உலக உணவு தினம் ஸ்பெஷல்: வெறும் 5 பைசாவுக்கு பிரியாணி.. சென்னையில்தாங்க!

உலக உணவு தினத்தை முன்னிட்டு சென்னை தொப்பி வாப்பா பிரியாணிக் கடை மற்றும் திண்டுக்கல் முஜிப் பிரியாணிக் கடைகளில் வெறும் 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
5 பைசாவுக்கு பிரியாணி
5 பைசாவுக்கு பிரியாணி


உலக உணவு தினத்தை முன்னிட்டு சென்னை தொப்பி வாப்பா பிரியாணிக் கடை மற்றும் திண்டுக்கல் முஜிப் பிரியாணிக் கடைகளில் வெறும் 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.

வெறும் ஐந்து பைசாவுக்கு எப்படிங்க பிரியாணி கொடுக்க முடியும் என்று கேட்பதை விட, அட எப்படிங்க நாம இப்போ ஒரு 5 பைசாவைக் கொடுக்க முடியும் என்று மாற்றி யோசித்துப் பாருங்கள், இதன் சூட்சுமம் புரியும்.

உலக உணவு தினத்தை சில உணவு நிறுவனங்கள் தங்களது விளம்பரத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால் நல்ல நோக்கத்தோடு அதே சமயம் மாற்றி யோசிக்கும்  உணவகங்களில் தொப்பி வாப்பா பிரியாணிக் கடையும் ஒன்று.

தொப்பி வாப்பா பிரியாணிக்கடை. மடிப்பாக்கம், வேளச்சேரி என சென்னையின் பல இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த பிரியாணிக் கடை, உலக உணவு தினத்தை முன்னிட்டு வித்தியாசமான ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. பலருக்கும் இது வியப்பை ஏற்படுத்தினாலும், அதில் ஏதேனும் சூட்சுமம் இருக்கும் என்று மட்டும் சிலருக்கு புரிந்திருக்கும்.

அதாவது, பழைய ஐந்து பைசா நாணயத்தைக் கொண்டு வந்து தந்தால், ஒரு பிரியாணி வழங்கப்படும் என்பது தான் அந்த ஸ்பெஷல் ஆஃபர்.

அசைவ உணவுப் பிரியர்கள் எல்லோருக்குமே பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தான். அதிகாலை இரண்டு, மூன்று மணிக்குக்கூட பிரியாணி சாப்பிடும் பிரியர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படிப்பட்ட பிரியாணி பிரியர்களின் ஆசையை தீர்த்து வைக்கும் வகையில் உணவு தினத்தில் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தொப்பி வாப்பா பிரியாணிக்கடையினர்.

சென்னையில் உள்ள எந்த கிளையிலும் இந்த ஆஃபரில் பிரியாணி வாங்கிச் செல்லலாம். ஆனால் நபர் ஒன்றுக்கு ஒரு ஐந்து பைசாவுக்கு ஒரு பிரியாணி தான் தரப்படுமாம். ஆனாலும் இவர்களது இந்த முயற்சிக்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியூர்களில் இருந்துகூட சிலர் தொலைபேசியில் அழைக்கிறார்களாம். இப்போது ஐந்து பைசா நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனாலும் பல வீடுகளில் ஞாபகார்த்தமாக அதனை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். அவற்றை குடும்பமாகத் தேடி எடுக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்கிறார்கள் தொப்பி வாப்பா கடையினர். 

இதன்மூலம் குடும்ப உறுப்பினர்களுக்குள் ஒரு தேடல் உருவாகும் என்பது தான் அவர்களது எண்ணமாம். இதுபோன்று வித்தியாசமாக விளம்பரம் செய்வது தொப்பி வாப்பா பிரியாணிக் கடைக்கு இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியபோது, பிரியாணி வாங்கினால் ஒரு கேன் தண்ணீர் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அதற்கு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

முஜிப் பிரியாணிக் கடை
இதேபோல் திண்டுக்கல்லில் இயங்கி வரும் முஜிப் பிரியாணிக் கடையும் மக்களுக்கு உணவு தினத்தை முன்னிட்டு ஒரு ஆஃபர் வழங்கியுள்ளது. இங்கும் பழைய ஐந்து பைசா நாணயத்தைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு, ஒரு சிக்கன் பிரியாணி வாங்கிச் செல்லலாம்.

உங்களிடம் பழைய ஐந்து பைசா இருந்து, அதை கொடுக்க மனமும் இருந்தால் இன்று உங்களுக்கு பிரியாணி விருந்துதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com