பிரதமருக்குக் கடிதம் எழுதுவது தேசத் துரோகக் குற்றமா? பதில் சொல்வார் யாரோ?

'கும்பல் தாக்குதல்கள் மற்றும் கும்பல் கொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள்' என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள்
பிரதமருக்குக் கடிதம் எழுதுவது தேசத் துரோகக் குற்றமா? பதில் சொல்வார் யாரோ?

'கும்பல் தாக்குதல்கள் மற்றும் கும்பல் கொலைகளைத் தடுத்துநிறுத்துங்கள்' என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எதிராகக் கண்டனங்கள் குவிகின்றன.

சமீபகாலமாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள், கும்பல் கொலைகள் நடைபெறுகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உ.பி, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில், கும்பல் கொலைக்குப் பலர் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், 'கும்பல் கொலைகளைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ஷியாம் பெனகல், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, நடிகைகள் அபர்ணா சென், ரேவதி உட்பட பல்வேறு துறைகளில் பிரபலங்களாக விளங்கும் 49 பேர், பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதினர்.

‘கும்பல் கொலைகள் மற்றும் கும்பல் தாக்குதல்களுக்கு நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்கள். அது மட்டும் போதாது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று 49 பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்துக்கு பதிலடியாக, பா.ஜ.க-வுக்கு ஆதரவான திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 62 பிரபலங்கள் கடிதம் எழுதினர். அது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்நிலையில், பிரதமருக்கு கடிதம் எழுதிய 40 பிரபலங்கள் மீதும் பீகார் மாநிலத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், சுதிர்குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் அளித்த புகார் மனு அடிப்படையில், 49 பேர் மீதும் தேசத் துரோக வழக்கு பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது கீழமை நீதிமன்றம். 
அதன்படி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதைக் கேள்விப்பட்டு, சம்பந்தப்பட்ட திரைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘பிரதமருக்குக் கடிதம் எழுதியது தேசத்துரோகக் குற்றமா?’ என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகிறார்கள். ‘ஏதேச்சதிகாரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதற்கான அறிகுறிதான் இது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார், ராகுல் காந்தி. மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட, பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரதமருக்கு கடிதம் எழுதியவர்களில் ஒருவரான மலையாளத் திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ‘நம் நாட்டில் விநோதமான சம்பவங்கள் நடக்கின்றன. மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொன்றதைக் கொண்டாடும் விதமாக காந்தியின் உருவபொம்மை மீது துப்பாக்கியால் சிலர் சுடுவது பற்றி கேள்விப்படுகிறோம். அது தொடர்பாக எந்த நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை’ என்று வேதனை தெரிவித்தார்.

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், ‘பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேசத்துரோக வழக்கு பாயும் என்ற நிலை வருந்தத்தக்கது. பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேசத்துரோகம் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

இயக்குநர் வெற்றிமாறன், ‘இந்த நாட்டில் நடைபெறும் கும்பல் தாக்குதல் என்ற கொடூரமான செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுவது மிகவும் நாகரிகமாக, ஜனநாயக ரீதியான வழிமுறையாகும்’ என்று கூறியிருக்கிறார்.

'தேசத்துரோக சட்டப்பிரிவான 124 ஏ என்பது பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்திய சட்டத்திலிருந்து அதை நீக்க வேண்டும்' என்று சமீபகாலமாகப் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அந்த சட்டப்பிரிவின்கீழ் 49 பிரபலங்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அப்படியென்றால், நம் நாட்டில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியதாகியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையிடம் புகார் மனு அளித்து, அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு வழக்கு செல்வது என்பது வழக்கமான நடைமுறை. ஆனால், நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனு அளிக்கப்பட்டு, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியாளர்கள் காவல்துறையை தங்கள் விருப்பத்துக்குப் பயன்படுத்துவதைப் போல, தற்போது நீதிமன்றத்தையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால், இந்த வழக்கைப் பொறுத்த அளவில், பிரதமரையோ பா.ஜ.க-வையோ குற்றம் சாட்டுவது சரியல்ல என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. பீகாரில், ஒரு வழக்கறிஞர் அளித்த தனிநபர் புகார் மனு அடிப்படையில், கீழமை நீதிமன்றம் அளித்த உத்தரவின்படிதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அப்படியிருக்கும்போது, பிரதமர் மோடியையோ, பா.ஜ.க.-வையோ இதில் இணைத்துப் பேசுவது தவறு என்று பா.ஜ.க. தரப்பில் கூறுகிறார்கள்.

நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யும் அளவுக்கான விஷயமா என்பதை ஆய்வுசெய்து முடிவெடுத்திருக்க வேண்டும். இந்தப் புகார் மனுவைப் பொறுத்த அளவில், அதை உடனடியாக நீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் என்று சட்டநிபுணர்களும், முன்னாள் நீதிபதிகளும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், நாட்டு மக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றமே இவ்வாறு நடந்துகொண்டால், மக்கள் எங்கே போவார்கள் என்று கவலையுடன் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com