Enable Javscript for better performance
இருந்த இடத்தில் இனிதே பொழுதை போக்க இது உதவுகிறது!- Dinamani

சுடச்சுட

  
  priya

  'நேற்றைய' வானொலி நிகழ்ச்சிகளை தமிழில் வழங்கி வந்தவர்களில் மறக்க முடியாத குரல் வளம் கொண்டிருந்தவர்கள் சரோஜ் நாராயணஸ்வாமி, ஜெயங்கொண்டான், அப்துல் ஹமீத், ராஜா, மயில்வாகனன் சர்வானந்தா போன்றோர். இவர்களுக்கென்று ஒரு நேயர் வட்டம் அன்று உருவாகியிருந்தது. தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவைகள் தொடங்கியதைத் தொடர்ந்து தனியார் சானல்கள் புற்றீசலாக முளைத்து பிரபலமாக ஆரம்பித்ததும் வானொலிக்கு இருந்த வரவேற்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. வானொலி உலகில் 'பண்பலை' எனப்படும் ‘FM’ அலைவரிசையில் தனியார் நிறுவனங்கள் வானொலி நிகழ்ச்சிகளை வழங்கலாம் என்று மத்திய அரசு அனுமதி தந்ததும், வானொலி வட்டாரத்தில் மீண்டும் ஒரு புத்துணர்வு துளிர்விட்டது. 

  ஒரு நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் ஒரு பண்பலை வானொலி நிலையம் என்று பல தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நகரத்திலும் தொடங்கியுள்ளதால் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த பண்பலை நிறுவனங்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரேடியோ ஜாக்கிகள் எனப்படும் நிகழ்ச்சிகளை வழங்குபவர்கள் ஐந்தாறு பேர்கள் பணிபுரிகிறார்கள். பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த ஒலிபரப்பில் பணி செய்பவர்கள் தங்கள் திறமைக்கு தக்கபடி அந்தந்த வட்டாரங்களில் பிரபலமாக இருப்பார்கள். அப்படி மதுரை வட்டாரத்தில் பிரபலமாக இருப்பவர்தான் 'ஆர்ஜே பிரியா' என்று அழைக்கப்படும் பிரியதர்ஷினி. மதுரை 'சூரியன் FM' நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக இருப்பவர்.

  ஆர்ஜே பிரியா தனது 'குரல்' பயணம் குறித்து மனம் திறக்கிறார்:

  ‘மதுரைக்கார வாயாடிப் பொண்ணு நான். கல்லூரியை பேச்சால் கலக்குவேன். கணினி இயலில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு 'என்ன செய்யலாம்' என்று யோசித்த போது தோழிகள் 'நீதான் அநியாயத்திற்குப் பேசறியே... டிவி சானலுக்கு முயற்சி செய்' என்றார்கள். சானல் என்றால் சென்னைக்குப் போக வேண்டும். வீட்டில் அப்பா, தம்பி, பாட்டி மட்டும். அம்மா இல்லை. அதனால் சென்னைக்குப் போகத் தயக்கம். அதனால் மதுரையில் உள்ள FM நிலையங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினேன். ரேடியோ ஜாக்கியாக பயிற்சி தரும் நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. மும்பையில் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் ரேடியோ ஜாக்கியாக பயிற்சி தேவையில்லை. இந்த வேலைக்கு மூலதனம் நாக்குதான். நல்லா தெளிவா பேசணும். உச்சரிப்பு சரியாக இருக்கணும். நேயர்கள் என்ன கேட்டாலும் அதற்கேற்றாற் போல் பேசணும். அவர்கள் பேசுவதில் ஏதாவது ஒரு முடிச்சு கிடைக்கும். அதை அடிப்படையாக வைத்து பேச்சை சுவாரஸ்யமாக வளர்க்கணும். அது அந்த நேயருக்கும், நிகழ்ச்சியை கேட்பவர்களும் ரசிக்கும்படி அமையணும். இதுதான் முக்கியம். லட்சியம். 

  நாட்டு நடப்பு, நகரில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். முக்கியமா எந்த நகரில் வேலை செய்கிறோமோ அந்தப் பகுதியின் பேச்சு வழக்கில் ரேடியோ ஜாக்கிக்கு பேச வர வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் நகைச்சுவையாக பேசத் தெரிய வேண்டும். இந்த திறமை இருப்பதால் எடுத்த எடுப்பிலே ஒரு பண்பலை நிறுவனத்தில் ரேடியோ ஜாக்கியானேன். அங்கே ஐந்தாறு மாதம் வேலை செய்தேன். பிறகுதான் சூரியன் FM மிற்கு முயற்சி செய்தேன். முதல் முயற்சியில் தேர்வு பெறவில்லை. இரண்டாம் முயற்சியில் எனது மதுரை வட்டார பேச்சு பாணிக்காக நான் தேர்வு பெற்றேன். அவர்களும் பயிற்சி தந்தார்கள். மூன்று ஆண்டுகளாக பணியில் இருக்கிறேன். தற்சமயம் 'மெலடிஸ் மட்டும்' என்ற எனது நிகழ்ச்சி மதுரை வட்டாரத்தில் ஹிட். 

  தொடர்ந்து இரண்டு மணி நேரம் வானொலி நிகழ்ச்சி வழங்குகிறேன். 'எப்படிங்க இரண்டு மணி நேரம் தாக்குப் பிடிக்கிறீங்க.. நிகழ்ச்சி முடியும் தருணத்தில் கூட நிகழ்ச்சி தொடங்கும் போது எந்த உற்சாகத்துடன் பேசினீர்களோ, அதே உற்சாகத்தில் எப்படி பேச முடிகிறது'' என்று கேட்பார்கள். 

  அடுத்தடுத்து நேயர்களிடம் பேசும் போது அவர்கள் உற்சாகமாகப் பேசுவதால் அந்த உற்சாகமும் ரேடியோ ஜாக்கியிடம் தொத்திக் கொள்ளும். நேயர்களிடம் கலாய்த்துவிட்டு அவர்கள் விரும்பும் பாட்டை ஒலிபரப்பிவிட்டு அந்த இடைவெளியில் தாகத்துக்கு தண்ணீரோ, காபி, டீயோ குடிப்பேன். பழையது தொடங்கி புதிய பாடல்கள் வரை அட்டகாசமான கலெக்ஷன் சிஸ்டத்தில் உள்ளது. நேயர்களுடன் பேசிக் கொண்டே அவர்கள் விரும்பும் பாடலை தெரிவு செய்ய வேண்டும். நடுவில் நாட்டு நடப்பு, நகரத்தின் வெவ்வேறு நிகழ்வுகள், பிரச்னைகள், சிக்கல்கள் குறித்து நேயரிடம் பேச வேண்டும். வெறும் பாட்டை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதை எப்போதும் நேயர்கள் விரும்ப மாட்டார்கள். போரடிக்கும். அதனால்தான் ஆர்வத்துடன் போன் போட்டு பேசுகிறார்கள். 

  எங்கு பார்த்தாலும் தனியார் சானல்கள்.. விதம் விதமான நிகழ்ச்சிகள்.. சமூக தளங்களில் டிக் டாக்... டப்மாஷ் போன்ற அம்சங்கள் பலரையும் பல திசைகளில் திருப்பிக் கொண்டிருக்கிற சூழ்நிலையில் ‘FM’ ஒலிபரப்பிற்கு ஆதரவு இருக்கிறதா என்று என்னிடம் கேட்காதவர்கள் இல்லை. எங்கே டிவி இல்லையோ அங்கு ‘FM’ ஒலிபரப்புகளை கேட்கச் செய்யும் ரேடியோ ட்ரான்சிஸ்டர்கள் இருக்கும். இருந்த இடத்தில் இனிதே பொழுதை போக்க FM உதவுகிறது. FMமுக்கென்று ஒரு வட்டம் இருக்கிறது. இல்லையென்றால் இத்தனை பண்பலை நிலையங்கள் தோன்ற முடியாதே..
  - பிஸ்மி பரிணாமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai