மூன்று வேளை உணவைக் கனவு காணும் சாமானியனின் ஏமாற்றம்! யார் காரணம்?

கணினி மயமான உலகில் இன்று எல்லாமே வேகம்தான். மாற்றத்தை நோக்கி மனிதன் ஓடுகிற ஓட்டத்தில் சுயநலம் மட்டுமே பிரதானமாக உள்ளது.
மூன்று வேளை உணவைக் கனவு காணும் சாமானியனின் ஏமாற்றம்! யார் காரணம்?

கணினி மயமான உலகில் இன்று எல்லாமே வேகம்தான். மாற்றத்தை நோக்கி மனிதன் ஓடுகிற ஓட்டத்தில் சுயநலம் மட்டுமே பிரதானமாக உள்ளது. மனிதனின் சுய லாபத்திற்காய் தோளோடு தோள் கொடுக்கும் சக மனிதனை மதித்து முன்னேறுவதுதான் மனித நேயம். அதனை மறந்ததால்தான் இன்றும் நம் நாட்டில் கொத்தடிமை முறையில் பணம் படைத்தவர்களிடம் ஒரு பகுதி மக்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு உரிமையையோ அல்லது சுதந்திரத்தையோ அனுபவிப்பதில்லை.

கொத்தடிமைத்தனம் ஒருபுறம் இருக்க, மனித கடத்தல் என்ற இன்னொரு சட்ட விரோதமான குற்றமும் நம் நாட்டில் தலை விரித்தாடுகிறது. உடல் உறுப்புகளுக்காகவும், கட்டாய உழைப்பிற்காகவும், பாலியல் அடிமைத்தனத்திற்காகவும் மனிதர்கள் மற்ற மனிதர்களைக் கடத்தி தன் சந்ததிக்கு பத்து தலைமுறைக்கான சொத்தை சேர்த்து விடுகின்றனர். இவ்விரு பிரச்னைகளைத் தடுப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும் இன்றும் நம் நாட்டில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு பிரச்னையையும் போர் குணம் கொண்ட இளைஞர்களால் மட்டுமே தீர்வு காணப்படுகின்றது. நூறு இளைஞர்களை தன்னிடம் தந்தால் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றப் போவதாக விவேகானந்தர் கூறியது, இளைஞர்கள் மேல் கொண்ட தனிப் பெரும் நம்பிக்கையால்தான். மனித சமுதாயத்தின் ஒரு பகுதி தலைமுறை தலைமுறையாய் கொத்தடிமைகளாய் வாழ்ந்து மாற்றம் தன் வாழ்வில் வராதா என ஏங்கி நிற்கிறார்கள். அத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர, இச்சமூகம் ஓரடி முன்னெடுத்து வைக்க வேண்டும். கடவுளின் படைப்பில் அத்துணை உயிர்களும் சமம். அந்த உயிர்களில் மனித உயிர்தானே மகத்துவமானது. ஆனால் உயிரின் மதிப்பைப் பலர் அறிவதில்லை.

ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் ஒற்றுமையைக் காட்டியது போல், இன்று இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு. இந்தப் பிரச்னைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். மேலும் அரசு மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு உறுதுணையாக நிற்கலாம். இந்த வேகமான கணினி உலகில் மாற்றத்தை ஏற்படுத்தப் பல இணைப்புகள் உண்டு. இளைஞர்கள் தங்கள் சக தோழர்களைக் கணினி வழியாக இணைத்து இச்சமூகத்தில் ஒரு புதிய விடியலை உருவாக்கலாம். கணினி வாயிலாக மட்டுமல்லாமல் களத்திலும் இறங்க வேண்டும்.

கனவு கண்டு லட்சியத்தை அடைய அயல் தேசத்தில் தன் உயிரைக் கொடுத்து வேலை செய்து தன் குடும்பத்தை மூன்று வேளையும் உணவை உண்ண வைக்கக் கனவு காணும் சாமானியனின் ஏமாளித்தனத்தை பயன்படுத்தி இரக்கமற்று வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடு கடத்தி, உயிரைத் தவிர அனைத்தையும் துறந்து, வாழ வழியின்றி செத்துவிடலாம் என்று எண்ணுகிற அளவிற்கு மனிதனைச் சிறுமைப்படுத்தும் நிறுவனங்கள் எத்தனை எத்தனை? சில நூறு ரொக்கங்களுக்குத் தந்திரமாய் பேசியும் ஆசை வார்த்தைகளைக் கூறியும் விலை மதிப்பில்லா உடல் உறுப்புகளைப் பிடுங்கிக் கொள்ளவும் பெண்களை பாலியல் தொழிலில் அடிமைப்படுத்தவும் செய்யும் மனிதர்களின் சூழ்ச்சியிலிருந்து ஏமாற்றப்படும் மனிதப் பிறவிகளை மீட்டெடுக்க இளைஞர்களால் மட்டுமே முடியும்.

இளைஞனே! நீ விழித்துக் கொள். உன் சக தோழன் நசுக்கப்படுவதை, பிழியப்படுவதைத் தடுக்க உன்னால் மட்டுமே முடியும் என்ற சாமானியனின் ஏக்கத்தைத் துடைக்க உன் சக தோழர்களோடு இணைந்து புது விடியலை, மாற்றத்திற்கான சவாலை நீ காண ஓரடி முன்னெடுத்து வை.

மாற்றம் ஒன்றே மாறாதது, அந்த மாற்றத்தை இளைஞர்களால் மட்டுமே கொண்டு வரமுடியும். நாளைய தலைமுறை உன்னைக் கொண்டாடும். பெண்மையைப் போற்றக் கற்றுக் கொள். துணிந்து நில். எதிர்த்து நில். சமுதாய தீமையை வேரறுத்து விடு. படிப்படியான மாற்றம் இனி நம் வசப்படும்.

இளைஞர்கள் சேர்ந்து செயல்படப் பல வழிகள் உள்ளன. இணையதளத்தில் மட்டுமே முழு நேரமாக விழிப்புணர்வைப் பகிராமல், நிஜ வாழ்வில் துணிந்து செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட ஆட் கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் “ஆட் கடத்தல் தடுப்பு மன்றம்” (Anti - Human Trafficking Club) என்ற ஓர் மன்றம் நமது தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஓய்வு பெற்ற காவல் பணி அதிகாரி திரு. P.M. நாயர் I.P.S அவர்களின் சீரிய முயற்சியால் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலாக இந்த மன்றம் “சென்னை சமூகப்பணித் துறை கல்லூரி”யில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் முன் வந்தால் அவர்கள் கல்லூரிகளிலும் இதைச் செயல்படுத்தி ஆள் கடத்தலைத் தடுக்கும் கருவியாக இந்த மன்றத்தைப் பயன்படுத்தலாம். ஏற்கனவே இந்த மன்றத்தின் மூலம் மாணவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முன் மாதிரியாகக் கொண்டு எல்லா கல்லூரிகளிலும் மாணவர்கள் இதைக் கொண்டு வர வேண்டும். நமது அரசும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இந்த மன்றத்திற்கு உறுதுணையாக நிற்கும்.

கட்டுரையாளர் : ஏஞ்சலின், இரண்டாம் ஆண்டு சம்முக பணித்துறை மாணவி, மனித கடத்தலுக்கு எதிரான மாணவர் மன்ற உறுப்பினர் (Anti-Human Trafficking club Member), பெட்ரிஷியன் கல்லூரி, சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com