கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மனநலப் பயிற்சி

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தியில் கொத்தடிமை தொழிலாளர்களின் உழைப்பு மறைந்திருப்பது பற்றி நாம் யோசனை செய்து கூட பார்ப்பதில்லை.
கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கான மனநலப் பயிற்சி

 
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் உற்பத்தியில் கொத்தடிமை தொழிலாளர்களின் உழைப்பு மறைந்திருப்பது பற்றி நாம் யோசனை செய்து கூட பார்ப்பதில்லை. இந்தியாவில் கொத்தடிமைத்தனம் அதிகப்படியாக அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், கல்குவாரிகள், விவசாயப் பண்ணைகள், பீடி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் இன்னமும் இருக்கிறது. உலகளாவிய புள்ளியியல் குறியீட்டு அமைப்பின் புள்ளி விவரப்படி சுமார் 40.3 மில்லியன் மக்கள் இந்தியாவில் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். அதில் 90 சதவீத கொத்தடிமைகள் ஏழ்மையில் இருக்கும் தலித்துகளும், இதர தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் சிறுபான்மையின மக்கள் என சர்வதேச அடிமைகள் ஒழிப்பு நிறுவனம் 2018-ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குவதற்கும் மிகப் பெரிய சமூகப் பொருளாதார வேறுபாடு நிலவி வருகிறது. மேலும் இதன் முக்கிய காரணியாகச் சாதி இருக்கிறது.
 
இந்தியாவில் உயர் சாதியினருக்கு முறையான கல்வி கிடைப்பது போலத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கிடைப்பதில்லை. ஏனெனில் கல்விக்கு ஆகும் செலவு அதிகம். இதனால் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் அன்றாட தேவையைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவிற்கும் நல்ல சம்பளம் உள்ள பணி வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. சந்ததி சந்ததியாக தங்கள் முன்னோர்களிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் உடல் உழைப்புச் சார்ந்த வேலைகளையே கற்றுக் கொள்கின்றனர். இதில் சிலர் நல்ல சம்பளம் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக வாழப் பணிக்கும் அவலமான சூழலும் நிலவுகிறது. கொத்தடிமையாகச் சிக்கும் மக்களைத் தொடர்ந்து மோசமான வார்த்தைகளைப் பேசி சிறுமைப்படுத்துவதால் அவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர்.

ஒருவரின் சமூக பொருளாதார நிலை அவருக்கு மன அழுத்தம், தேவையற்ற பதற்றம் போன்ற மனரீதியான பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. இது மேலும் மோசமாகித்தான் ஒருவருக்கு அடிமை என்றும் எப்போதும்தான் கடத்தலுக்கு ஆளாவோம் என்ற அச்சத்திலேயே வாழப் பணிக்கிறது. ஜனவரி 2017-ஆம் ஆண்டு விடுதலைக்கான நிதி என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கொத்தடிமையில் சிக்கிய நேபாளத்தைச் சேர்ந்தவர்களில் 46 சதவிகிதம் பேர் தங்களுக்கு எப்போதும் அதிகப்படியான மனப்பதற்றம் இருப்பதாகவும், 61 சதவிகிதம் பேர் மருத்துவ ரீதியிலான சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், 47 சதவிகிதம் பேர் தங்களுக்குத் தற்கொலை எண்ணம் அடிக்கடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
சமீபத்தில் வேதனையான சம்பவம் ஒன்று வேலூரில் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெண் கொத்தடிமை தொழிலாளி ஒருவர் அரிசி ஆலையிலிருந்து மீட்கப்படும் போது 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் போது வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு இதயத் துடிப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. தேசிய குழந்தைகள் நல மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகளின்படி ஒரு பெண் பொருளாதாரரீதியிலும், உளவியல்ரீதியிலும் துன்புறும் போது அவளுக்குப் பிறக்கும் குழந்தை பெரும்பாலும் வயிற்றிலேயே இறந்து விடுவதாகக் கூறுகிறது. அரிசி ஆலையிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணிற்கும் இதே கொடுமைதான் நடந்துள்ளது. தன் வயிற்றில் இருக்கும் இறந்த நிலையில் உள்ள குழந்தையை வெளியில் எடுக்கப் பலமுறை வலியுறுத்திய பிறகுதான் சம்மதித்தார்.


 
தொடர்ந்து மன அழுத்தத்தில் ஒருவர் வாழும் போது அவருக்கு மன நலம் பாதிக்கப்படுகிறது. மேலும் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் வாழ்கின்றனர் என்று உறுதியளித்து விட முடியாது. பலர் தங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும் போது தாங்கள் வேலை செய்யும் இடத்தில் சரிவரத் தூங்கியதில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும் பல நேரங்களில் நல்லதோர் எதிர்கால வாழ்க்கையை வாழ முடியாத அளவிற்குப் பழைய ஞாபகங்கள் அவர்களை வாட்டுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்திலும் அப்பெண்ணிற்கு வயிற்றிலேயே குழந்தை இறப்பதற்குக் காரணம் இதுதான்.
 
மனிதக் கடத்தலுக்கு ஆளான கொத்தடிமைகள் மீட்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு மன அழுத்தமும், பயமும், பதற்றமும் இருந்து கொண்டே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சீரான மன ஓட்டம் இல்லாமல் 18 சதவிகிதத்தினரும், சிலருக்குத் தன்னை யாரோ மோசமாகத் திட்டுவது போலப் பிரமை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவற்றை எதிர்கொள்ள முடியாமல் பலர் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட பலரும் தங்களுக்கு மது உள்ளிட்ட போதை வஸ்துக்களை தங்களின் முதலாளிகளே வாங்கித் தந்து அவர்கள் சொற்படி கேட்கவும் அதிக வேலை வாங்கவும் செய்தனர் என்று கூறுகின்றனர்.
 
முதலாளிகள் தங்களிடம் கொத்தடிமையாக வேலை செய்பவரிடம் ஒருவித குற்ற உணர்ச்சியை உண்டாக்கி தாங்கள் அவர்களுக்கு உதவுவது போல மது உள்ளிட்ட போதைப் பொருட்களை வாங்கி தந்து அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர். தொழிலாளர்கள் இவ்வகையான குற்ற உணர்விலிருந்து வெளிவர கட்டுப்பாடும் நம்பிக்கையும் அவசியம்.

கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசு மனநல பயிற்சி அளித்தாலும் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அது சென்று சேரவில்லை. மேலும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியவில்லை எனவும் கூறலாம். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி மக்களுக்குக் குறைந்த செலவில் மனநல பயிற்சியை வழங்க வேண்டும்.

மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் அவர்களுக்கு மன அழுத்தம், தேவையில்லாத பதற்றம் உள்ளிட்ட மனநலக் கோளாறுகள் உள்ளனவா எனக் கண்டறிதல் வேண்டும். அதற்குறிய சிகிச்சையை ஆரம்பிக்க இது ஏதுவாக அமையும். தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களும் அனுபவமும் மாறுபடும். அதற்கேற்றவாறு அவர்களின் மன உறுதியும் மாறுபடும். ஆகையால் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மனநல ஆலோசனை அவசியம். பல ஆண்டுகளாக கொத்தடிமை மற்றும் மனித கடத்தலிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தங்களை அணுகும் நபர்களை ஒருவித அச்சத்துடனேயே பார்ப்பார்கள். அதனால் அவர்கள் ஒரு புதிய பாதுகாப்பான மனித உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மீட்கும் நபரின் தரப்பிலிருந்து பல முயற்சிகள் எடுத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com