Enable Javscript for better performance
Maradu flats: heartbroken owners vacate apartments- Dinamani

சுடச்சுட

  

  மரடு குடியிருப்பு: இடிக்கப் போவது கட்டடத்தை அல்ல, இவர்களது நொறுங்கிப் போன இதயங்களை!

  By ENS  |   Published on : 08th October 2019 02:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kochi_flats

  மரடு குடியிருப்பு


  கொச்சி: கொச்சியில் மரடு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து அனைவரும் வெளியேறிவிட்டாலும், தங்களது வீடுகளை விட்டு வெளியேறிவிட்டோம், இனி அது தங்களது வீடு அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சட்டப் போராட்டம் முடிந்து இப்போது மனப் போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.

  கேரள மாநிலம், கொச்சியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்த குடியிருப்புகளில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

  மனோஜ் வி நாயர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்து வருபவர். தனது வீடு என்று சொன்னதும் அவருக்கு மரடு குடியிருப்புதான் நினைவுக்கு வரும். அங்கிருந்து காலி செய்துவிட்டோம், வேறு இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பே அவரை கலங்கடிக்கச் செய்கிறது.

  குடியிருப்பின் 11வது மாடியில் வராண்டாவில் தனது மனைவி பிந்து மனோஜுடன் மனோஜ் வி நாயர் நின்று கொண்டிருக்கும் போது, இருவரும் ஏறக்குறைய தங்களது மனக் குமுறலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

  தங்களது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்த ஒரே ஒரு வீடு ஒரே நாளில் கனவாகிப் போனதை ஏற்றுக் கொள்ள முடியாமல், பலரும் உறக்கமில்லாத இரவுகளையே பல நாட்களாகக் கழித்தனர். அவர்களது அந்த கெட்ட கனவு நாள் வந்தும் விட்டது.

  அதுபோலவே ஓராண்டுக்கு முன்னர் புத்தம் புதிதாக தங்களது கனவுகளைத் துவக்கிய இந்த வீடும், உடன் இருந்து விளையாடிய தோழர், தோழிகளும் இன்று இல்லை என்று ஆனது ஏன் என்று கூடத் தெரியாமல், தாயும் தந்தையும் தலைதொங்கிய முகத்துடன் வெளியே செல்லும் போது கைகோர்த்தபடி சென்று கொண்டிருக்கும் பிஞ்சுகளுக்கு இந்த சட்ட விதிகளைச் சொல்லி யார் புரிய வைப்பது.

  கொச்சி நகரின் மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை 138 நாள்களுக்குள் இடிக்குமாறு கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டதுடன், வீடுகளின் உரிமையாளா்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், குடியிருப்புகளை இடிக்கும் பணியை மேற்பாா்வையிடுவதற்கு ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவையும் நியமித்தது.

  அதையடுத்து, அந்தக் குடியிருப்புகளில் வசிப்பவா்களை வெளியேற்றுவதற்கான பணியை மாநில அரசு தொடங்கியது. குடியிருப்புவாசிகளை வெளியேற்றுவதற்கான கெடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.

  இதுதொடா்பாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘4 அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் வசித்தவா்களை வெளியேற்றுவதற்கான கெடு வியாழக்கிழமையுடன் நிறைவுற்றது.

  அதன்படி, அனைவரும் வெளியேற்றப்பட்டனா். 29 வீடுகளில் மரச்சாமான்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குடியிருப்புகளில் உள்ள 50 வீடுகள் நீண்ட காலமாக பூட்டிக்கிடக்கின்றன. அந்த வீடுகளின் உரிமையாளா்கள் வெளிநாடு வாழ் இந்தியா்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. கட்டடத்தை இடிப்பதற்கான பணி வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்குள் அந்த வீடுகளின் உரிமையாளா்கள் வந்து தங்களது பொருள்களை எடுத்துக் கொள்ளாவிட்டால், வருவாய்த்துறை அதிகாரிகளே அவற்றை அகற்றுவா். எா்ணாகுளம் மாவட்ட ஆட்சியா் எஸ். சுஹாஸ், மாநில காவல் ஆணையா் விஜய் சகாரே ஆகியோா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை வியாழக்கிழமை பாா்வையிட்டனா். குடியிருப்புகளில் வசித்தவா்களை வெளியேற்றுவதற்காக ரூ. 1 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது’ என்றனா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai