இந்த ரயில் எந்த ஊருக்குப் போகிறது? குழப்பத்தை ஏற்படுத்தும் ரயில் பெட்டிகள்: தீர்வு காணுமா ரயில்வே?

ஒரே ரயில் பெட்டியை, இருவேறு வழித்தடங்களுக்கான விரைவு ரயில்களில் இணைக்கும் போது, ரயில் பெட்டியில் இருக்கும் ஊர்ப் பெயரால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இந்த ரயில் எந்த ஊருக்குப் போகிறது? குழப்பத்தை ஏற்படுத்தும் ரயில் பெட்டிகள்: தீர்வு காணுமா ரயில்வே?


ஒரே ரயில் பெட்டியை, இருவேறு வழித்தடங்களுக்கான விரைவு ரயில்களில் இணைக்கும் போது, ரயில் பெட்டியில் இருக்கும் ஊர்ப் பெயரால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

எழும்பூரில் விரைவு ரயிலில் முதல் முறை பயணிக்கச் செல்லும் பயணிகளுக்கு நிச்சயம் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இந்த குழப்பத்தின் வீரியம் பற்றி தெரிய வேண்டுமா? இந்த ஒரே பெட்டி இரண்டு ரயில்களில் பயன்படுத்தப்படும் முறை நடைமுறைக்கு வந்த பிறகு, அதாவது 2018ம் ஆண்டு ஜனவரியில் இருந்து 2019 மே மாதம் வரை தவறான ரயிலில் ஏறியதால் அவசரகால செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதால் 21 பயணிகள் அபராதம் செலுத்தியுள்ளனர்.

இந்த அபராதம் பெரும்பாலும் எழும்பூர் ரயில் நிலையத்தில்தான் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமா? தவறான ரயிலில் ஏறியதை அறிந்து எத்தனையோ பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து, தங்களது இன்னுயிரைக் கூட பணயம் வைத்திருக்கிறார்கள் இந்த நடைமுறையால்.

ஒரு ரயில் பெட்டியில், இரண்டு வெவ்வேறு ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதே இந்த குழப்பத்துக்குக் காரணம், ஒரு ரயில் பெட்டி கன்னியாகுமரி விரைவு ரயிலிலும், தூத்துக்குடி விரைவு ரயிலிலும் இணைக்கப்படும் என்றால், அந்த ரயில் பெட்டியில் இரண்டு ஊர்களின் பெயர்களுமே இருக்கும். ஒரு பயணி, தற்போது நடைமேடையில் நிற்கும் ஒரு ரயில் எந்த ஊருக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதை எப்படி அறிவார்? கன்னியாகுமரிக்கா? தூத்துக்குடிக்கா?  இதுதான் குழப்பம்.

இதுமட்டுமா? குழப்பங்களுக்கு எல்லாம் மேலாக மகாக் குழப்பமாக ஒன்று நடக்கிறது. அதாவது செங்கல்பட்டு - கச்சேகுடு விரைவு ரயிலும், செங்கல்பட்டு - காக்கிநாடா போர்ட் சர்கர் விரைவு ரயிலும், அவ்வப்போது ரயில் பெட்டிகளை பரிமாறிக் கொள்ளும். எனவே இரண்டு ரயில் பெட்டிகளிலும், இவ்விரண்டு ஊர்களின் பெயர்களும் இருக்கும். 

கச்சேகுடா ரயில் எழும்பூரில் இருந்து மாலை 4.45க்குப் புறப்படும். இது எப்போதுமே 8வது நடைமேடையில் நிற்கும். காக்கிநாடா ரயில் 5.05 மணிக்குப் புறப்படும், 7வது மேடையில் நிறுத்தப்படும். ஒரே நேரத்தில் இவ்விரண்டு ரயில்களும் அருகருகே நின்றிருக்கும். இரண்டு ரயில் பெட்டிகளிலுமே ஒரே பெயர்தான் இருக்கும். ஆனால் இரண்டும் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கும் ரயில்கள்.

பல பயணிகள் கச்சேகுடா ரயிலுக்குப் பதிலாக காக்கிநாடா ரயிலிலும், காக்கிநாடா ரயிலுக்குப் பதிலாக கச்சேகுடா ரயிலிலும் என மாறி மாறி ஏறி தங்களது பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

இது குறித்து சில பயணிகள் ரயில்வே குறைதீர் மையத்திலும் புகார்களை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த புகார்கள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கைதுறப்பு நிலையில்தான் பதில் சொல்கிறார்கள். இது நிச்சயம் தொழில்நுட்பப் பிரச்னை. இதற்கு எங்களிடம் தீர்வில்லை என்கிறார்கள்.

இந்த விவகாரம் ரயில் பெட்டி வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் தர நிர்ணய அமைப்புக்குக் கொண்டு செல்லப்படும் என்று மூத்த ரயில்வே அதிகாரி தெரிவிக்கிறார்.

எனவே இப்போதைக்கு இதில் தீர்வு கிடைக்காது என்பது நிச்சயம். பயணிகள்தான் இன்னும் கொஞ்சம் மூளையை அலசி ஆராய்ந்து, ரயில் நிலையத்தில் வெளியாகும் அறிவிப்புகளை நன்கு காதில் கேட்டு, புரிந்து, ரயில் எண்களை பரிசோதித்து தங்களது பயணத்தை இனிமையானதாக மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர, இதையெல்லாம் ஒரு குழப்பமாக எடுத்துக் கொண்டால்.. நிர்வாகம் பொறுப்பல்ல!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com