சுடச்சுட

  
  mm4

  நாம் வாழும் வீடு சிறியதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும், வீட்டை கலைநயத்துடன் அழகாக அமைத்து கொள்ள விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த வகையில், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப அவர்களது இல்லத்தை அழகான கனவு இல்லமாக மாற்றி அமைத்து தருவதில் கைதேர்ந்தவர் இன்டீரியர் டிசைனர் லட்சுமி. கணினி பொறியியலில் பட்டம் பெற்ற இவர், இன்டீரியர் துறையை தேர்ந்தெடுத்தது எப்படி? நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

  எனக்கு சின்ன வயதிலிருந்தே வரைவதிலும், கிராப்ட் ஓர்க் செய்வதிலும் ஆர்வம் உண்டு. கையில் வண்ணங்கள் கிடைத்தால் போதும், மனதில் தோன்றியவற்றிற்கு எல்லாம் உருவம் கொடுக்க தொடங்கிவிடுவேன். பள்ளி படிப்பை முடித்ததும், கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்தேன். அதன் பிறகு ஐ.டி. நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை. ஆனால், திருமணத்திற்கு பிறகு வேலையை தொடர முடியவில்லை.

  கணவர், குழந்தைகள் என்று கவனம் முழுவதும் குடும்பத்தின் மீதே இருந்தது. குழந்தைகள் சற்று வளர்ந்து பள்ளிக்குச் செல்ல தொடங்கியதும், கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
   அந்த சமயத்தில் என் கணவர் எங்களுக்காக ஒரு வீடு கட்டத் தொடங்கினார். என்னுடைய வீடு என்பதால், நான் பார்த்து பார்த்து உள் அலங்காரம் செய்ய தொடங்கினேன். அதை கவனித்த என் கணவர், "நீ இன்டீரியர் டிசைனராகலாமே. எனக்கும் உதவியாக இருக்கும்' என்றார்.

  ஏனென்றால், அவர் கட்டுமானத் துறையில் இருப்பவர். அப்பார்ட்மெண்ட், தனி வீடு கட்டித் தருவதுதான் அவரது தொழில். அதனால், "நான் கட்டும் வீடுகளுக்கு எல்லாம் நீயே இன்டீரியர் செய்து தரலாம்'' என்றார். எனக்கும் அது பிடித்திருந்தது. அதே சமயம், என்னுடைய வீடு என்னும்போது, நான் எப்படி வேண்டுமானாலும் டிசைன் செய்து கொள்ளலாம். ஆனால், வாடிக்கையாளர் வீட்டுக்கு செய்ய வேண்டும் என்றால் அவ்வளவு சுலபம் கிடையாது. அது குறித்து அடிப்படை விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

  அதனால் இன்டீரியர் குறித்து தனிப்பட்ட முறையில் கோர்ஸ் எடுத்து படித்தேன். அதன் மூலம் தொழில்நுட்ப ரீதியான பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அதன்பின் என் கணவரின் வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கு இன்டீரியர் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், மாடுலர் கிச்சன், வார்ட்ரோப் மற்றும் வரவேற்பறை, சுவரில் டிசைன் என சின்ன சின்னதாகதான் செய்ய தொடங்கினேன். அதன் மூலம் எனக்கு இந்த துறை சார்ந்த நல்ல அனுபவம் கிடைத்தது. நல்ல வரவேற்பும் கிடைக்கத் தொடங்கியது. இதுநாள் வரை நான் வீட்டில் இருந்துதான் டிசைன் செய்து கொடுத்து வந்தேன். எனக்கென்று அலுவலகம் எதுவும் அமைத்துக் கொள்ளவில்லை.

  அதனால், அடுத்தக் கட்டமாக, பெரிய பட்ஜெட் , பெரிய பிராஜக்ட் எடுத்து செய்ய வேண்டும் என்று ஆசைவர, எனக்குன்னு ஒரு பிராண்ட் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த சமயத்தில்தான் ஜெர்மன் இன்டீரியர் நிறுவனமான "ப்ளா' பற்றி கேள்விப்பட்டேன். அவர்களுடன் இணைந்து கடந்த 1 வருடமாக செயல்பட்டு வருகிறேன். தற்போது பெரிய பட்ஜெட்டில், பெரிய பிராஜக்ட்டும் எடுத்து செய்து வருகிறேன். அதே சமயம், பட்ஜெட்க்கு ஏற்ப என்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கும் இன்டீரியர் அமைத்து தருகிறேன்.

  வெறுமனே பிளைனாக இருக்கும் வீட்டில் ரசனைக்கேற்றபடி சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதுதான் இன்டீரியர் தொழில் நுட்பம். அப்படி அழகு சேர்க்கும்போது, வீட்டு உரிமையாளர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியும், புன்னகையும்தான் எங்களின் வெற்றி'' என்றார்.

  வீட்டை அழகாக மாற்ற சில டிப்ஸ் : ஒரு வீட்டின் இன்டீரியரில் முக்கிய பங்கு வகிப்பது சுவர் அலங்காரம். பொதுவாக வரவேற்பறையில் உள்ள சுவர்களுக்கு அடர்த்தியான நிறம் கொண்ட பெயிண்டினை தேர்வு செய்து அடிக்கக் கூடாது. ஏனென்றால், அடர்த்தியான நிறம் அந்த அறையை இருட்டாகவும், சிறியதாகவும் காண்பிக்கும். அதனால் வெளிர் நிற பெயிண்ட்டை தேர்வு செய்வது நல்லது. அப்போதுதான் சின்ன அறையாக இருந்தாலும், அதை அழகாகவும், பளிச்சென்று பெரியதாக காண்பிக்கும். அது போன்று வரவேற்பறை என்றால், டிவி, சோஃபா செட், டீபாய் மிகவும் அவசியம். படுக்கை அறை என்றால் வார்ட்ரோப் மற்றும் டிரஸ்ஸிங் டேபிள்... கிச்சனில் மிக்சி, கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்கள் வீட்டின் அடிப்படை. அதனால் முதலில் இதற்கான இடத்தை தேர்வு செய்து ஒதுக்கிவிட்டு. மீதமுள்ள இடத்தில் அலங்காரம் செய்தால் பார்க்க அழகாக இருக்கும்.

  தற்போது, பல வடிவங்களில் சின்னதாக சுவற்றில் செல்ப் வைப்பது பேஷன். அதில் கலைப் பொருட்கள் அல்லது நமது புகைப்படங்களை அழகாக அடுக்கலாம்.

  எல் வடிவில் உள்ள கார்னர் இருந்தால், அங்கே வார்ட்ரோபை வைக்கலாம். இதனால் நிறைய பொருட்களை உள்ளே வைக்க இடம் கிடைக்கும். அதே சமயம் நாம் அதிகமான பொருட்களை வைத்து அடைக்கவும் வேண்டாம்.

  பெரும்பாலானவர்களுக்கு அவர்களது பட்ஜெட்டின்படி தற்போது அடுக்குமாடி குடியிருப்புதான் கைகூடுகிறது. இதனால் தோட்டம் வைக்க வேண்டும் என்ற கனவு கனவாகி போகிறது. அதனால், தற்போது என்னுடைய இன்டீரியரில் கோ கிரின் என்ற கான்செப்ட்டை வாடிக்கையாளர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இதன் மூலம் அவர்கள் வீட்டு பால்கனியில் சிறிய அளவில் செடிகளை வைத்து அழகு படுத்தலாம். சிலருக்கு பால்கனி இல்லாதபோது, அவர்கள் வரவேற்பறையிலேயே சிறய அளவிலான குரோட்டன்ஸ் போன்ற செடிகளை வைத்தாலும் பார்க்க அழகாக இருக்கும்.
   - ஸ்ரீதேவி குமரேசன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai