சட்ட விதிமுறைகள் எல்லோருக்கும்தானே.. அரசு ஊழியர்கள் மட்டும் விதிவிலக்கா? நீதிமன்றம் கவனிக்குமா?

தொழிற்சங்கங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாலோ என்னவோ, அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் விதிமுறை மீறல்கள் அரசு அதிகாரிகளுக்கு கண்ணுக்கு புலப்படுவதில்லை.
MTC Bus
MTC Bus

24 மணி நேரமும் பரபரப்பான சாலைகள்; பல நேரங்களில் காதைக் கிழிக்கும் வாகனங்களின் சப்தங்கள்; ஒரு சில கிலோமீட்டருக்குள் ஏராளமான சிக்னல்கள்; சிக்னல்களில் ரன்னிங் ரேஸில் நிற்பது போன்று வாகனங்களின் அணிவகுப்புகள்..சென்னை பெருநகர சாலைப் போக்குவரத்தின் நிலை இதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை பெருகுவது போல சாலைகளில் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  சாதாரண மக்களுக்கு மட்டுமே சாலை(சட்ட) விதிமுறைகள் என்பது போலத் தான் அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் நடந்துகொள்கின்றனர் என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டாக மட்டுமே இருந்து வருகிறது. இதற்கானத் தீர்வுதான் என்ன?

சென்னை பெருநகரைப் பொறுத்தவரை உலகின் இரண்டாவது பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சென்னையில் 3,637 பேருந்துகள் இருப்பதாகவும், இவற்றில் 3,200 பேருந்துகள் இயக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு 2,000 பேருந்துகள் வந்து செல்வதாகவும், சமீபத்திய கணக்கெடுப்பின்படி, அதிகபட்சமாக 36 லட்சம் பேர் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதாகவும், மற்ற போக்குவரத்து வழிமுறைகளை விட சாலைப் போக்குவரத்து, அதாவது அரசுப் பேருந்துகளையே மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதும் கூடுதல் தகவல். 

சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த மக்களவைக் கூட்டத்தொடரின் போது திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் இந்தியா முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி, போக்குவரத்து விதிமுறைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் சென்றால் முன்னதாக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டப்படி, 10 மடங்கு அதிகமாக தற்போது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோன்று சாலைகளில் அதிக வேகத்தில் செல்வது, தவறான பாதையில் செல்வது, ஓட்டுநர் உரிமம் இல்லாததது உள்ளிட்டவைகளுக்கு கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. 

சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் அனைவருக்கும் பொருந்தும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த விதிமுறைகள் பொதுமக்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மாறாக, அரசுப் பேருந்துகள், அரசு அதிகாரிகளின் வாகனங்கள் இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே இருந்து வருகிறது. 

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவிக்கிறார். ஆனால், சாலைகளில் நிகழும் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஹெல்மெட் அணியாமல் வந்த ஒருவரிடம் அபராதம் வாங்கிவிட்டால் மட்டும் விபத்துகள் குறைந்துவிடுமா? இதில் அதிர்ச்சியான ஒரு தகவல் என்னவென்றால், சென்னையில் பெரும்பாலான சாலை விபத்துகள் அரசுப் பேருந்துகளினால் நிகழ்கின்றனவாம். 

இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது காலாவதியான பேருந்துகள். ஒரு பேருந்தை சுமார் 7 ஆண்டுகள் வரையிலோ அல்லது  6 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்க முடியும். இதற்குப் பின்னரும் உபயோகப்படுத்தப்படும் பேருந்துகள் காலாவதியான பேருந்துகள் என்ற கணக்கில் வரும்.

அதன்படி, சென்னையில் 56% காலாவதியான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் இந்திய அளவில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது என்றும் மத்தியப் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு தகவல் வெளியிட்டுள்ளது. சென்னையில் 2017ம் ஆண்டு 6,616 விபத்துகளும், 2018ம் ஆண்டு 6,928 விபத்துகளும் நடந்ததாகவும் தகவல்கள் உள்ளன. 

இரு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் அணியவில்லை என்றாலோ, அல்லது உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலோ  ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோன்று விதிமுறைகளை மீறும் அரசுப் பேருந்துகளின் மீதும் ஓட்டுநர்கள் மீதும் அரசு இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா?

இதற்கு முக்கியக் காரணம் அரசியல் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள். பெரும்பாலான அரசுப் பேருந்துகள் தொழிற்சங்கங்களின் மூலமாக இயங்குகின்றன. தொழிற்சங்கங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாலோ என்னவோ, அரசுப் பேருந்து ஓட்டுநர்களின் விதிமுறை மீறல்கள் அரசு அதிகாரிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

சென்னையில் பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு தேசிய விருதே கொடுக்கலாம். அந்த அளவுக்கு பல்வேறு இன்னல்களுக்கு இடையே தான் மக்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். பெரும்பாலான வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் வருவதில்லை. ஒரு சில வழித்தடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, மக்கள் பேருந்துகளில் பயணிக்கும் சூழ்நிலை நிலவுகிறது. சென்னையில் 'பீக் டைம்' என்று கூறப்படும் அலுவலக நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த நேரங்களில்தான் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

வார நாட்களை விட வார இறுதி நாட்களில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவது வழக்கமாக இருந்தாலும், அந்தப் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. மேலும், ஒரு சில நிறுத்தங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. சுமார் ஒரு மணி நேரம் அந்த வழித்தடத்தில் பேருந்துக்காக காத்திருந்த மக்களின் மனநிலையை சற்று நினைத்துப் பாருங்கள். அதேபோன்று பெரும்பாலான நடத்துனர்கள் பயணிகளிடம் சரியான முறையில் நடந்துகொள்வதில்லை. 

நடத்துனர் சில்லறை கேட்டு, பயணியிடம் இல்லை என்றால், எதோ தப்பு செய்துவிட்டதுபோலதான் அந்த இடத்தில் மக்களின்  ரியாக்ஷன் இருக்கும். ஒரு சிலர் நடத்துனரின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவதும் உண்டு. பேருந்துகளில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலும், சம்மந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் பெரிதாக நடவடிக்கை எதுவும் இல்லை என்பதே மக்களின் பதிலாக இருக்கிறது. 

மழைக்காலங்களில் பேருந்துகளின் தரம் எப்படி இருக்கிறது என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். முதலில் பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அரசு புதிய பேருந்துகளை வாங்கினாலும், பெரும்பாலாக பழைய பேருந்துகளும் புழக்கத்தில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.  

இதைவிட ஒரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அனைத்தும் உயர்த்தப்பட்டது. இதனால் சாதாரண வகுப்பு பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதோடு, சாதாரண வகுப்பு பேருந்துகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துள்ளது. சென்னையில், சாதாரணப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தாழ்தள சொகுசுப் பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்துகள் என பல வகைகள் உள்ளன. பேருந்துகளின் வகுப்புகளுக்கு ஏற்ப பயணக் கட்டணமும் வேறுபடும். குறைந்த கட்டணத்தில் இருப்பது வெள்ளைப் பலகை பேருந்துகள் தான் (குறைந்த பட்சக் கட்டணம் ரூ.5) இதன் தொடர்ச்சியாக, பச்சை, நீல நிறம், டீலக்ஸ், ஏ.சி என முறையே பயணக்கட்டணம் அதிகரிக்கும். 

இவற்றில் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில், வெள்ளைப் பலகை(white board) கொண்ட சாதாரண வகுப்பு பேருந்துகள் அதிகமாக இயக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக  சாதாரண வகுப்பு பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 60%க்கும் அதிகமாக வெள்ளைப் பலகை பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த கட்டண பேருந்துகளே இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், ரயில்களின் நேரத்திற்கேற்ப சென்னையின் முக்கியப் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். அவையும் இப்போது சரியான நேரத்தில் இயக்கப்படாததால் ரயில்களை தவறவிட்டு விடுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பிரபலங்கள், அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதிகளில் பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுவதும் மற்ற பகுதிகளில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதும் சாதாரணமாகி விட்டது. அனைத்து வசதிகளும் ஒரு சேர கிடைக்க வேண்டும் என்றால் பிரபலங்கள் வசிக்கும் பகுதிக்குத் தான் நாமும் குடியேற வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது.

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பெரிதாகச் சாலை விதிகளை மதிப்பது கிடையாது. அவர்கள் மோசமாகப் பேருந்துகளை இயக்கி வருவதாகப் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.  சில நேரங்களில் இரண்டு பேருந்துகள் போட்டிபோட்டுக் கொண்டு செல்லும்.

சாலை விதிகளை மீறிச் செல்லும் எத்தனையோ பேருந்துகளை போக்குவரத்துத் துறை காவலர்களும் பார்க்கத்தான் செய்கிறார்கள். சாலைகளில் மற்ற வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அவர்களை நிறுத்தி ஆவணங்களை சரிபார்க்கும் போக்குவரத்துக் காவலர்கள் அரசுப் பேருந்துகளின் விதிமுறை மீறல்களையும் கண்காணிக்க வேண்டும். 

சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்; இரு சக்கர வாகனத்தில் வாகன ஓட்டிக்கு பின்னால் இருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நீதிமன்றம் மக்களின் பாதுகாப்பு கருதி அரசுப் பேருந்துகள், அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் குறித்த மேற்குறிப்பிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் கொண்டு கேள்வி எழுப்ப வேண்டும். அரசுக்கு மேலாகவும் நீதித்துறைக்கென்று தனி அதிகாரம் இருக்கிறது. மக்களின் நலனை காக்கும் அரசுகள் மாறிக்கொண்டே இருக்கலாம். ஆனால், மத்தியிலோ, மாநிலத்திலோ எந்த அரசு அமைந்தாலும், அந்த அரசே தவறு செய்யும் பட்சத்தில் அதனைத் தட்டி கேட்பது நீதித்துறையாக மட்டுமே இருக்க முடியும். 

அரசுப் பேருந்துகள் மீதான மக்களின் இந்த புலம்பல் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளுமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com