தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு சொல்ல வரும் சேதி இதுவா?

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் நடைபெறும் கிராம ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஊராட்சி சபைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு சொல்ல வரும் சேதி இதுவா?

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதிகளில் திமுக சார்பில் நடைபெறும் கிராம ஊராட்சி சபைக் கூட்டங்களில் கனிமொழி எம்.பி. பங்கேற்கிறார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் கிராம ஊராட்சி சபைகளைக் கூட்டி மக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டு வரும் நிலையில் நாளை முதல் தூத்துக்குடியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., கன்னியாகுமரி எம்.எல்.ஏ. ஆஸ்டின், திருப்பூர் தங்கராஜ், நாமக்கல் ராஜேஷ், வழக்குரைஞர் மனுராஜ் சுந்தரம் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், திமுக சார்பில் நடைபெறும் ஒரு கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பது ஒரு சாதாரண நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை.

அது பற்றி ஆராய்ந்ததில், நமது எக்ஸ்பிரஸ் குழுவுக்குக் கிடைத்தத் தகவல் இதுதான்.

வரும் மக்களவைத் தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் நோக்கிலும், மக்களை நேரில் சந்தித்து அவர்களது மனங்களை அறியும் நோக்கிலும் திமுக நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்களுக்கு, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த திமுகவின் முக்கியப் பிரபலங்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில்தான், தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்பம் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையிலேயே, அப்பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்கு கனிமொழி நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

இது இன்றோ நேற்றோ எடுத்த முடிவில்லையாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனிமொழி தூத்துக்குடியைத் தேர்வு செய்து அதற்கான காய்களையும் நடத்தி வந்துள்ளாராம். அம்மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் கனிமொழி, அத்தோடு நிற்காமல் மிகவும் பின்தங்கியிருந்த வெங்கடேசபுரம் கிராமத்தையும் தத்தெடுத்து, அதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.

அதாவது, மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதை விரும்பாத கனிமொழி, நேரடியாக தேர்தலை சந்தித்து மக்களவைக்குச் செல்ல விரும்புகிறார்.

இவரது பார்வை மக்களவைத் தேர்தல் மீது இருந்தாலும், இதில் திமுகவுக்கு மற்றொரு லாபமும் காத்திருக்கிறது. அதாவது தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் 6ல் தற்போது 4 தொகுதிகளை அதிமுக வைத்துள்ளது. மற்ற 2 தொகுதிகளான ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளும் 2 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதிகள்தான்.

எனவே, கனிமொழியின் தூத்துக்குடி பிரவேசத்தால் அம்மாவட்டத்தில் இரண்டுபட்டு இருக்கும் கட்சித் தொண்டர்களையும் ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது பற்றி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் அல்லது தூத்துக்குடியில் போட்டியிடவே கனிமொழி முதலில் விருப்பம் தெரிவித்ததாகவும், அவரது நலம் விரும்பிகள் சிலர், தஞ்சையை விடவும் தூத்துக்குடி மிகவும் பாதுகாப்பான தொகுதி என்றும், தூத்துக்குடியையே தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு சிலர் இப்படியும் கருத்துக் கூறியிருக்கிறார்கள், அதாவது, கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அதன் பலன் கனிமொழியின் புகழுக்குக் கிடைத்ததாகக் கருத மாட்டார்கள் என்றும், அவரது ஜாதி ரீதியிலாகக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படலாம், இதனால் அவர் எதிர்காலத்தில் ஜாதி ரீதியில் அரசியல் செய்யும் தலைவராகப் பெயர் பெறவும் வாய்ப்பு உள்ளதாக சிலர் எச்சரித்துள்ளனர்.

எனவே, அனைத்து கருத்துகளையும் கேட்டு, கனிமொழியும், கட்சியின் தலைமையும் இதுவரை நிச்சயம் இதுபற்றி ஒரு முடிவெடுத்திருக்கலாம். எனவே, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.. என்ன நடக்கும்? அது எப்படி நடக்கும் என்பதை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com