தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது..! ஏன் தெரியுமா?

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், கண்டிப்பாக இன்று தமிழகத்தின் சிறப்புகள் என்ன? மாமல்லபுரம் எங்கு இருக்கிறது? என படித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. 
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம் இது..! ஏன் தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் இரண்டாம் முறைசாரா சந்திப்பு அக். 11 & 12 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதையொட்டி, சென்னை வந்த இரு நாட்டுத் தலைவர்களுக்குமே தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியமாக சீன அதிபரின் வருகையின்போது, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளுடன் கூடிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

சென்னை விமான நிலையத்திற்கு வந்ததுமே, 'சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்திருந்தார். மேலும், தமிழகம் வந்த சென்னை வந்த அதிபரை, 'அதிபர் ஷி ஜின்பிங் அவர்களே!, இந்தியாவிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்' என்று தமிழில் வரவேற்று ட்வீட் செய்திருந்தார். 

தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களின் முதற்கட்ட சந்திப்பு அக்.11ம் தேதி மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. முன்கூட்டியே வந்த பிரதமர் மோடி, பின்னர் வந்த சீன அதிபரை வரவேற்றார். இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில், பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை அணிந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முதற்கட்ட சந்திப்பிலேயே தமிழர்களின் சிற்பக் களஞ்சியமான மாமல்லபுரத்தின் சிற்பங்களை இரு நாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர். மாமல்லபுரத்தின் சிறப்புகளை பிரதமர் மோடியே சீன அதிபருக்கு விளக்கினார். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு சிற்பங்கள், வெண்ணை உருண்டைப் பாறை, ஐந்து ரதங்கள் என அனைத்து இடங்களிலுமே பிரதமர் மோடி, அவ்விடங்களின் முக்கியச் சிறப்புகள் குறித்து சீன அதிபருக்கு எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் மூலமாக மாமல்லபுரத்தின் முழு சிறப்புகளையும் மோடியும் அறிந்திருப்பார். 

பின்னர், இயற்கை உணவான இளநீரை இருவரும் அருந்தினர். பணியாளர் கொண்டு வந்த இளநீரை எடுத்து சீன அதிபருக்கு அளித்தார். மிகவும் எளிமையானதாகவும், அதே நேரத்தில் தமிழர்களின் விருந்தோம்பல் இதில் தென்பட்டதாகவே சிலர் பார்க்கின்றனர். அதன்பின்னரும், மாமல்லபுரம் குறித்தும், தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்தும் அவர் ட்வீட் செய்திருந்தது தமிழக மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதையடுத்து கடற்கரைக் கோவில் அருகே கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை கலாஷேத்ரா குழுவைச் சேர்ந்தவர்கள் இந்த கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதிலும் தமிழர்களின் பாரம்பரியமான பரத நாட்டியம் இடம்பெற்றது. தமிழ் பாடல்களும் இடம்பெற்ற நிகழ்வுகள் உணர்ச்சி மிக்கதாகவே இருந்தது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மிகவும் ரசித்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இரவு பிரதமர் மோடி, சீன அதிபருக்கு அளித்த விருந்தில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும் இடம்பெற்றன. 

இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள், கண்டிப்பாக இன்று தமிழகத்தின் சிறப்புகள் என்ன? மாமல்லபுரம் எங்கு இருக்கிறது? அதன் வரலாற்று சிறப்பம்சங்கள் என்ன? என கூகுளில் தேடிக்கொண்டிருக்கும்..

கி.பி.6ம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவான் சுவாங் காஞ்சி நகருக்கு வந்தார். அப்போதைய பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் அவரை வரவேற்று சிறப்பித்தார். அதன்பின்னர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1956ம் ஆண்டு சீன அதிபர் சூ என்லாய் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் இந்திய- சீனத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அதிலும், பண்டையக் காலத்தில் இருந்தே சீனர்களுக்கும், பல்லவர்களுக்கும் தொடர்பு இருந்து வரும் நிலையில், மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி- சீன அதிபரின் சந்திப்பும் வரலாற்றில் இடம்பெறும். தமிழகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது, தமிழர்களின் பெருமையையும், பாரம்பரியத்தையும் இவ்வுலகுக்கு மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்துள்ளது. 

மோடி - ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது மத்திய அரசா? அல்லது சீனாவா? என்று குழப்பங்கள் நீடித்து வருகிறது. இருந்தபோதிலும், சீனா ஒருவேளை இவ்விடத்தைத் தேர்வு செய்திருந்தாலும் மத்திய அரசு அதற்கு இசைந்திருக்கிறது. அதுபோன்று மத்திய அரசு தேர்வு செய்திருந்தாலும் சீனா அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்தியா என்றாலே தாஜ் மஹால் தான் முதல் சுற்றுலா இடம் என்று வெளிநாட்டினர்களுக்கு தெரிந்திருக்க, தென்கோடியில் புகழ்பெற்ற மாமல்லபுரம் இருக்கிறது என்று தெரியப்படுத்தியிருக்கிறது இந்த சந்திப்பு. தமிழர்களின் கட்டிடக்கலை, பாரம்பரியம் உலக நாடுகளுக்கு தெரிந்திருந்தாலும், இன்று உலக நாடுகளின் மூலை முடுக்கில் உள்ள மக்களுக்கு எல்லாம் சென்று சேர்ந்திருக்கிறது. உலகின் பழமைவாய்ந்த தமிழர்களின் நாகரிகம் உலகம் முழுவதும் இன்று நினைவு கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் மூலமாக தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும்.

சமீபகாலமாக தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் பேச்சளவில் முக்கியத்துவம் அளித்து வந்த பிரதமர் மோடி, தமிழகத்தில் இந்த சந்திப்பை நிகழ்த்தி, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பிற்காக தமிழக அரசும் கடுமையாக இறங்கி வேலை செய்துள்ளது.

அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்புகள், ஏற்பாடுகள் என தமிழக அரசு அதிகாரிகள் முதல் துப்புரவுப் பணியாளர்களின் அயராத உழைப்பும் இந்த சந்திப்பின் வெற்றியில் பங்கு கொண்டிருக்கிறது. தனது ஆட்சியில் தான் தமிழகத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் ஒரு சந்திப்பு நடைபெற்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com