இனிமே ப்ளாஸ்டிக் இல்லாம எப்படி வாழறது? கேள்விக்கு பதில் இதோ!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசால்
இனிமே ப்ளாஸ்டிக் இல்லாம எப்படி வாழறது? கேள்விக்கு பதில் இதோ!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருள்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதோடு, வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியது. கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது.

எதையும் சட்டமாக்கினால்தான் மக்கள் அதை பின்பற்றுவார்கள் என்பது இந்தத் தடையின் மூலம் அறியலாம். ஆனால் ப்ளாஸ்டிக் பொருட்கள் நம் வாழ்வியலுடன் எந்தளவிற்கு இணைந்துவிட்டது என்பது அவை இல்லாமல் போகும் போதுதான் தெரிகிறது. காலையில் எழுந்ததும் நாம் பயன்படுத்தும்  பால் பாக்கெட்டிலிருந்து, தண்ணீர் குடங்கள், நீர் போத்தல்கள் வரை பலவிதமான நெகிழிப் பொருள்கள் நம் வாழ்க்கையுடன் ஒன்று கலந்துவிட்டன. ஆனால் இவை சுற்றுச் சூழலுக்கும் மனித உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பதால் சிறிது சிறிதாக இதன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் சில நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் ப்ளாஸ்டிக்கை முறையாக அப்புறப்படுத்தும் தொழில்நுட்பத்தை நடைமுறை படுத்தினாலே போதும், அதை தடை செய்வது தேவையில்லை என்றும் கூறிவருகின்றனர். எது எப்படியோ, ப்ளாஸ்டிக் மீதான தடை குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இப்போதைய தேவை.

ஜனவரி முதல் தேதியிலிருந்து பெரும்பாலான கடைகளில் நெகிழிப் பொருள்களை வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை. பை இல்லாமல் வந்தவர்களிடம், கண்டிப்பாக துணிப்பை அல்லது மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. சில கடைகளில் வியாபாரிகள் தங்களிடமுள்ள எஞ்சிய நெகிழிப் பைகளில் பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கியதுடன், இந்த நெகிழி காலியானவுடன் அடித்த முறை வழங்க முடியாது எனவே, கடைக்கு வரும்போது கண்டிப்பாக மாற்று ஏற்பாட்டுடன் வருமாறு கூறினர்.

இதனால், செவ்வாய்க்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக கடைகளுக்குச் சென்ற பொதுமக்களுக்கு புதிய அனுபவம் கிடைத்தது. எனினும், நெகிழிப் பொருள்கள் தாராளமாக பயன்பாட்டில் உள்ளதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

நகரம், கிராமப்புற பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மூலமாக தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மாற்றுப் பொருள்களை கண்டறிவதிலும், அதனை வியாபாரிகளிடம் கொண்டுச் சேர்ப்பதிலும் போதுமான முன்னேற்றம் இல்லை. காகித பை,  பாக்கு மட்டை தட்டுகள், மண்ணால் செய்யப்பட்ட குவளைகள், எவர்சில்வர் குவளைகள், காகிதத்தால் செய்யப்பட்ட கைப்பைகள் உள்பட நெகிழிக்கு மாற்றாகப் பல்வேறு பொருள்கள் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com