சுடச்சுட

  
  THIRU

  அறிவார்ந்த பெண்மணி ஒருவர் மலைப்பிரதேசத்தில் பயணிக்கையில் அங்கு ஓடிக் கொண்டிருந்த ஒரு சிற்றோடையில், விலைமதிப்பற்ற நவரத்தினக்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள். மறுநாள் அவ்விடத்தில் பசியுடன் வந்த ஒரு வழிப்போக்கன் அவளைச் சந்தித்தான். அவனுக்கு உணவளிக்க அப்பெண்மணி தனது பையைத் திறந்தாள். அப்போது, அவனுடைய கண்ணில் அவ்விலையுயர்ந்த கல் தென்பட்டது. அதனை தனக்கு கொடுக்க வேண்டுமெனக் கேட்டான். மறுசிந்தனையின்றி மனமுவந்து அவள் அக்கல்லை அவனிடம் கொடுத்தாள். அதைப் பெற்றதும் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அக்கல்லை விற்று கிடைக்கும் பணத்தில் தனது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாமென அவன் தீர்மானித்தான்.

  சில நாட்கள் கழித்து, அப்பெண்மணியைக் காண வந்தான். அவளிடம் அக்கல்லைத் திருப்பித் தந்தான். எதற்காக இதைத் திருப்பித் தருகிறாய்? என்றாள் அப்பெண்மணி. "அம்மையீர்! இந்தக் கல் மிகவும் விலைமதிப்பு மிக்கது என்பது உமக்குத் தெரிந்தும், அதனை எனக்கு மகிழ்வோடு நீங்கள் தந்தீர்கள். அப்படியென்றால், இவ்விலையுயர்ந்த கல்லைவிட உயர்வான பொருள் உங்களிடம் இருக்க வேண்டும். நான் விசாரித்த வரையில் பொன்னும், பொருளையும் விட உங்களிடம் நிறைந்திருப்பது அறிவேயாகும். அந்த அறிவையும், ஞானத்தையும் பெறவே வந்தேன்' என்றான்.

  அறிவு, மனித வாழ்வை இயக்கும் ஓர் அற்புதமான கருவி; பகுத்தறிவின் முதன்மை; ஞானத்தின் கருவறை; ஆற்றலில் அது மகா சக்தி; துன்பம் வராமல் காக்கும் கேடயம்; பிறர் மனதறியும் நவீன என்டோஸ்கோப்; எவருக்கும் தீங்கிழைக்காத அமிழ்தம்; சூழ்நிலை மேகங்களைக் கடந்து பயணிக்கும் ஞான விமானம்; ஆத்ம பலம் தரும் சஞ்சீவனி; வாழ்வினைச் செழுமைப்படுத்தும் வற்றாத ஜீவநதி. உலக வளர்ச்சியின் ஆதாரமும் அறிவே.

  இவ்வுலகம் சில நேரங்களில் தகவல்களை அதிகமாகப் பெற்றிருப்பதே அறிவு என நினைத்துவிடுவதுண்டு. அறிவு என்பது நாம் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதல்ல; இன்னும் அறியாதது எவ்வளவு என்பதைப் புரிந்துகொள்வதுதான். நிறைய கற்ற பின்பு, "கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு' என்றார் ஒüவையார். "நமக்குத் தெரியாததை அறிவிப்பது அறியாமையின் வெளிப்பாடல்ல. அது அறிவின் வெளிப்பாடு'. அதனால்தான் "கிரேக்கர்களில் நான்தான் விவேகமானவன். ஏனென்றால் மற்ற கிரேக்கர்களைப்போல் அல்லாமல் எனக்கு எதுவும் தெரியாது என்பதை அறிந்துள்ளேன்' என்றார் அறிஞர் சாக்ரடீஸ். எனவே, உண்மையான அறிவாளியை அவரின் அறிவை வைத்து நாம் மதிப்பிடுவதைக் காட்டிலும், அவரின் அறியாமை குறித்து அளவிடுதலே நன்று.

  மன்னர் சாலமன் எதிரில் கடவுள் நின்றார். "உனக்கு என்ன வேண்டுமோ, கேள்' என்றார். "கடவுளே நான் இளையவனாயிருந்தும் எனக்கு ஆட்சி பொறுப்பினைத் தந்தீர். எனக்கோ இவ்வரசாட்சி புதியது. ஆதலால் எனக்கு இவ்வுலகில் எதைச் செய்வது? எதை மறுப்பது? எனச் சரியாக சீர்தூக்கிப் பார்க்கும் சீரிய அறிவினைத் தருக' என்றார். கடவுள் மகிழ்ந்தார்.

   "இளவரசே! உனக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்று கேட்கவில்லை. உன்னை எதிர்க்கும் எதிரியின் உயிரைக் கேட்கவில்லை. பொன்னும் பொருளும் கேட்கவில்லை. உனக்கென்று எதையும் கேட்காமல், இந்த மக்களுக்காகக் கேட்டாய். ஆதலால் நீ கேட்பது போலவே நல்வழியில் நடப்பதற்கு நல்லறிவைத் தருகிறேன். இதனால் உனக்கு முன்பும், உனக்கு பின்பும் உன்னைப்போல் சிறந்த ஒரு மனிதனை இந்த உலகம் கண்டிராது' எனப் பாராட்டிச் சென்றார் கடவுள். தனது அறிவினை இச்சமூகத்திற்கு பயன்படும்படியாக வாழ்ந்த சாலமன் இன்றும் மக்கள் மனதில் ஆட்சி செய்கிறார்.

  சிந்திக்கும் திறன்கொண்டவன் என்பதற்காக மனிதனை அறிவுடையவன் என நினைத்துவிட முடியாது. இவ்வுலகில் பறவைகளும், விலங்குகளும், ஏன்? தாவரங்கள் கூட சிந்திக்கின்றன. எனவே சிந்திப்பது அறிவல்ல, ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பதுதான் அறிவு. வாழ்வின் பயணத்தில் வெற்றிப்படிகளை அமைக்கும் அடித்தளம் அறிவேயாகும். அறிவு என்னும் சிறகடிக்கும்போது வாழ்வின் எல்லையும் பல
   மடங்கு விரிகிறது.

  பாவேந்தர் பாரதிதாசன் "உலகம் உன்னுடையது' என்னும் கவிதையில், "அறிவை விரிவு செய், அகண்டமாக்கு' என்னும் வரிகளால் இம்மானுட சமூகத்தினையே தனதெனப் பார்க்கும் தகைமையைத் தருவது அறிவன்றி வேறெதுமில்லை என்பார்.

  ஆற்றலின் பிறப்பிடம் அறிவு. அறிவின் திறனால் ஒரு மனிதன் பலவற்றைச் சாதிக்கிறான். நல்லனவற்றைக் கற்று வாழ்வை வளப்படுத்தினால் அதன் பயன் இச்சமூகத்திற்கு துணையாக அமையும் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் தனது மகனின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். "புத்தகங்கள் என்ற அற்புத உலகின் வாசல்களை அவனுக்கு திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும், அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்' என்பதை அடிக்கோடிட்டார். மனிதர்களின் பண்புகள் பற்றியும், பயத்தைச் சுருக்கி, சுயமாய்ச் சிந்திக்க கற்றுத்தர வலியுறுத்தினார். "பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!' என்ற மகாகவியின் வரிகளை நினைவூட்டும் அவரது வரிகள். மொத்தத்தில் பள்ளிக்கூடம் என்பது புத்தகங்களுக்குள் அடங்கிவிடும் வகுப்பறைகள் அல்ல., உலகத்தினைப் புரிய வைத்து, பண்புகளை வளர்த்தெடுக்கும் பட்டறை என்பது அக்கடிதத்தின் சாரம். அறிவு நல்லொழுக்கத்தின் ஆணிவேர். எனவே, நூல் பல கற்று பண்புடன் வாழ்வதே அறிவின் அடையாளம்.

  வற்றிய ஓடையாக இருந்தாலும் அதைத் தோண்டுகின்ற பொழுது நீரானது எவ்வாறு ஊற்றெடுக்கின்றதோ அதுபோல எப்பொழுது வேண்டுமானாலும் தங்களது அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பது வள்ளுவரின் ஆணித்தரமான கருத்து. அத்தகைய அறிவின் துணை கொண்டு இந்த உலகிற்கு ஒருவன் கைமாறாய்த் தருவது அன்பையும் அறத்தையும் மட்டுமே.

  கற்றலின் முழுமை அறிவு. அறிவின் முழுமை ஞானம். அறிவுதான் இவ்வுலகில் நடக்கும் தீங்குகளைக் கண்டு வெதும்பும். ஞானத்தின் முழுமையில்தான் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார் வடலூர் வள்ளலார். அறிவின் மிகுதியில் பிறர் படும் துன்பம் நமக்குப் புரியும் என்பதை

   "அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
   தந்நோய்போல் போற்றாக் கடை'

  என்றார் வள்ளுவர். அறிவானது எது நல்லது? எது கெட்டது? எது தவறு? எது உண்மை? எது பொய்? என ஆராய்ந்து அறிகின்ற தன்மையுடையது. இவ்வாறு பிரித்துப் பார்க்கின்ற தன்மையோடு அதன் உள்ளே இருக்கின்ற உண்மைப் பொருளையும் அறிகின்ற திறனைத் தருவது அறிவு. அத்தகைய அறிவின் முழுமை ஒருவனை ஞானமடையச் செய்யும். முடிவில் மனிதனை அறிவாளியிலிருந்து உயர்த்தி ஞானியாக்கும்.

  அறிவு, திறமைகளின் வித்து. திறமையே சக மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். மனிதனை வியக்க வைக்கும். ஒரு மன்னரின் அரண்மனையில் இருந்த விறகு வெட்டியும், அமைச்சரவையில் இருந்த ஓர் அமைச்சரும் ஒன்றாகப் படித்தவர்கள். ஒருநாள் விறகு வெட்டி மன்னரிடம், "அரசே! நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். எனக்கு குறைந்த சம்பளம். ஆனால் மந்திரிக்கோ கை நிறைய பொன்னும் பொருளும் தருகிறீர்களே" என்றார். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு மாட்டு வண்டி பாரத்தோடு சாலையில் பயணமானது. மன்னர் அவரிடம், அந்த மாட்டு வண்டியைப் பற்றி தெரிந்து வாருங்கள் என்றார். உடனே வேகமாக ஓடினார் விறகுவெட்டி. திரும்பி வந்து பதிலளித்தார். பின்னர் அது எங்கிருந்து செல்கிறது? அதில் என்ன சுமை இருந்தது? எவ்வளவு மூட்டைகள் இருந்தது? எதற்காக அங்கே செல்கிறது? என மன்னரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, விறகுவெட்டி ஒவ்வொரு முறையும் ஓடிச் சென்று விடையறிந்து வியர்த்துப் போனார்.

  அதே நேரத்தில் அங்கு அமைச்சர் வந்தார். மன்னர் அமைச்சரிடம் அதே வண்டியைப் பற்றி விசாரித்து வரச் சொன்னார். அமைச்சரும் சென்று திரும்பி வந்தார். அவரோ மன்னர் இதுவரை விறகுவெட்டியிடம் கேட்ட கேள்விகளுக்கும், கேட்காத கேள்விகளுக்கும் பதிலை ஒற்றை மூச்சில் ஒப்புவித்தார். அமைச்சரின் அறிவைக் கண்டு வியந்து போனார் விறகுவெட்டி. மனிதனை வியக்க வைப்பதுதான் அறிவு. அது மனிதன் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு அஸ்திவாரமிடும். எந்தத் தீங்கும் தீண்டவிடாத ஆமை ஓடாகும்.
  மனிதன் பிறக்கும் போது இயற்கை அறிவு ; கற்கும்போது நூலறிவு; ஆராயும் போது ஆய்வியல் அறிவு , உண்மை அறியும் போது நுண்ணறிவு, அனுபவத்தில் பட்டறிவு என வாழ்வின் வாயில்தோறும் மனிதனை மாட்சிமைப்படுத்துவது அறிவேயாகும்.

  பெர்சியா நாட்டில் இளவரசர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். அரச பதவி புதிது. எனவே அறிஞர்களை அழைத்து தன்னை வழிநடத்துவதற்காக தேசங்களின் வரலாற்று நூல்களை தொகுத்துத் தருமாறு கேட்டார். அவர்கள் ஐயாயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்து குவித்தனர். அப்புத்தகத்திலுள்ள கருத்துக்களை படித்து சுருக்கமாக கொண்டு வரும்படி ஆணையிட்டார். இருபது வருடங்கள் கழித்து அவர்கள் ஐநூறு புத்தகங்களோடு வந்தனர். அரசர் அரசாட்சியிலேயே கவனம் செலுத்தியதால், அதனை மேலும் சுருக்கமாக கொண்டு வரச்சொன்னார். இவ்வாறு பலமுறை ஞானிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

  இறுதியாக ஒரு வயதான ஞானி மட்டும் ஒரேயொரு புத்தகத்துடன் வந்தார். அப்போது அரசர் மரணப்படுக்கையில் படுத்திருந்தார். ஞானி மன்னரின் அருகில் சென்றார். "மனித குலத்தின் வரலாறு தெரியாமலேயே நான் இறக்கப் போகிறேனே' என வருத்தப்பட்டார் மன்னர். அதற்கு ஞானி, மனித வரலாற்றினைச் சுருக்கமாகக் கூறுகிறேன், "அவர்கள் பிறந்தார்கள், அவர்கள் துன்பப்பட்டார்கள், அவர்கள் இறந்தார்கள்' என்றார்.

   கற்றுத் தெரிந்தால் அறிவு;
   கல்லாதது அறிந்தால் ஞானம்!

  கட்டுரையாசிரியர்: ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ் காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai