விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாத நிலையிலிருந்து மீண்ட வாழ்க்கை!

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் உழைப்புக்கேற்ற கூலி வழங்கப்படுவதில்லை
கொத்தடிமையிலிருந்து விடுதலை
கொத்தடிமையிலிருந்து விடுதலை

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்கள் உழைப்புக்கேற்ற கூலி வழங்கப்படுவதில்லை என்றும் தங்களது உரிமைகள் மறுக்கப்படுவதை பற்றியும் புகார் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, ஒரு நாளுக்கு 20 மணி நேர வேலை, ஒரு குடும்பம் வாரம் முழுவதும் வேலை செய்தாலும் ரூ. 250 மட்டுமே கூலி, கர்ப்பிணிப் பெண்கள் அதிக சுமை உள்ள மூட்டைகளைத் தூக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்படுவதைப் பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

அடிமைத்தனம் என்பது ஏதோ முன்னொரு காலத்திலிருந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மூன்று வயது சிறுவர்கள் தொடங்கி 70 வயது முதியவர்கள் வரை பல்லாயிரக்கணக்கானோர் மிக மோசமான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் உழைப்பைச் சுரண்டுகின்றனர் முதலாளிகள். ஆம் இது நடப்பது 2019-ல்தான். தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 31 மாவட்டங்களில், 11 மாவட்டங்களில் கொத்தடிமைத்தனம் என்ற கொடிய தொழிலாளர்முறை அதிகமாக வழக்கத்தில் இருக்கிறது. கொத்தடிமை முறையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாமலும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலியைக் கூடப் பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

பெரும்பாலும் செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், மரம் வெட்டும் குழுக்கள் போன்ற தொழில் அமைப்புகள் போன்றவற்றில் கொத்தடிமைகள் வேலை செய்கின்றனர். ஒரு நாளுக்கு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்கி ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு மிக மோசமான சூழலில் அவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவை அனைத்தும் ஏதோ நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நடப்பதாக நினைக்க வேண்டாம். சில சம்பவங்கள் சென்னை நகரத்திற்கு உள்ளேயே நடக்கின்றன. இருப்பினும் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொத்தடிமைத்தனம் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. சமூகத்தில் பின் தங்கியுள்ள முக்கியமாக எஸ்சி எஸ்டி பிரிவினர் முதலாளிகளின் பிரதான இலக்கு. பெரும்பாலான சமயங்களில் தொழிலாளர்கள் முதலாளிகள் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று சேருகின்றனர்.

ஆனால் அது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து கடைசிவரை அசல் பணத்தைக் கூட திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர் பலர். இக்கொடிய வலையிலிருந்து வெளிவர முடியாதபடி ஒருபுறம் ஏழ்மையும் மறுபுறம் நம்பிக்கையற்ற தன்மையும் அவர்களிடம் நிலவுகிறது. கொத்தடிமையில் சிக்கும் பலருக்குக் கல்வி மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றி துளி கூட அறியாதவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறங்களில் ஏழ்மையும் வேலைவாய்ப்பின்மையுமே கொத்தடிமை முறைக்கு மூல காரணங்களாக திகழ்கின்றன. மேலும் இடப்பெயர்வு, இயற்கைப் பேரிடர், பஞ்சம் போன்றவையும் காரணங்களாக அமைகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கொத்தடிமைகளில் ஒருவர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஏற்கனவே ஒருவர் தன் தாய் வாங்கிய கடனுக்காக அரிசி ஆலை ஒன்றில் வேலை பார்த்த நபரைத் திருமணம் செய்து கொண்டதால் அவரும் கொத்தடிமையாகச் சிக்கிக் கொண்டார். அவர்கள் இருவரும் ஒரு அரிசி ஆலையில் வேலை செய்தனர். முதல் குழந்தை பிறந்த பிறகும் சுமதி வேலை செய்வதை விடவில்லை. 

ஒருபுறம் இடையறாத வேலை மறுபுறம் பாதுகாப்பற்ற சூழலால் ஒருநாள் குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது. முதலாளியால் முதலுதவி மற்றும் மருத்துவ வசதி மறுக்கப்பட்டதால் அக்குழந்தை இறந்தே விட்டது. இது மட்டுமில்லாமல் அரிசி ஆலையில் வேலை செய்யும் மற்ற குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்குக் கல்வி, மருத்துவ வசதி ஆகியன மறுக்கப்பட்டுள்ளது. சில தொழிலாளர்கள் உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டும் இருக்கின்றனர்.

ஒருவாரத்திற்கு 200 நெல் மூட்டைகளை அரிசியாக்க ஓயாது வேலை செய்தாலும் மூட்டை ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே முதலாளியால் வழங்கப்பட்டுள்ளது. அதனை 6 முதல் 7 பேர் வரை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசின் உதவியால் சுமதியின் குடும்பம் அரிசி ஆலையிலிருந்து மீட்கப்பட்டது. சில நேரங்களில் அரசு சாரா நிறுவனங்கள் கொத்தடிமைகளை அடையாளம் கண்டு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். பின்னர் அங்கு ஆய்வு நடத்தப்பட்டு கொத்தடிமைகள் இருப்பின்  உடனடியாக மீட்கப்படுகின்றனர். 

தமிழகத்தில் இன்னமும் பல ஆயிரம் கொத்தடிமைகள் மீட்கப்படாமல் உள்ளனர். மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு உடனடியாக அவர்களது கடன்களை ரத்து செய்ததற்கான ஆதாரமாக விடுதலை சான்றிதழ்களும், அரசின் மறுவாழ்வு தொகையும் வழங்கப்படுகின்றன. இக்குற்றத்தில் ஈடுபடும் முதலாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றனர். மேலும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சரி வரக் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் மீண்டும் கொத்தடிமைகள் சிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களைப் பொருளாதாரரீதியாகவும் உடல்ரீதியாகவும் சுரண்டுவதைத் தடுக்கும் பொருட்டு கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் (1976) அமல்படுத்தப்பட்டது. இச்சட்டம் இயற்றி 40 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் கொத்தடிமை முறை இன்னமும் நம் நாட்டில் வழக்கத்தில் இருக்கிறது. மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மேலும் பலர் இக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. பொதுவாகக் கொத்தடிமை முறை தொடர்பான வழக்குகளில் தண்டனை அளிப்பது மிகக்குறைவாக உள்ளது. நம் நாட்டில் உள்ள மக்களைக் காப்பது அரசின் கடமையாகும். ஆதலால் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடும் தீய சக்திகளுக்குத் தண்டனையின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாதபடி சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com