சென்னைவாசிகளுக்கு இனி உறக்கமில்லா இரவுகள்தான்: இயல்பு வாழ்க்கையின் நிலை??

சென்னைவாசிகள் சந்தித்து வரும், சந்திக்கப் போகும் குடிநீர் பற்றாக்குறை பற்றி எத்தனையோ விஷயங்களை தண்ணீர் இல்லாமல் அலசிவிட்டோம், ஆராய்ந்துவிட்டோம்.
சென்னைவாசிகளுக்கு இனி உறக்கமில்லா இரவுகள்தான்: இயல்பு வாழ்க்கையின் நிலை??


சென்னைவாசிகள் சந்தித்து வரும், சந்திக்கப் போகும் குடிநீர் பற்றாக்குறை பற்றி எத்தனையோ விஷயங்களை தண்ணீர் இல்லாமல் அலசிவிட்டோம், ஆராய்ந்துவிட்டோம்.

இனி புதிதாக சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தால் இருக்கத்தான் செய்கிறது.. சாமானிய மக்களின் சொல்லொணாத் துயர் பற்றி நாம் சொல்லாமல் வேறு யார்தான் பேசுவது?

சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, மற்ற எந்த பகுதிகளை விடவும் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் இருப்பவர்களுக்குத்தான் மிக மோசமான நிலை காணப்படுகிறது. அதாவது தண்ணீர் வழங்கும் வாரியங்களின் முன்னுரிமைப் பட்டியலில் கடைசியாக இருப்பது குடிசை மாற்று வாரியக் கட்டடங்கள்தான். ஆனால், குடிநீர் பற்றாக்குறை முதலில் தாக்கும் பகுதியாகவும் இதுதான் உள்ளது.

நமது எக்ஸ்பிரஸ் குழுவினர் சென்னையில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் கோட்டூர்புரம், ஆர்ஏ புரம் பகுதிகளுக்குச் சென்ற போது கிடைத்த சில தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ராஜா முத்தையா புரத்தில் வாழும் பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாகவோ, கடை மற்றும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்.

இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் லாரிகளில் குடிநீர் பிடிக்க வேண்டும் என்றால், ஒன்று இப்பெண்கள் தங்களது வேலைக்கு தாமதமாக செல்ல வேண்டும் இல்லையென்றால் குடிநீரை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டால் இரண்டு நாட்கள் குடிநீர் இல்லாமல் திண்டாட வேண்டும்.

வேலை மற்றும் கல்விக்காக அனைவரும் வெளியே சென்றுவிடும் குடும்பங்கள் நிலைமை மிகவும் மோசம். ஒவ்வொரு நாளும் குடிநீருக்காக பல சாகசங்களைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கும் வீடுகளில் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. டேங்கர் லாரிகள் எப்போது வரும் என்றே தெரியாத நிலையில் வீட்டில் ஒருவர் காலிக் குடங்களுடன் காத்திருக்கும் பரிதாபமும் காண முடியாத காட்சிகளாக உள்ளன.

அது சரி எவ்வளவு நீர் தான் விநியோகிக்கப்படுகிறது?
அது பற்றிப் படிக்க வேண்டும் என்றால் இன்னும் மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தெருக்களுக்கு ஒரே ஒரு டேங்கர் லாரிதான் வருகிறது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், எந்தத் தெருவுக்கு லாரி வருகிறதோ, அந்தத் தெருவினர் மட்டுமே தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதும், பக்கத்துத் தெருவாசிகள் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்பதும் எழுதப்படாத சட்டமாக உள்ளது. ஒரு வேளை தங்கள் தெருவுக்கு டேங்கர் லாரி வரும் போது வீட்டில் ஆள் இல்லாமல் தண்ணீர் பிடிக்கத் தவறிவிட்டு, பக்கத்துத் தெருவுக்கு தண்ணீர் வரும் போது ஓடிச் சென்று பிடித்துக் கொள்ளலாம் என்றால், அது முடியாது. குழாயடிச் சண்டையல்ல.. குழாயடி யுத்தமே நடந்து விடும். இதனால் சில பெண்களும், குழந்தைகளும் கூட தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் வலியோடு சிலர்.

சரி இதோடு பிரச்னை முடிந்து விட்டதா? இல்லையே, அவ்வளவு அரும்பாடுபட்டுப் பிடிக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்கிறார்கள் பெண்கள். டேங்கர் லாரியில் பிடிக்கும் தண்ணீரில் சமையல் செய்தால் ஒரு சில மணி நேரத்தில் உணவு கெட்டுவிடுகிறது என்கிறார்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வருகிறது. அன்றைய தினமே அந்த நீரைப் பயன்படுத்த முடியாது. அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி இரண்டு நாட்கள் விட்டுவிட்டால், அதில் இருக்கும் அழுக்குக் கீழே படிந்துவிடும். அதனை அகற்றிவிட்டு பிறகு பயன்படுத்தலாம். ஒரு வேளை அவசரத்துக்கு இந்த நீரை எடுத்து பால் காய்ச்சப் பயன்படுத்தினால் பால் கெட்டுவிடும். தண்ணீரின் மேலே எண்ணெய் போன்ற படிவம் படிகிறது. இந்த நீரில் குளித்தால் பல சரும வியாதிகளும் வருவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆர்ஏ புரம் பகுதியில் நிலவும் பிரச்னையே வேறு. இங்கு கை-பம்புகளை நம்பித்தான் காலம் கழிக்கிறார்கள். அதுவும் எப்போதாவது வரும் குடிநீருக்காக குழாயடியில் பலரும் தவமிருக்கிறார்கள்.

கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் டேங்கர் லாரியில் தண்ணீர் வாங்குவதில்லை. தற்போது கை-பம்புகளும் கைவிட்டுவிட்டன. அப்படியே வந்தாலும் நள்ளிரவில்தான் தண்ணீர் வருகிறது. நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே தண்ணீர் வருவதால் தூக்கத்தைவிட்டுவிட்டு எல்லோரும் குழாயடியில்தான் உட்கார்ந்திருந்து சொற்ப தண்ணீரை பிடித்துச் செல்கிறார்கள்.

இதில் கவலைதரும் விஷயம் என்னவென்றால் தங்களது பெற்றோருக்கு உதவ பள்ளிச் செல்லும் குழந்தைகளும் பக்கெட் அல்லது குடத்தோடு டேங்கர் லாரி பின்னால் ஓடுவதும், நள்ளிரவில் குழாயடியில் தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

சரி இதையெல்லாம் செய்தாலும் கூட சிலருக்கு அரை பக்கெட் தண்ணீர் மட்டுமே கிட்டுவது அன்றைய நாளின் அவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. ஆம் அது கூட இல்லாமல் காலி பக்கெட்டுடன் பலரும் வீடு திரும்பும் போது விடிந்தே விடுகிறதே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com