Enable Javscript for better performance
நீரில் மூழ்கி மரணங்கள் யார்க் காரணம்..? விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தன் பணியை செய்கிறதா…?- Dinamani

சுடச்சுட

  

  நீரில் மூழ்கி மரணங்கள் யார்க் காரணம்..? விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தன் பணியை செய்கிறதா…? 

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 02nd October 2019 06:02 PM  |   அ+அ அ-   |    |  

  swimming1

  Sports Development Authority


  தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கல்குவாரிகளில் குளம், குட்டைகளில் கோடை வெயிலுக்கு குளித்து விளையாடும் சிறுவர்கள் ஆண்டுக்கு ஐந்தாறு பேர்களாவது நீச்சல் தெரியாமல் பலியாகி வருகின்றனர். 

  இவர்களுக்கு வசதியாக குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி அளிக்க முன்வராமல், 12 நாட்கள் பயிற்சிக்கே ரூ.1000 வசூலிக்கப்படுவதால் மாவட்ட மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் 10 பேர்களை கொண்டு இந்த பயிற்சி அளிக்கப்படுவது வேதனையாகவுள்ளது. இந்த கட்டண வசூலிப்பு, தனியார் நீச்சல்குளம் நடத்துவோருக்கு சாதமாகவே அமைந்துள்ளது.

  திருவாரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சில நாட்களில்   சிறுவர், சிறுமியர் பல பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பள்ளி விடுமுறைக் காலங்களில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் மீது காட்ட வேண்டிய கூடுதல் அக்கறை குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை...

  திருவாரூர் மாவட்டம் கண்டிரமாணிகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறையில் இருந்த ஆறாம் வகுப்பு மாணவி திவ்யா, செவ்வாய் கிழமை அன்று தனது சகோதரர் ஸ்ரீராமுடன் அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் நீரில் மூழ்கினர். இதில் உயிரிழந்த ஸ்ரீராமின் சடலம் மீட்கப்பட்டது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இதே போன்று ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றில் குளித்த ஆறு வயதான விக்னேஷ் என்ற சிறுவனும், அவனது பக்கத்து வீட்டிற்கு பள்ளி விடுமுறையை கழிக்க வந்த செங்கனூரை சேர்ந்த வெங்கடேஷ் என்ற 12 வயது சிறுவனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கந்திகுப்பத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவரான ஸ்டீவன் வெர்னேவும், அவனது சித்தப்பா மகனான ஒன்றாம் வகுப்பு படித்து வந்த கெர்சோன் ராஜ் என்ற சிறுவனும் ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்தனர்.

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த விகளத்தூர் கிராமத்தில் வெள்ளாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஹரிகிருஷ்ணன் என்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூரில் கானாறு ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி திலீப் குமார் (14), மணிகண்டன் (13) ஆகியோர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏரி, குளத்தில் மூழ்கி 7 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

  புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்களில் சந்தோஷ் (12), ஜாக்சன் (12) ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டது. நீரில் மூழ்கிய, மற்றொரு சிறுவனை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சொக்கநாதபுரத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் அருகில் உள்ள நொண்டிகருப்பன் ஏரியில் குளித்துள்ளனர். அப்போது நீர்வரத்தால் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட 9ஆம் வகுப்பு பயிலும் ஜெகன், அன்பரசன் மற்றும ஆனைமுத்து ஆகியோர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.

  மதுரை மாவட்டம் மேலூர் ஆட்டுகுளம் பெருமாள்பட்டி மலையடிவாரத்தில் குளித்த 5 வயது சிறுமி நிர்மலாதேவி நீரில் மூழ்கி இறந்தார். தாய் முனியம்மாளுடன் குளிக்கச் சென்றபோது பள்ளி மாணவியான நிர்மலா தேவி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

  பெற்றோர்களின் அலட்சியம்
  விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க விரும்பும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் அருகில் உள்ள நீர்நிலைகளுக்குச் சென்று குளிக்கின்றனர். இந்த நிலையில் தங்களது பிள்ளைகளின் மீது பெற்றோர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகியது.

  சைக்கிள், மொபைல் கற்றுக் கொடுக்க ஆசைப்படும் அளவுக்கு, குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் ஆர்வமும் குறைந்துள்ளதும் காரணம் எனலாம்.

  நீச்சல் பயிற்றுவிப்பது ஒவ்வொரு பெற்றொரின் தலையாய கடமை.

  நீச்சல்
  நீச்சல் என்பது பண்டையக் காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில், நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும், நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

  நீச்சல் பயிற்சி கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.  நகர்புறத்து இளைஞர்கள் நிறைய பேருக்கு நீச்சல் தெரியாது என்பது மறுக்க இயலாத உண்மை. கிராமத்து இளைஞர்கள் நீச்சல் கற்கக் காரணம் அவர்கள் ஊரில் கிணறு, வாய்க்கால், ஏரி அல்லது ஆறு இருக்கும். இதனால் இவர்களுக்கு நீச்சல் கற்கும் வாய்ப்பு தானாக வருகிறது. நகர்புறங்களில் நீச்சல் குளம் மூலமாக நீச்சல் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் நீச்சல் குளம் மூலமாக மேல்தட்டு மக்கள் மட்டுமே பயிற்சி கொள்ளும் அளவிற்கு மிகுந்த பொருட்செலவு ஆவதால் அதுவும் உகந்தந்தாக இருப்பதில்லை. நீச்சல் பயிற்சி வெளிஉறுப்புகள்  மட்டுமின்றி  உள்ளுறுப்புகளையும் பலம் அடையச் செய்கிறது.

  நீச்சல் கற்பது எப்படி?
  கிணற்று நீச்சல் : நீச்சல் கற்க நிச்சயமாக நன்கு நீச்சல் தெரிந்த நபர் வேண்டும். அவரின் உதவியுடன் தான் கற்க முடியும். முதலில் அவர் தனது கைக்கால்களை எவ்வாறு அசைக்கிறார் என பார்க்கவேண்டும். காலும் கையும் தண்ணீருக்குள் இருக்கும் தலைமட்டும் மேலே தூக்கி கை, கால்களை மெதுவாக ஆட்டியபடி மிதப்பார். இதை நன்கு கவனித்துவிட்டு நாம் தண்ணீரில் இறங்க வேண்டும்.

   நிரப்பி நடுவில் உட்கார்ந்துக் கொண்டு காலை மட்டும் அசைக்கலாம். (பஞ்சர் உள்ள ட்யுப் ஆபத்தானது பயன்படுத்தக்  கூடாது).

  நன்கு நீச்சல் அறிந்தவர் உதவியுடன் ஓரிரு  நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு இறங்கினால் மூன்றாம் நாள் தைரியம் வந்து நாமும் மெதுவாக இறங்கி,  கை, கால்களை அசைக்கும் போது நீச்சல் தெரிந்தவர் நமது அரைநான் கயிறைப்  பிடித்துக்கொள்ள கையையும் காலையும் ஒன்றாக அசைக்க வேண்டும். 

  ஓரிரு  முறை பிடித்து விட்டு மூன்றாவது முறை விட்டு விட்டு பிடிக்கும் போது நல்ல பழக்கம் ஏற்படும். கிணற்றில் பழகும் போது இந்தப்பக்க சுவரையும் அந்தப்பக்க சுவரையும் நீச்சல் அடித்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வாரத்தில் எளிதாக நீச்சல் கற்றுக் கொள்ளலாம். இந்த வகை நீச்சல் கிணறு, நீச்சல்குளம், ஏரி, கோயில் குளத்திற்கு மட்டுமே பொருந்தும்.

  ஆற்று நீச்சல்: ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது எப்பொழுதும் தண்ணீர் செல்லும் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். எதிர் திசையில் செல்வதை எதிர் நீச்சல் என்பர். இது மிகவும் கடினமான ஒன்று. ஆற்றிற்கும் ஒரு நல்ல அனுபவமிக்க நீச்சல் தெரிந்தவர்களுடன் செல்லவேண்டும். ஆற்றில் நீச்சல் அடிக்கும் போது கால்களை விட இரண்டு கைகளையும் ஒவ்வொன்றாக முன்புறம் தூக்கி தண்ணீரை பின்னுக்கு கொண்டு வரவேண்டும். அப்பொழுது நாம் முன்னுக்குச்செல்வோம். கைகளை எந்த அளவிற்கு வீசுகிறோமோ அந்த அளவிற்கு நாம் முன்புறம் செல்லலாம். ஆற்று நீச்சல் கற்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். கைகளை வீசும் போது சுழல் இருந்தாலும்  எளிதாக தப்பிக்கலாம்.

  நீச்சல் பயிற்சிக்கு பொருத்தமான இடம்:  நீச்சல் பயிற்சி ஆற்றிலோ அல்லது கிணற்றிலோ மேற்கொள்ளும்போது நீர் மற்றும் சுற்றுப்புறம் தூய்மையானதாக இருப்பது நலம். நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது நீச்சல் குளம் சரியாக பராமரிக்கபடுகிறதா என்பதை கவனிக்கவேண்டும்.

  கலோரி கணக்கீடு – சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் எரிக்கப்படும் கலோரிகள்:

  •    நீச்சல் சுற்றுகளை, / ப்ரீஸ்டைல், வேகமாக, தீவிரமான முயற்சி மேற்கொள்ளும் போது ஆண்= 862 kcal , பெண்= 739 kcal எரிக்கப்படும்.
  •    நீச்சல் சுற்றுகளை, / ப்ரீஸ்டைல், மிதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது ஆண்=603 kcal, பெண்= 518 kcal எரிக்கப்படும்.

  நன்மைகள்
  •    முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடைக் குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது.

  •    இன்று தொப்பை பிரச்னையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாகக் குறையும்.

  •    நீச்சலின்போது நீரானது உடலுக்கு தேவையான இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.

  •    உடலின் உள் உறுப்புகளுக்கும் , நரம்புகளுக்கும்  தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.

  •    மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன. நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைகிறது.

  •    உடலின்  இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

  •    கை, கால், தொடைப் பகுதித் தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.

  •    தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

  •    கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்குகிறது.

  •    செரிமான சக்தியைத் தூண்டுகிறது. அஜீரணக் கோளாறைப் போக்குகிறது. நன்கு பசியைத் தூண்டச் செய்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்குகிறது.

  •    மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் அருமருந்தாகும். 

  •    நன்கு மூச்சு விடுவதற்கு நுரையீரல் பகுதி விரிந்து காணப்படும்.

  •    நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது.

  •    சிறந்த முதலுதவிக்கலையாகவும், தற்காப்புக்கலையாகவும் விளங்குகிறது.

  •    ஒரே நேரத்தில் தசை, இருதயம், என அனைத்துப்பகுதிகளும் இயங்குகிறது.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பல மாவட்டங்களில்  நீச்சல் குளங்கள் இயங்கி வருகின்றன. விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடைகால பயிற்சிக்கு ரூ.1000 வசூல் செய்யப்படுவதால் இளைஞர்கள் ஆர்வம் குறைந்துள்ளது.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் குறைந்த கட்டணம் வசூலித்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது கட்டாய கடமையாகும்.
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp