கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கொடுமை! மனம் பதற வைக்கும் உண்மைக் கதை!

பவானி தன் விடுதலையை நெஞ்சார நேசிக்கிறார்.
கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கொடுமை! மனம் பதற வைக்கும் உண்மைக் கதை!

உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு மருத்துவம் பார்க்க முன்பணமாக வாங்கிய தொகையால் ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்தின் விடுதலையும் அமைதியும் பறி போனது. சதீஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இரு குழந்தைகளுக்குப் பெற்றோர் பவானி மற்றும் குமார் தம்பதியினர். அவர்களது இளைய மகன் விஷ்ணுவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவம் பார்க்கப் பணம் தேவைப்பட்டது. ஏற்கனவே பவானியும் குமாரும் செங்கல் சூளையில் வாரம் ஆறு நூறு ரூபாய்க்கு வேலை செய்து வந்தனர். இது அதிகமான கூலி இல்லை என்றாலும் குறைந்தபட்சம் அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது.

இளைய மகனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்களிடம் பணம் இல்லாததால் ரூபாய் 15 ஆயிரத்தை வேறொரு செங்கல் சூளை முதலாளியிடம் கடனாகப் பெற்றனர். அவரும் அதை எப்படித் திருப்பிச் செலுத்துவது என வழிகளைக் கூறினார். இந்த ஏழ்மையான தம்பதி கடன் வழங்கிய செங்கல் சூளை முதலாளியிடம் வேலை செய்து கடனை அடைத்து விடலாம் என்று கருதினர். ஆனால் நடந்தது வேறு. அந்த வருடம் முழுக்கவும் அவர்களுக்குப் பசியும் பட்டினியும், மோசமான வார்த்தைகளால் நேர்ந்த அவமானம், வேலைக்கேற்ற கூலி இல்லாமை என அவர்கள் பட்ட இன்னல்கள் ஏராளம். மேலும் இரவு பகலாக வேலை செய்தாலும் கடன் தொகை அப்படியே இருந்தது. இவ்வளவு துயரமும் பவானி ஒருநாள் துணிந்து செங்கல் சூளையை விட்டு செல்லும் நாள் வரைத் தொடர்ந்தது.

கொத்தடிமையிலிருந்து விடுதலை

நாளொன்றுக்கு ஆயிரம் செங்கற்களைச் செய்தால் பவானிக்கும் குமாருக்கும் சேர்த்து ரூபாய் 600 வழங்குவதாக முதலாளி கூறி அழைத்துச் சென்றார். ஆனால் வேலையிடத்தில் கடன் தொகைக்கு உண்டான வட்டி போக மீதம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 100 மட்டுமே வழங்கினார். அந்த நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு ஒரு வாரச் செலவிற்கு 100 ரூபாய் போதாமல், சிறு சிறு தொகைகளை ஒவ்வொரு வாரத்திற்கும் அவர்கள் கடனாக வாங்கினர். ஏற்கனவே வாங்கிய ரூபாய் 15 ஆயிரத்துடன் சிறு கடன்களையும் சேர்க்கவே எவ்வளவு வேலை செய்தும் கடன் குறையாமல் அப்படியே இருந்தது.

முதலாளி சரியான சம்பளம் தராமல் இரவு பகலாக வேலை வாங்குவதிலேயே முனைப்பாக இருந்தார். அதிகாலை 2 மணிக்குத் தொடங்கும் அவர்களது வேலை மாலை 3 மணி வரை நீடித்தது. களத்தை சுத்தப்படுத்தி சேற்றைக் கல் இல்லாமல் மிதித்து அதனைச் செங்கற்களாகத் தயாரித்து சூளையில் ஏற்றிச் சுடுவது வரை அவர்கள் ஓயாமல் வேலை செய்தனர். இது மட்டுமில்லாமல் செங்கற்களை வண்டியில் ஏற்ற இரவிலும் அவர்கள் வேலை செய்தனர். உண்ண உணவு, உழைப்புக்கேற்ற கூலி இல்லாமல் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே சென்றதால் அங்குள்ள தொழிலாளர்கள் பெரும் மன உளைச்சலில் இருந்தனர்.

மீட்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, வேலை செய்யும் போது குமார் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் தன் சொந்த கிராமத்திற்குச் சென்று விட்டார். பல நாட்களாகியும் குமார் செங்கல் சூளைக்குத் திரும்பவில்லை. அச்சமயத்தில் செங்கல் சூளை முதலாளி இரு குழந்தைகளை பட்டினி போட்டும் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பவானியை விரட்டி விரட்டி வேலையையும் வாங்கியுள்ளார்.

"என் கணவர் அடிக்கடி எங்கேயாவது சென்று விடுவார். ஒரு முறை ஒரு மாதம் வரை  அவர் திரும்ப வரவில்லை. குழந்தைகளுக்கு உணவு இல்லாமல் பட்டினியாகவே இருந்தனர்; நானும் கர்ப்பமாக இருந்தேன். எனக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை."

ஆத்திரமடைந்த பவானி தன் கணவர் எங்கிருக்கிறார் எனக் கண்டுபிடிக்க தன் மாமியார் வீடு இருக்கும் இடத்தை சிலரிடம் கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் உதவி செய்யாமல் பவானியை வேலைக்குச் செல்லுமாறு கூறி உள்ளனர்.

'முதலாளி எங்களை மோசமான வார்த்தைகளால் திட்டி பயமுறுத்துவார். நாம் இப்படியே இங்குத் தங்கினால் அவர் நம்மை கொல்லக் கூட தயங்க மாட்டார் என்று தெரிந்தது." குழந்தைகள் துன்பப்படுவதை தாங்கமுடியாமல் தப்பித்துச் செல்ல முடிவெடுத்த பவானி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அடுப்புக்கு விறகு ஒடித்து வரச் செல்வதாக முதலாளியிடம் கூறவே அவர் சந்தேகமடைந்து அவர்களைக் கண்காணிக்க ஒரு நபரைக் கூடவே அனுப்பியுள்ளார்.

நாங்கள் இரு புறமும் மலைக்கு நடுவே உள்ள ஒரு சிறு ஓடைக்கு வந்தோம். சந்தர்ப்பம் பார்த்துத் தப்பித்தோம். மெயின் ரோட்டுக்கு வந்ததும் எதிர்வரும் வாகனங்களை வழிமறித்து ஏறிக் கொள்ளலாம் என்று கை காட்டினேன். ஆனால் யாரும் நிறுத்தவில்லை. முதலாளியின் ஆட்கள் வந்து 'கடன் வாங்கிட்டு இங்கிருந்து தப்பித்து போகலாமென்று பார்க்கிறீர்களா?' என்று எங்களைப் பிடித்துக் கொண்டனர்.

முதலாளியின் ஆட்கள் குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு மொத்த கடன் தொகையையும் திருப்பி செலுத்தி விட்டுச் செல் அல்லது மீண்டும் செங்கல் சூளைக்கு வந்து வேலை செய் என்று அச்சுறுத்தினர்.

'அவர்கள் என் குழந்தைகளை இழுத்துச் சென்றனர். அம்மா அம்மா என்று அவர்கள் துடிப்பதைப் பார்த்து அவர்களை விட்டு விடக் கெஞ்சி அழுதேன். எந்தப் பலனும் இல்லை'

கர்ப்பமாக இருந்த பவானி தன் குழந்தைகளை அடியாட்களிடம் இருந்து மீட்க வாயில் அன்னம் தண்ணீர் கூடப் படாமல் கஷ்டப்பட்டார். அவர்கள் குழந்தைகளைச் செங்கல் சூளைக்கு  மீண்டும் அழைத்துச் சென்றாலும் பவானி தைரியமானதொரு முடிவை எடுத்தார். அதாவது சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் தன் அம்மாவின் கிராமத்திற்கு வந்து கொஞ்சம் பணத்தைத் திரட்டி சோமு முதலாளியிடம் கொடுத்துவிட்டு தன் குழந்தைகளை மீட்டுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.

ஆனால் பவானி தன் கிராமத்தை அடைவதற்கு முன்பே பவானியின் உறவினர் ஒருவரை தொலைப்பேசியில் அழைத்த சோமு முதலாளி, பவானியின் குழந்தைகளில் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகத் தெரிவித்தார். அப்படியே துடித்து நிலை குலைந்து போனார் பவானி. இதைக் கேட்ட பவானியின் தாயாரும் பதற்றம் அடைந்தார்.

'என் வீட்டிற்கு சென்று அம்மாவைப் பார்த்ததும் நான் உடைந்து அழுதேன். என்னால் அழுவதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை.'

பவானி இந்த நிலையில் இருப்பதையும் அவளது மகன் இறந்து விட்டான் என்ற துயர செய்தியைக் கேட்டதும் பவானியின் தாயார் நிலைமையை மெல்ல மெல்லக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதற்கிடையில் சோமு முதலாளியின் ஆளான கன்னியப்பன் எந்தத் தகவலும் அறியாத பவானியின் மாமியாரை அழைத்து பவானியின் இரு குழந்தைகளும் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் பெரும் குழப்பம் அடைந்த கிராமத்தினர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக வேலூர் மண்டல வருவாய் அலுவலர் திரு.செல்வரசு அவர்களை அழைத்து தகவல் தெரிவித்தது. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளை பவானி வேலை செய்த செங்கல்சூளை அமைந்துள்ள கிராமத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி குழந்தைகளை மீட்டனர்.

உளவியல்ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட பவானியையும் அவரது குழந்தைகளையும் ஐஜேஎம் அரசு  உதவியுடன் டிசம்பர் 2017-ல் மீட்டது.

பவானியின் மூன்றாவது மகன் அன்பு சுதந்திரமாகப் பிறந்தான்.

தற்போது:

பவானி தற்போது தன் மூன்று குழந்தைகளுடன் அவரது சகோதரியின் வீடு அமைந்திருக்கும் வேலூர் மாவட்டம் பரதராமி என்னும் கிராமத்தில் வசிக்கிறார். ஏழு மாத கைக்குழந்தையான அன்பு தனது அண்ணன் விஷ்ணுவுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறான். மூத்த குழந்தைகள் இருவருக்கும் முன்பிருந்ததை விட முற்றிலும் மாறான வாழ்க்கை இது. சுற்றிலும் செங்கல், எப்போதும் பட்டினியில் வதங்கிக் கிடந்தும், தங்களது பெற்றோரை மோசமான வார்த்தைகளால் திட்டுவதை கேட்டும் இருந்த சிறுவர்கள் தற்போது குழந்தைப் பருவத்திற்கே உரிய மகிழ்ச்சியுடன் சேற்றில் நாய்க் குட்டிகளுடன் விளையாடுவதைக் காண முடிகிறது.

பவானியின் மூத்த மகன் சதீஷ் இப்போது பள்ளி செல்கிறான். சதீஷ் திறமையான மாணவனாக வருவான் என ஆசிரியர் கூறியதைப் பவானி பெருமையுடன் கூறுகிறார். தங்கள் குடும்பத்திற்கு அன்றாட தேவைக்கான பணத்தை பவானியும் குமாரும் மரம் வெட்டும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்றனர். ஆனாலும் குமாரின் குடிப்பழக்கத்தால் மொத்தமாக வீடு சேராமல் அது வீணாகிறது.

'ஒரு டன் மரம் வெட்டினால் வாரம் எங்களுக்கு Rs.1300-Rs.1500 வரை கிடைக்கிறது. ஆனால் வீட்டுச் செலவுக்காக குமாரிடமிருந்து Rs.200-Rs.300 தான் எனக்குக் கிடைக்கிறது. மீதத்தைக் குடித்தே அழிக்கிறார்'

பவானி தன் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தாலும், தன் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். எந்த உறுதியுடன் தன் குடும்பத்தின் விடுதலைக்காகப் போராடினாரோ அதே உறுதியுடன் தங்களது எதிர்காலத்தை எண்ணி மனதில் தைரியத்துடன் இருக்கிறார். அவரது முகத்தில் தற்போது புன்னகை தெரிகிறது.

பவானி தன் விடுதலையை நெஞ்சார நேசிக்கிறார்.

(கட்டுரையில் குறிப்பிட்டவர்களின் நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com