ஒரு மனிதன் தனது சுயலாபத்திற்காக இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவது என்ன நியாயம்?

ஒரு மனிதன் தனது சுயலாபத்திற்காக இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவது மனித உரிமை மீறல் மற்றும் தண்டனைக்குரிய குற்றம்
ஒரு மனிதன் தனது சுயலாபத்திற்காக இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவது என்ன நியாயம்?

ஒரு மனிதன் தனது சுயலாபத்திற்காக இன்னொரு மனிதனை அடிமைப்படுத்துவது மனித உரிமை மீறல் மற்றும் தண்டனைக்குரிய குற்றம் என இந்திய அரசியல் சட்டம் மிகத் தெளிவாக கூறியுள்ளது. கொத்தடிமை முறை என்பது ஒரு குறிப்பிட்ட சாதியிலோ, இனத்திலோ, மதத்திலோ என இல்லாமல் தமிழ் நாட்டில் பரவலாக வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகிறது.

ஏழை கூலி தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்களுடைய அறியாமையின் பொருட்டு கொத்தடிமை முறையில் சிக்கிக் கொண்டு பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அடிமைகள் என்றும் நிரந்தர வேலைக்காரர்கள் என்றும் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல கொத்தடிமை முறை பெயர் மாற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் ஜமீன்தாரி முறை ஒழிப்பு, நில சீர்திருத்தங்கள், நிலக்கொடை ஆகியவை தடை செய்யப்பட்ட பின் கொத்தடிமை முறையை இந்திய அரசு கண்டுபிடித்து, கொத்தடிமை முறை ஒழிப்பிற்கான  சட்டத்தை 1976-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் கொத்தடிமை முறைக்கு எதிரான பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்தது மத்திய மற்றும் மாநில அரசாங்கம். அரசு மற்றும் சமூக நல இயக்கங்கள் மூலமாக பல தொழில் மையங்களில் கொத்தடிமை முறை ஒழிப்பிற்கான  சோதனை செய்யப்பட்டு பல ஆயிரக்கணக்கான கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

நம்  நாட்டில் கொத்தடிமை முறை சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் பல வருட காலமாக இன்றும் கொத்தடிமை முறை நடைமுறையில் தான் உள்ளது. இந்த கொத்தடிமை முறை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றால் மக்களுக்கு போதுமான கொத்தடிமை முறை குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் பல சமூக சேவை நிறுவனங்களுடன் சேர்ந்து மேடை நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். அது மட்டுமின்றி துறைசார்ந்த அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள், கொத்தடிமை தொழிலாளர்களை எப்படி அடையாளம் காண்பது என்றும் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் கொத்தடிமை முறையில் இருந்து எப்படி மீட்பது போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கொத்தடிமை முறையில் முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் நடுவில் இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலாளர்களுக்கு வாங்கிக் கொடுத்து அவர்களை அடிமையாகிறார்கள். அவர்களும் எவ்வளவு சம்பளம் போன்றவை பெரிதாக அறியாத சூழ்நிலையில் முதலாளி அவர்களுக்கு முறையான கூலி கொடுப்பது இல்லை, மேலும் அவர்களிடத்தில் நீண்ட நேரம் வேலை வாங்கி பல கொடுமைகளுக்கு ஆளாக்குகிறார்கள்.

நம்மால் நாம் நினைத்த இடத்திற்கு சுதந்திரமாக செல்ல முடியும்; நினைத்த இடத்தில் வேலை செய்ய முடியும் ஆனால் கொத்தடிமை தொழிலாளர்களால் அவர்கள் விரும்பிய இடத்திற்கு வேலைக்கு செல்ல இயலாது இதற்கு காரணம் அவர்களை முதலாளிகள் அடிமையாக வைத்திருப்பதுதான். கொத்தடிமை முறையில் இருந்து வெளியுலகில் ஒரு பறவையாக பறக்க வைப்பது இந்தநாட்டு மக்களாகிய நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

கொத்தடிமைத் தனத்தை ஒழிக்க அரசு பல முயற்சிகள் எடுத்தாலும் அதில் நமது பங்களிப்பும் இல்லையென்றால் அரசால் ஒன்றும் செய்ய இயலாது. அரசு முடிந்த வரை கூலி தொழிலாளி வேலை செய்யும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், கொத்தடிமை முறையை நடைமுறைப்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர்தல் இக்குற்றத்தைக்குறைக்கும் என நினைக்கிறேன்.

மனித உரிமை ஆணையங்கள், சமூக அமைப்புகள், துறைசார்ந்த அரசு அதிகாரிகள், நீதி துறை போன்ற அனைவரும் ஒன்று குடினால்தான் இந்த கொடிய குற்றத்தை ஒழிக்க முடியும். மேலும் இக்கொடிய குற்றத்தை புரியும் முதலாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் அது கொத்தடிமை ஒழிப்பிற்கு மிகவும் உறுதுணையாக அமையும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com