இந்திய தண்டனைச் சட்டம் IPC 370-ன் படி இது குற்றம்!

மனித கடத்தல் என்பது நம் சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு குற்றமாகும்.
bonded labour
bonded labour

மனிதக் கடத்தல் என்பது நம் சமூகத்தில் வேகமாகப் பரவி வரும் ஒரு குற்றமாகும். இது உலகில் பரவலாக காணப்படும் ஒரு அபாயகரமான குற்றச் செயலாகும். பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் 2017 அறிக்கையின்படி மனிதக் கடத்தல் என்பது 150 மில்லியன் டாலர்கள் புழங்கும் ஒரு குற்ற வர்த்தக முறை எனவும், இதனால் உலகம் முழுக்க 40.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது. உலக அடிமைகள் குறியீடு அமைப்பின் 2018 ஆய்வின்படி இந்தியாவில் சுமார் 8 மில்லியன் மக்கள் நவீன அடிமைகளாக இருக்கின்றனர் என்று தெரிய வருகிறது. மேலும் இந்தியாவின் மக்கள் தொகையில் 55 சதவிகிதம் மக்கள் நவீன கொத்தடிமைகளாக மாறும் சூழல் உள்ளதாகத் தெரிவிக்கிறது ஆய்வு. 2016-ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் மனித கடத்தல் தொடர்பாக 8138 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியத் தண்டனைச் சட்டம் IPC 370-ன் படி மனித கடத்தல் குற்றம் என்பது உழைப்புச் சுரண்டலுக்காக ஒரு மனிதனை வேலைக்கு அமர்த்துவது, இடப்பெயர்ச்சி செய்வது, கட்டாயப்படுத்தி ஓரிடத்தில் தங்க வைப்பது போன்ற செயல்கள் அடங்கும். மேலும் ஒரு தனி நபர் பெற்ற சிறு கடன் தொகைக்காகவோ அல்லது கைமாற்றுக்காகவோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் மீது ஆதிக்கம் செலுத்துதல், மிரட்டுதல், ஏமாற்றி வேலை வாங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அச்சட்டம் கூறுகிறது. இன்று பொதுமக்கள் பல நாட்டு எல்லைகளைக் கடந்து செல்வது வழக்கமாக நடைபெறுவதால் அவர்களையும் கணக்கில் எடுத்து கடத்தல்காரர்களின்  கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தனி மனிதனின் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் பறிப்பதாலும் கற்பனைக்கு எட்டாத வகையில் கொடுமைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதாலும் மனிதக் கடத்தல் இன்று ஒரு சர்வதேச அளவில் கண்டிக்கப் படக் கூடிய குற்றமாக உள்ளது. இது குறித்து சர்வதேச அளவிலான அமைப்புகளின் அறிவுறுத்தல்கள் இருந்தாலும், எந்த ஒரு சமூகமும் இக்குற்றத்திலிருந்து தப்பவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவிலுள்ள கொத்தடிமை தொழிலாளர்கள் ஆகட்டும் அல்லது பாலியல் சுரண்டலுக்கு அமெரிக்காவில் கடத்தப்படும் சிறார்கள் ஆகட்டும் அவர்கள் உதவிக்காக ஏங்குவது கண்டு கொள்ளப்படாமலேயே உள்ளது. நாம் என்றோ ஒழிந்ததாக எண்ணிக் கொண்டிருக்கும் அடிமை முறை பல்வேறு பரிணாமங்களில் முன்பை விட பல கோடி மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அளவிற்கு இன்றும் நிலவுகிறது வேதனை தரும் செய்தி.

இந்தியாவில் கட்டாய உழைப்பிற்கும் பாலியல் தொழிலுக்காகவும் மனிதர்களை கடத்தும் போக்கு அதிகமாக இருப்பினும், உடல் உறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. 2008-ம் ஆண்டில் கூர்கானைச் சுற்றி உள்ள ஏழை எளிய மக்களை ஏமாற்றி முறைகேடான வகையில் உடல் உறுப்புகளைக் கொள்ளையடித்த கூர்கான் கடத்தல் கும்பல் வழக்கு இன்று நீதிக்காகக் காத்திருக்கிறது. இதனால் சுமார் 400-ல் இருந்து 500 பேருக்கு சட்டத்திற்குப் புறம்பான வகையில் உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் இதில் பலர் இறக்க நேரிட்டதாக அந்தக் கடத்தல் கும்பல் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்தியாவில் மனிதர்கள் கடத்தப்பட்டு உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டதாகப் பல ஆயிரம் குற்ற வழக்குகள் பதியப்படும் பல சந்தர்ப்பங்களில் பதியப் படாமலும் இருக்கிறது. ஒருபுறம் நகர்ப்புறங்களில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகள் பாலியல்ரீதியான சுரண்டலுக்குக் காரணமாக இருப்பினும், கிராமப்புறங்களில் வறிய நிலையில் உள்ள ஏழை எளிய மக்கள் கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொள்ளும் சம்பவங்களே அதிக அளவில் நடைபெறுகின்றன. மனித கடத்தல் எதனால் எப்படி நடைபெறுகிறது என்று சமூகத்தின் அடிமட்ட அளவில் இறங்கி சமூக பொருளாதார காரணிகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே அதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

மற்ற துறைகளில் நடப்பதைப் போல மனிதக் கடத்தல்காரர்களும் தங்களது வேலைக்கு அதிக சிக்கலில்லாத வகையிலும் செயல்பட்டு அதிக லாபம் அடைகின்றனர். கடத்தல்காரர்களுக்குக் கைவிடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பு இல்லாதவர்கள், உறவு அல்லது வேலை தேடி வரும் இளம் பெண்கள், வேலை செய்து பிழைக்க வரும் வெளிமாநிலத்தவர்களே எளிமையான இலக்காகின்றனர். பாதிக்கப்படக் கூடிய நபர் எவ்வளவு வலிமை அற்றவராக இருக்கின்றாரோ அந்த அளவிற்குக் கடத்தல்காரர்களின் பணி சுலபமாகிறது. ஒரு நபர் வறுமை, வேலை வாய்ப்பின்மை போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் போது அவர் கடத்தல்காரர்களின் எளிதான இலக்காககின்றனர். உதாரணத்திற்கு வாழ்வாதாரம் ஏதுமற்ற ஒரு அநாதைக் குழந்தை, பேரழிவு அல்லது வன்முறையால் இடம்பெயரும் மக்கள் போன்றோரே ஒன்றுக்கும் மேற்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கடத்தல்காரர்களுக்கு இலக்காகக் கூடியவர்கள் அனேக சமயங்களில் தங்களது பாதுகாப்பான சொந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப் பட்டவர்களாக இருக்கின்றனர். குடும்பத்தை விட்டு ஓடிவந்த ஒரு இளம் பெண் பயத்தினால் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப முடியாத சூழலில் அவர் எளிமையான இலக்காகின்றார். எவ்வித அறிமுகமும் பாதுகாப்பும் இல்லாத இடத்திற்கு வேலைக்கு வரும்  வெளிமாநில தொழிலாளர்களும் எளிதில் இலக்காகின்றனர்.

மனிதக் கடத்தலுக்குக் காரணமாக இருக்கும் பிரச்னைகள் சமூகத்தின் அடிமட்ட அளவில் நிகழ்வதால் இவற்றை எதிர்கொள்வது மிகவும் சவாலான பணியாக உள்ளது. வறுமை, பேரிடர், வன்முறை இடப்பெயர்வு, ஆதரவற்ற குழந்தைகள் என இப்பட்டியல் நீள்கிறது. இருப்பினும் இதனை நாம் கண்டு கொள்ளவில்லை என்றால் கடத்தல்காரர்கள் தொடர்ந்து பல்லாயிரம் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் அபாயம் உள்ளது. ஆகையால் அரசும் தனியார் அமைப்புகளும் இணைந்து பொதுமக்களிடம் இது தொடர்பாகத் தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மனித கடத்தலை ஒழிப்பது சாத்தியமாகும்.

மனிதக் கடத்தலை ஒழிப்பதில் உள்ள மற்றொரு சவால் குற்றம் இழைப்பவர்கள் தண்டிக்கப்படாமலேயே தப்பித்து விடுவதுதான். இக்குற்றம் பரந்துபட்ட அளவில் நடப்பதால் சட்டம் மற்றும் தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். மேலும் இதனைப் பொதுமக்களும் கண்டு கொள்ளாததால் மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் அதே குற்றத்தை செய்கின்றனர். ஆகையால் குற்றம் இழைப்பவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாத வண்ணம் சட்டங்களை கடுமையாக்கப்பட வேண்டும்.

மனித சமூகத்திற்கு எதிரான இக்குற்றத்தால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளதால் நாம் கவனமுடன் இதனைக் கையாள வேண்டும். மேலும் இதில் ஈடுபடும் குற்றவாளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தண்டனை பெற்றுத் தரும் போது எளிதில் இலக்காகக் கூடிய மக்களை அதிலிருந்து காப்பாற்றலாம். மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும். இதனால் மனித கடத்தலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒழித்துக் கட்ட முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com