தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறதா பேனர் கலாசாரம்?

அரசியல் கட்சிகள் மட்டும் பேனர் வைப்பதில்லை. இல்ல விழாக்களுக்காக சாலைகள் முழுவதையும் ஆக்ரமித்து பேனர்கள் வைக்கும் நாமும் இதனை புறக்கணிக்க முன்வரவேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குகிறதா பேனர் கலாசாரம்?

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்து, எதிரே வந்த லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

23 வயதே ஆன சுபஸ்ரீ சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை செய்து வந்தார். அவர் சாலை விபத்தில் உயிரிழந்திருந்தால் கூட அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தனை இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டிருக்காது.

மாறாக, ஒரு பேனரினால், அதிலும் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட பேனரினால் உயிரிழந்தது தான் அரசை விழித்து எழ வைத்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த விவகாரம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக, 'பொது இடங்களில் பேனர் வைப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது; பல இடங்களில் விபத்துகள் போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன' என்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தன; இருந்தும் வருகின்றன.

அரசியல் கட்சிகள், தங்களது கட்சிக் கூட்டங்கள், விழாக்களில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் தான் பேனர் வைக்க வேண்டும் என்றும் அனுமதி பெறாத இடங்களில் பேனர் வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பேனர் கலாசாரம் குறைந்தபாடில்லை. 

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பேனர் ஆளும் கட்சியின் பேனர் என்பதால் என்னவோ எதிர்கட்சிகளும் அடுக்கடுக்காக கண்டன அறிக்கைகளை வெளியிட்டன. பேனர் கலாசாரத்தில் ஊறித்திளைத்த அரசியல் கட்சிகள், வழக்கம்போல உயிரிழப்பு ஏற்பட்ட பின்னரே இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

இனி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கமாட்டோம் என்றும் பேனர் கலாசாரத்தை புறக்கணிப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளன. போட்டி போட்டுக் கொண்டு கட்சி விழாக்களில் பேனர் வைக்கும் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பேனர் கலாசாரத்தை புறக்கணிப்பதாக உத்தரவாதம் அளித்தது மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பு பேச்சளவில் மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிறது. 

சுபஸ்ரீ உயிரிழந்து ஒரு மாதமே ஆன நிலையில், தற்போது சீன அதிபர் வருகையையொட்டி சென்னையின் முக்கிய இடங்களில் பேனர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசே சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. தமிழகத்தில் பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், தமிழக அரசே பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளது பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 

இது தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 'நாட்டின் பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்க இடமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. பிரதமர் மற்றும் வெளிநாட்டு அதிபர்கள் வரும் போது பேனர்கள் வைத்து அவர்களை வரவேற்பது வழக்கமான நடவடிக்கை தான். எனவே, சென்னை விமான நிலையம் முதல் மீனம்பாக்கம் வரை பேனர் வைக்க அனுமதி வழங்க வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு இன்றி பேனர் வைக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளது. 

இதனை ஏற்று சென்னை உயர்நீதிமன்றமும் குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு இன்றியும், பாதுகாப்பாகவும் வைக்க அறிவுறுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் சுபஸ்ரீயின் தாயார், 'பிரதமரை பேனர் வைத்துதான் வரவேற்க வேண்டுமா? வேறு முறையில் வரவேற்க வழியில்லையா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்று மக்கள் பலரின் மனதிலும் கேள்வி எழும்பியிருக்கும் என்பது உண்மைதான். 

சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை பிற்பகல் சென்னைக்கு வருகிறார். அவர் கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்குகிறார். இதையொட்டி,  கிண்டி முதல் விமான நிலையம் வரை இந்திய - சீன பெருமையைப்  பறைசாற்றும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில்(நீதிமன்ற உத்தரவுப்படி) பேனர்கள் வைக்கப்பட இருக்கின்றன. 

உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது என்று கண்ட இடங்களில் எல்லாம் பேனர் வைக்காமல் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே பேனர் வைக்க வேண்டும். மேலும், காற்றில் பறக்காதவாறு, மிகவும் பாதுகாப்பான முறையில் சாலையில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இல்லாமல் பேனர் வைக்கப்பட வேண்டும். அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரு நாட்டுத் தலைவர்கள் வந்து சென்ற பிறகு, உடனடியாக பேனர்கள் அகற்றப்படவேண்டும் என்ற இந்த விதிமுறைகளையாவது அரசு பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோன்று நம் நாட்டின் பெருமைகளையும் முக்கியமாக சமீபத்தில் தமிழ் மொழியின் பெருமைகளையும் பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வரும் நிலையில், பேனர் கலாசாரத்திற்கு முடிவு கட்டும் விதமாக நாடு முழுவதுமே ஒரு சட்டத்தை கொண்டு வரலாம் அல்லது மாநில அரசு இதற்கு நிரந்தரத் தீர்வாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நீதிமன்றமும் பேனர் கலாசாரம் குறித்து தெளிவான, இறுதியான உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டும். அதேபோன்று அரசியல் கட்சிகளோ, செல்வாக்கு மிக்கவர்களோ என யார் விதிமுறைகளை மீறி பேனர் வைத்தாலும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பேனர் கலாசாரம் முற்றிலும் ஒழியும். 

அதேபோன்று மக்களாகிய நாமும் இதுகுறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மட்டும் பேனர் வைப்பதில்லை. இல்ல விழாக்களுக்காக சாலைகள் முழுவதையும் ஆக்ரமித்து பேனர்கள் வைக்கும் நாமும் இதனை புறக்கணிக்க முன்வர வேண்டும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், பேனர்கள் மூலமாகவே தங்களது செல்வாக்கு நிலைநிறுத்தப்படுவதாக நினைப்பது தவறு என்று உணர்வது  அவசியமாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com