Enable Javscript for better performance
உதவி கோரி கைகளை நான் நீட்டியபோது, கை பிடித்து தூக்கிவிட்ட அவர்கள் !- Dinamani

சுடச்சுட

  

  உதவி கோரி கைகளை நான் நீட்டியபோது, கை பிடித்து தூக்கிவிட்ட அவர்கள் !

  Published on : 20th February 2019 03:57 PM  |   அ+அ அ-   |    |  

  img-20180213-wa0021

  அப்பாவி மக்களின் உழைப்பையும், கண்ணியத்தையும் தனது சுயநலத்திற்காக அநியாயமாக பயன்படுத்துவதும், சுரண்டுவதும் தனது பிறப்புரிமை என்று நம்புகின்ற ஒரு முதலாளியின் கைகளில் கொத்தடிமைத்தனத்தில் பல ஆண்டுகள் சித்திரவதைகளை அனுபவித்த குடும்பங்களுக்கு உதவ முனைப்போடு முன்வந்த அந்த ‘அவர்கள்’ யாரென்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

  மதுராந்தகம் அருகே காட்டுக்கரணை என்ற கிராமத்தில் இரண்டு குடும்பங்கள் கடுமையான வேலையில் ஏழு வருடங்களைக் கழித்த பிறகு நெரம்பூர் என்ற கிராமத்தில் மரம் வெட்டும் தொழிலிலிருந்து சமீபத்தில் தான் கொத்தடிமை முறையிலிருந்து இக்குடும்பங்கள் மீட்கப்பட்டிருந்தன.

  இவர்களது இந்த கிராமத்திற்குள் நாங்கள் நுழைந்த போது, அவர்களது கண்கள் மகிழ்ச்சியால் விரிய, அவற்றில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்பட்டது.  வாய் நிறைய புன்னகையுடன் எங்களை அவர்கள் வரவேற்றார்கள். புதிதாக கண்டறிந்த சுதந்திரத்தில் அவர்கள் மனதில் எழுகின்ற வியப்பு, துயரம் மறைந்த நிம்மதி உணர்வு மற்றும் உற்சாகத்தை எங்களால் உணர முடிந்தது. 

  மாணிக்கம் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார். விரிக்கப்பட்ட பாய்களில் அமர்ந்த நாங்கள், அடிமைத்தனத்திலிருந்து வெளியில் வருவதற்காக தைரியத்துடன் முதலடி எடுத்து வைத்த நபரிடமிருந்து நேரடியாக இந்த கடந்தகால வாழ்க்கைக் கதையைக் கேட்க நாங்கள் தயாரானோம். 

  தினசரி கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்த மாணிக்கம் மற்றும் அவரது மனைவிக்கு தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஒரு தொடர் போராட்டமாக இருந்து வந்தது. ஒரு நாள், நெரம்பூரில் வசித்து வந்த மாணிக்கத்தின் மூத்த மைத்துனரை, இளைய மைத்துனர் மற்றும் அவரது மனைவியுடனும் சேர்ந்து பார்க்கச் செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த அந்த சந்திப்பு அக்குடும்பங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருந்தது. சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல எத்தனித்த போதுதான், பயணச்  செலவுக்கு போதுமான பணம் இல்லை என்பதை மாணிக்கம் உணர்ந்தார்.  இச்சூழ்நிலையில் என்ன செய்வது என்று குழப்பத்தோடு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான், மரம் வெட்டுகின்ற தொழிலைச் செய்கின்ற ஒரு முதலாளி வடிவத்தில் அவர்களுக்கு உதவி வந்தது. அவர்கள் செய்கின்ற வேலைக்குப் பதிலாக, பணம் தருவதாக அவர் சொன்னார். 

  சிறிது பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நினைத்த மாணிக்கம், அவரது மனைவி செல்வி, செல்வியின் தம்பி ஏழுமலை மற்றும் ஏழுமலையின் மனைவி லட்சுமி ஆகிய நான்கு பேரும் உதவிக்கு வந்த முதலாளியிடம் வேலைக்குச் சென்றனர்.  முன்பணமாக ரூ.1000 மாணிக்கத்திற்குத் தரப்பட்டது.  வேலை செய்து இந்த முன்பணத்தை திரும்பக் கொடுத்து கழித்துக் கொள்ளுமாறு மாணிக்கத்திற்கு சொல்லப்பட்டது. ஒரு டன் விறகு வெட்டினால் ரூ.1000 தரப்படும் என்று கூறப்பட்டது. இது ஒரு நியாயமான கூலி என்று கருதிய மாணிக்கம் இதற்கு சம்மதித்தார். 

  மரம் வெட்டும் இடத்தில் வேலை காலை 6 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.  வளர்ந்த மரங்களையும், புதர்களையும் ஆண் தொழிலாளர்கள் வெட்டி சாய்க்கின்றபோது, அதிலுள்ள முட்களை அகற்றி, அவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, கட்டுப்போடும் வேலை பெண்களுடையதாக இருந்தது. மாதத்திற்கு ஒருமுறை வெட்டப்பட்ட இந்த விறகு கட்டுகளை முதலாளி லாரியில் ஏற்றி அனுப்பும் போது, இந்த பல டன் விறகுகளை  டிரக்குகளில் ஏற்றும் பணியும் இந்த தொழிலாளர்களையே சார்ந்தது. அவர்கள் இங்கே வேலை செய்த காலம் நெடுகிலும், தொடர்ந்து அவர்களுக்கு கிடைத்தது காதில் கேட்க முடியாத வசவுச் சொற்களும், திட்டுகளும்தான்.  பல நேரங்களில் அடி உதைகளும் படவேண்டிய சூழல்தான் அங்கே இருந்தது.  அந்த முதலாளி, இந்த பெண் தொழிலாளர்களிடம் தவறாக நடந்து கொள்ளவும் கூட முயற்சித்தார். 

  மரங்களை வெட்டுவதற்கு பல்வேறு இடங்களுக்கு இந்த தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.  2016-ஆம் ஆண்டில், சென்னை மாநகரை புயலும், மழை  வெள்ளமும் தாக்கிய போது, சென்னை மாநகருக்கு கூட இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.  போதுமான அளவு மரங்களை அவர்கள் வெட்டாத போது, அல்லது சரியாக வெட்டாதபோது சரமாரியாக திட்டுகள் அவர்களுக்கு கிடைத்தது. குறைவான அளவு வெட்டியதை ஈடுகட்ட வழக்கமான நேரத்தை விட கூடுதல் மணி நேரங்கள் வேலை செய்யுமாறு அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். 

  ஏழுமலைக்கு உடம்பு சரியில்லாமல் போய் வேலை செய்யவே முடியாத நிலையிலிருந்த போது கூட, கன்னத்தில் அறையப்பட்டு உடனடியாக வேலையை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.  வேறொரு தருணத்தில், அவர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவு விறகை வெட்ட அவர்களால் இயலாதபோது, அவமானத்தில் கூனி குறுகச் செய்கிறவாறு மிக மோசமான கெட்ட வார்த்தைகளைச் சொல்லி அந்த முதலாளி செய்த கொடுமையை மறக்கவே முடியாது.

  இதைவிட மோசமானது என்னவென்றால், வெளி உலக தொடர்புகள் எதுவுமில்லாமல், இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.  ஃபோனில் தங்களது உறவினர்களிடம் பேசுவதற்கு கூட இவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை.  பல நேரங்களில் மாணிக்கத்தின் மகள், அப்பாவிடம் பேச முயற்சித்தார்.  ஆனால் அந்த முதலாளியிடம் மட்டுமே தகவலை மாணிக்கத்தின் மகளால் சொல்ல முடியும்.  இந்த தொலைபேசி அழைப்பில் கிடைத்த தகவலை மாணிக்கத்திற்கு தெரிவிப்பதா அல்லது இல்லையா என்று முடிவு செய்வது அந்த முதலாளிதான்.  மாணிக்கத்தின் பேரன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான்.  அவனது இறுதிச் சடங்குளில் கலந்து கொள்ள மாணிக்கத்தை அனுமதிக்கக் கூட மனம் இரங்காத அந்த முதலாளி, அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார். 

  துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீர் முகத்தில் தாரையாக வழிந்தோட, இந்த துயர சம்பவத்தை நினைவுகூர்ந்த மாணிக்கம், தங்களது பேரனின் முகத்தை கடைசி முறையாக பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்த போதும் கூட, அந்த இரும்பு இதயம் படைத்த முதலாளி, கொஞ்சம் கூட மனம் இறங்கவில்லை என்பதை வேதனையோடு விவரித்தார்.

  இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டுமென்ற நினைப்புடன் ரவி என்ற தனது உறவினர் ஒருவருடன், மாணிக்கம் தான் படும் பாடுகளையும், சிரமங்களையும் பகிர்ந்து கொண்டார். காஞ்சிபுரத்தில் தங்களது சமூகத்தின் ஒரு தலைவராகவும் மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் சங்கத்தில் (RBLA) அங்கம் வகிப்பவருமான ஒருவரை, ரவிக்கு தெரிந்திருந்தது.  இதன் பிறகு மாணிக்கத்தை வந்து சந்தித்த அவர், அவரது பிரச்னைகளையும், துயரக் கதையையும் கவனத்துடன் கேட்டார். ஒரு காலத்தில் கொத்தடிமை தொழிலாளராக இருந்தவரான அந்த நபர், கொத்தடிமை தொழில்முறை அமைப்பின் கோரப் பிடிகளுக்குள் மாணிக்கம் இப்போது கடுமையாக சிக்கியிருப்பதை உடனடியாக உணர்ந்தார்.  கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருக்குமாறு மாணிக்கத்திற்கு ஊக்குவிக்கும் வார்த்தைகளை கூறிவிட்டுச் சென்ற அவர், அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களின் சார்பாக, ஒரு மனுவை எழுதி எடுத்துக் கொண்டு செங்கல்பட்டில் உள்ள வருவாய் கோட்ட அதிகாரியை நேரில் சென்று சந்தித்தார். 

  இந்த மனுவை முழுவதும் வாசித்த ஆர்டிஓ, இந்த மரம் வெட்டும் பணி நடைபெறுகின்ற அமைவிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு தனது தாசில்தாரையும்; மற்றும் கிராம நிர்வாக அதிகாரியையும் அனுப்பினார்.  தாசில்தாரும், கிராம நிர்வாக அதிகாரியும் அந்த பணியிடத்திற்கு சென்றபோது, கூலித் தொழிலாளர்களோடு அந்த முதலாளியும் அங்கு இருந்தார். முதலாளியின் முன்னிலையில் ஆரம்பகட்ட விசாரணையை இந்த அதிகாரிகள் நடத்தினர். முதலாளி மீது அவர்களுக்கு இருந்த கடுமையான அச்சத்தின் காரணமாக, அத்தொழிலாளர்கள் எவரும் வெளிப்படையாக உண்மைகளை எடுத்துக் கூற இயலவில்லை. தங்களது கருத்துகளை கோர்வையாக அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் அவர்கள் இல்லை. 

  இதன் விளைவாக, இத்தொழிலாளர்கள் கொத்தடிமை தொழில்முறை அமைப்பின் கீழ் இல்லை என்று தாசில்தார் முடிவு  செய்தார்.  எனினும், அந்த பணி அமைவிடத்திலிருந்து அவர்களை அழைத்துச் சென்ற அவர், அவர்களது சொந்த ஊரான காட்டுக்கரணையில் அவர்களை விட்டுச் சென்றார்.  இந்த பின்னடைவைக் கண்டு மனம் தளராத அவர், இத்தொழிலாளர்கள் கொத்தடிமைதனத்தின் கீழ் பணியாற்றியவர்கள்தான் என்ற தெளிவான முடிவின் அடிப்படையில், அவர்கள் சார்பாக நீதியையும், நியாயத்தையும் பெற முடிவு செய்தார்.  இத்தொழிலாளர்களுக்கு மீட்பு சான்றிதழ்கள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருந்தார்.  மிக அவசியமான, அரசு மறுவாழ்வு திட்டங்களைப் பெற அவர்களை தகுதி உள்ளவர்களாக ஆக்குகின்ற, அவர்களது முந்தையை கடன்களை ரத்து செய்கின்ற மற்றும் எதிர்காலத்தில் முதலாளியின் தொந்திரவிலிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவுகின்ற ஒரு மிக முக்கியமான ஆவணமாக இந்த மீட்புச் சான்றிதழ் இருக்கிறது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். 

  அடுத்த நாள், அவரின் மனைவி, இந்த நான்கு தொழிலாளர்களையும் அழைத்துக் கொண்டு வருவாய்கோட்ட அதிகாரியை சந்திக்கச் சென்றார். RBLA (விடுவிக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வு நல சங்கம்) அமைப்பின் ஒரு உறுப்பினராகவும், சமூக தலைவியாகவும் செயல்படுகின்றவர் அவர் மனைவி. தனது கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக்கூறி, ஒரு மறுவிசாரணையை மேற்கொள்ளுமாறு ஆர்டிஓவிடம் வேண்டி கேட்டுக் கொண்டார். தனது பிற பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இத்தொழிலாளர்களிடம் ஆர்டிஓ மீண்டும் விசாரணை நடத்தினார்.  நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவர்கள் அச்சமின்றி விவரித்தபோது, இத்தொழிலாளர்கள் உண்மையிலேயே கொத்தடிமை தொழில்முறையில் சிக்கியிருந்தவர்கள்தான் என்பதை அவரால் புரிந்து கொண்டு, அதை உறுதிசெய்ய முடிந்தது.  விசாரணைக்குப் பிறகு, உடனடியாக அத்தொழிலாளர்களுக்கு மீட்பு சான்றிதழ்களை அவர் வழங்கினார். 

  தொழிலாளர் நலத்துறையோடு ஒருங்கிணைந்து, இவ்விஷயத்தில் செயல்படுமாறு தனது அலுவலக பணியாளர்களுக்கு அறுவுறுத்தல்கள் வழங்கிய அவர், இத்தொழிலாளர்கள் அவர்களுக்குரிய தொடக்க மறுவாழ்வு பணத்தைப் பெறுவதற்காக வங்கிக் கணக்குகள் தொடங்கப்படவும் ஏற்பாடு செய்தார்.  அவர்களுக்கு ஆதார் அட்டைகளும் வழங்கப்பட்டன.  இவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற அரசு சலுகைகளைப் பெறுவதற்கு RBLA இத்தொழிலாளர்களுக்கு உதவி வருகிறது.

  மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட நபர்களுக்குமிடையே ஒரு பாலமாக RBLA இருக்கிறது.  அரசு அதிகாரிகளை எளிதாக அணுகி, சந்தித்து, குறைகளையும், கோரிக்கைகளையும் முன் வைப்பதன் மூலம் இந்த இருதரப்பிற்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைக்கும் பணியில் RBLA ஈடுபட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற கொத்தடிமைத்தனம் என்ற அரக்கனிடமிருந்து விடுபட்டு மீண்டவர்களாக RBLA உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இருப்பதால், பிற கொத்தடிமை தொழிலாளர்களது உணர்வுகளைப் புரிந்து பரிவு காட்டுவதும் மற்றும் அவர்களுக்கு உண்மையில் சேர வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் கேட்பதற்காக முனைப்போடு செயல்படுவதும் இவர்களுக்கு எளிதானதாக இருக்கிறது.  இவர்கள் சார்ந்திருக்கும் சமூகமானது, அவர்களுக்கு மீண்டும் கிடைக்கின்ற சுதந்திரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளவும், கண்ணியத்தோடு வாழ்க்கையை நடத்தவும் இது ஏதுவாக்குகிறது! பாதிக்கப்பட்ட நபர்கள் உதவியும், ஆதரவும் வேண்டி கைகளை உயர்த்தி நீட்டும் போது, திறனதிகாரம் பெற்ற இச்சமூகத் தலைவர்கள், அவர்களை கைதூக்கிவிட வெகு ஆர்வத்தோடு முன்வருகிறார்கள் என்பதை பெருமையோடும், மகிழ்ச்சியோடும் எங்களால் பார்க்க முடிகிறது!

  kattana sevai