சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் வரலாறு!

மேலைநாட்டு இசைக்கருவியைத் தன்னுடைய இரு விரல்களால், உதடுகளால் அடிமையாக்கி, உன்னத இசையை உள்ளம் உருக்கும்
சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்
சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சாக்ஸபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத். மேலைநாட்டு இசைக்கருவியைத் தன்னுடைய இரு விரல்களால், உதடுகளால் அடிமையாக்கி, உன்னத இசையை உள்ளம் உருக்கும் வகையில் அள்ளித்தந்த அற்புதக் கலைஞர். இந்தியாவில் சாக்ஸபோன் இசை என்றால், அனைவரின் மனதிலும் உடனே நினைவுக்கு வருபவர் கத்ரி கோபால்நாத். கேட்பவர்கள் மனதை மெய்மறக்கச் செய்யும் அளவிற்கு, ஒரு சிறந்த சாக்ஸபோன் சக்ரவர்த்தி. இதனால், இசைத்துறையில் இவர் ஆற்றிய தொன்மையான பங்களிப்பிற்காக, இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அரசால் ‘கலைமாமணி’ விருது’, ‘கர்நாடக கலாஸ்ரீ’, ‘சாக்ஸபோன் சாம்ராட், ‘கானகலா ஸ்ரீ’, ‘சங்கீத வாத்திய ரத்னா’, ‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ எனப் பல விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன், லண்டன் என வெளிநாடுகளிலும் தன்னுடைய சாக்ஸபோன் இசையை அரங்கேற்றியுள்ளார். மேலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப்பாடகரான செம்மங்குடி சீனிவாச ஐயரால் ‘மெய்யான கர்நாடக இசை மேதை’ எனப் பாராட்டப்பட்டவர். இத்தகை மாபெரும் சிறப்புபெற்றவர் பத்மஸ்ரீ கலைமாமணி கத்ரி கோபால்நாத். 

பிறப்பு: 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள், இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில், தந்தையார் தனியப்பா என்பவருக்கும், தாயார் கனகம்மாக்கும் மகனாகப் பிறந்தவர் கத்ரி கோபால்நாத். இவருடைய தந்தை ஒரு நாதஸ்வரக் கலைஞர் ஆவார்.

வாழ்க்கை: ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்ஸபோனை வாசித்தப்போது, அந்த இசையால் மிகவும் ஈர்க்கப்பட்ட இவர், அன்றிலிருந்து சாக்ஸபோன் இசையில் ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசைக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்ஸபோன் வாசிப்பை கற்கத் தொடங்கினார். பின்னர், சென்னையில் பிரபல மிருதங்க இசை மேதை டி. வி. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இசைப் பயிற்சி மேற்கொண்டார்.

இசைப் பயணம்: அவர் தன்னுடைய முதல் இசை நிகழ்ச்சியை செம்மை நினைவு அறக்கட்டளையில் முதன் முதலாக அரங்கேற்றினார். அதன் பிறகு, 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற “பாம்பே ஜாஸ் இசைவிழா” நிகழ்ச்சி, இவரின் இசை பயணத்தில் மாபெரும் திருப்புமுனையினை ஏற்படுத்தியது எனலாம். அந்த இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரபல கலிஃபோர்னியா ஜாஸ் இசைக் கலைஞர் ஜான் ஹன்டி என்பவர், இவருடைய சாக்ஸபோன் இசையில் மிகவும் ஈர்க்கப்பட்டது மட்டுமல்லாமல்,  இவருடன் இணைந்து இசை வழங்கவும் விரும்பினார். அதன் பிறகு, கர்நாடக இசையுடன் இணைந்து வழங்கப்பட்ட ஜாஸ் இசைக்கோர்வை, இசை நெஞ்சங்களை மிகவும் கவர்ந்தது.

1994 ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூயட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறையில் தன்னுடைய சாக்ஸபோன் இசையை அரங்கேற்றிய அவர், அத்திரைப்படத்தில் ‘கல்யாண வசந்தம்’ என்ற ராககத்தில் இவர் வாசித்த சாக்ஸபோன் இசை உலகப் புகழ்பெற்றது. இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களிலும் சாக்ஸபோன் இசை பயன்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல், பெரும்பான்மை இசை சாக்ஸபோனினை கொண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மன் என வெளிநாடுகளிலும், தன்னுடைய சாக்ஸபோன் இசையில் இந்தியப் பாரம்பரிய இசையைக் கொண்டு சேர்த்த இவருக்கு, பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, ஜெர்மனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த ‘அனைத்துலக செர்வாண்டினோ இசைவிழா’ போன்றவை மிகப் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

1994 ஆம் ஆண்டு லண்டன் பிபிசி நடத்திய ‘உல்லாசவீதி’ என்னும் இசை விழாவில், மனதை மயக்கும் தன்னுடைய சாக்ஸபோன் இசையை வழங்கி மேலும் சிறப்பு பெற்றார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கர்நாடக இசைக் கலைஞர் இவர் தான் என்பது மேலும் சிறப்பு.

இசைத் தொகுப்புகள்: அமெரிக்காவைச் சார்ந்த பிரபல சாக்ஸபோன் இசை கலைஞரான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் இணைந்து ‘கின்ஸ்மென்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார். பின்னர், அதே நாட்டை சேர்ந்த ஜாஸ் புல்லாங்குழல் இசைக் கலைஞரான ஜேம்ஸ் நியூட்டன் என்பவருடன் இணைந்து ‘சதர்ன் பிரதர்ஸ்’ என்னும் இசைத் தொகுப்பை வெளியிட்டார். 

இந்திய மேற்கத்திய இசைக் கலப்பினை பிரதிபலிக்கும் வகையில் ‘ஈஸ்ட்-வெஸ்ட்’ என்னும் ஒலி-ஒளி வழங்குதலையும், இந்தியாவில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப்படும், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற மேற்கத்திய செவ்விசை இசைக் கலைஞரான லுடுவிக்வான் பேத்தோவன் போன்றோரின் இசைப் பரிணாமங்களை உள்ளடக்கிய இசைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

விருதுகளும் மரியாதைகளும்:
* 1996 – ‘கர்நாடக கலாஸ்ரீ’,
* 1998 – ‘கர்நாடக ராஜ்யோட்சவா’ விருது.
* 2004 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
* 2004 – பெங்களூர் பல்கலைக்கழகத்தின் மூலம் ‘மதுப்புறு முனைவர்’ பட்டம்.
* தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது.
* ‘சாக்சஃபோன் சக்ரவர்த்தி’ மற்றும் ‘சாக்சஃபோன் சாம்ராட்’ விருது.
*  ‘கானகலா ஸ்ரீ’ மற்றும் ‘நாதபாசன பிரம்மா’ விருது.
*  ‘சுனதா பிரகாசிகா’ மற்றும் ‘சங்கீத வாத்திய ரத்னா’ விருது.
*  ‘நாத கலாரத்னா’ மற்றும் ‘நாத கலாநிதி’ விருது.
*  ‘ஆசுதான வித்வான்’ மூலம் ‘ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்’, ‘ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம்’, ‘ஸ்ரீ அஹோபில மடம்’ மற்றும் ‘ஸ்ரீ பிள்ளயபட்டி கோவில்’ விருது.
*  மெட்ராஸ் ரோட்டரி கழகத்தின் மூலம் ‘மேதகைமை விருது’ என பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.

அற்புதமானக் கலையை சாக்ஸபோன் என்னும் இசையில் ஜனரஞ்சகமாக்கி பல இசைக் கச்சேரிகளில் அதை அரங்கேற்றி, கோடானுகோடி ரசிகர்களை இசை என்னும் மழையில் நனையச் செய்தவர். கேட்பவர்களை சொக்கவைத்துவிடும் அளவிற்கு, இவரின் சாக்ஸபோன் இசை வெளிப்பாடு, மிக அற்புதமாக இருக்கும். சாக்ஸபோன் வாத்தியம் வாசிப்பதில் கத்ரி கோபால்நாத் அவர்கள், ஒரு ‘மகா கலைஞர்’ என்று சொன்னால் யாராலும் மறுக்க இயலாது. அவரது இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை எனக் கூறலாம்,

தினமணியின் கொண்டாட்டம் பகுதிக்கு கத்ரி கோபால்நாத் தனக்கு பிடித்த பத்து பற்றி கூறியது: 

குருநாதர்கள்: எனது குருநாதர்கள் மூன்று பேர். சிருங்கேரி என். கோபால கிருஷ்ணன். இவர் புல்லாங்குழல் வித்துவான். பாலகிருஷ்ண பிள்ளை. இவர் நாதஸ்வர வித்துவான். டி.வி.கோபாலகிருஷ்ணன். இவர் வாய்ப்பட்டு மற்றும் மிருதங்க வித்துவான். இவர் எனக்கு ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையை கற்றுக் கொடுத்தார். இவர்கள் மூன்று பேர்களும் எனக்கு தெய்வத்திற்கு சமமானவர்கள். இவர்கள் சொல்லிக் கொடுத்ததை 25 சதவிகிதம் சரியாக செய்தாலே நான் ஒரு வித்வானாக முடியும். 

ரசிகர்கள்: ரசிகர்களுக்காகவே கலைஞன் என்று நான் எப்பொழுதுமே சொல்வதுண்டு. எனக்கு விருப்பமான ஒன்று மேடைக் கச்சேரி. மேடையில் நான் உட்கார்ந்து வாசிக்கும்போது என்னை மறந்து நான் வாசிப்பேன் என்றாலும், பல சமயம் சிறு துண்டு காகிதம் என் பார்வைக்கு வரும். அதில் அவர்கள் விரும்பும் பாடல் அல்லது ராகத்தின் பெயர் எழுதி இருக்கும். முடிந்தவரை நான் அதை வாசித்து அந்த ரசிகரை சந்தோஷப் படுத்தாமல் இருந்ததில்லை. 
கிரிக்கெட்: விளையாட்டுக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது கிரிக்கெட் தான். எந்த நாட்டிற்கு போனாலும் தொலைக்காட்சி மூலம் அன்றைய விளையாட்டை ரசிக்காமல் விடமாட்டேன். அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர் கபில் தேவ். குறிப்பாக அவர் பந்து வீசுவதும், மட்டையினால் அவர் நான்கும், ஆறும் அடிப்பதை இன்றும் கூட பார்த்து ரசிக்கலாம். அதேபோன்று நமது ஸ்ரீகாந்த், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரியவர். இன்றைய ஆட்டக்காரரில் மகேந்திர சிங் தோனி மீது என் விருப்பம் அதிகமாகி விட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் என் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கிறார்கள்.

புண்ணிய ஷேத்ரங்கள்: ஆண்டவன் இந்த இசையை கொடுத்ததற்கு நான் அவருக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கச்சேரிக்கு நான் செல்லும் இடத்தின் பக்கத்தில், இங்கு என்ன கோயில் இருக்கிறது என்று கேட்காமல் இருப்பதில்லை. அதே போன்று திருப்பதி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய திருத்தலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் மாங்காட்டு காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்னையில் இருந்தால் வாரம் ஒருமுறையும் சென்று விடுவேன். 

பயிற்சி: என்னுடைய வாத்தியத்தை வாசிக்க அதிக உழைப்பும் சிரத்தையும் தேவை. அதிலும் இந்த வாத்தியத்தில் கர்நாடக இசையை வாசிக்க அதிகமாகவே பயிற்சியும், முயற்சியும் தேவை. நான் சென்னையில் இருக்கும் போதெல்லாம் காலையிலும், மாலையிலும் ஒரு மணிநேரத்திற்கு மேலே சாதகம் பண்ணாமல் இருக்க மாட்டேன். இந்தப் பயிற்சியில் எனக்கு தெரிந்த ராகங்களை மட்டும் இசைக்காமல், புதிதாக கற்றுக்கொள்ள வேண்டிய பாடல்களையும் இசைத்து பார்த்துக் கொள்வேன். முதலில் அது எனக்கு திருப்தியாக வரவேண்டும். பின்னர் அதை மக்களிடம் கொண்டு செல்ல நான் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

உதவி: இந்த இசை பல விஷயங்களை எனக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது. முடிந்தவரை அதை இல்லாத மக்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். மங்களூரில் இருந்து எங்களூருக்கு - கத்ரி - அருகில் உள்ள பேங்ரே (ஆங்ய்ஞ்ழ்ங்) என்ற இடம் மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் ஊர். அங்கு 125 வருடம் பழமையான ஒரு பள்ளி இருக்கிறது. அதை புதுப்பித்து மக்கள் உபயோகத்திற்கு அளித்துள்ளேன். குறிப்பாக அந்த பள்ளியின் கழிவறையை குழந்தைகள் உபயோகிக்கும் வகையில் மாற்றி கொடுத்துள்ளோம். நமது பாரதப் பிரதமர் எனக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் ஏழை எளியவர்களுக்கு கழிவறையை கட்டிக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். என் பெயருக்கு கடிதம் வந்தவுடன் நான் இன்னும் முயற்சி செய்து அதை அதிகமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளேன். 

இயக்குநர் கே.பாலச்சந்தர்: சென்னையில் நான் ஒரு கச்சேரி செய்துகொண்டிருந்தேன். முன் வரிசையில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் அவருடன் இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இருவரும் அமர்ந்திருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் "நாளைக்கு கார் அனுப்புகிறோம் ஆபீஸ் வரமுடியுமா?'' என்று கேட்டார்கள். நானும் சரி என்று கூறினேன். மறுநாள் ரஹ்மானின் ஸ்டூடியோ சென்றேன். எனக்கு பிடித்த ரகங்களை வாசிக்க சொன்னார் ரஹ்மான். நானும் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேல் வாசித்துக் காண்பித்தேன். "மறுநாளும் வரமுடியுமா'' என்றார். சென்றேன். முதல் நாள் நான் வாசித்ததை அழகாக எடிட் செய்து காண்பித்தார் ரஹ்மான். நான் அசந்து விட்டேன். "என்ன திறமை'' என்று வியந்து பாராட்டினேன். அதற்கு பிறகுதான் அவர்கள் தயாரிக்கும் "டூயட்' என்ற தமிழ் படத்தின் கதாநாயகன் சாக்ஸபோன் வாத்தியம் வசிப்பவர் என்று தெரிந்தது. பாலசந்தரின் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "டூயட்' எனக்கு மேலும் பெருமை சேர்த்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்: நான் அவரை ஒருமுறை சூரக்கோட்டையில் சந்தித்தேன். எனது இசையையும் வாசிக்கும் முறையையும் மிகவும் பாராட்டினார். அப்பொழுது நான் அவரிடம், "உங்கள் தில்லானா மோகனாம்பாள் பார்த்து பிரமித்தேன். எவ்வளவு தத்ரூபமாக நீங்கள் நடித்திருக்கிறீர்கள்' என்றேன். அதற்கு சிவாஜி கணேசன், "நான் நாதஸ்வர கலைஞர்களை வரவழைத்து, சுமார் மூன்று மணிநேரம் வாசிக்க வைத்து பார்த்த பின்னர் தான் நடித்தேன். ஆனால் நீங்கள் தோன்றும் ராகத்தை அனாயசமாக வாசிக்கிறீர்களே' என்று பாராட்டினார். நானும் அவரும் அன்று அரை நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தோம். அது மட்டும் அல்லாமல் நடிப்பிற்கே சிகரமானவரிடமிருந்து வரும் பாராட்டு என்னை மிகவும் சந்தோசப் படுத்தியது. 

நாட்டுப் பற்று: ஒவ்வொருவருக்கும் அது இருக்கவேண்டிய ஒன்று. கார்கில் போருக்காக இசை கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து எங்களால் முடித்த ஒரு தொகையை திரட்டிக் கொடுத்தோம். அது மட்டும் அல்லாமல் ஒரு இசைத் தட்டையும் உருவாக்கி அதன் மூலம் வரும் தொகையையும் அந்த போருக்காக நாங்கள் அளித்தோம். நமது அருமை ஜவான்கள் மழையிலும், பனியிலும், வெயிலிலும் நமது நாட்டை அல்லும் பகலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா? அவர்களது பணி மகத்தானது. போற்றுதலுக்கு உரியது. அவர்களை மகிழ்விக்க வேண்டும். 

படிப்பது: சரித்திரத்தை படிப்பதில் விருப்பம் அதிகம். அதிலும் குறிப்பாக சில்ப சாஸ்திரங்கள் பற்றி என்றால் விடமாட்டேன். நான் எந்த விமான நிலையத்திலும் அதிகம் இருப்பது அவர்களின் புத்தகக் கடையில்தான். தஞ்சை பெரிய கோயிலை பற்றியும் அதன் கோபுரத்தை பற்றியும் அதிகம் படித்து வியந்திருக்கிறேன். அதே போல் சில்ப சாஸ்திரங்கள் படித்தாலே நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு விவரமானவர்கள், ஆற்றல் மிகுந்தவர்கள் என்று நமக்கு தெரியும்.

சாக்ஸபோன் என்னும் இசையில் ஜனரஞ்சகமாக்கி பல இசைக் கச்சேரிகளில் அதை அரங்கேற்றி, கோடானுகோடி ரசிகர்களை இசை என்னும் மழையில் நனையச் செய்தவர். கேட்பவர்களை சொக்கவைத்த புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) நம்மிடம் இருந்து பிரிந்து இறைவனடி சேர்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com