Enable Javscript for better performance
கட்டாய உழைப்பு / கொத்தடிமை முறை மற்றும் தொழிலாளர் கடத்தலை தொழில்நுட்பத்தின் துணையோடு எதிர்கொள்ளுதல்- Dinamani

சுடச்சுட

  

  கட்டாய உழைப்பு / கொத்தடிமை முறை மற்றும் தொழிலாளர் கடத்தலை தொழில்நுட்பத்தின் துணையோடு எதிர்கொள்ளுதல்

  By டாக்டர். விஜோ வர்கீஸ் வின்சென்ட்  |   Published on : 26th January 2019 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  105327


  மனிதர்களைக் கடத்துவது என்பது கடுமையான குற்றம், மனித உரிமைகள் மீதான மோசமான மீறலும் கூட. அவர்களின் சொந்த நாடுகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ, மனிதர்களை கடத்துபவர்களால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அவர்களின் சொந்த நாடோ, அவர்கள் கடத்திச் செல்லப்படுகிற நாடோ, கடைசியாகப் போய்ச் சேர்கிற நாடோ எதுவாக இருந்தாலும் ஏறத்தாழ உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நாடும் மனிதர்கள் கடத்தப்படுவதால் பாதிக்கப்படுகிறது.  இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 370 - ல் நமது நாடு 2013 - ல் கொண்டு வந்த  திருத்தத்துக்குப் பிறகு மனிதர்களை கடத்துவது என்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.  
   
  கட்டாயப்படுத்தி கொத்தடிமைத் தனத்தில் தள்ளுவதற்காக மனிதர்களை கடத்துவதும் இந்தச் சட்டத் திருத்தத்தின்படி குற்றம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதற்காக பெண்களைக் கடத்துவது பற்றி மக்களிடம் இருக்கிற விழிப்புணர்வோடு ஒப்பிட்டால், கட்டாயப்படுத்தி கொத்தடிமைத்தனத்தில் தள்ளுவதற்காக மனிதர்களை கடத்துவது தொடர்பாக குறைவான விழிப்புணர்ச்சியே இருக்கிறது. அடிமைகள், அடிமைத் தனம் போன்ற நடைமுறைகளை எதிர்கொள்வதற்கான சட்டப் பிரிவுகளும் இதில் உள்ளன.

  கட்டாயப்படுத்தப்பட்ட /  கொத்தடிமை முறை
   
  1976 பிப்ரவரி 9 அன்று கொத்தடிமை முறை உழைப்புச் சட்டம் செயல்படத் தொடங்கியபிறகு கொத்தடிமை உழைப்பு தொடர்பான விவகாரத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.முறையான நிலச் சீர்திருத்தக் கொள்கை இல்லாத நிலை, சாதிய படிநிலை முறை ஆகிய காரணங்களால் தலித் மக்களைக் குறி வைத்துத்தான் பெரும்பாலான சுரண்டல் நடைபெறுகிறது.  

  பாரம்பரியமாக, சாதிய படிநிலையில் கீழே இருக்கும் சாதியினரிடம் இருப்பதை விட அதிகமான நிலம் ‘உயர் சாதியினரிடம்’ இருக்கிறது. அதனால் ‘கீழ்சாதியினர்’ அவர்களின் உழைப்பை அடமானம் வைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அவர்கள்‘உயர்சாதியினரின்’ நிலங்களில் வேலை செய்கின்றனர்.

  இந்தச் சட்டம் என்பது விவசாயத் துறையில் உள்ள கொத்தடிமை முறையை எதிர்கொள்வதற்காகவே நிறைவேற்றப்பட்டது என்றாலும் உடலுழைப்புத் தொழிலாளர்களை பணியமர்த்துகிற மற்ற துறைகளுக்கு ஏற்றாற் போலவும் தற்போது உருவாகியிருக்கிறது.

  உடலுழைப்பு தொழிலாளர்களை பணியமர்த்துகிற தொழில்களான செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், கல்குவாரிகள், கட்டுமான நிறுவனங்கள், மரம் வெட்டும் ஆலைகள், நெசவாலைகள், பீடி சுற்றுதல், உணவகங்கள்  ஆகியவை அத்தகைய துறைகளில் சில.  

  கொத்தடிமை முறையில் மாட்டிக் கொள்பவர்கள் இழிவான வகையில் நடத்தப்படுகிறார்கள். மோசமான வேலைச் சூழல்களில் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.அவர்கள் நீண்ட நேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்கள் வேலை செய்கிற துறைகளில் சட்டப்படி குறைந்தபட்சம் தர வேண்டிய கூலிக்கும் குறைவாக அவர்களுக்கு  கூலி வழங்கப்படுகிறது. அவர்களை வேலை வாங்குகிற மேற்பார்வையாளர்களும் பொறுப்பாளர்களும் உடல்ரீதியாக துன்புறுத்துதல், மிரட்டுதல் மூலம் அவர்களை தொடர்ச்சியான
  பயத்தில் வைத்துள்ளனர்.  

  அத்தியாவசியமான புள்ளி விவரங்கள்

  மனிதர்களை கடத்துவதும் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதும் உலக அளவில் 1500 கோடி டாலர்கள் புழங்குகிற தொழிலாக இருக்கிறது என்று உத்தேசமாக மதிப்பிடுகிறது உலக தொழிலாளர் அமைப்பு. உலகில் மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டிருப்போர் 4 கோடியே 3 லட்சம் பேர் என்று மதிப்பிடுகிறது உலக தொழிலாளர் அமைப்பு. அவர்களில் 81 சதவிகிதம் பேர் கட்டாய உழைப்பில் சிக்கியிருக்கின்றனர். அத்தகையோரில் ஐந்து சதவிகிதம் பேர் குழந்தைகள். 75 சதவிகிதம் பேர் பெண்களும் சிறுமிகளும் அடங்குவார்கள்.
    
  போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் (UNODC), 2018-ம் ஆண்டில் கடத்தப்பட்டோர் பற்றிய உலகளாவிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. கடத்தப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறது அந்த அறிக்கை. கடத்தப்படுகிறவர்கள் அதிகரிக்கிறார்கள் என்றும் இதற்கு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். கடத்தல் குற்றத்தை கண்டறிவதும் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காண்பதும் மேம்பட்டிருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
   
  இந்தியாவில் 2016-ல் மனிதக் கடத்தல் தொடர்பான 8,132 வழக்குகள் பதிவாகியுள்ளன என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை. அவற்றில் 10,921 பேர் கட்டாய உழைப்புக்காக கடத்தப்பட்டுள்ளனர்.  7,732 பேர் விபச்சாரம் என்கிற  பாலியல் சுரண்டலுக்கும் இதர வகையான பாலியல் சுரண்டல்களுக்கும் கடத்தப்பட்டனர் என்கிறது அந்த அறிக்கை.
    
  தமிழ்நாட்டில் மனிதக் கடத்தல் தொடர்பான 434 வழக்குகள் பதிவாகியுள்ளன என்கிறது அந்த அறிக்கை. ஆனால், 1,201 பேர் கட்டாய உழைப்பிலிருந்தும் கொத்தடிமை நிலையிலிருந்தும் குடும்ப அடிமைத்தனத்திலிருந்தும் மீட்கப்பட்டிருக்கின்றனர். 1096 பேர் பாலியல் சுரண்டலிருந்தும் குழந்தைகளை ஈடுபடுத்தி ஆபாசப் படங்கள் தயாரிப்போரிடமிருந்தும் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.
    
  மனிதக் கடத்தல் (கட்டாய உழைப்புக்காக கடத்தப்படுவது உள்ளிட்ட) பற்றிய ஆய்வு மற்றும் தரவுகள் பலதும் சரியானதாக இல்லை என்று உலக அளவிலான ஆய்வுகள் பலவும் தெரிவிக்கின்றன. ஆனாலும், கட்டாய உழைப்பு, கொத்தடிமை முறை பற்றிய ஆய்வுகளும் நம்மிடம் கிடையாது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளைத் தவிர்த்து வேறு எந்த தரவுகளும் காணக் கிடைப்பதில்லை. உச்ச நீதிமன்றம் 1995-ல் 20 விதமான தொழில்களில் ஆய்வு நடத்திய போது தமிழ்நாட்டில், சுமார் 10 லட்சம் பேர் கொத்தடிமை முறையில் சிக்கியிருக்கிறார்கள் என்று கண்டறிந்தது.

  உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் 1997-ல் நடத்திய ஆய்வின் மூலமாக 25,005 பேர் கொத்தடிமை நிலையில் சிக்கியிருக்கின்றனர் என்பதை தமிழக அரசாங்கம் அறிந்து கொண்டது. ஆனால், 2015-ல் இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் 11 விதமான தொழில்களில் ஆய்வு நடத்திய போது 4.63 லட்சம் பேர் கொத்தடிமை நிலைமைகளில் பணியாற்றுகின்றனர் என்று தெரிய வந்தது.
   
  கொத்தடிமை நிலைமை மிக அதிகமாக பரவியிருக்கிற மாவட்டங்களாக, சிவகங்கை, நாமக்கல், திருநெல்வேலி ஆகியவை உள்ளன. நெசவாலைகள், செங்கற்சூளைகள், விவசாயம் ஆகியவைதான் கொத்தடிமை உழைப்பைப் அதிகம் பயன்படுத்துவதில் முதல் மூன்று துறைகளாக உள்ளன. மாநிலங்களுக்கு இடையில் இடம் பெயர்ந்து பணியாற்றுகிறவர்களும் தமிழகத்தில் மேற்கண்ட துறைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர் என்பதும் தெரிகிறது. அவர்கள் 70.4 சதவிகிதம் உள்ளனர்.  கொத்தடிமை நிலைமை தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் மற்ற புள்ளிவிவரங்களில் தமிழகம் பற்றியோ இந்தியா பற்றியோ எதுவும் இல்லை.

  மனிதக் கடத்தலை எதிர்கொள்ள தொழில்நுட்பம் ஒரு தீர்வாக இருக்க முடியும் 
   
  மனிதக் கடத்தலை எதிர்கொள்வதற்கு இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பமும் ஒரு சிறந்த கருவியாக இருக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபையும் உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளும்  உலகளாவிய பெரும் நிறுவனங்களோடு இணைந்து ஒரு கூட்டணியை அமைத்திருக்கின்றன. ‘கடத்தலுக்கு எதிரான தொழில்நுட்பம்’ (Tech Against Trafficking) என்பது அதன் பெயர். மனிதக் கடத்தலைத் தடுப்பதற்கான தீர்வுகளை உருவாக்க எவ்வாறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் நோக்கம்.
   
  ‘கடத்தலுக்கு எதிரான தொழில்நுட்பம்” எனும் இயக்கம், சிவில் சமூகம், சட்டத்தை அமலாக்குவோர், கல்வியாளர்கள், மீட்கப்பட்டோர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றும். மனிதர்களைக் கடத்துவதில் குறுக்கீடு செய்கிற, அதைக் குறைக்கிற, தொழில்நுட்ப தீர்வுகளை அடையாளம் காணவும் புதிதாக உருவாக்கவும் செய்யும். அவை குற்றங்களை தடுக்கவும் அடையாளம் காணவும் செய்யும். பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு தரும் கட்டமைப்புகளை உருவாக்கும். பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு புதுமைத் திறன், ஒருங்கிணைப்பு, வழிகாட்டல், ஆதார வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் மூலமாக ஆதரவளிக்கும்.
    
  பல நிறுவனங்களில் உலக அளவில் ‘பணியாளர்களுக்கான நேரடி இணைப்பு’ (‘ஒர்க்கர் ஹாட்லைன்ஸ்’) எனும் புதிய வசதியை தங்களது  பணியிடங்களில் நிறுவியிருக்கின்றன. அதன் தொழிலாளிகளுக்கு அவர்களின் பெயர்களையோ அடையாளங்களையோ வெளிப்படுத்தாமல் கேள்விகளை கேட்கவும் ஆலோசனைகளை பரிந்துரைக்கவும், ஸ்மார்ட் ஃபோன் அப்ளிகேஷன்ஸ் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி தங்களது அக்கறைகளை வெளிப்படுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தை உழைப்பு, சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டிருக்கிற தொழிலாளர்கள் பற்றிய செய்திகள், கண்காணிப்பாளர்களால் தரக்குறைவான முறையில் நடத்தப்படுதல், சம்பள பிரச்னைகள், உணவு உள்ளிட்ட பல விஷயங்களை இந்த புகார்கள் வெளிப்படுத்தும். இவை யார் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்களால் பதிவு செய்யப்படுபவை.
    
  தாய்லாந்து நாட்டின் பலகோடி டாலர்கள் புழங்கும் மீன் பிடித் தொழிலில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவதால் அதை தடை செய்துவிடுவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த நாடுகள் மிரட்டியதையடுத்து 2018ல், தாய்லாந்து தனது செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி கட்டாய உழைப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தது.  செயற்கைக் கோள்களைப் பயன்படுத்துவதன் மூலம் கடலில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கிற கப்பல்களை அதிகாரிகளால் குறிப்பாக தேர்வு செய்துவிட முடியும். அத்தகைய கப்பல்களில் அடிமைத்தனமான வேலைச் சூழல்கள் இருக்கின்றன என்பதற்கான குறியீடுதான் அது.
   
  இங்கிலாந்தைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழகம் இதேபோலத்தான் விண்வெளியிலிருந்து அடிமைத்தனம் (Slavery from Space)எனும் திட்டத்தை தொடங்கியது. செயற்கைக் கோள்கள் மூலம் கிடைத்த அந்தப் படங்களை வைத்துதான் இந்தியாவின் செங்கல்சூளைகளில் 1 கோடியே 80 லட்சம் அடிமைகளுக்கும் மேலாக பணியாற்றுகிறார்கள் என்று உலக அடிமைகள் அட்டவணை எனும் ஆய்வில் தோராயமாக மதிப்பிடப்பட்டது.

  செங்கல் தயாரிக்கும் தொழில் லட்சக்கணக்கான உடல் உழைப்பு தொழிலாளிகளின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. தெற்காசியாவில் 44 லட்சம் முதல் 52 லட்சம் செங்கல் சூளை தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்ப்பிடப்பட்டுள்ளது. அவர்களில்  68 சதவிகிதம் பேர் வரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிற சூழல்களில் பணியாற்றுகின்றனர் என்றும் தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள செங்கல் சூளை தொழிலாளர்களில் தோராயமாக 19 சதவிகிதம் பேர் 18 வயதுக்கும் கீழானவர்கள். வேலைச் சூழல்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள் இவை இரண்டுமே சட்டத்தால் தடை செய்யப்பட்டவை. செயற்கைக் கோள் எடுக்கிற படங்களில் தெளிவாக தெரிகிற இந்த செங்கல் சூளைகள் கண்காணிக்கப்பட வேண்டியவை.

  கட்டாய உழைப்பு / கொத்தடிமை முறை மற்றும் உழைப்பாளர் கடத்தலை எதிர்கொள்வதற்கான முன்னோக்கிய அடியாக தொழில்நுட்பம் வழங்குகிற வாய்ப்புகள் உள்ளன. நிச்சயமான, தொழில்நுட்ப தீர்வுகளை தருபவை கீழ்க்கண்டவை. 

  1. கிளவுட் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்ஸ் ஆகியவை தாங்கள் தருகிற மற்ற தீர்வுகளுக்கு மத்தியில், மக்களுக்கும் நலிந்த நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை என்றால் முதலில் அங்கே வர வேண்டிய கடமை உள்ளவர்களுக்கும் இத்தகைய விவகாரங்கள் பற்றி இருக்கிற விழிப்புணர்ச்சியை அதிகரித்தல், இருக்கும் வளங்களை உபயோகப்படுத்துதல், குறைபாடுகளை உரைப்பது ஆகியவற்றுக்கும்  உதவியாக இருக்கும்.
  2. நலிந்த மக்கள் குழுக்களுக்கு ஆதரவாக இருக்கிற முன்னணி சிவில் சமூக அமைப்புகளுக்கும் கட்டாய உழைப்பு / கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவற்றிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பவர்களுக்கும் அடிப்படையான தொழில்நுட்பமும் பயிற்சியும் தொழில்நுட்ப நிறுவனங்களால் எளிதாகக் கிடைக்கும்.பெரும்பாலான இத்தகைய அமைப்புகளில் மடிக்கணினிகள் (லேப்டாப்புகள்) இல்லை. ஸ்மார்ட் போன்கள்,  இவற்றின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துவதற்கான திறன்கள்,எளிமையான நிர்வாகத்துக்கான முறைமைகள் எதுவும் இல்லை.
  3. கட்டாய உழைப்பு / கொத்தடிமை முறையை எதிர்கொள்ளவும் அது பற்றிய புரிதலை மேம்படுத்தவும் தேவையான முறையில் தரவுகளை சேகரிக்கவும் ஆய்வு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் நம்பகமான மையங்களாக மாறக்கூடிய கட்டணமில்லா தேசிய உதவி எண் (நேஷனல் ஹெல்ப்லைன்ஸ்) ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.
  4. தரவுகள் அளவுக்கு அதிகமாக குவிதல் (டேட்டா ஓவர்லோடு) எனும் பிரச்னையை எதிர்கொள்வதற்கும், திறன்மிக்க முறையில் எதிர்வினையாற்றவும், தரவுகளில் உள்ள தொடர்புகளை அடையாளம் காணவும், தரவு ஆய்வுக் கருவிகள் பயன்படும். இல்லையென்றால் தரவுகளில் உள்ள தொடர்புகள் தவறிவிடும். (உதாரணமாக, செயற்கை நுண்ணறிவையும் பிக் டேட்டா எனப்படும் சாதாரணமான முறையில் ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு பெரிதாக உள்ள தரவுகளையும் பயன்படுத்துதல்).
  5. தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களிலும் உழைப்பாளர்களை வழங்குகிற நிர்வாக கட்டமைப்பிலும் வெளிப்படைத்தன்மையையும் அவற்றை தேடி அடைவதையும் மேம்படுத்துவதற்காக, கணினிகளுக்கு இடையே பகிர்ந்து கொள்கிற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
  6. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதும் அவர்களை ஆற்றல்படுத்தவும் சுரண்டல்களிலிலுந்து அவர்களே அவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் குறிப்பாக, வெளிமாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வேறொரு மாநிலங்களில் பணியாற்றுகிறவர்களுக்கும் பயோமெட்ரிக் அடையாளத்தை பதிவு செய்கிற மேலாண்மை உதவும்.

   

  செய்ய வேண்டியது என்ன?
   
  உலகளாவிய அளவில் நான்கு கோடிப் பேரை பாதிக்கக் கூடிய கட்டாய உழைப்பு மற்றும் மனிதக் கடத்தலை எதிர்கொள்வதற்கு அதிகமான நிறுவனங்கள் முன்வந்து பணியாற்றி வருகின்றன. மனிதக் கடத்தல் என்னும் குற்றம் பரவலாக எல்லா நாடுகளிலும் உள்ளது, இந்தக் குற்றத்தை தடுப்பதில்  பலவிதமான சிக்கல்கள் உள்ளன. (அமெரிக்க அரசின் வெளியுறவு அமைச்சகம் மனிதர்களை கடத்துவது தொடர்பான 2018 ம் ஆண்டு அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறது. இத்தகைய சிக்கல்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் அதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன) எனவே, மனிதர்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான வேலைகளில் செயல்படுகிற அனைவரும் (அரசாங்கம், காவல்
  துறை, அரசு சாரா நிறுவனங்கள், சிவில் சமூகக் குழுக்கள் உள்ளிட்டவை) குறிப்பாக தனியார் துறையினரும் அதிகமாக ஈடுபடுதல் மிக அவசியமானது.
   
  வருகிற 2030-ம் ஆண்டுக்குள் கட்டாய உழைப்பையும் கொத்தடிமை நிலைமையும் ஒழித்துவிடலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய குறிக்கோளை (நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்) வைத்திருக்கிறது.
   
  ஐக்கிய நாடுகள் சபையின் இத்தகைய குறிக்கோள்களை இந்தியாவிலும் நிறைவேற்றுவது என்பது மனிதக் கடத்தலை குறைக்கவும் மனிதர்கள் தவறாக நடத்தப்படுவதையும் வன்முறையையும் சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உதவும்.

  தொழில்நுட்பம் மட்டுமே நவீன அடிமைத்தனத்தை ஒழிக்காது. அதை எதிர்கொள்வதில் சமூகத்துக்குத் தேவையான கருவிகளையும் தீர்வுகளையும் அது வழங்கும்.இந்தியாவில் தற்போதுள்ள சுமார் 1 கோடியே 84 லட்சம் கொத்தடிமைகளைக் கண்டறிந்து , அவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது என்பது கொத்தடிமை முறை தொடர்பாக மத்திய அரசு வைத்திருக்கிற 2030 வரையிலான பதினைந்தாண்டு லட்சியக் குறிக்கோளின் ஒரு பகுதி, என்று மத்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா நாடாளுமன்றத்தில் 2016-ல் தெரிவித்தார். கொத்தடிமை முறை தொடர்பான குற்றங்களை விசாரித்து தண்டிப்பதற்கான அரசு நிர்வாக கட்டமைப்பை மத்திய அரசு வலுப்படுத்தும் என்றும் தற்போது நடந்து வரும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு 100 சதவிகிதம் தண்டனைகள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் புதிதாக கொத்தடிமை முறை பரவாமல் தடுக்க அரசு பாடுபடும் என்றும் தெரிவித்தார். கட்டாய உழைப்பு / கொத்தடிமை முறைக்கு எதிராகப் போராடுவதிலும அதை ஒழிப்பதிலும் அரசுக்கு இருக்கிற இந்த நோக்கத்துக்கு தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்க முடியும். சட்டத்தை அமலாக்க வைக்கும். தரவுகளை சேகரிக்கவும் அளக்கவும் ஆராயவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும். உடனடியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.

  நலிந்த நிலைமையில் இருப்பவராகவும் பாதிக்கப்பட்டவராகவும் பாதிப்பிலிருந்து தப்பிப் பிழைப்பவராகவும் இருக்கிற நவீன அடிமைத்தனத்தின் பல்வேறு கட்டங்களுக்கு பல்வேறு வகையான தீர்வுகளை தொழில்நுட்பங்களை வழங்குவோர் வைத்திருக்கின்றனர். நடைமுறையில் உள்ள தீர்வுகளை விரிவு படுத்துவது அல்லது தீர்வுக்கான புதிய முன்மொழிவுகளை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள தீர்வுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவை எந்த அளவுக்கு வெற்றியைத் தந்துள்ளன என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு துறை என்ற முறையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் இணைந்து செயல்படவெண்டும். இந்த விவகாரத்தில் நிபுணர்களாக இருப்பவர்களோடும் இணைந்து செயல்பட வேண்டும்.
    
  நவீன அடிமைத்தனத்தின் பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள மனித உரிமை சவால்களையும் அபாயங்களையும் அவற்றை எதிர்கொள்வதற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் தீர்வுகளையும் புரிந்து கொள்வதுதான் எதிர்கால தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவது என்ற இலக்குக்கு உதவி செய்யும்.
   
  சட்டத்தை அமலாக்கும் அமைப்புகளுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் குறிப்பான தேவைகள் அவசியம் என்பதை உறுதிப்படுத்துகிறது இது. அதே நேரத்தில் தனிநபர் அகவுரிமை (privacy) யை முன்னுரிமை கொடுத்து கணக்கில் எடுக்கவேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்கள் மேலும் சிறப்பான வகையில் பொருந்துகிற, திறன்மிக்க நடவடிக்கைகளை தொழில்நுட்பம் மூலம் வழங்கும். நவீன அடிமைத்தனத்தை எதிர்கொள்வதிலும் பாதிக்கப்பட்டோருக்கு துணை நிற்பதிலும் குற்றத்தை குறைப்பதிலும் தொழில்நுட்பம் ஓரடி முன்னேற்றத்தைத் தரும். ஆனால் அவை திறன்மிக்க முறையிலும் மனித உரிமை தரங்களுக்கு உட்பட்டும் இருக்கவேண்டும். மேலும் துல்லிய தகவல் சேகரிப்பு, கிடைத்த தகவலை முறையாக மதிப்பிடுதல், ஆய்வுகள்,பகிர்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அது உள்ளடக்கியிருக்கிறது. அத்தகைய கருவிகளை முழுமையாக பயன்படுத்துவதற்கான திறன்களை அவர்களிடம் உருவாக்குவதும் தேவையாயிருக்கிறது.
   
  இந்த விவகாரத்தோடு சம்மந்தப்பட்ட அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் இந்த இலக்கை அடைய முடியும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai