். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காதத்தான் மகனை சந்திக்க ஆசைப்பட்டார். அதுமட்டுமல்ல, இறப்பதற்கு முன்கூட தன் மகனைப் பற்றி ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. இறந்துபோன இந்தத் தாய்க்கும், நாட்டிற்காக உயிர்விட்ட மகனுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வது என்று தெரியவில்லை. அழுகை என்னை அறியாமலே வந்துவிட்டது', என்றார் அரசர்.

  அப்போது கூட்டத்தில் இருந்த சாது பேசினார்.

  அரசே! உங்கள் கண்ணீர் வெளிப்படுத்தியது சோகத்தை மட்டுமே! கோபத்தையல்ல. கோபத்தை செயல்களே வெளிப்படுத்தும். இது கண்ணீரோடு முடிவடைவதில்லை. நிலம் நம்முடையது. அதில் விளையும் விளைச்சலும் நம்முடையது. அதில் முட்செடிகளும் முளைக்கும். அதன் முட்களை மட்டும் வெட்ட வேண்டும், செடியை வெட்டக்கூடாது என்று யாராவது சொன்னால், அப்படிச் சொல்பவர்கள் சுகமான இடத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களின் வார்த்தைகளை பின்பற்றினால், முட்புதற்களுக்கு மத்தியில் மட்டுமே நாம் வாழும் நிலை ஏற்படும். முட்களை அதன் ஆணிவேரோடு அகற்ற வேண்டும். நியாயம் பார்க்க வேண்டியதில்லை. அடுத்த முறை கண்ணீர் சிந்துவது நாமாக இருக்கக்கூடாது', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். சாது கூறிய விஷயத்தின் அர்த்தம் மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, ஆள்பவர்களுக்கு நிச்சயமாக புரியும்.

  பிரதமர் அவர்களே உங்களிடம் ஒரு வேண்டுகோள்! கதையில் படித்த மகனின் நிலையில் வீரமரணத்தை அடைந்த நாற்பத்து இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள். தாயின் நிலையில் அவர்களின் குடும்பம் இருக்கிறது. அந்த வீரர்கள் தங்களது இறுதி மூச்சு வரை நாட்டையும், நம்மையும் பாதுகாத்துள்ளார்கள். அரசனின் நிலையில் இருக்கும் நாம், கண்ணீர் சிந்திவிட்டு அடுத்த வேலைக்கு நகர்ந்துவிடக்கூடாது. ஆக்கபூர்வமான எதையாவது செய்ய வேண்டும். இதில் சட்டம், நியாயம், தர்மம் ஆகியவை பார்க்க வேண்டிய அவசியமில்லை.

  அன்பும், மனித நேயம், மனித உரிமை ஆகியவற்றை நமக்கு மற்றவர்கள் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. வெறும் கண்டனத்தை தெரிவித்துவிட்டு அடுத்த சுரண்டலுக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஆட்சி இது அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்துங்கள்.

  இந்த நேரத்தில் இந்தியர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு தேசத்தை வலுப்படுத்த வேண்டும். ஆனால், தீவிரவாதிகளின் சிந்தனைக்கு சற்றும் குறையாத சில உள்ளூர் தலைவர்களின் கருத்துக்களை படிக்கும் போது நமது ஜனநாயகம் இத்தகையவர்களுக்கு அளவுக்கு மீறிய சுதந்திரம் கொடுத்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சில நெட்டீசன்கள் தாக்குதலைப் பற்றி நக்கலாகவும், நைய்யாண்டியாகவும் கருத்தை பதிவு செய்வது வேதனையளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகளுக்கு யார் காரணம்? முன்னூறு கிலோ வெடி மருந்து எப்படி கிடைத்தது? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். 

  மூன்னூறு கிலோ வெடிமருந்து உபயோகப்படுத்தப்பட்டது என்று யார் சொன்னது? எந்த அடிப்படையில் இந்தக் கருத்தை சொல்கிறார்கள்? இவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்காதா? உங்களுக்கு குறிப்பிட்ட அரசியல் தலைவர்களை பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கலாமா? நாளை நீங்கள் நினைக்கும் கட்சி பதவிக்கு வரலாம், அப்போது நீங்கள் தேசியவாதியாக மாறிவிடுவீர்கள். மற்றவர்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பார்களா? இது என்ன அரசியல் கலாச்சாரம்? அரசை சார்ந்து வாழுங்கள். தீவிரவாதிகளை சார்ந்து வாழாதீர்கள்.

  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு தான் ஒரு மேதாவி என்ற சிந்தனை எப்போதுமே உண்டு. தன்னைத் தவிர அனைவரும் திருடர்கள். தனக்கு தோன்றியதே மிகச்சரி என்று நினைப்பவர். புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஒரு கருத்தை அவர் வெளியிட்டிருக்கிறார்.

  “புல்வாமாவில் தாக்குதல் நடத்திய அடில் அகமது தார், ராணுவத்தினரால் தாக்கப்பட்ட பின்புதான் பயங்கரவாதியாக மாறினார். காஷ்மீரில் பல இளைஞர்கள் பயங்கரவாதியாக மாறி சாக விரும்புவது ஏன் என்பதை புரிந்து கொள்வது முக்கியம். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பல தற்கொலைப் படை தாக்குதல்களுக்குப் பின்பும் அமெரிக்க படைகளால்கூட அவற்றைத் தடுக்க முடியவில்லை”, என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

  இவர் மட்டுமல்ல. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் அமைச்சர் சித்து பொறுப்பில்லாமல் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திவ்யா ஸ்பாந்தனா மற்றும் நூர் பனோ ஆகியோரும் ராணுவத்தை சிறுமைபடுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். 

  திவ்யா ஸ்பாந்தனா காங்கிரஸ் கட்சியின் சமுக வலைத்தளங்கள் பிரிவின் தலைவர், இவர் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் கருத்தை ஆமோதித்துள்ளார், வரவேற்றுள்ளார். நூர் பனோ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. இவர் இந்திய ராணுவத்தை குறைகூறியிருக்கிறார். “நடந்த சம்பவம் மிக மோசமானது. இது நம்மை பாதித்துள்ளது. இந்தத் தாக்குதலை பாஜக எப்படி பயன்படுத்திக்கொள்ளும் என்று நமக்குத் தெரியவில்லை. இந்த தாக்குதல் தொடர்பாக சில அறிகுறிகள் ராணுவத்திற்கு தென்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை', என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த கருத்தை  என்னவென்று சொல்வது. தன்னுடைய சக வீரர்களை பற்றி ராணுவம் கவலைப்படவில்லை என்று சொல்கிறாரா? இந்த சம்பவம் நடந்த உடனேயே தேர்தல், வாக்கு வங்கி ஆகியவற்றைப் பற்றி கவலைப்படும் இவரையெல்லாம் யார் திருத்துவது? 
  இந்த தலைவர்களின் கருத்தே தீவிரவாதம் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்று கருதலாமா? இறந்தவர்களின் உடல்கள்கூட அவர்களின் வீடுகளை சென்றடையாத நிலையில் அவசரம் அவசரமாக இப்படி கருத்துக்களை ஏன் பதிவிடவேண்டும்? யாரை திருப்திபடுத்த இப்படி செய்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் காங்கிரஸ் கட்சி அவர்களின் மீது எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே தெரியவரும்.

  தமிழகத்தில் யாரும் கருத்து சொல்லவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். அப்படிப்பட்ட ஒரு கருத்தை திமுகவைச் சேர்ந்த மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தை குறை சொல்லும் மனுஷ்யபுத்திரனை அவர் சார்ந்த கட்சி என்ன செய்யப்போகிறது? மனுஷ்யபுத்திரன் அவர்களே! இறந்துபோனவர்களில் இருவர் தமிழர்கள்தானே! எங்கே போனது உங்களது தமிழ் பற்று? மனுஷ்ய புத்திரனின் கருத்து அவரது கட்சி சார்ந்த கருத்தாக இருக்காது என்று நம்புவோம். இதை அவர் சார்ந்த கட்சி தெளிவுபடுத்த வேண்டும்.

  இந்த உலகம் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாமல் சகோதரத்துவத்துடன் இருந்தால் அமைதிக்கு பஞ்சமிருக்காது. அப்படிப்பட்ட அமைதியின் அருமையை உணரவைத்துள்ளது புல்வாமா குண்டு வெடிப்பு. உலகின் கடைசி தீவிரவாத சிந்தனை இருக்கும்வரை இந்த அமைதியை எட்டமுடியாது. இதை ஆள்பவர்களால் மட்டுமே செய்து முடிக்க முடியாது. நம்மைப் போன்றவர்களும் இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் ஆட்சிக்கு மாற்றாக மற்றொரு கட்சி இருக்கலாம், எந்தக் காலத்திலும் தீவிரவாதம் மாற்றாக இருக்க முடியாது.

  - சாது ஸ்ரீராம்
  saadhusriram@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai