எடியூரப்பாவுக்கு 52.. பட்னவீஸ்ஸுக்கு 78: அரைகுறை ஆட்சியில் பாஜகவின் தனிப்பெரும் சாதனை!

பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் அரசியல் குதிரைபேரத்தை மட்டுமே நம்பி  ஆட்சியமைக்க முயன்று தோற்பதில் பாஜக புதிய சாதனை படைத்துள்ளது.
மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

சென்னை: பெரும்பான்மை இல்லாத மாநிலங்களில் அரசியல் குதிரைபேரத்தை மட்டுமே நம்பி  ஆட்சியமைக்க முயன்று தோற்பதில் பாஜக புதிய சாதனை படைத்துள்ளது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதனால் தனிப்பெரும் பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வாஜூபாய் வாலா அழைத்தார். அதன்படி, பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையிலும் குதிரை பேரத்தின் மூலம் எம்.எல்.ஏக்களை இழுக்கலாம் என்று நம்பி மே 17ஆம் தேதி எடியூரப்பா கர்நாடக மாநில முதல்வராகப் பதவியேற்றார். அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வராகப் பதவியேற்ற எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசத்தை ஆளுநர் கொடுத்தார்.

பாஜகவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த காங்கிரஸும், மஜதவும் உடனடியாக கூட்டணி அமைத்தன. மஜத தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. அதேநேரம் குதிரைபேரத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகள் அவசரமாக விசாரிக்கப்பட்டன.

இதையடுத்து உச்சநீதிமன்றம் மே 19ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மே 19 அன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றனர். அன்று பிற்பகல் சட்டப்பேரவையில் பேசத்தொடங்கிய முதல்வர் எடியூரப்பா நமபிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  இதன்மூலம் வெறும் 52 மணி நேரத்திற்கு மட்டுமே மாநில முதல்வராக எடியூரப்பா இருந்தார்

இதேபோன்று மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த அஜித் பவார் ஆதரவுடன் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆட்சியமைத்தார். இவருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.  முதல்வராக ஃபட்னவீஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை காலை பதவியேற்றனர். உடனே இங்கும் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி உச்சநீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆளுநர் கொடுத்த இரண்டு வார அவகாசத்தை ரத்து செய்து, புதன் மாலை 5 மணிக்குள்ளேயே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய் மாலை 03.30 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். முன்னதாக துணை முதல்வர் அஜித் பவார் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸிடம் அளித்திருந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர ஃபட்னவீஸும் அறிவித்தது பாஜகவிற்கு மற்றொரு சரிவாக அமைந்தது.  இதன்காரணமாக எடியூரப்பா போலவே குறைந்த காலத்திற்கு அதாவது 78 மணி நேரத்திற்கு மட்டுமே மாநில முதலமைச்சராக ஃபட்னவீஸ் இருந்துள்ளார்.

இவ்வாறு குறைந்த காலத்திற்கு மாநில முதல்வர்களாக பணியாற்றி இருப்பதில் பாஜகவின் எடியூரப்பாவுக்கும்  ஃபட்னவீஸுக்கு இடையிலான போட்டியில் சிறிய அளவில் ஃபட்னவீஸ் முன்னிலை பெற்றுள்ளார் என்று கூறலாம்.

மஹாரஷ்டிராவில் நடந்தது பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் ராஜதந்திரம் என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், இது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவருக்கும் பெரும் பின்னடைவாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com