Enable Javscript for better performance
கணவரை விட சுதந்திரம்தான் முக்கியம்! சகுந்தலாவின் உருக்கமான கதை இது!- Dinamani

சுடச்சுட

  

  கணவரை விட சுதந்திரம்தான் முக்கியம்! சகுந்தலாவின் உருக்கமான கதை இது!

  By புகழ்செல்வம்  |   Published on : 08th June 2019 04:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ww

   
  அவரது குள்ளமான உருவம், கூச்ச சுபாவமுள்ள தோற்றம் மற்றும் மென்மையான குரல் ஆகியவற்றுள் மறைந்திருக்கிறது ஒரு மிகச் சிறந்த ஆளுமை. கணவர் கைவிட்ட பின்னர் இரு குழந்தைகளையும் பாசத்துடனும், தைரியத்துடனும் குறிக்கோள்களுடனும் வளர்த்து வருகிறார் சகுந்தலா. கணவர் சிவக்குமார் 2004-ஆம் ஆண்டு வாங்கிய கடனுக்காக இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு செங்கற் சூளையில் கொத்தடிமையாக இருந்துள்ளார். இந்நிலையில் தன் எல்லாத் திறமைகளையும் பூட்டி வைத்திருந்தார் சகுந்தலா. பத்து வருடங்களாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்த நிலையில் சிவக்குமார் ஏன் சொற்பச் சம்பளம் வழங்குகிறீர்கள் என முதலாளியிடம் முறையிட்டார். நிலைமை கைமீறிச் சென்று முதலாளி சிவக்குமாரை கடுமையாக தாக்கவே தன் குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டார்.

  அன்றிலிருந்து மலைபோன்ற ஏறிக் கொண்டே இருக்கும் கடனை அடைக்கவும் தன் இரு குழந்தைகளுக்கான செலவினத்தை கவனிக்கவும் ஒற்றை ஆளாக சகுந்தலா அதே செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார். 'நான் ஏமாற்றப்படுகின்றேன் என்பது எனக்குத் தெரியும். முதலாளி என்னை அடிமையாக வைத்திருப்பது குற்றம் என்பதும் எனக்குத் தெரியும்' என்று தைரியமாகக் கூறுகிறார் சகுந்தலா. 'தனியே இரு மகன்களை வைத்து கொண்டு தப்பித்துச் செல்ல எனக்குப் பயமாய் இருந்தது'. இவையனைத்தும் தெரிந்தே சகுந்தலா அங்கு வேலை செய்து வந்துள்ளார். ஒவ்வொரு நாளும் அதிகாலை இரண்டு மணிக்குத் துவங்கும் வேலை இடையில் சுமார் ஒரு மணி நேர இடைவெளி மட்டும் விட்டு இரவு ஏழு மணிக்குத்தான் முடியும். வெயிலோ மழையோ ஓயாமல் வேலை செய்துள்ளார்.

  'மளிகை பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்றாலும் திரும்ப வரும் வரை எனது குழந்தைகளை முதலாளி அவரின் பார்வையில் விட்டுச் செல்லுமாறு மிரட்டுவார்' எனத் தான் எங்கும் சுதந்திரமாகச் சென்று வர முடியாததைக் கூறுகிறார். வெளியே எங்குச் செல்வதானாலும் முதலாளியின் அனுமதியில்லாமல் நடக்காது. மேலும் அவர் பேசுகையில் 'குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதுக்குக் கூட எங்களைச் சென்று வர அனுமதிக்கமாட்டார்' என்றார்.

  பதிமூன்று ஆண்டுகளாக முதலாளியின் கீழ் கொத்தடிமையாக இருந்து இந்தக் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் சகுந்தலா. 2016-ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் செங்கல் சூளையில் ஆய்வு நடத்தி சகுந்தலாவையும் அவரது இரு மகன்களையும் விடுவித்தனர். 'நான் அப்போது தைரியமுடன் இருந்தேன். முதலாளி எங்களது வீட்டிற்கு வந்து எங்களை மிரட்டினாலும் எங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். நான் பயப்படவே இல்லை' என்கிறார் சகுந்தலா.

  இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகும் சகுந்தலா அதே தைரியத்துடன் இருக்கிறார். சகுந்தலா கூறுகையில் 'நான் சுதந்திரமாய் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என் கணவர் என்னை விட்டுச் சென்றது பற்றி கூட எனக்கு வருத்தமில்லை.' மேலும், 'எனது மகன்களில் ஒருவன் ஒன்பதாம் வகுப்பும் ஒருவன் எட்டாம் வகுப்புப் படிக்கின்றனர். இரண்டு பேரும் ராணுவத்தில் சேர்வது என உறுதியாக இருக்கின்றனர். மூத்த மகன் ரவி சங்கர் தேசியப் பாதுகாப்புப் படை (NCC)யில் சேர்ந்திருக்கிறான். எனக்கு அவர்களைப் பற்றித்தான் கவலையே ஆனால் எனது ஊக்கத்தினால் அவர்களது லட்சியத்தில் உறுதியுடன் உள்ளனர்' எனப் பெருமையுடன் கூறுகிறார் சகுந்தலா.

  அவர்களது சமூகத்தில் அது அதீதக் கனவாக இருந்தாலும், சகுந்தலா தன் குழந்தைகளின் லட்சியங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவரை போல கொத்தடிமையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்டு உதவ வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். 'முதலில் எங்கள் சமூக மக்கள் மற்றவருக்கு தாழ்ந்தவராகக் கருதுவதை விட்டொழிக்க வேண்டும். ஒற்றைப் பெண்மணியாக இருந்தது முதல் எனது வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் வரை எப்படி தைரியத்துடன் உரிமைகளுக்காகப் போராடினேன் என்பதை அவர்களுக்குக் கூறுவேன். நான் எப்படி தைரியமாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேனோ அதைப் போல என் சமூக மக்களும் அனைவரும் விடுதலையாகி மகிழ்ச்சியாக வாழும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்' என்கிறார் சகுந்தலா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai