Enable Javscript for better performance
Caste politics in Tamilnadu | பெரியார் பூமி? ஜாதி அரசியல்!- Dinamani

சுடச்சுட

  
  ambedkar-periyar_s

   

  இடைத்தேர்தலில் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் வாக்குகளைப் பெறுவதற்காக திமுகவும், பாமகவும் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த அறிக்கைகள் மூலம் மருத்துவர் ச. இராமதாஸ் பின்வருவனவற்றைத் தெரிவிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

  தமிழக முதல்வராக இருந்தபோது மு. கருணாநிதி அவர்கள் தன் சுயஜாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்ததன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தவருக்குத் துரோகம் செய்தார். மருத்துவர் ச. இராமதாஸ் சார்ந்த சுயஜாதியினருக்குத் தனியாக உள் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாக முரசொலி கடிதம் மூலம் மு. கருணாநிதி தெரிவித்தார்.

  பல்கலைக் கழகத் துணைவேந்தர், தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநர், தமிழ்நாடு அரசுப் பணியாளர்த் தேர்வாணையத் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகள் மருத்துவர் ச. இராமதாஸ் சுயஜாதிப் பிரிவினருக்கும், கலைஞர் மு. கருணாநிதி சுயஜாதிப் பிரிவினருக்கும் போட்டி போட்டுக்கொண்டு ஜாதி அடையாளங்களுடனே வழங்கப்பட்டுள்ளன.

  கட்சிப் பதவிகளும் சுயஜாதி அடையாளங்களுடனே வழங்கப்பட்டுள்ளன. அதாவது திமுகவும், பாமகவும் தமிழர் ஒற்றுமை, ஜாதிகள் ஒழிப்பு போன்றவற்றில் முனைப்பு காட்டாமல் சுயஜாதிக் கட்டமைப்புகளுக்கு முதன்மைத்துவம் கொடுத்துள்ளன.

  திமுகவின் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர்களின் அறிக்கைகள்படியும் ஒரு குறிப்பிட்ட சுயஜாதியினருக்கு அதிகாரப் பதவிகள், மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பவையும் தெளிவாக்கப்பட்டுள்ளன. வீரப்பன் தற்போது ஒரு ஜாதிக்குள் அடைக்கப்பட்டுவிட்டது மூலம், அவருக்கு வழங்கப்பட்ட தமிழ்த் தேசியவாதி பட்டம் சுயஜாதிப் பெருமைக்காக வழங்கப்பட்டது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

  மேற்படி புரிதல்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட ஜாதி வாக்குவங்கியை அறுவடை செய்துகொள்ள திமுகவும், பாமகவும் திட்டமிடுகின்றன என்பது தெளிவாகிறது. நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் ஜாதி வாக்குவங்கியை மையப்படுத்தியே அண்ணாயிசம் பேசும் அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளும், காந்தியம் பேசும் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன என்பதும் உண்மையாகிறது.

  இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்றாலும், எப்படியாவது வெற்றிபெற்றுத் தத்தமது கட்சி மதிப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது பெரியார், காமராசர் தோற்றங்களைப் புறந்தள்ளியுள்ளன.

  பெரியார் கொள்கைக் கோட்டையிலிருந்து வந்ததாகச் சொல்லும் மு.க. ஸ்டாலினும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் வாக்குவங்கிக்காக உள்ஒதுக்கீட்டைப் பற்றி பேசுகிறார். ஜாதி பார்த்து அரசுப் பதவிகள் வழங்கியதையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

  ஒருகாலத்தில் தொல். திருமாவளவன் அவர்களால் வாழும் அம்பேத்கர், வாழும் பெரியார், தமிழ்க்குடிதாங்கி என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட மருத்துவர் ச. இராமதாஸ் தமது சுயஜாதிக்காக மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தன் சுயஜாதி சாராத பிற 107 உட்ஜாதிப் பிரிவுகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததைத் துரோகம் என்கிறார்.

  சமூகநீதித் தலைவர்களாகப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் எப்போதும் தங்களது சுயஜாதிப் பற்றுகளோடு இடஒதுக்கீடு கொள்கையைக் கையாண்டதில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பு பிரிவுகளில் ஒன்றான மகர் பிரிவைச் சார்ந்த அமைப்புகள் மும்பையில் ஒரு மாநாடு நடத்தியபோது அதில் பங்கேற்ற அம்பேத்கர் அவர்கள், 'இனிமேல் இவ்வாறான சுயஜாதி மாநாடுகளைக் கூட்டாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களாக ஒதுக்கப்பட்டப்பட்டுள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணையுங்கள். என்னுடைய போராட்டம் என்பது அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது, தீண்டப்படாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டுள்ள அனைவருக்குமான உரிமைகளே எனது நோக்கமாகும்' என்பதைத் தெளிவுபடுத்தினார்.

  தான் சார்ந்த மகர் உட்ஜாதிப் பிரிவுக்கு மட்டும் இடஒதுக்கீடு கொண்டுவராமல், தீண்டப்படாதோர் என்று ஒதுக்கப்பட்டிருந்த அனைத்துப் பட்டியல் வகுப்பைச் சார்ந்த 1208 உட்ஜாதிப் பிரிவினருக்கும், பழங்குடி வகுப்பைச் சார்ந்த 705 உட்ஜாதிப் பிரிவினருக்கும் இடஒதுக்கீட்டை உறுதி செய்தார். எதிர்காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகவும், பாலின சமூகநீதி கிடைக்கப்பெற பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கப்பெறுவதற்கும், வறுமையில் உள்ளோர் உதவித் தொகை பெறுவதற்கும் சட்டத்தில் வாய்ப்புகள் வகுத்தார். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு கொள்கைக்காகவும், இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்காகவும் குரல் எழுப்பியபோது காங்கிரஸ் அரசாங்கம் நிராகரித்த சூழலில் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.

  அதேபோல் தனது பெயருக்குப் பக்கத்தில் சுயஜாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்தவர் தந்தை பெரியார். ஜாதிச் சங்கக் கூட்டங்களில் பங்கேற்றாலும்கூட ஜாதிச்சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று துணிச்சலாகப் பேசினார்.

  மேற்படி தலைவர்களின் முயற்சிகளினால், உட்ஜாதிப் பெயர்கள் மறைக்கப்பட்டு முதற்கட்டமாக இடஒதுக்கீடு பயனுக்காக தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.

  ஆனால் இனி, உட்ஜாதிப் பிரிவுகளுக்கான உள்ஒதுக்கீடு என்பது 20 சதவிகித இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 108 பங்குகளாகப் பிரிக்கப்படலாம், 30 சதவிகித இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோரில் 143 பங்குகளாகப் பிரிக்கப்படலாம், பட்டியல் வகுப்பு, பழங்குடியினர் மற்றும் குறிப்பிடப்படாத உட்ஜாதியினருக்காக 229 பங்குகளாகப் பிரிக்கப்படலாம்.

  இவ்வாறாக, தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டை 377 பங்குகளாகப் பிரித்துவிட்டுக் கூடுதலாக 10 சதவிகிதத்தை 8 பங்குகளாக முற்பட்டோருக்கு ஒதுக்கிவிடலாம். ஆக மொத்தம் தமிழ்நாட்டில் முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பட்டியல் வகுப்பு பழங்குடியினர் என்கிற தொகுப்புகள் ஒழித்தழிக்கப்பட்டு மீண்டும் 386 உட்ஜாதிப் பிரிவுகளின் அடையாளங்களுடன் சுயஜாதிப் பெருமைபேசிகளின் கூக்குரல்கள் ஒலிக்கப்பட வேண்டும். 386 ஜாதிச் சங்கங்கள் வளர்த்தெடுக்கப்பட்டு ஒன்றையொன்று முட்டிமோதி சண்டையிட்டுக்கொள்ள வேண்டும். இவைதான் தற்போதைய கட்சிகளின் ஆசை போல.

  தங்களது கட்சியின் அதிகாரப் பதவிகளில் பட்டியல் வகுப்பு பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்காமல் இருப்பதைப் பற்றி எந்தத் திராவிடக் கட்சிகளுக்கும், தேசியக் கட்சிகளுக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், புதிய கட்சிகளுக்கும் ஆர்வமில்லை. ஆனால் ஜாதி வாக்குவங்கிக்காக, தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள ஜாதியினருக்காக இவ்வாறான ஜாதி அரசியல் நடத்துவதற்காக வெட்கப்படவேயில்லை.

  இனி மீண்டும் ஜாதிமிராண்டிகளாகத் தமிழகம் உருமாற வேண்டுமா? இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஜாதி வாக்கு அறுவடை அரசியல் என்பதுதான் பெரியார் மண்ணா?

  மதவாதத்தைவிட ஜாதிவாதம் ஆபத்தானது. கடவுள் மறுப்பு என்பதே ஜாதிகளை ஒழிப்பதற்காகத்தான். இதையெல்லாம் பெரியார் சொன்னால் என்ன? அண்ணா சொன்னால் என்ன? தூக்கி குப்பையில் போட வேண்டியதுதான். நமக்குக் கொள்கை, கோட்பாடு, தமிழ், தத்துவம் எதுவும் தேவையில்லை. ஓட்டுக்குப் பணம், ஜாதி ஓட்டு இவை இரண்டும் இருந்தால் போதும். இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் பெரியார் சொல்வார்.. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.. என்று. ஆம். ஜாதி வாக்குவங்கிக்கான கட்டமைப்புதான் திராவிட, தேசிய, பாட்டாளிக்கட்சிகளின் மூலதனம்.

  - சி. சரவணன் (9360534055, senthamizhsaravanan@gmail.com)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai