ஹய்யா! ஸ்கூல் திறந்தாச்சா? அய்யோ! ஸ்கூல் திறந்தாச்சா? இந்த இரண்டில் நீங்கள் யார்?

கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன
ஹய்யா! ஸ்கூல் திறந்தாச்சா? அய்யோ! ஸ்கூல் திறந்தாச்சா? இந்த இரண்டில் நீங்கள் யார்?

ஒரு நீண்ட நெடிய கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பிள்ளைகளை எழுப்புவது, அவர்களை தயார் செய்வது, உணவு தயாரிப்பது, சீருடை அணிவிப்பது, பள்ளி செல்லும் வாகனத்துக்காக காத்திருந்து அவர்களை ஏற்றி அனுப்புவது அல்லது ஸ்கூலுக்கு அழைத்து சென்று விடுவது, மதிய உணவு தயார் செய்து கொண்டு செல்வது, பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்ப அழைத்து கொண்டு வருவது, டியூஷன் அனுப்புவது, அதிகம் விளையாட்டு, விடியோ கேம்ஸ், வாட்ஸ் அப் என்று கவனம் சிதறாமல் தடுப்பது, மீண்டும் நேரத்திற்கு தூங்க வைப்பது, இவையெல்லாம் செய்து முடித்துவிட்டு தூங்க சென்றால் மறுநாள் இத்தனையையும் செய்து முடிக்க வேண்டுமே என்ற யோசனையே தூக்கத்தை துரத்த, அதனை எட்டி பிடிக்க முயற்சிக்க அதற்குள்  விடிந்துவிடும்….ப்பா ! இப்பவே கண்ணைக் கட்டுதா? இதுதான் பெரும்பாலான குடும்பங்களில் நிகழப்போகும் தினசரி கூத்து. 

ஹய்யா ஸ்கூல் திறந்தாச்சு ! என்று குதூகலிப்பவரா இல்லை அய்யோ ! ஸ்கூல் திறந்தாச்சா என்று அலறுபவரா? பள்ளிக்கு செல்வதும் பள்ளிக்கு தயார் ஆவதும் ஒரு  ஒரு கொண்டாட்டமான நிகழ்வு. ஆனால் அதுவே ஒரு தண்டனை போன்ற பாவனைதான் இன்றைக்கு ஏராளமான குடும்பங்களில் நிகழ்கிறது. இதனை கொண்டாட்டமாக மாற்றுவதும் எப்படி? இதோ பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சில யோசனைகள்:

பாவனையை மாற்றிக் கொள்ளுங்கள்

இன்றுதான் பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது. ஆனால் இதற்கான ஜுரம் ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்திருக்கும். அப்பாக்களுக்கு கடந்த ஒரு வாரமாகவே பி.பி அளவு கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக இருக்கும். காரணம் பள்ளிக்கூடம் திறக்கப் போகிறார்கள் என்றதும் பிள்ளைகளுக்கு ஏற்படும் டென்ஷனை விட இவர்கள் ஏற்றிக் கொள்ளும் டென்ஷன்தான் அதிகம். முதலில் உங்கள் பாவனையை மாற்றுங்கள். பள்ளிக்கூடம் என்பது ஒரு வாழ்வியல் நிகழ்வு. பிள்ளைகளை தயார் செய்வது உங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல். அவர்களுக்கு யூனிபார்ம், உணவு தயார் செய்வது என்பது உங்களின் கலையின் மேம்பாடு. பள்ளிக்கு அழைத்து சென்று விடுவது
என்பது ஒரு சிறு பயண அனுபவம். உங்கள் பிள்ளைகளுடன் உரையாட உள்ள பெரும் வாய்ப்பு. ஆசிரியர்களுடன் தொடர்புடன் இருப்பது உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பு. மொத்தத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்யும் இந்தச் செயல் வருங்கால சமூகத்தினை கட்டமைக்கும் ஒரு சிற்பிக்கான செயல். நீங்களே ஒரு பெருமிதத்தை உருவாக்கிக் கொண்டு அதில் மகிழ்ந்து பாருங்கள். தானாகவே  அழுத்தமான பாவனை மாறி ஆனந்தமாக மாறிவிடும்.

பள்ளியை தெரிந்து கொள்ளுங்கள்

உங்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி பற்றி முழுமையாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அது சின்ன பள்ளியாக இருக்கலாம் இல்லை பல ஏக்கர் வளாகமாக இருக்கலாம் அதன் ஒவ்வொரு அங்கமும் உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அங்கிருக்கும் பாஸிடிவ் நெகடிவ் விஷயங்கள் அத்தனையும் உங்களுக்கு அத்துபடியாக இருக்க வேண்டும். சும்மா இணையத்தில் மேய்ந்துவிட்டோ அல்லது இன்னொருவர் சொல்வதை மட்டும் கருத்தில் கொண்டோ எந்த முடிவுக்கும் வரக் கூடாது. உங்கள் பொருளாதாரத்தை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப ஒரு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்திருக்கலாம் அங்கு பிள்ளைகளுக்கு மாறுபாடான கருத்து ஏனைய பிற பிள்ளைகளுடன் ஒப்பீட்டு வந்தாலும் அங்கு உள்ள பாசிடிவ் விஷங்களை நீங்கள் பிள்ளைகளுக்கு வலுவாக எடுத்துரைக்க முடியும். பிள்ளைகளை வகுப்பில் தள்ளிவிடும் முன்பு ஒவ்வொரு இடமாக பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஒரு சின்ன டூர் கூட்டி செல்லுங்கள். அங்குள்ள விஷயங்களை பெருமையாக சொல்லுங்கள். ஹேய் ! அந்த வேப்ப மரத்தை பாரேன். அது ரொம்ப நல்லது. சிட்டியில் நிறைய இடத்துல வேப்ப மரமே இல்லை. உங்கள் கிளாஸ் ரூம் சின்னதுதான் ஆனால் இந்த பள்ளிக்கூடத்துல தான் பெஸ்ட் மிஸ் இருக்காங்க….குமார் மாமா இங்க படிச்சிதான் அமெரிக்காவுக்கு போற அளவுக்கு ப்ரிலியண்டா வந்தாரு….இப்படி நிறைய சொல்லலாம்.

ஆசிரியைகளை தெரிந்து கொள்ளுங்கள்

சும்மா படிப்பு சம்மந்தமான தொடர்பை தாண்டி உங்கள் நட்பும் உறவும் உங்களின் பிள்ளைகளின் ஆசிரியைகளோடு அதிக இணக்கமாக இருக்கும். வீட்டில சொன்ன பேச்சை கேட்க மாட்டறான் என்று நீங்களோ ஸ்கூல்ல பாடத்தை கவனிக்கவே மாட்டறான் என்று டீச்சரும் மாற்றி மாற்றி புகார் தெரிவித்து கொள்ளும் உறவு இல்லை ஆசிரியர் பெற்றோர் உறவு. இருவரும் ஒருவிதத்தில் பெற்றோரே. அம்மா அப்பாவுடன் இருக்கும் நேரத்திற்கு ஏற்ப பிள்ளைகள் ஆசிரியர்களுடன்தான் இருக்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் நட்புறவுதான் பிள்ளைகளை மேலும் ஊக்கமாக்கும். ஆசிரியர்களுக்கு பிள்ளைகள் மூலம் சின்ன சின்ன பரிசுகள் கொடுத்து அசத்தலாம். ஒரு பிள்ளை ஒரு ஆசிரியை பற்றி புகார் தந்தால் உடனே ஆசிரியரிடம் அது குறித்து பேசி களைந்து பிள்ளைகளுக்கு ஆசிரியர் மீது நம்பிக்கை ஏற்படச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் சொந்த வாழ்க்கை பிரதிபலிப்புகளை பிள்ளைகள் மீது திணிக்காமல் இருக்க பள்ளி நிர்வாகத்துடன் எப்பொழுதும் இணைப்பில் இருக்க வேண்டும். பிள்ளைகளை கல்வியில் முன்னே கொண்டு வருவது என்பது இயந்திரத்தனமான செயல் இல்லை. அது ஒரு இறைவழிபாடு.

பிள்ளைகளுடன் கல்வியில் நேரம் ஒதுக்குங்கள்

இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் பணிக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் இப்படி பள்ளிக்கூடம் சென்றால் அவர்கள் அப்படி வேலைக்கு செல்கிறார்கள். வேண்டியவற்றை வாங்கி தந்து டியூஷன் அமைத்து தந்து விட்டால் தன்  கடமை முடிந்தது என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இது ஆபத்தான பாவனை. தினந்தோறும் உங்கள் பிள்ளைகளின்  பள்ளிக்கூட பெர்மான்ஸ் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கவேண்டும். மனம் விட்டு பேச வேண்டும். பள்ளிக்கூடம் விட்டு பிள்ளைகள் வீட்டிற்கு வரும் பொழுது நீங்கள் அலுவலகத்தில் இருந்தால் அவர்களுடன் போனில்  பேசலாம். வாட்ஸ் அப் போன்ற நுட்பங்கள் உங்கள் இணைப்பை இன்னும் அண்மையாக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடன் கலந்துரையாடலாம். அவர்கள் பாடங்களில் உதவலாம். ஜாலியாக படம் போடலாம். குவிஸ் வைக்கலாம். நீங்கள் படிப்பை எவ்வளவு இலகுவாக மாற்ற முயற்சிக்கிறீர்களோ அவ்வளவு சுலபமாக அவர்கள் படிப்பில் முன்னனியில் நிற்பார்கள்.

வேலைகளை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இன்று பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் நிலைதான் பெரும்பாலான வீடுகளில். படிப்பை மட்டும் பார்த்தால் போதும் என்ற மனநிலையை பிள்ளைகளுக்கு உருவாக்கும் நிலை இதுதான். உங்கள் பிள்ளைகள் எந்த வயசாக இருந்தாலும் உங்கள் அன்றாட பணிகளில் சிறிது நேரம் அவர்களையும் பங்கேற்க செய்யுங்கள். காலை எழுந்திருப்பது. தன்னை தானே தயார் செய்து கொள்வது. பொது வேலையில் சின்னதாக பங்கேற்பது. பின்னர் பள்ளிக்கு செல்வது என்ற மனநிலை அவர்களுக்கு தெளிவாக ஏற்பட வேண்டும். சும்மா புத்தக பைகளையே கட்டிக் கொண்டிருக்காமல் இது போன்று பிற பணிகளிலும் கவனம் செல்லும் பொழுது பரந்துபட்ட அறிவு பெருகும். கவனம் அதிகரிக்கும். பாடங்களை சுலபமாக படிப்பார்கள்'

படைப்பாற்றலுடன் இயங்குங்கள்

ஒரே போன்று செயல்களைத் திரும்ப திரும்பச் செய்யும் போது அதில் ஒருவிதமான சலிப்புத்தன்மை ஏற்படும். அதனால் ஒவ்வொரு செயலையும் கற்பனை திறனுடன் செய்யுங்கள். புத்தகத்தை அடுக்குவது. படிக்கும் போது அமர்ந்திருக்கும் நிலை. புத்தகங்களின் அட்டை, உபகரண கருவிகள். பள்ளிக்கு செல்லும் விதம், உணவு என்று ஒவ்வொன்றிலும் புத்துணர்வை தரும் செயல் இருக்க வேண்டும்.  குட்டி குழந்தைகள் என்றால் அவர்களுடன் சுவாரஸ்யமாக பேசுவதும், பேசச் சொல்லி கேட்பதும் அதனை கொண்டாடுவதும் மேலும் உற்சாகமாக்கும். பள்ளிக்கு செல்லும் போது உற்சாகமூட்டும் விஷயங்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டே செல்லவும். பள்ளியில் இருந்து வரும் போதும் அவர்களுடன் உற்சாகமான விஷயங்களை பேசச் சொல்லி கேட்டு பாராட்டு தெரிவியுங்கள். 

படிப்பை திணிக்காதீர்கள்

இந்த உலகில் நல்ல முறையில் வாழ பணம் அவசியம். அது நீங்கள் திணிக்கும் படிப்பில்தான் படித்து வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை. பிள்ளைகளை அவர்களுக்கு  பிடித்த செயலில் ஈடுபடுத்தினால் அவர்கள் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து அது சாதிப்பார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் எதையும் திணிக்காமல் அவர்கள் படிப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால் எதில் அதிகம் சிறப்பாக இயங்குகிறார்களோ அதனை பாராட்டுங்கள். அதில் முன்வர உதவியாக இருங்கள். நாம் இயந்திரங்களை உருவாக்கவில்லை. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குகிறோம். ஒழுக்கத்தை மட்டும் கடுமையாக போதித்தால் போதும் மற்றவைகள் தாமாக வந்துவிடும்.

படிப்புடன் பிற திறமைகளிலும் ஈடுபட வையுங்கள்

பள்ளிக்கு செல்வது பாடம் படிப்பது. டியூஷன் படிப்பது என்று மட்டுமின்றி பாதிக்கு பாதி அவர்கள் ஆர்வம் கொண்ட பிற விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். கிரிக்கெட் கிளப், டிராமா கிளப், லாங்வேஜ் கிளப் என்று படிப்பு பாதி என்றால் பிற விஷயங்களில் பாதி இருக்க வேண்டும். அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் படிப்பை மீறி அவர்களை ஈர்க்கும் பல விஷயங்கள் அவர்களின் பள்ளியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அய்யோ என்ற நிலை மாறி ஹய்யா என்று உற்சாகமுடன் செல்வார்கள் பிள்ளைகள்.

உடல் நலம் மனநலம் ஒழுக்கம்

கல்வி என்பது அவசியம். ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் புத்திசாலிகள், மதிப்பெண் குறைந்தவர்கள் முட்டாள்கள் என்பதல்ல உண்மை. வீடு, பள்ளிக்கூடம் இரண்டுமே உடல் நலம், மனநலம், ஒழுக்கத்தை போதிக்கும் ஆலயம். இவ்விரண்டு இடங்களில் இயங்கும் பொழுதும் ஒரு வழிபாடு செய்வது போல் இயங்க வேண்டும். இறுக்கமாக இயங்கும் போதும் நாம் விரும்பும் நல்ல விளைவுகள் கிடைக்காது. பிள்ளைகளின் மனநிலையோடு பயணிப்பதும், அவர்கள் தேவையான அத்தியாவசியங்களை ஏற்படுத்தி தருவதும் ,தேவையற்றதை நாசுக்காக தவிர்க்கும் அளவிற்கு பிள்ளைகளுடன் நெருக்கமாக இருப்பதும் பெற்றோர் ஆசிரியர்களின் கடமை. இதை கொண்டாட்டமாகச் செய்ய வேண்டும். அதற்கு நமது பாவனைகளை மாற்ற வேண்டும். உங்கள் ஒவ்வொரு செயலிலும் கொண்டாட்டத்தை திணித்தால் அய்யோ ஸ்கூல் திறந்தாச்சா? என்ற கெள்வி ஹய் ஸ்கூல் திறந்தாச்சு! என்ற் உற்சாகமாக மாறிவிடும்.

அலாரம் வைக்காமல் குடும்பமாக எழுந்திருந்து, சின்ன சின்ன உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, பாசம் பொங்கும் முத்தம் என்று எனர்ஜி ஏற்றிக் கொண்டு, உற்சாகமாக காலை கடன்களை முடித்து,  பிடித்த மாதிரி வேலையை பகிர்ந்து காலை உணவை தயாரித்து, துடிப்புடன் பள்ளிக்கு அலுவலகத்திற்கு தயாராகி. கலகலப்பாக கதைகள் பேசியபடி பள்ளிக்கு சென்று, துறுதுறுப்புடன் படித்து, மாலை வீடு திரும்பி மீண்டும் ஒரு உற்சாகமாக ஒரு நாளை முடித்து வைத்தால், மறுநாள் உற்சாகமாக்க முடியும். முதலில் சிரமம் என்றாலும் கொஞ்சம் பாவனை காட்டுங்கள். பாவனை நிஜமான செயலுக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com