மின்சாரம் இல்லாமல் அறுபது ஆண்டுகளாக வாழும் பெண்மணி!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்ப ஏசியிடம் தஞ்சம் அடைவோம். ஏசி இல்லாதவர்கள் மின்விசிறியை சுழலவிட்டே ஆக வேண்டும்.
மின்சாரம் இல்லாமல் அறுபது ஆண்டுகளாக வாழும் பெண்மணி!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்ப ஏசியிடம் தஞ்சம் அடைவோம். ஏசி இல்லாதவர்கள் மின்விசிறியை சுழலவிட்டே ஆக வேண்டும். இரவு வந்துவிட்டால் மின்விளக்கு இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. டிவி ஓடாது.. சீரியல் பார்க்க முடியாது. மொபைலை சார்ஜ் செய்ய முடியாது. வாழ்க்கையின் உயிர் நாடியாகிவிட்ட மின்சாரம் இல்லாமல் வாழ முடியுமா என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாத இயலாமையில் அனைவரும் இருக்கும் போது, மின்சாரம் இல்லாமல் அறுபது ஆண்டுகளாக ஒரு பெண்மணி வாழ்ந்து வருகிறார். நம்ப முடிகிறதா? புணே நகரில் முனைவர் ஹேமா சானே. வயது எழுபத்தெட்டு. தாவரவியல் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றிருப்பவர். ஹேமா அறுபது ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டில் மின் இணைப்பே இல்லை. மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்? முனைவர் ஹேமாவே விளக்குகிறார்:

"அந்தக் காலத்தில் மின்சாரம் இருந்ததா? மின்சாரம் இல்லாமல்தான் நம் முன்னோர்கள் வாழ்க்கை நடத்தினார்கள். எனது மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அப்படி நான் வாழ்ந்து வருகிறேன். நான் வீட்டிலிருந்துதான் படித்தேன். பாடங்களைப் படித்தது பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் தரும் ஒளியில்தான். இப்போது சூரிய வெளிச்சத்தில் சக்தி உண்டாக்கி ஒளிரும் விளக்குகளையும், எண்ணெய் விளக்குகளையும் இரவு நேரங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

1940 - லிருந்து இந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனது தாத்தா பாட்டி வாழ்ந்த வீடு இது. காலையில் பறவைகளின் ஒலி கேட்டு எழுகிறேன். எனது சகோதரர் என்னுடன் இந்த வீட்டில் வாழ்ந்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் மரணித்தார். எனக்கு இப்போது வேறு உறவினர்கள் இல்லை. இப்படி தனியாக வாழ்வது குறித்து நான் கவலைப்படுவதில்லை.

இந்திய சரித்திரம் குறித்தும் படித்திருக்கிறேன். பட்டம் பெற்றிருக்கிறேன். தாவரவியல், இந்திய சரித்திரம் குறித்து நூல்கள் பல எழுதியிருக்கிறேன். நான் எழுதியிருக்கும் தாவரவியல் நூல்கள் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, இணையம், சமூகவலைத்தளங்கள் போன்றவற்றில் ஆர்வம் இல்லை. பேட்டரி மூலம் இயங்கும் வானொலி மட்டும் கேட்பேன். வானொலியில் அறிவியல், புத்தரின் போதனைகள் குறித்து பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளேன். வானொலியின் நீண்ட நாள் நேயராக நான் இருப்பதால் என்னை புனா வானொலி கெளரவித்திருக்கிறது.

வீட்டில் எங்கு பார்த்தாலும் நூல்கள். வைக்க இடம் இல்லை. நூல்கள்தான் எனது நண்பர்கள். நான் கடைசியாக 2018 -இல் நூல் ஒன்றை மராத்தி மொழியில் எழுதி முடித்தேன். இது வரை முப்பத்தைந்து நூல்களை எழுதியிருக்கிறேன். வயோதிகம் காரணமாக எலும்பு தொடர்பான உபாதைகள் உண்டு. காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவேன். காலை பூஜை உண்டு. மாலை வேளைகளில் மரங்களின் கீழ் தீபம் வைத்து மரங்களை வணங்குவேன்.

எனக்கு உதவ நண்பர்கள் இருக்கிறார்கள். மருத்துவர் வீட்டிற்கு வந்து போகிறார். மருந்து மற்றும் சாமான்கள் வாங்கித் தரவும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப் பார்க்கவும் பேசவும் பழைய மாணவர்கள் வந்து போகிறார்கள். என்னுடன் கல்லூரியில் பணி புரிந்தவர் தினமும் வருவார். வரும் போது பருப்பு, காய்கறிகள் சமைத்து கொண்டு வருவார். நான் சாதம் சமைத்துக் கொள்வேன். அதனால் நான் தனிமையில் இருக்கிறேன் என்ற எண்ணம் வருவதில்லை. இந்த தருணத்தில் எப்படி வாழ முடியுமோ அப்படி வாழுங்கள்.. நாளை பற்றி சிந்திக்க வேண்டாம். இப்படி வாழ்ந்தால் ஒரு பிரச்னையும் உங்களை நெருங்காது'' என்கிறார் முனைவர் ஹேமா சானே.
 - சுதந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com