கேரள இடதுசாரி அரசே! வாவர் மசூதிக்கு பெண்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை!

பக்தியில்லாத இரண்டு பெண்களை சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்ய வைத்து இந்து மதத்தோடு போரை துவக்கியுள்ளது கேரளாவை ஆளும் இடதுசாரி ஆட்சி.
கேரள இடதுசாரி அரசே! வாவர் மசூதிக்கு பெண்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை!

கடந்த 2ஆம் தேதி நாற்பது வயதான பக்தியில்லாத இரண்டு பெண்களை சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்ய வைத்து இந்து மதத்தோடு போரை துவக்கியுள்ளது கேரளாவை ஆளும் இடதுசாரி ஆட்சி. இதைத் தொடர்ந்து கேரளம் கலவர பூமியாகி நிற்கிறது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பதட்டத்துடன் இருந்த சபரிமலையில், இப்படிச் செய்வதால் பிரச்னை மேலும் தீவிரமாகும், மோதல் வெடிக்கும் என்று அரசுக்குத் தெரியாதா? தெரிந்திருந்தும் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் இந்துமத நம்பிக்கைகளை அழிக்கும் செயலில் பினராயி விஜயன் அரசு இறங்கியுள்ளது.

பல்வேறு போராட்டங்களில் இதுவரை மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சன்னிதானம் உட்பட 5 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தாக்கப்பட்டுள்ளார்கள். பக்தர்களின் போராட்டத்தை எதிர்பார்த்து பல இடங்களில் மோதலுக்கு ஆட்கள் தயாராக இருந்தது போன்ற ஒரு தோற்றத்தையும் பார்க்கமுடிந்தது. இந்த போராட்டத்தில் சந்திரன் உன்னித்தான் என்பவர் தாக்கப்பட்டு மரணமடைந்தார். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்தார் என்று கேரள முதல்வர் அறிக்கை வெளியிட்டார். மரணத்திற்கு காரணம் அவர் தலையில் ஏற்பட்ட பலமான காயம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட அப்பட்டமான பொய்யை ஒரு முதல்வர் சொல்கிறார் என்றால், அவர் இந்துக்களுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் செய்வார் என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

மறுசீராய்வு மனு விசாரணைக்கு வரும் நிலையில் கேரள அரசு பல தந்திர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் “பெண்கள் சுவர்” என்ற மனித சங்கிலி போராட்டம். தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்தப் போராட்டத்தை நடத்திக்காட்டியுள்ளது கேரள அரசு. போராட்டம் நடத்திய பல இடங்களில் கூட்டமே இல்லை. பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் கலந்துக்கொண்டதை பார்க்க முடிந்தது. அந்த பெண்களில் ஒருவரை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் கேள்வி கேட்ட போது ‘எதற்காக வந்திருக்கிறோம் என்பதே அவருக்குத் தெரியவில்லை. கணவர் கலந்துகொள்ளச் சொன்னார் அதனால் கலந்துகொள்கிறேன் என்று அவர் பதிலளித்தார். வேறு சில இடங்களில் கிருஸ்தவ கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டனர். மாற்று மதத்தவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டால் மதப்பிரச்னை உருவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களை போராட்டத்தில் கலந்துகொள்ள அனுமதித்தது எப்படி? ஒரு கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்ட போது இது போல் தெருவில் இறங்கி போராடினார்களா? இப்படி ஒரு கேள்வியை அவர்களைப் பார்த்து கேட்கும் நிலைக்கு காரணம் அவர்கள் இந்துக்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதுதான். மதக்கலவரங்கள் ஏற்பட வேண்டும் என்று கேரள அரசு எதிர்பார்க்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

மற்றொரு தந்திர நடவடிக்கையாக, இரண்டு பெண்களை சன்னிதானத்திற்குள் அழைத்துச் சென்றது கேரள அரசு. அது மட்டுமில்லாது “பக்தர்கள் யாரும் இந்த பெண்களை எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள்', என்று கேரள முதல்வர் பேசியுள்ளார். மரியாதைக்குரிய கேரள முதல்வர் அவர்களே!

சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம் என்று சொல்கிறீர்களே! முகத்தை மறைத்து, காவல்துறையை பக்தர்கள் போல உருமாற்றி, விஐபிக்கள் வரும் பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். இந்தப் பெண்களை விஐபிக்கள் பாதையில் அழைத்துச் செல்ல கோர்ட் உத்தரவிட்டுள்ளதா? இந்த நாட்டின் சாதாரண பிரஜை யாராவது ஒருவர் தனக்கும் இதுபோன்ற சலுகையை கொடுக்கும்படி கேட்டால் உங்களால் வழங்க முடியுமா?

பக்தர்கள் யாரும் எதிர்க்கவில்லை என்று சொல்கிறீர்களே! அது உண்மையென்றால், ஏன் அவர்களை பதினெட்டு படிவழியாக அழைத்து செல்லவில்லை?

கோவிலில் நுழைவதற்கு பெண்கள் பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு மட்டுமே கொடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இருக்கிறது. ஆனால், மறைவான இடத்தில் தங்க வைத்து, தங்களது வாகனத்திலேயே ஏற்றிவந்து, விஐபிக்களுக்கு ஒதுக்கப்பட்ட வாயிலின் வழியாக சன்னிதானத்திற்குள் அழைத்துச் சென்றது எந்த சட்டத்தின் அடிப்படையில் செய்யப்பட்டது?

கள்ளக்காதல், ஓரினச் சேர்க்கை ஆகியவற்றை பெற்றோர்களும், சமூகமும் எதிர்க்கிறது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அது சட்டபூர்வமானது. கள்ளக்காதல் ஜோடிகளுக்கும், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் உங்கள் அரசு காவல்துறையை பாதுகாப்பிற்கு அனுப்புமா? விஐபிக்கள் தங்கும் இடத்தை ஒதுக்கி இந்த சட்டபூர்வமான புண்யகாரியத்தை நடத்திக் கொடுக்குமா?

முகத்தை மறைத்து அடுத்தவர்களை ஏமாற்றி உள்ளே நுழைவது முகமூடிக் கொள்ளையனின் குணம். அந்த சிந்தனை ஆளுகின்ற உங்களுக்கு எப்படி வந்தது? உங்கள் அரசு கூட்டிச் சென்ற இரண்டு இடதுசாரி பெண்களின் கள்ளப்பயணத்தில் பக்தியில்லை. இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நரித்தனம் மட்டுமே இருந்தது. சபரிமலைக்கு எரிபொருள் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில் டிரைவர் இருக்கைக்கு அருகே மறைந்தபடி இரண்டு பெண்களையும் உங்கள் அரசே அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து சீருடை அணியாத போலீசார், பக்தர்களின் கண்களில் மண்ணைத்தூவி மாற்று பாதை வழியாக அந்தப் பெண்களை அழைத்துச் சென்றாதாக கூறப்படுகிறது. அவர்கள் சன்னதிக்குள் நுழைவதை வீடியோ எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுகிறீர்களே! இது தான் பக்தியா? இது அரசு செய்யும் காரியமா?

‘எங்களுக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இதை சிலர் அரசியலாக்க நினைக்கிறார்கள். நாங்கள் சபரிமலை செல்வதற்கு எங்கள் வீட்டினரே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கேரள கம்யூனிஸ்ட் அரசுதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அழைத்து சென்றது', என்று சன்னிதானத்திற்குள் நுழைந்த கள்ளப்பயண பெண்கள் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் சொன்னபடி, பெரும்பான்மையர் இவர்கள் செயலை ஆதரிக்கிறார்கள் என்றால் எதற்காக டேங்கர் லாரி டிரைவர் பின்னால் ஒளிந்து பிரயாணிக்க வேண்டும்? இவர்களது வீட்டில் மட்டுமல்ல, இந்து சமய நம்பிக்கைகளின் மீது சிறிதளவாவது அக்கறை இருப்பவர்கள் இவர்களை எதிர்ப்பார்கள்.

கேரள முதல்வரே! நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட்காரராக இருக்கலாம், இந்துமத எதிர்ப்பாளராக இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு மாநில முதல்வர். இந்து மத நம்பிக்கை உடையவர்களுக்கும் நீங்களே முதல்வர். உங்களது தனிப்பட்ட வெறுப்புகளை மக்களிடம் திணிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் ‘வாவர்' மசூதிக்கும் சென்று வருவது இன்றுவரை கடைபிடிக்கப்படும் பழக்கம். ‘வாவர்' இஸ்லாமிய துறவி, ஐயப்ப பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்களை அழைத்துச் செல்ல பல முறை முயன்ற கேரள அரசு அவர்களில் ஒருவரைக்கூட ‘வாவர்' மசூதிக்கு அழைத்துச் செல்லவில்லை? அது ஏன்?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை!

ஒரு புரட்சிக்காரன். நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதே அவனுடைய பொழுதுபோக்கு. அவனுக்கு உதவியாக பக்கத்து நாட்டில் ஒரு மந்திரவாதி இருந்தான். அவன் புரட்சிக்காரனை அழைத்தான்.

‘புரட்சிக்காரனே! என்னிடம் இருக்கும் பிசாசுகளை உன்னுடன் அனுப்புகிறேன். அவை நாட்டில் நுழைந்து கண்டுபிடிக்க முடியாமல் பல திருட்டுக்களை செய்யும். அந்த திருட்டுகளை மையப்படுத்தி பல போராட்டங்களை செய்', என்றான் மந்திரவாதி.

பிசாசுகள் நாட்டில் புகுந்தன. பல திருட்டுக்களை நடத்தின. மந்திரவாதி சொன்னபடி அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டினான் புரட்சிக்காரன். மிகவும் சிரமப்பட்டு போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவந்தான் அரசன்.

அடுத்ததாக தன்னிடம் இருக்கும் பேய்களை நாட்டின் மீது ஏவினான் மந்திரவாதி. அவை நீர் நிரம்பிய ஏரிகளையும், அணைகளையும் உடைத்தன. மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். மீண்டும் போராட்டத்தை தூண்டினான் புரட்சிக்காரன். அரசன் அதையும் சிறப்பாக கையாண்டான். ஆனால், புரட்சிக்காரன் அத்தோடு நிற்கவில்லை.
 
பக்கத்து நாட்டு மந்திரவாதியின் உதவியோடு பல பிரச்னைகளை உருவாக்கினான். பொறுக்க முடியாத அரசன், ஒரு நாள் புரட்சிக்காரனை அழைத்து அவனை அந்த நாட்டு அரசனாக முடிசூட்டினான். சாதுவும் உடன் இருந்தார்.

‘சாதுவே! இவன் நாட்டில் பல பிரச்னைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறான். நான் அரசனாக இருக்கும்வரை இவன் இப்படித்தான் செயல்படுவான். ஆகையால் இவனை அரசனாக்குகிறேன். இவன் நாட்டின் எல்லா பிரச்னைகளையும் நன்கு அறிந்தவன். ஆகையால் என்னைவிட சிறப்பாக ஆட்சி செய்வான். போராட்டமே இல்லாமல் நாடு அமைதியாக இருக்கும்', என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டான் அரசன்.

புரட்சிக்காரன் அரசனானான். ஆனால், நாட்டில் அமைதி மட்டும் ஏற்படவில்லை. மாறாக, பலவிதமான போராட்டங்கள் நடந்தன. புதிய அரசனே போராட்டங்களை மறைமுகமாக செய்தான். நாடு எப்படி போனாலும் அவனுடைய மகிழ்ச்சி கொஞ்சமும் குறையவேயில்லை. இவற்றையெல்லாம் பார்த்த பழைய அரசன், சாதுவிடம் சென்று வருத்தப்பட்டான். சாது அரசனை தேற்றினார்.

‘அரசே! ஒரு போராட்டம் நடந்தால், அதை முன்னின்று நடத்துபவருக்கும், யாருக்கு எதிராக போராட்டம் நடக்கிறதோ அவருக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. அந்த அடிப்படையில் தொடர் போராட்டங்கள் சாதாரண பிரஜையை புரட்சிக்காரனாக்கியது. இது புரியாமல் உங்களுக்கு கிடைத்த முக்கியத்துவத்தை உணராமல் ஆட்சியை அவனிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்', என்றார் சாது. அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தான் அரசன். சாது மீண்டும் பேசினார்.

‘நாட்டின் மீது அக்கறை இருப்பவன் ஆட்சியைப் பற்றி கவலைப்படமாட்டான். மக்களின் அமைதியை மட்டுமே விரும்புவான். ஆனால், சுயநலவாதி தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுவான். அரசே! அமைதிக்காக நாட்டை புரட்சிக்காரனிடம் ஒப்படைத்தீர்கள். ஆனால் அவன் போராட்டத்தை தொடர்கிறான். காரணம் ‘போராட்டம்' அவனுக்கு பிடித்தமான தொழில். மக்களிடம் போராட்டங்களை திணித்தால், அவர்கள் அதைத் தாண்டி வேறு எதிலும் கவனத்தை செலுத்தமாட்டார்கள். அவர்களை தன் வழியில் இழுத்துச் செல்லலாம் என்பது அவனது யுக்தி. தொடர் போராட்டங்களின் மூலம் மக்களின் சிந்தனையை கட்டிப்போட்டு வைத்திருக்கிறான் அவன். புரட்சிக்காரனாக இருந்தபோதும், ஆட்சியாளராக இருந்தபோதும், போராட்டங்கள் மட்டுமே அவனை தாங்கிப்பிடித்து வருகிறது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் அவனுடைய வீழ்ச்சிக்கு காத்திருப்பார்கள். உணராதவர்கள் அவனை அரியணையில் அமர்த்தி அழகுபார்ப்பார்கள். அவனோடு சேர்ந்து கோஷமிடுவார்கள்', என்றார் சாது.

‘அதெல்லாம் சரி! மக்களுக்கு நல்லது நடக்குமா நடக்காதா?', என்று கேட்டார் அரசர்.

‘அது புரட்சிக்காரனையும், அவனது ஆட்சியையும் மக்கள் கைவிடுவதைப் பொறுத்தது', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

இந்தக் கதைக்கு விளக்கம் தேவையில்லை. அவரவர் புரிதலே போதும். நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை இருப்பவர்கள் போராட்டத்துக்கு வழிவகுக்க மாட்டார்கள். எது எப்படியோ கள்ளப்பயண பெண்கள் சன்னிதானத்தை கடந்ததும், சன்னிதானம் மூடப்பட்டது. பரிகார பூஜைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. கேரள அரசின் செயலையும் இந்தப் பரிகாரம் சுத்தப்படுத்தியிருக்கும் என்று நம்புவோம்.

கேரள அரசின் இந்தச் செயல் இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம் இந்துக்களிடம் தூங்கிக்கொண்டிருந்த இந்துமத உணர்வுகளை சவுக்கால் அடித்து எழுப்பியிருக்கிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் இந்துக்களின் எதிர்ப்பாளர்களாகிவிட்டார்கள் என்ற உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் கம்யூனிஸ்டுகள் குலுக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டாலும் அது இந்துக்கள் தங்கள் தலையில் இறைத்துக் கொள்ளும் மண்ணுக்குச் சமம்.

கேரள அரசே! சட்டத்துக்கு புறம்பான வகையிலும் சட்டத்தை காப்பாற்றுவோம் என்று நீங்கள் நினைத்தால் அதைவிட அபத்தம் ஏதுமில்லை. ஆனால், உங்கள் செயல்பாடுகள் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. சபரிமலை ஏறுவதற்கு வீரமும், துணிச்சலும், திருட்டுத்தனமும் இருந்தால் போதும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒழுக்கமும், பக்தியும் மட்டுமே அவசியம், இதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

ஒரு சமீபத்திய தொலைக்காட்சி விவாதத்தின் போது, ‘கேரளத்தில் பாபர் மசூதிக்குள் பெண்கள் செல்வதை கம்யூனிஸ்ட் அரசு உறுதிப்படுத்துமா', என்று சி.பி.எம்மின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.



‘நீங்க புதுப்பிரச்னையை உருவாக்காதீர்கள்', என்று சட்டென்று பதிலளித்தார் அவர். சபரிமலைக்கு பெண்கள் நுழைவதை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் ‘வாவர்' மசூதியில் நுழைவதை ஏன் பேச்சளவில்கூட ஏற்றுக்கொள்ள முடிவதில்லை!

இன்னொரு மனதைச் சுட்ட ஒரு நிகழ்வு. திருச்சி ஓயாமாரி மின்மயான அரங்க சுவற்றில் ஆறு வாசகங்கள் எழுதப்பட்ட பலகைகள் பொறுத்தப்பட்டுள்ளன. இரண்டில் கிருஸ்தவர்களின் பைபிள் வசனங்களும், இரண்டில் இஸ்லாமியர்களின் குரான் வசனங்களும், இரண்டில் பகவத்கீதை வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. அரிச்சந்திர மின் மயானத்தில் எதற்காக மாற்று மத வசனங்கள்? இஸ்லாமியர்களோ, கிருஸ்தவர்களோ அங்கு தகனத்திற்கு வருகிறார்களா? எந்த இஸ்லாமியராவது அல்லது கிருஸ்தவராவது இந்த வாசகங்களை அங்கு எழுதச் சொல்லி வலியுறுத்தினார்களா? அல்லது இஸ்லாமிய அடக்கஸ்தலத்திலோ, அல்லது கிருஸ்தவர் கல்லறைத் தோட்டத்திலோ இந்துக்களின் வசனங்களை எழுத வேண்டும் என்று என்றாவது அரசு வலியுறுத்தியிருக்கிறதா? இந்துப் பிணங்களுக்குக்கூட சமத்துவம் அவசியம். ஆனால், மற்றவர்களுக்கு அது தேவையில்லை', என்ற நினைப்பு தவறானது. அப்படி யார் நினைத்தாலும் அது சமத்துவ சிந்தனையல்ல. அது ‘ஓரவஞ்ச சிந்தனை'. அப்படிப்பட்ட ஒரு ஓரவஞ்ச சிந்தனையைத்தான் மரியாதைக்குறிய பாலபாரதி அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இத்தகைய ஓரவஞ்சனை சிந்தனையை கொள்கையாகக் கொண்ட கட்சிகள் துடைத்தெறியப்பட வேண்டும்.

இறுதியாக, ‘தகுதியில்லாதவனுக்கு கொடுக்கப்படும் உத்தம பதவியும், தகுதியானவனுக்கு மறுக்கப்படுகின்ற உத்தம பதவியும் பயனற்றுப் போகும். இதை இடதுசாரிகளுக்கு காலம் உணர்த்தும். இந்துக்களே! விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவராக வேண்டுமானால் இருங்கள், யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளியுங்கள். ஆனால், இந்துமதம் சீண்டப்படுகிறது, இழிவுபடுத்தப்படுகிறது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். போலி மதச்சார்பின்மையை தோலுரித்துக் காட்டுங்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com