மீண்டும் மேடை ஏறும் அரசியல் நாடகம்: இதுதான் கர்நாடக வரலாறு

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு 14 மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று கவிழ்ந்தது.
மீண்டும் மேடை ஏறும் அரசியல் நாடகம்: இதுதான் கர்நாடக வரலாறு


கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு 14 மாதங்களுக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் நேற்று கவிழ்ந்தது. இதனால், பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள எடியூரப்பா தலைமையிலான பாஜக, கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவுள்ளது. இப்படி ஆட்சிக்கு நடுவே அதிகார மாற்றம் ஒன்றும் கர்நாடக அரசியலுக்கு புதிதல்ல. இதுவரை 25 முதல்வர்களைக் கண்டுள்ள கர்நாடக மாநிலத்தில், வெறும் 3 முதல்வர்கள் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர் என்பது தான் அம்மாநிலத்தின் வரலாறு. 2004-க்குப் பிறகு கர்நாடகாவில் நிகழும் அரசியல் நாடகங்கள் குறித்து பார்ப்போம்.  

2004 சட்டப்பேரவைத் தேர்தல்: 

2004-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், மஜத 58 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதனால், இது மிகப் பெரிய தொங்கு சட்டப்பேரவையாக அமைந்தது. இதையடுத்து, நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் மஜத ஆட்சி அமைக்க சம்மதித்தது. அதன்படி முதல்வராக காங்கிரஸ் சார்பில் தரம் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை முதல்வராக மஜதவின் அப்போதைய மாநிலத் தலைவர் சித்தராமையா பதவியேற்றார். இந்த கூட்டணியால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலரால் கூட கேபினட் அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை.

2006-இல் ஆட்சி மாற்றம்: 

முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டிருந்த குமாரசாமி 2006-இல், 40 மஜத சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டி பாஜகவுடன் கைகோர்த்தார். இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் சேர்ந்து குமாரசாமி அப்போதைய ஆளுநர் சதுர்வேதியைச் சந்தித்து பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்தார். பின்னர், சட்டப்பேரவையில் நிகழ்ந்த கடும் அமளியால் காங்கிரஸ் முதல்வர் தரம் சிங்கால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. 

இதையடுத்து, பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டுள்ள குமாரசாமியை உடனடியாக முதல்வராக பதவியேற்குமாறு ஆளுநர் உரிமை வழங்கினார். அதன்படி குமாரசாமி பிப்ரவரி 3, 2006-இல் முதல்வராக பதவியேற்றார். 

மஜத - பாஜக கூட்டணி:

பாஜக உடனான இந்த கூட்டணியும் சுலபமாக அமையவில்லை. இரண்டு கட்சிகளும் நிறைய ஒப்பந்தங்களுக்குப் பிறகே கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தது. அந்த ஒப்பந்தத்தின்படி குமாரசாமியும்,  எடியூரப்பாவும் தலா 20 மாதங்கள் முதல்வராக பதவி வகிக்க வேண்டும். முதல் 20 மாதங்களுக்கு குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். எடியூரப்பா துணை முதல்வராக பொறுப்பேற்றார். 

அதன்பிறகு குமாரசாமியின் 20 மாத கால முதல்வர் பதவி ஒப்பந்தத்தின்படி முடிவுக்கு வந்தது. ஆனால், ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க குமாரசாமி விரும்பவில்லை. 

அதன்பிறகு ஆளுநர் அதிரடி முடிவாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதனால், கர்நாடகா குடியரசுத் தலைவர் ஆட்சியில் செயல்பட்டது.

அதன்பிறகே, ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைக்க குமாரசாமி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் ஒரே ஆட்சிக்காலத்தில் 3-வது முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தார்.  

ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மஜத ஆதரவு தெரிவிக்காததால், எடியூரப்பாவின் ஆட்சி வெறும் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின்னர், கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கர்நாடகா 6 மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சியில் இருந்தது.  

2008 சட்டப்பேரவை தேர்தல்: 

2008-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், பாஜக பெரும்பான்மைக்கு 3 இடங்கள் மட்டுமே குறைவாக இருந்தது. 

அதன்பின் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரின் ஆதரவைப் பெற்று எடியூரப்பா அப்போது முதல்வர் ஆனார். இந்த முறை கர்நாடகத்தில் 5 ஆண்டுகள்  ஒரே முதல்வர் ஒரே ஆட்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த 6 சுயேச்சைகளில் 5 பேருக்கு எடியூரப்பா அமைச்சர் பதவி வழங்கினார். 

ஆனால், 38 மாதம் முதல்வர் பதவி வகித்த எடியூரப்பாவால் முழுமையாக ஆட்சியில் அமரமுடியவில்லை. சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் அவரது பெயர் இடம்பெற்றதை அடுத்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு அவருக்கு கட்சி மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்தது. 

இதையடுத்து, எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதன்மூலம், ஆட்சிக்காலத்தின் நடுவில் 2-வது முதல்வராக சதானந்த கௌடா பதவியேற்றார். மீதமுள்ள 22 மாத ஆட்சிக் காலத்தில் இவர் முதல்வர் பதவி வகிப்பார் என்று பார்த்தால் உட்கட்சி பூசல் காரணமாக இவரது ஆட்சிக் காலமும் 11 மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. 

முன்னதாக, ரகசிய வாக்கெடுப்பில் சதானந்த கௌடாவிடம் தோல்வியடைந்த ஜெகதீஷ் ஷேட்டாரையே முதல்வராக்குமாறு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரச்னை உண்டாக்கினர். இந்த அழுத்தத்தின் காரணமாக பாஜக மேலிடம் இவரையும் ராஜிநாமா செய்யச் சொல்லி கடைசி 10 மாதங்களுக்கு ஜெகதீஷ் ஷேட்டாரையே கர்நாடக முதல்வராக அமர்த்தியது. 

இதன்மூலம், அடுத்தடுத்த 2 ஆட்சிக்காலத்தில் கார்நாடக மாநிலம் தலா 3 முதல்வர்களின் கீழ் செயல்பட்டது. 

இதன்பிறகு, சித்தராமையா 2013-இல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2018 வரை நிலையான ஆட்சியைத் தந்தார். எனினும், இந்த அரசியல் நாடகம் மீண்டும் 2018-இல் மேடை ஏறத் தொடங்கியது.

கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அம்மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவையே அமைந்தது. எனினும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்க காங்கிரஸ் மற்றும் மஜத முடிவு செய்தனர். இதனிடையே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததைக் காரணம் காட்டி எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த எடியூரப்பா முதல்வர் பதவியை 6 நாட்களில் ராஜிநாமா செய்தார்.

இதன்பிறகு, மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் தெரிவித்ததையடுத்து, குமாரசாமி முதல்வரானார். குமாரசாமியும் 14 மாதங்கள் முதல்வராக செயல்பட்டார். ஆனால், காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் 15 பேர் ராஜிநாமா செய்ய இந்தக் கூட்டணியும் பெரும்பான்மையை இழந்தது. இதனால், இந்த ஆட்சியும் தற்போது முழுமையாக ஆட்சிக் கட்டிலில் அமராமல் நேற்று கவிழ்ந்தது.

கர்நாடக மாநிலம் 1956-இல் உருவானதில் இருந்து இதுவரை 25 முதல்வர்களை தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், இதுவரை மூன்று முதல்வர்கள் மட்டுமே 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சியில் அமர்ந்துள்ளனர் என்பது தான் வரலாறு.

இந்த கட்டுரை கடந்த ஆண்டு எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது பதிவேற்றப்பட்டது. எனினும், இது தற்போதையச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மீண்டும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com