Enable Javscript for better performance
தமிழகத்தை வஞ்சம் தீர்க்கப் போகிறதா வட-கிழக்குப் பருவமழை? | what Will do North-East Monsoon Rain in T- Dinamani

சுடச்சுட

  
  tamilnadu_drought

  வட-கிழக்குப் பருவமழை


  நல்லது நடக்கும்னு சொல்வாங்க.. ஆனால் அது நடக்காது, கெட்டது நடக்கும்னு சொன்னால், அது கொஞ்சம் அதிகப்படியாகவே நடந்துவிடும்.

  இது தனிநபருக்கு மட்டுமில்லைங்க.. பருவநிலைக்கும் உரியதாக மாறிப்போய்விட்டது. இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் என்று சொன்னால் கொளுத்தி எடுத்துவிடும். ஆனால், பருவ மழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று சொன்னால் அது நடக்காது.

  அப்படித்தான் இருக்கிறது இந்த ஆண்டு பருவ மழையும். பருவமழைக் காலம் தொடங்கும் முன்பிருந்தே, வழக்கமான அளவை விட அதிகமாக மழை பெய்யும், 4 முதல் 5 குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகும் என்றெல்லாம் முன்கணிக்கப்பட்டது.

  தமிழக மக்களும், நாக்கில் எச்சில் ஊற, வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் தென்மேற்குப் பருவ மழை என்னவோ களைகட்டியதுதான். ஆனால், நாளடைவில் இது தென் தமிழகத்தை மட்டும் செல்லப் பிள்ளையாக பாவித்து, வட தமிழகத்துக்கு பாராமுகமாகவே இருந்து விட்டது.

  பிறகு வடகிழக்குப் பருவ மழையும் ரெட் அலர்ட்டோடு தொடங்கியது. ஆனால் அதுவும் தென் தமிழகத்தை மட்டுமே நன்றாகக் கவனித்துவிட்டு, வட தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியது.

  நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் என தென்தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழையானது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மக்களுக்கு சற்று வயிற்றெரிச்சலையே ஏற்படுத்துகிறது என்று சொன்னால் அது நிச்சயம் மிகையில்லை. 

  இன்னும் இரண்டு நாட்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும் போதெல்லாம் சென்னைவாசிகள் விடும் பெருமூச்சானது, எதிரே இருக்கும் டிவி அல்லது மானிட்டரின் கண்ணாடிகளை மூடிவிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  இதுபற்றி தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில், நிச்சயம் 2016 மற்றும் 2018ம் ஆண்டுகளைப் போல 2019 மோசமாக இருக்காது, நிச்சயம் நன்றாகவே இருக்கும். சென்னையில் மழைப் பற்றாக்குறை என்று யாரும் புலம்ப வேண்டாம், இயற்கை அதன் வழியிலேயே பயணிக்கும் என்று ஆறுதல் சொல்லியிருந்தார்.

  ஏற்கனவே கடுமையான குடிநீர் பஞ்சம், வரலாறு காணாத நிலத்தடி நீர் மட்டம் கீழிறங்கியது போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் வடதமிழக மாவட்டங்களில் இருக்கும் ஏரிகளும், குளங்களும் தென்மேற்குப் பருவ மழையின் போது பெய்த ஓரளவு மழையில் நிரம்பியிருந்தாலும், நிலத்தடி நீர் மட்டம் உயர வேண்டும் என்றால் போதுமான மழை பெய்ய வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

  இந்த நிலையில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் சென்னை மக்களை இன்று அதிரடியாகத் தாக்கக் தயாராகியுள்ளது. அதாவது, நவம்பர் மாதத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 34 செ.மீ.க்கு பதில் 30 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது. இது சராசரி மழையளவு.

  சென்னையில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய மழையான 30 செ.மீ.க்கு பதில் வெறும் 8 செ.மீ. மழையே பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  நவம்பர் மாதம் முடிவடைய இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், வட தமிழகத்தில் இன்னும் மழைக்கான வாய்ப்பு இருக்கிறதா? இல்லை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பருவ மழை கைவிரித்துவிடுமா? 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையை நாம் தேக்கி வைக்கவோ, நிலத்துக்குள் செல்லவோ வழி ஏற்படுத்தாமல் விட்டதன் விளைவே கடும் வெள்ளம். ஆனால் அதன்பிறகும் நாம் மாறியிருக்கிறோமா? நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அதீத கவனம் செலுத்தினோமா? மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுத்தோமா என்றால் நிச்சயம் 10 சதவீதம் கூட இல்லை என்றே பதில் கிடைக்கும்.

  இவ்வளவு பட்டும் திருந்தாத மக்களுக்கு ஏன் நாம் கருணை காட்ட வேண்டும் என்று பருவ மழை நம்மை வஞ்சம் தீர்த்துக் கொள்ளுமோ என்ற பயம் வடதமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

  அரபிக் கடலில் தோன்றிய மகா புயலும், வங்கக் கடலில் தோன்றிய புல் புல் புயல் சின்னமும் கூட வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் பயணித்து தமிழர்களின் மழைக் கனவை பொய்யாக்கிவிட்டன. 

  ஆனால், இதையெல்லாம் நினைத்து கலங்க வேண்டாம் என்று ஆறுதல் சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

  கடந்த வாரம் அவர் பதிவிட்டிருந்த பேஸ்புக் பதிவில், அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகத்தின் பக்கம் எம்ஜிஓ காணப்பட்டது. அதனால்தான் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் தமிழகம் நல்ல மழையை பெற்றது. ஆனால் நவம்பரில் எம்ஜிஓ காணப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில் காணாத அளவுக்கு மோசமான நவம்பர் மாதத்தை தமிழகம் கண்டது. ஆனால் இந்த நிலை இந்த மாத இறுதி அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் மாறும்.

  எம்ஜிஓ எனப்படும் பருவமழைக் காலத்தில் ஏற்படும் வெப்பச்சலன நகர்வு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த மேஜிக் காரணமாக தமிழகத்தில் நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் நிச்சயம் கனமழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தும். தமிழகத்தில் இதன் காரணமாக நிச்சயம் கனமழை (கனமழை என்றால் நிச்சயம் கனமழை) பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், தமிழகத்துக்கு மிகச் சிறந்த நாட்கள் காத்திருக்கின்றன. இந்த எம்ஜிஓ மழை காரணமாக தமிழகத்தில் தற்போதிருக்கும் பற்றாக்குறை மழை என்ற அளவு அதிகப்படியான மழை என்ற அளவை ஓரிரு நாட்களிலேயே தொட்டுவிடும். தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

  அதே சமயம், சென்னை வானிலை ஆய்வு மையமும் நவம்பர் 28, 29ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

  இதன் மூலம், ஓரளவு தண்ணீருடன் காணப்படும் ஏரிகளும் குளங்களும் முழுவதும் நிரம்பும் என்றும் நம்பிக்கை தருகிறார்கள்.

  ஒரு மாதம் முழுக்க பெய்ய வேண்டிய மழையை ஒரு வாரத்திலோ, ஒரு நாளிலோ பெற்று விட முடியாது என்றாலும், மழை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் தளர்ந்து போய்விடவில்லை. 

  என்றாலும், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பருவ மழை பொய்த்துப் போனால்.. நிச்சயம் வட தமிழகம் பாலைவனமாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழத்தான் செய்கிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai