தொலைந்து போன ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்! உண்மைச் சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தோட்டனவூர் என்கிற சிற்றூர்தான் வள்ளியப்பனின் சொந்த ஊர் ஆகும்.
தொலைந்து போன ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்! உண்மைச் சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள தோட்டனவூர் என்கிற சிற்றூர்தான் வள்ளியப்பனின் சொந்த ஊர் ஆகும். அவர் தன் மனைவி லட்சுமி, தன்னுடைய தாய் வெங்கம்மா மற்றும் தன்னுடைய வளர்ப்புத் தந்தை முத்து ஆகியோருடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் மணப்பாக்கத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்தனர்.

ஆரம்பத்தில் அவரது பெற்றோருடன் அவருடைய அண்ணன் அர்ஜுனனும் இதே செங்கல் சூளையில் வேலை செய்துள்ளனர். ஒருமுறை அவர்களை வள்ளியப்பன் பார்க்கச் சென்றிருந்த போது,  அண்ணன் அர்ஜுனனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததைக் கண்டு தன்னுடைய அம்மாவிடம் ஏன் அவனைக் கவனிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அம்மா ஏற்கனவே வாங்கிய முன்பணத் தொகை அதிகமாக இருப்பதால் மருத்துவ செலவிற்கு முதலாளி பணம் தர மறுப்பதாக அழுது கொண்டே கூறியுள்ளார். இந்த துயரமான நிலையை பார்த்த வள்ளியப்பன் தன்னுடைய அண்ணனுக்கு மருத்துவம் பார்க்க தானும் வேலைக்கு வருவதாகக் கூறி முதலாளியிடம் மேலும்  பணம் வாங்க முடிவு செய்துள்ளார்.

அவரது அம்மா வெங்கம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்க முதலாளி வள்ளியப்பனுக்கு ரூபாய் 5000 முன்பணமாக வழங்கியுள்ளார். வள்ளியப்பனும் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து அச்செங்கல் சூளையில் வேலை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இது அவர்களது சுதந்திரத்தை மொத்தமாக விழுங்கி விடும்  என்று  அவர்களுக்குத்  தெரியவில்லை. செங்கல் சூளைக்கு வேலைக்கு வருவதற்கு முன்பு வள்ளியப்பனும் அவரது மனைவியும் மரம் வெட்டும் வேலைக்குச் சென்று வந்தனர். இரண்டு டன் மரம் வெட்டினால் ரூபாய் 1500 அவர்களுக்கு கிடைக்கும். அவர்கள் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ அப்பணம் போதுமானதாக இருந்தது.

செங்கல் சூளையில் தூக்கமில்லாத இரவுகள், பட்டினி, உடல் வலி, ஓய்வில்லாத உழைப்பு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை மற்றும் குழந்தைகளின் இருண்ட எதிர்காலம் என அவர்களது வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமைந்தது. மேலும், முதலாளி அவர்களை வரையறை இல்லாமல் தொந்தரவு செய்வது, மோசமான வார்த்தைகளால் திட்டுவது அடிப்பது மற்றும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றது போன்றவற்றால் வள்ளியப்பன் இதிலிருந்து விடுதலையே கிடையாதா என்று ஏங்கியுள்ளார். இத்தொல்லைகள் எல்லாம் ஓய்ந்து விடுதலையாகும் நாளுக்காக வள்ளியப்பன் காத்திருந்தார்.

இறுதியாக 2016-ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளையில் வேலை செய்து வந்த வள்ளியப்பனுடன் இரு குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரைக் கண்டுபிடித்து விடுதலை செய்தது.

விடுதலையான பின்னர் வள்ளியப்பன் தன்னுள் இருந்து தொலைந்து போன ஒரு புதிய மனிதனைக் கண்டுபிடித்தார். கொத்தடிமையாக இருந்த போது வழியில் எந்தவொரு போலீஸ்காரரைப் பார்த்தாலும் எந்த தவறும் செய்யாத பட்சத்திலும் பயப்படுவார். அதிகாரம் உடைய யாரைப் பார்த்தாலும் அவர் அதிர்ச்சியில் உறைந்து விடுவார். ஆனால் தற்போது எந்த அதிகாரியைப் பார்க்க வேண்டுமென்றாலும் அவரிடம் துளியும் பயமும் இல்லை. அவர் அரசு அளித்த மறுவாழ்வு பயிற்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற்றார். இப்பயிற்சி அவருக்குத் தன்னம்பிக்கை அளித்து ஒரு தலைவராக மட்டுமல்லாமல் தன்னுடைய மக்களின் உரிமைகளுக்காக அதிகாரிகளிடம் உரத்துப் பேசுபவராகவும் மாற்றியது. மீட்கப்பட்ட நாளன்று வருவாய்க் கோட்டாட்சியர் வள்ளியப்பனிடம் ஏதாவது அடையாள அட்டை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர்

‘இல்லை’ என்று மட்டும் சொன்னார். இல்லை என்று சொன்ன போது அடையாள அட்டை என்றால் என்னவென்றே தெரியாத தொனியில் அவர் பார்த்தார். அப்போது அவரிடம் வருவாய்க் கோட்டாட்சியர் வழங்கிய விடுதலைக்கான சான்றிதழ் மட்டுமே கையிலிருந்தது.

இன்று வள்ளியப்பன் தன் சமூகத்தில் ஒரு தலைவராக விளங்குகிறார். தன் சமூகத்தை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ உற்சாகமூட்டுகிறார். துணிச்சலுடன் அரசு அலுவலர்களைச் சந்தித்து தன் சமூக மக்களுக்கான வீடு, நிலம், மின்சாரம், குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதி பெற்றுத்தர தொடர்ந்து பாடுபடுகிறார்.

அச்சமூகத்தில் உள்ள பலருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ் அல்லது வருமான சான்றிதழ் என்றால் என்னவென்றே தெரியாத சூழலில், வள்ளியப்பன் தான் சமூக மக்களுக்காக வருவாய்க் கோட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அவர்களுக்கு மனுக்களை எழுதி தன் சமூக மக்களுக்காக அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை பெற்று தருகிறார்.

இன்று வள்ளியப்பன் தன் சமூக மக்களின் தேவைகளுக்காகவும், அவர்களுக்கென்று வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்காகவும் உறுதியுடன் குரல் கொடுக்கும் ஒரு வழிகாட்டி இளைஞன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com