பூமியை  வெட்டி  கொஞ்சம் பூமியை  அதில் வைக்கப் போனவர்! நாடோடிக் கதை!

முன்னொரு   காலத்தில் ராஜா ஒருவர் இருந்தார்.  ஒரு  நாள் அவர் ஒரு கனவு கண்டார்.
பூமியை  வெட்டி  கொஞ்சம் பூமியை  அதில் வைக்கப் போனவர்! நாடோடிக் கதை!


முன்னொரு   காலத்தில் ராஜா ஒருவர் இருந்தார்.  ஒரு  நாள் அவர் ஒரு கனவு கண்டார். அது ஒரு விசித்திரமான கனவு. அவருக்கு முன்னால் மூன்று பொருள்கள் இருந்தன. ஒரு  முலாம் பழம், ஒரு கத்தி, ஒரு தட்டு.

கண்ணுக்குப் புலப்படாத ஒரு  கத்தி  செயல்பட்டது. அது அந்த முலாம் பழத்தைத் துண்டுகளாக அரிந்து பக்கத்தில் இருந்த தட்டில் போட்டது. ஆனால் முலாம் பழமோ முழுசாக அப்படியே இருந்தது. கத்தித் தொடர்ந்து பழத்தைத் துண்டுகளாக, வெட்டியும்  தட்டு  நிரம்பாமல்  நின்றது.

மறுநாள்  காலை  எழுந்ததும்  ராஜாவிற்கு  அந்தக்  கனவு  நினைவுக்கு வந்தது. கனவின் அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. குழம்பிப் போனார். நிச்சயம் கனவின்  அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்  என்ற ஆவல் மேலிட்டது. அன்றே ராஜா சபையைக் கூட்டினார். மந்திரிகள், பிரதானிகள், பண்டிதர்கள் என்று  ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.

ராஜா தான்  கண்ட  கனவை விவரித்துச் சொன்னார். அதன்  உள்ளர்த்தத்தை யாராவது   சொல்ல முடியுமா  என்று கேட்டார்.  யாருக்கும்   ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. தலைமை அமைச்சரைப் பார்த்து கடுமையாக  உத்தரவிட்டார். 'இந்தக்  கனவு  ஒரு புதிர். இதை அவிழ்த்து  இதன் அர்த்தத்தை எனக்குத்  தெளிவு படுத்த வேண்டியது  உங்கள் பொறுப்பு.  தவறினால்  உங்கள்   தலை  போய் விடும்.'

நடுங்கிப் போன  மந்திரி  வேறு வழியின்றி பிரச்னைக்குத்  தீர்வு  காண  தனக்கு ஆறு மாத கால தவணை வேண்டும்  என்று  வேண்டினார். ராஜாவும்  உடன் பட்டார்.

ராஜாவின்   கனவுப்  புதிருக்குத்  தன்னால்  எந்தத்  தீர்வும் காண முடியாது என்ற நிலையில்  அதற்கு  விடை காணக் கூடிய  அறிவுக்  கூர்மையுடைய  ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க முடிவு செய்தார். தனது மந்திரி அடையாளத்தைத் துறந்துவிட்டு ஒரு சாதாரண மனிதர் போன்ற வேடத்தில் ஊர் ஊராக  அப்படிப்பட்ட   ஒரு மனிதரைத்  தேடி அலைந்தார்.

கடைசியாக  ஒரு நாள்  ஒரு  சிறிய  கிராமத்திற்கு  வந்து  சேர்ந்தார்.  நல்ல வெயில். சோர்ந்து போய் தாகத்திற்குத் தண்ணீர் தேடிய போது அங்கே ஊர்க் கிணற்றில் ஓர் இளமங்கை தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

உடனே  அந்தப்  பெண்ணை அணுகி  கொஞ்சம்  குடிக்கத்  தண்ணீர்  கேட்டார். ஆனால் கிணற்றிலிருந்து வாளியில் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்த அவளோ அவருக்கு நீர் கொடுக்காமல் வாளித்தண்ணீரையும் பக்கத்தில் தரையில் கொட்டிப் பாழாக்கினாள்.   மீண்டும்  மீண்டும் நாலைந்து தடவைகள் அவ்வாறே நீரைத்  தரையில் கொட்டினாள் பிறகு ஆறாவது தடவை அவருக்குக் கொஞ்சம் குடிக்கக்  கொடுத்தாள்.  அதை  வாங்கிக் குடித்துவிட்டு அவர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டார்: 'பெண்ணே! நான் கேட்டவுடனே ஏன் எனக்குத் தண்ணீர் நீ கொடுக்கவில்லை?  மிகவும் தாகமாயிருந்தது என்று தானே கேட்டேன். நீரை ஏன் தரையில் கொட்டி வீணாக்கினாய்?'  என்றார். 

அந்தப் பெண், 'காரணம் உண்டு ஐயா. சொல்கிறேன்.  நீங்கள்  வெகு தூரத்திலிருந்து வந்ததாகத் தெரிந்தது. கொளுத்தும் வெயில் உங்கள் உடம்பைச் சூடேற்றி தகிக்கச் செய்திருந்தது.  உடனே சில்லென்ற நீரை நீங்கள் குடித்தால் அது உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும். 'உங்கள் உடல் வெப்பம் தணிந்து குளிர்ந்த  நீரைப் பருகும் நிலைக்கு  வந்த பிறகு நீர் கொடுத்தேன்.' என்று பதிலளித்தாள்.

அந்தப்  பெண்ணின் சாதூர்யம் மந்திரியை  மிகவும் கவர்ந்தது.  அவள் பதிலில் மகிழ்ச்சியடைந்த அவர் அவளைப் பற்றி மேலும் விவரமறிய விரும்பி அவளைப் பார்த்துக்  கேட்டார்:  'அம்மா, உன் பெயரென்ன?' என்றார். 

'என் பெயர் சரஸ்வதி' என்று  பதிலளித்தவள்  'எங்கள் வீட்டுக்கு வாருங்களேன்' என்று அவரை அழைத்தாள். அவரும் உடன்  சென்றார்.

அந்த  வீட்டிற்குள்  வேறு யாரும்  இருப்பதாகத்  தெரியவில்லை.

'உன்  அம்மா  இல்லையா?'என்று அவளைக்  கேட்டார் அவர்.

'இல்லை.  பூமியை  வெட்டி  கொஞ்சம்  பூமியைக்   கொண்டு வரப் போயிருக்கிறாள் அம்மா' என்றாள் பெண்.

'உன் அப்பா..?'

'பூமியை  வெட்டி  கொஞ்சம் பூமியை  அதில் வைக்கப் போயிருக்கிறார், அப்பா' என்றாள் அவள்.  ஒன்றும் புரியாத மந்திரி மலைத்துப் போய்  சில கணங்கள் நின்றவர்,  அந்தப் பெண் சொன்ன  பதில்களின்  அர்த்தத்தை விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.  அவளும்  அதற்கு,  'ஐயா, ஊரில் ஒரு வீட்டில்  ஒரு  பெண்ணுக்குப் பிரசவம் பார்க்கப் போயிருக்கிறாள் அம்மா.. அப்பாவோ, இன்னொரு  வீட்டில்  நேற்றிரவு  ஒருவர் காலமாகிவிட்டார். அவரை அடக்கம் செய்ய இடுகாட்டிற்குப் போயிருக்கிறார்' என்று சொன்னாள். மந்திரி அசந்து போய்விட்டார்.  அந்தப் பெண்ணின் அறிவுக் கூர்மையில் அவருக்கு ஆழ்ந்த திருப்தி எற்பட்டுவிட்டது. அவள் சாதாரண மானிடப் பெண்ணில்லை. சாட்சாத் சரஸ்வதியே  அவள் என்றே நம்பினார்.

தன் ஊர் ராஜாவின் கனவுப் புதிரை அவிழ்த்து விளக்கம் சரியாக அளிக்கக் கூடியவள்  அவள்தான்  என்ற முடிவுக்கு வந்தார். உடனே தனது பிரச்னையை அவளிடம் எடுத்துக் கூறினார்.  ராஜா அவருக்குக் கொடுத்திருந்த ஆறுமாத தவணைக்குள்  அவரது கனவிற்கு விளக்கம் தெரிந்து வரத்தவறினால் மந்திரி அவர் தலையை  இழக்க வேண்டிய நிபந்தனையையும்  அந்தப் பெண்ணுக்கு விவரித்தார்.

'உங்கள் ராஜாவின் கனவுதான் என்ன?'  அந்தப் பெண் கேட்டாள்.  ஒரு முலாம் பழம், ஒரு கத்தி, ஒரு தட்டு சம்பந்தப்பட்ட அந்தக் கனவை  மந்திரி விளக்கினார். அதைக் கேட்ட அந்தப் பெண் பலமாகச்  சிரித்தேவிட்டாள். 'கவலை வேண்டாம். உங்கள் ராஜாவை நானே நேரில் பார்த்து  இந்தக் கனவுப்  புதிருக்கு  விளக்கம்  தருகிறேன்' என்றாள் அவள்.

ராஜாவின் ஆறு மாதத் தவணை முடிகின்ற நாள்  அன்று மந்திரியும் சரஸ்வதி என்ற அந்தப் பெண்ணும் ராஜாவைச் சந்தித்தார்கள். அரசவை கூடிற்று. 'மகாராஜா! இந்தப்பெண் உங்கள் கனவுக்கு விளக்கம் தருவாள்' என்று அறிவித்தார் மந்திரி. சரஸ்வதி தொடங்கினாள்: 'மகாராஜா,  உங்கள் கனவில் கண்ட முலாம் பழம் இறைவனின் இந்த உலகப் படைப்பையும் இதனால் வரும் சுகங்களையும் குறிக்கும். கத்தியோ தினம் தினம் உயிர்கள் மடிந்து போகும் மரணத்தைக் குறிக்கும். தட்டோ இந்த உலகத்தைக் குறிக்கும். கணக்கற்ற உயிர்களைத் தொடர்ந்து இறைவன் படைத்துக் கொண்டிருக்க அதே சமயம் கணக்கற்ற உயிர்கள் தொடர்ந்து மடிந்து போக, உலகம் நிறைந்து வழிந்து போகாமல் இடம் கொண்டு நிலைத்திருப்பதை எத்தனைத் துண்டுகளாய் முலாம் பழத்தை அரிந்து போட்டாலும் தட்டு நிறைந்து வழிந்து விடாமல் அப்படியே நின்று காட்டுகிறது' பெண் தன் விளக்கத்தை முடித்தாள்.

ராஜா பிரமித்துப் போனார். மகிழ்ச்சியில் சரஸ்வதிக்குப் பரிசுகளைக் கணக்கின்றி வாரி வழங்கினார். அத்தகைய அறிவு படைத்தப்  பெண்கள் தன் நாட்டில் இருப்பதுகண்டு பெருமிதப்பட்டார். அது மட்டுமல்ல. அந்தப் பெண்ணை மந்திரியின் மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணாகவும் ஏற்றுக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மந்திரியின்  தலையும்  அவர் கழுத்தில் உயிருடன் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com