அசல் பாடல்களை மிஞ்சும் குரல்கள்! இது ஒரு ‘கவர்’ ஸ்டோரி

நீங்கள் ஏன் இந்தளவுக்கு இசைப்பித்தராக இருக்கிறீர்கள் என்று ஒருவர் மற்றவரை கேட்டுள்ளார்.
அசல் பாடல்களை மிஞ்சும் குரல்கள்! இது ஒரு ‘கவர்’ ஸ்டோரி

நீங்கள் ஏன் இந்தளவுக்கு இசைப்பித்தராக இருக்கிறீர்கள் என்று ஒருவர் மற்றவரை கேட்டார். அதற்கு அவர், ‘ஏனென்றால் என்னை விட்டு அனைத்தும், அனைவரும் விலகிச் சென்றாலும், இசை என்னுடன் எப்போதும் இருக்கும்’ என்றாராம். இசை நம்மை புத்துயிராக்குகிறது. ஆன்மாவின் இருள் நீக்கி நமக்குள் ஒளி புகுக்கும் வல்லமை இசைக்கு உள்ளது.

நம்மை தற்காலிகமாக எல்லா பிரச்னைகளிலிருந்தும் காப்பாற்றி மன நிம்மதி அளிக்கச் செய்கிறது. அவரவர் ரசனைக்கு ஏற்றவகையில், பக்தி பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், திரை இசைப் பாடல்கள் அல்லது மேற்கத்திய இசை என இசையைக் கேட்டு மகிழ்கின்றனர். வாத்திய இசையை ரசித்து மகிழ்வோரும் உண்டு. இசைக்கு ஏது மொழி? அது பிரவாகமாக நம்மை நனைத்து கரை சேர்க்கும் உன்னதக் கலை.

திரை இசையை எடுத்துக் கொண்டால் பழைய பாடல்கள் முதல் இன்றைய புத்தம் புதிய பாடல்கள் வரை லட்சக்கணக்கான பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் இசையமைப்பாளர்கள் தங்கள் திறமையால் உருவாக்கிய பாடல்கள் அந்த காலகட்டத்து ரசிகர்களை மட்டுமல்லாது இசை ஆர்வலர்கள் அனைவரையும் கவர்ந்தாக உள்ளது. கிராமஃபோனில் இசை கேட்ட காலம் நகர்ந்து, கேஸட்டுகளில் வலம் வரத் தொடங்கியது திரைப் பாடல்கள். அதற்கு அடுத்து குறுந்தகடுகள். தற்போது அது இணையத்தில், கையடக்க ஸ்மார்ட் ஃபோன்களில் என எங்கும் எதிலும் இசை மயம். சர்வம் தாள மயம். ஒரு காலத்தில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மேலான ரசனை சார்ந்த விஷயங்கள் கிடைக்கப் பெற்றுக் கொண்டிருந்த நிலை மாறி இன்று ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவகையில் இசை தொட்டுச் செல்லும் விதமாக சூழல் மாறியிருப்பது சமூக முன்னேற்றம் எனக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் ஒரு புதிய படத்தின் பாடலை நேரடியாக இணையத்தில் வெளியிடும் வழக்கம் உள்ளது. சினிமா பாடல்களை யூட்யூப்பில் பார்த்தும் கேட்டும் ரசிகர்கள் மகிழ்கிறார்கள். இசையமைப்பாளர்களின் அசல் பாடல்கள் ஒருபக்கம் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதைப் போலவே தற்போது கவர் எனப்படும் காணொளிகள் பெருகி வருகின்றன. அதாவது பிரபல பாடகர்கள் பாடிய பாடல்களை யார் வேண்டுமானாலும் இசைக் கோர்ப்புடன் பாடி வலையேற்றலாம். டிக் டாக் போன்ற ஆப்களின் வருகைக்குப் பிறகு, யார் வேண்டுமானாலும் தங்களுடைய திறமைகளை உலகின் முன் அரங்கேற்றிக் கொள்ளலாம் என்பது சாத்தியமாகிவிட்டது. சமூக வலைத்தளம் என்பது இந்தக் காலகட்டத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதற்கு கண்கூடான சாட்சிதான் இவை எனலாம்.

சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் பழைய பாடல்களை புதிய குரல்களில் கேட்கும் மகிழ்ச்சி தான் இத்தகைய கவர் பாடல்களை உருவாக்குபவர்களைக் கேட்கும் போதும் ஏற்படுகிறது. குணா படத்தில் கமல் ஜானகி குரலில் நாம் ரசித்த ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலில் கவர் பாடல் இது.

கோச்சடையான் படத்தில் மணப்பெண் சத்தியம் என்ற பாடல் அப்படம் வெளிவந்த காலகட்டத்தில் கவனம் பெற்றதை விட தற்போது விதம் விதமான காணொளிகளில் யூட்யூப்பில் வலம் வந்து பல லட்சம் பார்வையாளர்களை குவித்துள்ளது.

திறமை இருந்தும் அதை சபையேற்ற வழியின்றி தவித்த கலைஞர்கள் ஒரு காலகட்டத்தில் மனம் ஒடிந்து தற்கொலை செய்து கொண்ட கதைகளை நாம் முன்பு கேட்டிருப்போம். ஆனால் இப்போது திறமையை வெளிப்படுத்த வெவ்வேறு களம் ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப வடிவில் கிடைக்கிறது. வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி அடைவதுதான் நாம் செய்ய வேண்டியது.

நன்றி : Youtube channel

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com