உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு: விழித்தெழுமா தமிழ்நாடு உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம்?

உடல் உறுப்பு தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், இளம் வயதில் இறப்பவர்களின் உடல் உறுப்புகள் பயனற்றுப் போகின்றன. இறந்த பின்னரும் வாழ்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்தத்தொகுப்பு
உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு: விழித்தெழுமா தமிழ்நாடு உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம்?


உடல் உறுப்பு தானம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், இளம் வயதில் இறப்பவர்களின் உடல் உறுப்புகள் பயனற்றுப் போகின்றன. இறந்த பின்னரும் வாழ்வதற்கான வழிமுறைகளை விளக்குகிறது இந்தத்தொகுப்பு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன் முதலாக உடல் உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின்  உடலுறுப்புகளையோ அல்லது இயற்கை மரணம் அடைந்தவர்களிடம் பெறப்படும் உடல் உறுப்புகளையோ யாருக்கு கொடுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் துறைதான் தமிழ்நாடு உறுப்புமாற்று சிகிச்சை (TRANSTAN / TRANSPLANT AUTHORITY OF TAMILNADU) ஆணையம். இதயம், கண், சிறுநீரகம், கல்லீரம் என மிக முக்கியமான உறுப்புகளுக்காக தமிழ்நாடு முழுவதும் இந்த ஆணையத்தில்தான் பதிவு செய்து காத்திருப்பார்கள். தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்த ஆணையம்தான் உறுப்புகளை எந்த மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கும்.

இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளின் மூலம் இலவசமாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளை மிகச் சிறப்பாகச் செயல்படுத்துவதில், நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்கான தேசிய விருதினை தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழ்நாடு பெற்றுள்ளது.

அண்மையில் சென்னையில் நடந்த விழாவில் இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதை பாராட்டி இந்திய துணை குடியரசுத் தலைவர் தமிழ்நாடு அரசிற்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 6,097 உடல் உறுப்புகள் 1,082 கொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், இதய வால்வு, ரத்தக்குழாய், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் குறைந்தது 9 பேர்களுக்கு வாழ்வளிக்க முடியும். உடல் உறுப்புமாற்று சிகிச்சை ஆணையத்திற்காக தனியாக இணைய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புதானம் செய்ய விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக மிக எளிதாக பதிவு செய்து கொள்ளும் செயலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கில் மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அனைத்தும் 100 சதவீத வெற்றியுடன் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை 24 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிறப்பு மையத்தில் செய்யப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கு முன்பாக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேபன்சுட்கே என்ற 5 நாள் பெண் குழந்தைக்கு லண்டனில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முகமதுரேலாவால் செய்யப்பட்டது. தற்போது மேடையின் முன்பு அனைவரின் முன் எந்த அளவிற்கு உடல் தகுதியோடு இருக்கிறார். அவர் தற்போது சட்டம் பயின்று வருகிறார். அவசரகால ஊர்தியின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கொடையாளரிடமிருந்து தேவைப்படுவோருக்கு நல்ல நிலையில் உறுப்பை விரைந்து வழங்கிட பசுமை வழித்தடம் போக்குவரத்துத் துறையின் மூலமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் காவல் துறையின் பங்கு மகத்தானது.

அன்னதானம், ரத்ததானம், கண்தானத்தை விட தானத்தில் சிறந்தது உடல் உறுப்பு தானம். இளம் வயதில் உயிரிழப்போரின் இதயம், நுரையீரல், கண், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் உறுப்புகளை கொண்டு, 5க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை காப்பாற்றலாம் என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

முறைப்படுத்தப்படுமா?
உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருந்தபோதும், அதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு முறையாக கொண்டு செல்லவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள 22 அரசு பொது மருத்துவமனைகளில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலை விபத்தில் சிக்கி இந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு காரணங்களால் நாளொன்றுக்கு 25 முதல் 30 பேர் வரை சராசரியாக உயிரிழப்பதாக கூறுகின்றன புள்ளிவிவரங்கள்.

இப்படி உயிரிழப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதிற்கு உள்பட்டவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. அவர்களின் பாதிக்கப்படாத உடலுறுப்புகளை கேட்டுப் பெறுவதற்கும், இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் உறுப்புதானம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் அமைக்கப்பட்டதுதான் உறுப்புமாற்று ஆணையம். மருத்துவமனைக்கு ஒருவர் முதல் 3 பேர் வரை இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். உயிரிழப்போரின் குடும்பத்தினரை சந்தித்து உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வையோ, கலந்தாய்வையோ இந்த ஆணையம் சரிவர மேற்கொள்ளவில்லை என்பது பரவலான புகார்.

அரசு மருத்துவமனைகளில் தானமாக வழங்கப்படும் உடலுறுப்புகள், தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டியது இந்த ஆணையத்தின் கடமை. ஆயினும், ஆணைய உறுப்பினர்கள் இதில் சுணக்கம் காட்டுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை மற்றும் எச்ஐவி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலுறுப்புகளைத் தவிர விபத்து மற்றும் வேறு காரணங்களால் உயிரிழக்கும் இளம் வயதினரின் குடும்பத்தினருடன் போதிய கலந்தாய்வு மற்றும் ஆலோசனை செய்தால், உடல் உறுப்புதானத்தில் 100 விழுக்காடு வெற்றி பெற முடியும். அதே நேரத்தில், ஒருவரின் இறப்புக்குப் பின்னர் 5 பேருக்கு வாழ்க்கை கிடைப்பதையும், அவர்கள் மூலம் இறந்தவருக்கு இன்னொரு வாழ்வு உண்டு என்பதையும் உணர்ந்து பொதுமக்கள் தாங்களாகவே உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..

ஆனால், அப்படி அரசாங்கத்திடமிருந்து தானமாக பெறும் பெரும்பாலான பிரபல மருத்துவமனைகள் கோடிக்கணக்கில் வியாபாராமாக்கிக்கொண்டிருப்பது தனிக்கதை.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் வெளிநாட்டினருக்கு விற்று பல கோடி முறைகேடு

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் விதிகளை மீறி வெளிநாட்டினருக்கு உறுப்புகளை விற்பனை செய்த அதிர்ச்சி தகவல்கள்  வெளியாகியுள்ளன. உடல் நலக்கோளாறு, விபத்து போன்றவற்றால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக தருவது மருத்துவ ரீதியாக தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், நோயாளிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக அறுவைச் சிகிச்சை என்ற பெயரில் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது தற்போது  நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த நோயாளிகளின் உறுப்புகளை தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உறுப்பு மாற்றத்திற்காக காத்திருக்கும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு விற்பனை செய்து பெரிய அளவில் முறைகேடு  நடந்துவருவது அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக கார்ப்பரேட் மருத்துவமனைகளின் துணையுடன் இந்த மோசடி அதிக அளவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

எனவே, உறுப்புகளை நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் வழிமுறைகளும் மத்திய அரசால் வகுக்கப்பட்டது. பொதுவாக தானம் செய்பவர்களின் உறுப்புகளை முதலில் தமிழகத்தில்  உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். அதன்பின்னர் நமது நாட்டில் உள்ளவர்களுக்கு வரிசைப்படி தர வேண்டும். அப்படி உறுப்புகளைப் பெற நோயாளிகள் இல்லை என்றால் மட்டுமே, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தர வேண்டும்.  அதுவும் இல்லாத பட்சத்தில்தான் வெளிநாட்டினருக்கு உறுப்புகளை தர வேண்டும். ஆனால், அதிக எண்ணிக்கையில் இந்திய நோயாளிகள் உறுப்பு மாற்றத்திற்காக காத்திருக்கும் நிலையில் வெளிநாட்டினருக்கு சட்ட விரோதமாக  விதிகளை மீறி உறுப்புகள் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த மே 18ம் தேதி சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவரான மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் அவரின் குடும்பத்தினரின் சம்மதத்துடன்  தானம் செய்யப்பட்டது. அந்த நபரின் உடல் உறுப்புகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த உறுப்புகள் இந்திய நோயாளிகளுக்கு மாற்றம் செய்யப்படாமல் அவரின் நுரையீரல் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவருக்கும், மற்ற உறுப்புகள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎஸ்பி  தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

இதையடுத்து, உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சையில் நடந்துவரும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: உறுப்பு மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் அதற்கான பதிவில் தங்கள் பெயர்களைப் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.  வரிசைப்படிதான் அவர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யப்படும். ஆனால், 2 பேர் ஆணையத்தில் பதிவு செய்யாமல், தங்களின் அடையாள எண்ணில் மோசடி செய்து உறுப்பு மாற்றம் பெறும் நோயாளியின் எண்ணையும் மாற்றம் செய்து வரிசை பட்டியலில் முன் இடத்தைப் பிடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பெரிய மருத்துவமனையில் இந்தியருக்கு பொருத்தப்படவேண்டிய உறுப்பை வெளிநாட்டினருக்கு பொருத்தியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது தலைமை சர்ஜன் இல்லை என்று பதில் கூறினார்கள்.  ஆனால், தலைமை சர்ஜன் அதே மருத்துவமனையில்தான் அப்போது இருந்துள்ளார். இந்த அறுவைச் சிகிச்சை மே 21ம் தேதி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.சேலம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் விவகாரத்தில் அவரது உறுப்புகளை தானம் செய்ய முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், அவர்களை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை  தலைமை செயல் அதிகாரி நீண்ட நேரம் சமாதானம் செய்துள்ளார். உறவினர்கள் 3 முறை மறுப்பு தெரிவித்துள்ளனர். அதன் பிறகே சம்மதித்துள்ளனர்.

மணிகண்டனின் கிட்னி பொருத்தப்பட வேண்டிய நபருக்கு பதில் வேறு ஒருவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அவரது இதயம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், விதிமுறைகளுக்கு மாறாக  லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. அந்த நோயாளிக்கு மணிகண்டனின் இதயம் பொருந்தாததால் அந்த நோயாளி சில மணி நேரங்களிலேயே இறந்துவிட்டார். மணிகண்டனின் உறுப்புகள்  பொருத்தப்பட்டது தொடர்பான சான்றிதழில் யாருக்கு உறுப்புகள் வழங்கப்பட்டது என்ற விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அனைத்து முறைகேடுகளும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உள்ள உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை பிரிவினருக்கும் புரோக்கர்களுக்கும் இடையே செல்போனில் ரகசியமாக டீலிங் செய்யப்பட்டுள்ளது.

ஒரு உறுப்பு மாற்றம் விஷயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மிக முக்கிய நபர் ஒருவர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஒருவருக்கு உறுப்பை பொருத்துமாறு ஆணைய அலுவலர்களை வற்புறுத்தியுள்ளதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களுக்கு பொருத்தப்பட வேண்டிய உறுப்புகளை வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்தியதாக சென்னையைச் சேர்ந்த கார்ப்பரேட் மருத்துவமனைக்கு உறுப்பு மாற்று ஆணைய அதிகாரி ஒருவர் அனுமதியளித்துள்ளார்.  இதுபோன்ற பல முறைகேடுகள் தென் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளிலும் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பு மாற்று முறைகேடு விஷயத்தில் சம்மந்தபட்டவர்கள் மீது, அனுமதியில்லாமல் மனித உடல் அகற்றல் தடுப்பு சட்டப் பிரிவு 18, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420(மோசடி), 465 (முறைகேடு) 120 (கூட்டுச்சதி)  ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடலுறுப்புகள் தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு முறைப்படுத்தப்படவேண்டும்.

 தமிழ்நாடு உறுப்புமாற்று சிகிச்சை ஆணையம் (TRANSTAN,)
1045/1046, 1 வது மாடி,
தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,
ஓமாந்தூரார் அரசு தோட்டம்,
அண்ணா சாலை, சென்னை - 600 002
தொலைபேசி + (91) 44-25333676
மின்னஞ்சல் organstransplant@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com