சுதந்திரமாக வாழ வேண்டும்!

தங்களது குழந்தைக்கு திடீரென ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போகவே செங்கல் சூளை முதலாளி
சுதந்திரமாக வாழ வேண்டும்!

தங்களது குழந்தைக்கு திடீரென ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போகவே செங்கல் சூளை முதலாளி ஒருவரிடம் ஆயிரம் ரூபாயைக் கடனாக பெற்று கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொண்டார் வனிதாவும் அவரது கணவரும். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்களது குடும்பம் ஒரு செங்கல் சூளையில் கொத்தடிமையாகச் சிக்கிக் கொள்ளும் என்று அவர்கள் கனவிலும் நினைத்ததில்லை.

2017-ல் வேலூர் மாவட்டத்தில் உள்ள கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர் சங்கம் முதலாவதாக நடத்திய மீட்பு நடவடிக்கைகளில் வனிதாவும் அவரது குடும்பமும் மீட்கப்பட்டனர்.

வனிதாவுடன் அவரது கணவர் சக்திவேல் மற்றும் குழந்தைகள் பவித்ரா கோகுல் ரஞ்சித் ஆகியோர் செங்கல் சூளையிலேயே தங்கி இரவு பகலாக வேலை செய்து வந்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் காலை முதல் இரவு வரை கடினமாக வேலை செய்தாலும் நாள் ஒன்றுக்கு ரூபாய் 400 மட்டுமே வழங்கியுள்ளார் செங்கல் சூளை முதலாளி. தினமும் அவர்கள் மண்ணை சேறாக மிதித்து செங்கற்களைச் செய்து அதை வெயிலில் காயவைத்து சூளையில் அடுக்கி வேக வைப்பது வரை நாள் முழுக்க ஓயாது வேலை செய்து வந்துள்ளனர். முதலாளி அவர்களை அடித்தும் மோசமான வார்த்தைகளாலும் திட்டியும் அவர்களின் உழைப்பை சுரண்டுவதிலேயே முனைப்பாக இருந்துள்ளார்.

கிராமத்தில் வசிக்கும் தன் சொந்த மாமா இறந்த போதும், முதலாளி அந்தச் செய்தியை வனிதாவிடம் கூறவில்லை. அவருடைய பெற்றோர் வந்து பதினாறாம் நாள் நடப்பிற்கு அழைக்கும் போதுதான் அவருக்குத் தகவல் தெரிய வந்தது. முதலாளியிடம் கெஞ்சிய பிறகு ஒருவரை மட்டுமே சென்றுவர அனுமதித்துள்ளார்.

செங்கல் சூளையில் வேலை செய்யும் போது இரண்டு வேலை உணவு மட்டுமே உண்டுள்ளனர். அதாவது காலை எட்டு மணிக்கு உணவு உண்டால் வேலை முடித்து இரவு எட்டு மணிக்குத் தான் அடுத்து உணவு உன்ன அனுமதி உண்டு. குழந்தைகளை சீராகப் பள்ளிக்கு அனுப்ப இயலாததால் முதலாளி அவர்களைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வேலை செய்ய நிர்ப்பந்தித்துள்ளார். தங்களது பிஞ்சுக் கைகளால் சுட்டெரிக்கும் வெயிலில் காய்ந்த செங்கற்களை எடுத்துத் திருப்பி விடும் வேலையைச் செய்து கொடுமையை அனுபவித்துள்ளனர்.

தினமும் முதலாளி மோசமான வார்த்தைகளால் அவர்களைத் திட்டவும், அடிக்கவும் செய்ததால் வனிதாவிற்கு அங்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை. முதலாளியின் மேசமான வார்த்தைகளைக் கேட்ட பிறகு ஒரு வேலை உணவைக் கூட சரியாக உண்ணவில்லை என்கிறார் அவர். சோகத்தில் மூழ்கியிருந்த அவரை ஒருவழியாக RBLA கொத்தடிமையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர் சங்கம் மீட்டது.

இன்று வனிதாவும் அவரது கணவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இருவரும் தினக்கூலிகளாக மரம் வெட்டும் வேலையை செய்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு டன் மரக்கட்டையை வெட்டினால் ரூ. 850/- வரை அவர்களுக்கு கிடைக்கிறது. அருகிலுள்ள பள்ளியில் மூத்த மகன் ஆறாம் வகுப்பிலும் இளைய மகன் நான்காம் வகுப்பிலும் பயில்கின்றனர். மகள் வனிதாவுடன் தங்கி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்கிறார்.

சுமார் ஆறு ஆண்டுகளாக அனுபவித்தத் துன்பத்திற்குப் பிறகு வனிதாவிற்குக் கிடைத்திருக்கும் விடுதலையைத் தக்க வைக்க முனைப்புடன் இருக்கிறார். மேசமான வாழ்க்கைச் சூழலையும் அசிங்கமான வார்த்தைகளையும் எதிர்கொண்ட அவர் தற்போது உறுதியுடன் எந்தவொரு நபரிடமும் முன்பணம் வாங்கி அவருக்கு அடிமையாக வேலை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற அவரது தன்னம்பிக்கை அவரை ஒரு உறுதியான பெண்மணியாக மாற்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

வனிதாவும் அவரது குடும்பமும் மீட்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர்களது துயரத்தைக் கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளவே அரசும் சங்கமும் இணைந்து அவர்களை மீட்டது. தற்போது வனிதாவும் சங்கத்தில் இணைந்து தன்னைப் போல் கொத்தடிமையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை இனம் கண்டு அவர்களை மீட்க உறுதியுடன் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com