மக்களவை சபாநாயகர் பதவிக்கு இப்படி ஒரு துரதிருஷ்டமான பின்னணியா? 

மக்களவை சபாநாயகர் பதவிக்கு இப்படி ஒரு துரதிருஷ்டமான பின்னணியா? 

17வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றோடு கடைசி நாள் என்ற நிலையில், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றுள்ளது.


புது தில்லி: 17வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்றோடு கடைசி நாள் என்ற நிலையில், இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றுள்ளது.

ஆனால், மக்களவை சபாநாயகர் பதவிக்கான நாற்காலிக்கு மிகவும் துரதிருஷ்டமான பின்னணி இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இது வெறும் நிகழ்வாகவும் இருக்கலாம், இதற்கு விதி விலக்குகளும் இருக்கலாம். ஆனால் வரலாறு என்ன சொல்கிறது என்றால், மக்களவை சபாநாயகராக பதவியேற்கும் ஒருவர், அந்த அரசின் ஆட்சி காலம் முடிந்து தேர்தல் நடைபெற்று மீண்டும் ஆட்சியமையும் போது, சபாநாயகராக இருந்தவர் மீண்டும் மக்களவைக்கு தேர்வாக மாட்டார் என்பதே.

இடதுசாரிக் கட்சியின் முக்கியத் தலைவராக விளங்கியவர் சோம்நாத் சாட்டர்ஜி. இவர் மக்களவைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 14 ஆவது மக்களவையின் தலைவராக போட்டியிட்டு, அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆனால், 2009ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, கட்சி உத்தரவிட்டும் மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டதால், மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது.

அதே சமயம் அடுத்த மக்களவைத் தேர்தலில் அவரது பாரம்பரிய தொகுதியான போல்புர் தொகுதியை  வழங்கவும் கட்சி மறுத்துவிட்டது. 

அடுத்ததாக மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியே ஆட்சிக்கு வந்தது. 15வது மக்களவையின் அவைத் தலைவராக மீரா குமார் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் அடுத்து 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சசராம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் சேடி பஸ்வானிடம் தோல்வியடைந்தார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே நிலைதான் நீடித்து, மீண்டும் அவர் மக்களவைக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது.

2014 தேர்தலில் பாஜக வென்று ஆட்சியைப் பிடித்தது. 16வது மக்களவையின் தலைவராக சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக இந்த தேர்தலில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீட் ஒதுக்க பாஜக மறுத்துவிட்டதால், மகாஜன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை, இதனை துரதிருஷ்டம் என்றெல்லாம் வர்ணித்துவிட முடியாது என்றும் சொல்லலாம். நாங்கள் மறுக்கவில்லை.

இதற்கு முன்பு வரலாறு வேறு மாதிரியும் இருந்துள்ளது. அது இன்னமும் மோசமாகவே அமைந்துள்ளது. அதாவது 12வது மக்களவையில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யாக இருந்த பாலயோகி அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1999ம் ஆண்டு இடைக்காலத் தேர்தல் நடைபெற்றது. 13வது மக்களவையிலும் பாலயோகியே அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் துரதிருஷ்டவசமாக 2002ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். 

பாலயோகியைத் தொடர்ந்து சிவ சேனையைச் சேர்ந்த மனோகர் ஜோஷி 13வது மக்களவையின் அவைத் தலைவர் பதவியை ஏற்றார். ஆனால் அவர் அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

பொதுவாகவே மக்களவையின் அவைத் தலைவர் பதவி கட்சியின் மிக மூத்தத் தலைவர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில மற்றும் சமூக ரீதியாக கட்சிக்குள் பதவிகளை சமமாக்க புதியவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com