வருத்தமா? மன்னிப்பா? ராகுல், முரண்பாடுகளின் மொத்த உருவம்!

காவலாளி ஒரு திருடன்' என்ற கோஷத்தை காங்கிரஸ் வகுத்தது. அரசியல் பிரசாரத்தின் தீவிரத்தில், அந்த கோஷத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புடன் தொடர்புபடுத்தி
வருத்தமா? மன்னிப்பா? ராகுல், முரண்பாடுகளின் மொத்த உருவம்!

‘மாப்பிள்ளை! உங்களுக்கு பீடி, சிகரெட் பழக்கம் உண்டா?'

‘அதெல்லாம் கிடையாது'.

‘விஸ்கி, பிராந்தி?'

‘அய்யய்யோ. . . ', என்று பதறினார் மாப்பிள்ளை.

‘இந்த பொண்ணுங்க சகவாசம்?'

‘என்ன இப்படி கேட்டுட்டீங்க! எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. என்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்', என்று பதிலளித்தார் மாப்பிள்ளை.

‘இந்தக் காலத்தில இப்படி ஒரு பையனா? ஆச்சர்யமா இருக்கே? என் பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவ!' என்று பெருமைப்பட்டார் பெண்ணின் தந்தை. பக்கத்தில் இருந்த பெரியவர் மெதுவாக காதைக் கடித்தார்.

‘மாப்பிள்ளைகிட்ட இருக்கிற ஒரே சின்ன பிரச்னை, ‘அவர் நிறைய பொய் சொல்வார், அவ்வளவுதான்', என்று போட்டு உடைத்தார்.

இதைவிட சிறப்பான சர்டிஃபிகேட் மாப்பிள்ளைக்கு யாரும் கொடுக்க முடியாது. இனி கல்யாணம் நடந்தமாதிரிதான். இந்த மாப்பிள்ளையின் நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி இருக்கிறார்.

ரஃபேல் கொள்முதல் தொடர்பான சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 10ம் தேதி தீர்ப்பளித்தது. இதை வரவேற்ற ராகுல்காந்தி, ‘சவுகிதார் திருடினார் என்பதை உச்ச நீதிமன்றம் இப்போது ஒப்புக்கொண்டுள்ளது', என்று பேசினார். சர்ச்சை வெடித்தது.

நீதிமன்றம் சொல்லாத கருத்தை, சொல்லியதாக ராகுல் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் மனு ஏப்ரல் 15ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில், ‘அரசியல் பிரசாரத்தின் தீவிரத்தில் நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து வெளியிட்டேன். நான் கூறிய கருத்தை தீர்ப்பில் குறிப்பிடவில்லை. துரதிருஷ்டவசமாக கருத்து வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்', என்று விளாக்கமளித்தார். இந்த மனு ஏப்ரல் 23ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை தொடர்ந்த பாஜக தரப்பு எம்பி, ‘நீதிமன்ற தீர்ப்பை திரித்து கருத்து தெரிவித்ததற்காக ராகுல் மன்னிப்பு கேட்கவில்லை. வருத்தம் மட்டுமே தெரிவித்துள்ளார்', என்றது.

இதைத் தொடர்ந்து மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து ராகுல்காந்திக்கு விலக்கும் அளிக்கப்பட்டது.

மீண்டும் ஏப்ரல் 29ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார் ராகுல்காந்தி. அதில், ‘ரஃபேல் கொள்முதலில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நற்சான்று வழங்கிவிட்டது என்று மத்திய அமைச்சர்களும், ஆளும் கட்சியினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். இதற்கு பதிலடியாக ‘காவலாளி ஒரு திருடன்' என்ற கோஷத்தை காங்கிரஸ் வகுத்தது. அரசியல் பிரசாரத்தின் தீவிரத்தில், அந்த கோஷத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புடன் தொடர்புபடுத்தி ஏப்ரல் 10ம் தேதி கருத்து வெளியிட்டேன். நான் கூறிய கருத்தை தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, துரதிருஷ்டவசமாக கருத்து வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்', என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு ஏப்ரல் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘பிரமாண பத்திரத்தில் ராகுல் என்ன சொல்ல முயற்சிக்கிறார் என்பதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. வருத்தம் தெரிவிப்பதாக சொன்னதற்கு என்ன அர்த்தம்?' என்று கேள்வி எழுப்பினார்.

‘பிரதமர் ஒரு திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக ராகுல் கருத்து தெரிவித்தது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். பிரமாண பத்திரத்தில் வார்த்தைகளால் ராகுல் விளையாடுகிறார்', என்று வழக்கை தொடர்ந்த பாஜக எம்.பி. தரப்பு முறையிட்டது.

நீதிபதி எஸ்.கே. கவுல் கூறுகையில், ‘யாரும் தவறு செய்யலாம். ஆனால், தவறு செய்துவிட்டால், அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். ‘வருத்தம் தெரிவிக்கிறேன் என்ற வார்த்தையை அடைப்புக்குறிக்குள் ஏன் எழுத வேண்டும்? அது மட்டுமல்ல இதற்கு முன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்திற்கும், இதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. எங்களால் இந்த 28 பக்க பிரமாணபத்திரம் என்ன சொல்லவருகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மன்னிப்பு கோருவதற்கு இருபத்தி எட்டு பக்கங்களா?', என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

‘தவறுக்கு ராகுல் மன்னிப்பு கேட்பார். இது தொடர்பாக பிரமாண பத்திரத்தை திருத்தி தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்', என்று ராகுல் தரப்பு வக்கீல் அபிஷேக் சிங்வி கேட்டுக்கொண்டார். இதற்கு அனுமதியளித்தது நீதிமன்றம்.

இறுதியாக ராகுல் தரப்பு புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் பேசியதில் உள் நோக்கம் எதுவும் இல்லை. அரசியல் பிரசார தீவிரத்தில் தற்செயலாக பேசிவிட்டேன். எனவே, தீர்ப்பு பற்றி தவறாக கூறியதற்காக, உச்ச நீதிமன்றத்திடம் முழு மன்னிப்பு கேட்கிறேன். இந்த பிரமாண பத்திரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்', என்று ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்த நேரமும் உண்மையை பேசுபவர் சொல்லும் பொய்யை கண்டுபிடிப்பது எளிது. எந்த நேரமும் பொய்யை சரளமாக பேசும் ஒருவர் சொல்லும் உண்மையை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். அப்படிப்பட்டவர் பேசும் உண்மைக்கும், பொய்க்கும் ஒரே எடை, ஒரே விலை. ‘பிரதமர் மோடி பொய் சொல்கிறார்', என்று இவரும். ‘ராகுல் பொய் சொல்கிறார்', என்று பாஜகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகிறது. ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா', என்று தூசியை தட்டிவிட்டு நாமும் நகர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவது. நிலைமை விபரீதமானவுடன் வருத்தம் தெரிவிப்பது என்பது தற்போதைய அரசியல் கலாசாரமாகிவிட்டது. வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கேட்பதும் ஒன்றா? ‘இவர் வருந்துவதால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன லாபம்? இவர் முதலில் சொன்ன கருத்துக்களால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட வருத்தமும், இவர் வெளிப்படுத்திய வருத்தமும் ஒன்றா? இதையெல்லாம் யாரிடம் கேட்பது? வருத்தம் தெரிவிப்பது வெறும் மரபாக மட்டுமே இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை அரசியல்வாதிகளிடம் காணப்படுகிறது. வைரமுத்துவின் ஆண்டாள் பற்றிய சர்ச்சை பேச்சும் இத்தகையதுதான்.

ராகுல் சொன்ன பொய்களை பட்டியலிட்டிருக்கிறது பாஜக. அதையெல்லாம் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. காரணம் அரசியல்வாதிகளிடம் இதெல்லாம் சாதாரணம். ஆனால், நீதிபதி சொல்லாததை சொல்வது என்பது பொய் உலகத்தின் புதிய வரவு. நீதிமன்ற கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் இவர் சொன்னது உண்மை என்றே உலகம் நம்பிக்கொண்டிருக்கும்.

ஐயப்பன் கோவில் விவகாரத்தில் எதிர் நிலை கொண்ட கம்யூனிஸ்ட்டோடு தமிழகத்தில் கூட்டணி. கேரளத்தில் அது எதிரிக்கட்சி.

தமிழகத்தில் நாத்திக கட்சிகளோடு கூட்டணி. கேரளத்தில் ஐய்யப்பன் கோவிலுக்கு ஆதரவு.

கேரளத்தில் ஐய்யப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிரான நிலை.

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் அது தமிழக வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஆந்திரத்தில் அந்தக் கருத்தை வெளிப்படையாக ஆதரித்துவிட்டு, தமிழகத்தில் அந்த பிரச்னையை பற்றி வாய்திறப்பதில்லை.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தால், ராகுலை பிரதமராக ஏற்கத்தயார் என்று நேற்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ராகுலைச் சுற்றி வட்டமடிப்பவர்கள், தங்களின் தேவைக்காக அவரை பயன்படுத்த நினைக்கிறார்கள். ராகுல், தன்னுடைய தேவைக்காக அவர்களை பயன்படுத்த நினைக்கிறார். தன் கட்சி தொடர்ந்து ஆட்சி செய்யும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாத காங்கிரஸ் ஆட்சிகள், நேற்று கோரிக்கையை முன்வைத்த டெல்லி அரசுக்கு மாநில அந்தஸ்து கொடுப்பார்களா? இது டெல்லி முதல்வருக்கும் தெரியும். காங்கிரஸை வெளிப்படையாக ஆதரிக்க இதைவிட சிறப்பான காரணத்தை அவரால் சொல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். எல்லாம் தெரியும், ஆனால் எதுவுமே தெரியாது. எதுவுமே தெரியாது, ஆனால் எல்லாமே தெரியும். இதுதான் காங்கிரஸும், அதை நம்பி பயணிக்க முடிவெடுத்திருக்கும் கட்சிகளின் நிலை.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது, காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்' என்றும், ‘காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும்', என்றும் பேசினார். இத்தகைய பேச்சுக்கள் கன்னட வாக்குகளை பெறுவதற்காக என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியே புறப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர் இதைப் பற்றி மூச்சுவிடவில்லை. இரண்டு மாநில பிரச்னை காவிரி நீர். இது தொடர்பாக மாநிலங்களுக்கிடையேயான விரோதமும் தெரியும். அந்த தீயை ஊதிப்பெருக்கி அதில் குளிர்காய நினைப்பது சரியா? தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை.

காட்டில் சாதுவும் சீடனும் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒரு மந்திரவாதி அங்கு வந்தான்.

சாதுவே நினைத்தமாத்திரத்தில் உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி என்னிடம் இருக்கிறது. சிங்கங்களுடன் இணைந்து வாழ்வதற்காக வந்திருக்கிறேன்', என்று சொன்னான்.

சாது ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். சட்டென்று சிங்கமாக மாறினான். சிங்கங்களோடு சேர்ந்துகொண்டான். பேசினான்.

‘சிங்கங்களே! நான் பல காடுகளை தாண்டி இங்கு வந்திருக்கிறேன். மனிதர்கள் நம்முடைய எதிரிகள். அவர்களை அழிக்க வேண்டும். அதற்கான திறமை என்னிடம் இருக்கிறது. எனக்கு உணவளித்தால், நான் மனிதர்களை அழித்து உங்களை காப்பாற்றுவேன்', என்றது.

மற்ற சிங்கங்களும் அதை நம்பின. சிங்கத்தின் உருவில் இருக்கும் மந்திரவாதிக்கும் சேர்த்து உணவை சேகரித்து கொடுத்தன. சில வாரங்கள் சென்றது. மந்திரவாதிக்கு சிங்கங்களின் வாழ்க்கை சலித்துப்போனது. மான் கூட்டத்தோடு இணைந்து வாழ ஆசைப்பட்டது. மானாக மாறியது. மான் கூட்டத்தோடு சேர்ந்தது.

‘மான்களே! நான் பல காடுகளை கடந்து இங்கு வந்திருக்கிறேன். சிங்கங்கள் நம் எதிரிகள். நம்மை அழிப்பதற்காக பிறந்தவை. அவர்களை நாம் அழிக்க வேண்டும். அதற்கான திறமையும் பலமும் என்னிடம் இருக்கிறது. எனக்கு நீங்கள் உணவளித்தால், நான் அவர்களை அழிப்பேன்', என்றது.

இதை நம்பிய மான்கள், மான் உருவில் இருக்கும் மந்திரவாதிக்கும் சேர்த்து உணவை சேகரித்து கொடுத்தன. சில வாரங்கள் சென்றது. மந்திரவாதிக்கு மான் வாழ்க்கை சலித்துப்போனது. இப்படியாக, நரியாக, நாயாக, பூனையாக, கடைசியில் எலியாகவும் மாறி எலிக்கூட்டத்தில் இணைந்தது. எலிகளிடம் பூனைக்கு எதிராக பேசி வயிற்றை வளர்த்து வந்தது.

நடப்பவற்றையெல்லாம் சாதுவும், சீடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். சாதுவின் ஆசிரமத்திற்கு வந்தது எலி.

‘சாதுவே! எப்படி இருக்கிறீர்கள்? அடுத்தது புலிகளோடு வாழப்போகிறேன்' என்றது.

பக்கத்தில் இருந்த குச்சியை எடுத்து பட்டென்று அடித்தார் சாது. எலி சுருண்டு விழுந்தது.

‘குருவே! எதற்காக எலியை அடித்தீர்கள்?' என்று கேட்டான் சீடன்.

சீடனே! மந்திரவாதி முதலில் சிங்கமாக மாறி மனிதர்களை விமர்சித்து தன் பசியை போக்கிக்கொண்டது. பிறகு மானாக மாறி சிங்கத்தை விமர்சித்து தனது வயிற்றை வளர்த்தது. இப்படியோ ஒவ்வொரு மிருகமாக மாறி அதன் எதிரிகளை விமர்சனம் செய்து, அவர்களுக்குள் இருக்கும் விரோதத்தை உணவாக்கி தனது வயிற்றை வளர்த்து வந்தது. நாம் முதல்முறை சந்தித்தபோது அவன் மந்திரவாதியின் உருவத்தில் இருந்தான். ஆனால், அதுதான் அவனுடைய உண்மையான உருவமா என்பதுகூட நமக்குத் தெரியாது. இதன் பிறகு எப்படியெல்லாம் உருமாறுவான் என்பது நமக்குத் தெரியாது. புலியாக இருக்கும்போது இவனை அழிப்பதைவிட வலிமையில்லாத எலியாக இருக்கும்போது அழிப்பது எளிது. அதனால் இப்போதே அழித்தேன்', என்று சொல்லிவிட்டு நடந்தார் சாது.

யார் சாது? யார் மந்திரவாதி? அவர் வளர்த்த விரோதம் என்ன? வலுவிழந்த எலி யார்? என்பதெல்லாம் படிப்பவர்களின் புரிதலைப் பொறுத்தது.

சரி மீண்டும் பிரச்னைக்கு வருவோம். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப்போகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஒரு பொறுப்பான தலைவர் இப்படி பேசலாமா? அதுவும் அவர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர். ஒரு பொய்யை அடித்துப் பேசுவது, மாட்டிக்கொண்டதும், வார்த்தை ஜாலங்களால் மன்னிப்பு கேட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் சரியா? நீதிமன்றத்தில் மட்டுமே மன்னிப்பு கோரினேன். பிரதமரிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டது நீதிமன்ற தீர்ப்பு மட்டுமல்ல, பிரதமர் மோடியும்தான். என்ன வேண்டுமானாலும் பேசலாம், வருத்தமோ, மன்னிப்போ தெரிவித்தால் போதும் எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை தவறு செய்பவர்களுக்கு நீதிமன்றம் ஏற்படுத்தி விடக்கூடாது. மக்கள் மன்றத்தில் பேசிய கருத்துக்கு நீதிமன்றத்தை திருப்திப்படுத்தினால் போதுமா?

இந்த பொய் பிரசாரத்தால் பாஜகவிற்கு ஏற்பட்ட வாக்கு இழப்பிற்கு யார் பொறுப்பு?

பிரசார தீவிரத்தில் தவறான தகவலைச் சொன்னேன் என்று சொல்வது ஏற்கப்படும் கருத்தானால், வருடத்திற்கு 72000 ரூபாய், விவசாய கடன் தள்ளுபடி போன்றவையும் தேர்தல் வேகத்துக்காக சொல்லப்பட்டது என்று சொல்லிவிட்டு நகரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ராகுல் காந்தி முரண்பாடுகளின் மொத்த உருவம். இதை சமீபத்திய மன்னிப்பு கோரும் விவகாரம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ‘நீங்கள் செய்வது தவறு!' என்று அவரைச் சேர்ந்தவர்கள் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை. அப்படியே சுட்டிக்காட்டினாலும் அதை அவர் காதில் வாங்கிக்கொள்வாரா என்பது தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களே! அவருக்கு தலைமைப் பண்புகளை சொல்லிக்கொடுங்கள். நேரு குடும்பம் என்ற பெருமை, எல்லாத் தவறுகளிலிருந்தும் அவரைக் காப்பாற்றாது.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com