Enable Javscript for better performance
என் சுதந்திரத்தை கண்டடைவதற்கான தேடலில் என் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை இழந்தேன்- Dinamani

சுடச்சுட

  

  என் சுதந்திரத்தை கண்டடைவதற்கான தேடலில் என் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை இழந்தேன்

  By கிறிஸ்டி ஸ்வாமிகன்.  |   Published on : 08th January 2019 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  11indian-economy2

   

  நீண்ட காலமாக இழந்த தங்கள் சுதந்திரத்தை தேடுவதில் தங்கள் விலைமதிப்பற்ற பொக்கிஷமான மூத்த பிள்ளையை இழந்த தம்பதியரின் கதையை நீங்கள் தவறாமல் வாசிக்க வேண்டும். தென்னிந்திய குடும்ப கட்டமைப்பில் மூத்த பிள்ளை என்பது சமூகரீதியில் மிகவும் முக்கியமான நபராக இன்னும் கருதப்பட்டு வருகிறது. இந்த தம்பதியரின் வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. தாங்கமுடியாத  வலியையும், சோகத்தையும், வன்கொடுமைகளையும் சகித்துக் கொண்டு, அவைகளை எதிர்க்க இயன்ற முயற்சிகளை மேற்கொள்ள உள்ளார்ந்த சக்தியினை கண்டறிந்த இந்த தம்பதியினர், நம்பிக்கையுடன் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் உங்கள் மனதில் அதிர்வலைகளை உருவாக்கும் என்பது நிச்சயம்.

  அமைதியும், அடக்கமும் ஒருங்கே அமையப் பெற்ற வேணுவும், கோவிந்தம்மாவும் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தங்களது வாழ்க்கைக் கதையை சொல்வதற்கு எங்களுக்கு எதிரே அமர்ந்தனர். இழப்பு, பிரிவு மற்றும் குற்றவுணர்வு ஆகியவற்றின் சொல்ல முடியாத வேதனையானது, பேசும்போதெல்லாம் இப்போதும் கூட அவர்களது இதயத்தை சோர்வாக்கி கனத்துப்போகச் செய்கிறது. அது வெறும் கனவாக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவர்களது வார்த்தைகளில் தெரிகிறது. ஆனால் இன்று அவர்கள் என்னுடன் அமர்ந்து பேசும் போது அரிசி ஆலையில் அவர்கள் கழித்த மோசமான நாட்களை கொண்ட வாழ்க்கையை வெளிப்படுத்தும்படி அவர்களை அறியாமல் நினைவுகள் அருவி போல ஆர்ப்பரித்து கொட்டுகின்றன.

  வேணுவும் மற்றும் கோவிந்தம்மாவும் செங்குன்றத்திலுள்ள அவர்களுடைய முந்தைய முதலாளிக்கு கடனை திருப்பிக் கொடுப்பதற்காக 5000/- ரூபாய் கடனை புதிய முதலாளியிடம் வாங்கினார்கள். அதற்காக அரிசி ஆலை வைத்திருக்கும் புதிய முதலாளியிடம் தங்களது குழந்தைகளுடன் வேலைக்கு வந்தனர். அவர்களுடைய மூத்த மகள் மாரியம்மா ஒரு விதவை.  பவித்ரா என்ற இளம் குழந்தை அவளுக்கு இருந்தது. மாரியம்மாவின் கணவர் எச்ஐவி (எய்ட்ஸ்) நோயின் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். மாரியம்மாவுக்கு அவர் மூலம் பரவிய எச்ஐவி இருப்பது அவர்களுக்கு தெரியாது. அவளுடைய உடன்பிறப்புகளான அமுலு, விஜய் மற்றும் ராஜேஸ்வரியும் அங்கு களத்தில் (அரிசி ஆலையில்) வேலை செய்தனர். அந்த முதலாளிக்கு அங்கு வேலை செய்த பல ஆண்டுகள் காலஅளவின்போது தொடக்கத்தில், அவர் அவர்களை நன்றாக நடத்தினார். ஊதியங்களை ஒழுங்குமுறையாகவும் கொடுத்து வந்தார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு முதலாளி தனது உண்மையான குணத்தை வெளிப்படுத்த தொடங்கினார். 

  ஒரு முறை, தனது சொந்த ஊரில் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்தோடு செல்வதற்கு முதலாளியிடம் வேணு அனுமதி கேட்ட போது, முதலாளியின் மறுமுகத்தை பார்க்கத் தொடங்கினார். அவர் அவர்களை மிரட்டியதோடு, அவர்கள் ரூ.20,000/- முன்பணமாக வாங்கியிருப்பதாக பொய்க்கணக்கு காட்டினார். அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துமாறு மொத்த பணத்தையும் உடனடியாக கொடுத்துவிட்டு, தாராளமாக இந்த இடத்தை விட்டு போய்விடுமாறு அவர்களிடம் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவர்களுக்கு ஆதரவாக மிஷின் டிரைவர் பேசியபோது கெட்ட வார்த்தைகளால அவருக்கும் அர்ச்சனை நடந்தது. 

  ஆரம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் அவர் என்ன சொன்னாலும் போலீஸ் கேட்கும் என்றும் சொல்லி இந்த தொழிலாளர்களை முதலாளி அடிக்கடி மிரட்டி வந்தார். எனவே, வேணுவும் அவரது குடும்பத்தினரும் மிகவும் பயந்திருந்தனர். மற்றும் அரிசி ஆலைக்கு வெளியே ஒரு வாழ்க்கை இருப்பதாக அவர்கள் எண்ணிக் கூட பார்க்கவில்லை.

  அவர்களுடைய மூத்த மகள் மாரியம்மா ஓராண்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்; அவள் மிகவும் பலவீனமாக இருந்ததுடன், அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முதலாளி எந்த உதவியும் செய்யாததால் வேணுவால் தனது மகளுக்கு மருத்துவ சிகிச்சையை கொடுக்க முடியவில்லை. மாரியம்மா என்ற பெண் வேணு மற்றும் கோவிந்தம்மாள் தம்பதியினரின் மகளில்லை என்றும், அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், வேலை செய்யாமலிருப்பதற்கு நொண்டிச் சாக்குகள் சொல்வதற்காகவும் யாரோ ஒரு பெண்ணை எங்கிருந்தோ அவர்கள் அழைத்து வந்திருப்பதாகவும் அவர்களை முதலாளி திட்டினார். அவளை எங்கிருந்து அழைத்து வந்தீர்களோ அங்கேயே அவளை கொண்டு சென்று விட்டுவிட்டு வேலைக்கு திரும்பி வருமாறு வேணுவை முதலாளி அடிக்கடி சொல்வார். தன்னுடைய சொந்த மகளை, அதுவும் அவள் மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கும்போது அதை எப்படி தன்னால் செய்ய முடியும் என்று வேணு பதிலுக்கு முதலாளியை கேட்டபோது, கூடுதல் வசவுச் சொற்கள் முதலாளியிடமிருந்து மழையாகப் பொழிந்தன.

  காதில் கேட்க முடியாத திட்டுகளையும், வசவுகளையும் அவர்கள் தினசரி சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது அடி உதைகளையும் அந்த கல்நெஞ்ச முதலாளியிடமிருந்து பெற வேண்டியிருந்தது. தனது மகளையும் கவனித்துக் கொண்டு, அரிசி மில்லில் எல்லா வேலையையும் செய்வது வேணுவின் உடலையும், மனதையும் வெகுவாகவே பாதித்தது. ஒரு சமயம் கனமான நெல் மூட்டையை ஊற வைப்பதற்காக முதுகில் சுமந்து எடுத்துச் சென்றபோது, சுறுசுறுப்பாக வேலை செய்யவில்லையென்று திட்டியதோடு ஓங்கி அடித்ததில் அந்த பெரிய நெல் மூட்டையோடு சேர்ந்து வேணுவும் கீழே விழுந்தார். விழுந்ததில் காயம்பட்ட போதிலும் கூட, சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல், தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

  அரிசி மில்லில் மட்டும் வேணுவும் அவரது குடும்பத்தினரும் வேலை செய்யவில்லை. ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது நிலக்கடலை அறுவடை செய்யப்படும் நேரத்தில் ஓடை உடைத்து கடலைப் பருப்புகளை பிரிக்கின்ற வேலையும் இவர்கள் தலை மீது சுமத்தப்பட்டது. உடைக்கப்பட்ட ஓடுகளும், கடலைப் பருப்புகளும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு கோணியில் போட்டு தைக்கப்பட வேண்டும். இந்த சாக்குகளை அமுலுவும், விஜய்யும் சரியாக தைத்து பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும். 

  ஒவ்வொரு நாளும் அங்கு வேலை பார்த்த மெஷின் டிரைவர், சமைப்பதற்கு பாலிஷ் செய்யப்படாத உடைந்த அரிசியை தருவார். வியாபாரிகளுக்கு விற்கப்படுகிற பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை இவர்களுக்கு தருவதற்கு அரிசி மில் முதலாளி ஒருபோதும் அனுமதித்ததில்லை.

  மிகவும் மெலிந்து பலவீனமாகி, எழுந்து நிற்கக் கூட திராணியில்லாமல் மாரியம்மாவின் உடல்நிலை மோசமானபோது கூட, முதலாளி கல்மனது கொஞ்சம் கூட கரையவில்லை. மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெற அவர்களை அந்த மனுஷன் அனுமதிக்கவேயில்லை. நிலைமை தொடர்ந்து மோசமானபோது அந்த டிரைவர் ராமாபுரத்திலுள்ள மருத்துவமனைக்கு மாரியம்மாவை அழைத்துச் சென்றார். மருத்துவர் அவளை பரிசோதித்த உடனே அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக உடனடியாக எடுத்துச்செல்லுமாறு பரிந்துரைத்தார். அங்கு மாரியம்மாவை அழைத்துச் செல்வதற்கு வெறும் 500 ரூபாயாவது தந்து உதவுமாறு வேணு முதலாளியின் காலில் விழுந்து கெஞ்சிய போது, தனது தந்தை இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை நேரில் கண்ட மாரியம்மா தன்னை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறத் தொடங்கினாள். அப்போது கூட அந்த கல்நெஞ்ச முதலாளி, 'இந்த ஊரில் நான்தான் மிகப்பெரிய பணக்காரன்; உன்னை நான் விலைக்கு வாங்கியிருக்கிறேன். இந்த அரிசி மில்லிலிருந்து உன்னால் ஒருபோதும் தப்பி வெளியே போக முடியாது. இதுதான் நீ சாகப்போகும் இடம்’ என்று இரக்கமே இல்லாமல் ஆணவத்தோடு கொக்கரித்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த டிரைவர் அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறுமாறு வேணுவை கேட்டுக் கொண்டார். ஆனால், தனது மகளின் உயிரை காப்பாற்ற சிகிச்சைக்கு செலவு செய்ய பணமில்லாமல் எங்கு போவது? எப்படி போவது? என்று வேணுவுக்குத் தெரியவில்லை.

  மாரியம்மாவின் உடல்நிலை மிக மோசமாக ஆன போது ஒரு நிபந்தனையின் பேரில் வேணுவை வெளியே அனுப்ப அந்த முதலாளி சம்மதித்தார். மாரியம்மாவை வேறு எங்காவது கொண்டு போய் விட்டுவிட்டு வேணு மட்டும் மில்லுக்கு வேலை செய்ய திரும்ப வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. வேறு வழியில்லாமல் மனைவியையும், பிற பிள்ளைகளையும் மில்லிலேயே வேலை செய்ய விட்டு விட்டு மீஞ்சூர் அருகேயுள்ள பள்ளிப்புரத்தில் மாரியம்மாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக தனது தம்பியின் வீட்டுக்கு வேணு சென்றார். அங்கு தனது மச்சானும், விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளிகளில் ஒருவருமான முருகன் என்பவரை வேணு சந்தித்தார். விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றி வரும் தொண்டு நிறுவனத்தின் தொடர்பு எண்ணை முருகன் வேணுவுக்கு கொடுத்தார்.

  அங்கு உடனடியாக எந்த உதவியும் பெற இயலாத காரணத்தால் தனது மகளை பின்னிரவில் அரிசி மில்லுக்கு மீண்டும் வேணு கூட்டி வந்தார். ஆனால், நள்ளிரவு நேரத்தில் மாரியம்மாவின் உடல்நிலை மிக வேகமாக சீர்கெட தொடங்கியது; உதவி கேட்டு முதலாளியின் வீட்டுக்கு வேணு ஓடிச் சென்றார். துரதிருஷ்டவசமாக முதலாளி அங்கு இல்லை. அவரின் அம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். எந்த பணத்தையும் தர அந்த அம்மா மறுத்துவிட்டதோடு, மருத்துவ சிகிச்சைக்காக மகளை வெளியே உடனடியாக அழைத்துச் செல்ல அனுமதியும் தர முடியாது என்று கூறிவிட்டார். நிலைமையின் தீவிரம் குறித்து முதலாளிக்கு தகவல் தெரிவிக்கவும் முடியாது என்று மறுத்துவிட்ட முதலாளியின் அம்மா, வேணுவை திட்டி சாபமிட்டதோடு ‘உடம்பு சரியில்லாத மகள் சாகும்வரை காத்திரு’ என்று துளியளவு கூட இரக்கமில்லாமல் விரட்டி விட்டார்.

  மூச்சுவிடக் கூட முடியாமல் தனது மகள் உயிருக்கு போராடுவதை காண சகிக்காத வேணு, அந்த நள்ளிரவிலேயே தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன் குடும்ப அவல நிலையை விலகினார். வேணுவின் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அரிசி மில் அமைந்திருக்கும் உள்ளுர் காவல் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்ததோடு, உடனடியாக ஒரு ஆம்புலன்ஸை அனுப்புமாறு தாம்பரம் அரசு மருத்துவமனையையும் கேட்டுக் கொண்டனர். ஆம்புலன்ஸ்சோடு ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த இரு காவலர்களும் அரிசி மில்லுக்கு சென்று அங்கிருந்த வேணு, கோவிந்தம்மா, மாரியம்மா மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அங்கிருந்து நேரடியாக அரசு மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் ஒரே ஒரு இரவை, அடிமைத்தனத்தின் விலங்குகள் இல்லாமல், சுதந்திரமாக மாரியம்மா கழித்தாள். ஆனால், அடுத்த நாள் அதிகாலைப் பொழுதில் அவளது மூச்சு அடங்கியது; உரிய சிகிச்சையை பெற அனுமதிக்காத கொத்தடிமைத்தனத்தின் கோரமான சங்கிலிகள்தான் அவளது உயிரை பறித்தது என்பதில் எந்த ஐயமுமில்லை. தனது குடும்பத்தினர் அனைவரும் எதிர் கொண்ட அனைத்து சிரமங்கள், வலி, போராட்டம், அடி உதை, வசவுகள் மற்றும் ஏமாற்றம் என எண்ணற்ற கஷ்டங்களையும் மீறி தனது மகள் மாரியம்மா சுதந்திரக் காற்றை சுவாசித்து இந்த பூமியில் தனது கடைசி நாளை செலவிட்டாள் என்பதே தனக்கு ஆறுதலளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது என்று வேணு கூறுகிறார்.

  இன்றைக்கு அமுலுவுக்கு திருமணமாகி ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கிறார். முனுசாமியோடு சேர்ந்து பழவேற்காட்டில் விஜய் மீன் பிடிப்புத் தொழிலை செய்து வருகிறான். ராஜேஸ்வரி ஒன்பதாம் வகுப்பிலும், உயிரிழந்த மாரியம்மாவின் மகள் பவித்ரா ஏழாவது வகுப்பிலும், மீஞ்சூர் அருகேயுள்ள பள்ளிப்புரத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கின்றனர்.

  'நாங்கள் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். அரிசி மில்லில் கொத்தடிமைத்தனம் என்ற கொடும் அரக்கனின் விலங்குகள் உடைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து நான் வெளியே வந்த பிறகுதான் இது போன்ற வாழ்க்கையை எங்களால் வாழ முடிகிறது. அரிசி மில்லில் இருந்த காலத்தில் நாங்கள் தனியாக ஒதுங்கி சாப்பிட்டதைப் போலல்லாமல், இப்போதெல்லாம் நாங்கள் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுகிறோம். சமூகத்தில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள இப்போது எங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. உண்மையிலேயே இப்போது நாங்கள் நிம்மதியாக, நன்றாக சாப்பிடுகிறோம்,’ என்று முகமலர்ச்சியோடு வேணு கூறுகிறார்.

  வேலிகள் கட்டுவது, களை எடுப்பது, விவசாய வேலைகள் போன்ற பலதரப்பட்ட வேலைகளை தினசரி கூலிப் பணியாளராக வேணு செய்து வந்தாலும், பெரும்பாலான நேரங்களில் மீன் பிடிப்பதுதான் இவரது பிரதானப் பணியாக இருக்கிறது. கரைக்கு படகு வந்து சேர்ந்தவுடன், வலைகளை இழுப்பதுதான் இவரது முக்கிய பணியாகும். ஒரு நாளுக்கு ரூ. 250-லிருந்து 700 வரை தன்னால் சம்பாதிக்க முடிகிறதென்று வேணு கூறுகிறார்.

  NREGA திட்டத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்டிருப்பதால் கோவிந்தம்மாவுக்கு ஒரு ஆண்டு 100 நாட்கள் பணியாற்றி ஊதியம் பெறும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் தனது கணவனோடு, மீன் பிடித் தொழிலுக்கும் அவர் உடன் செல்கிறார். விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் சங்கத்தின் உறுப்பினர்களாக இப்போது அவர்கள் இருக்கின்றனர். அவரது கிராமத்திலுள்ள சுயஉதவிக் குழுவிலும் இடம் பெற்றிருக்கும் இவர் ஒரு மாதத்திற்கு ரூ. 210 என்ற சேமிப்புத் தொகையை கட்டி வருகிறார். தனது மகனின் வீடு கட்டும் செலவுகளுக்காக இக்குழுவிடமிருந்து ரூ.5000/- கடன் தொகையையும் இவர் பெற்றிருக்கிறார். 'நாங்கள் வேலை என்ற பெயரில் கொத்தடிமைத்தனத்தின் கீழ் முதலாளியின் பிடிக்குள் சிக்கியிருந்ததைப் போல இப்போதும் அதற்குள் மாட்டிக் கொண்டு அவதிப்படுகிற பல அப்பாவி மக்களில் அநேகரை அதிலிருந்து விடுவித்துக் கூட்டி வர வேண்டுமென்பதே எனது ஒரே விருப்பமாக இருக்கிறது’ என்று தனது மனதின் விருப்பத்தை கோவிந்தம்மாள் இப்போது தைரியமாக சொல்ல முடிகிறது.

  PC: Google

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai