சுடச்சுட

  
  theater-performance-on-bonded-labour

   

  தமிழகத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் சிறார்களைக் கொத்தடிமைகளாகப் பணி அமர்த்துவது அதிகரித்து வருகிறது. கால்நடைப் பண்ணையாளர்களும் விவசாயிகளும் தங்களது தொழிலை விருத்தி செய்ய அறியாமை மற்றும் ஏழ்மையில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த சிறுவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

  அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமண்டபத்தைச் சேர்ந்த கண்ணன்- சாந்தி மற்றும் ராமச்சந்திரன் லட்சுமி தம்பதியர்கள் தங்களது ஐந்து மகன்களையும் ஆடு மேய்க்கும் வேலைக்கு அனுப்பியுள்ளனர். இவ்வாறு தங்களது குழந்தைப் பருவத்தை, கல்வி, குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை இழந்து தனிமையில் வாழ்ந்த அச்சிறுவர்கள் தற்போது இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ மிகவும் சிரமப்படுகின்றனர்.

  மாரி, கன்னியப்பன், திருப்பதி, சின்னராசு மற்றும் யுவராஜ் ஆகிய ஐந்து சிறுவர்களையும் 2014ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்ற முதலாளியிடம் ரூபாய் 13000 முன்பணமாகப் பெற்றுக்கொண்டு அவர்களை வேலைக்கு அனுப்பியுள்ளனர் அவர்களது பெற்றோர். அப்போது அவர்களில் மூத்தவனுக்கு பதினாறு வயதும் குறைந்தபட்சமாக ஆறு வயது உடைய சிறுவனும் இருந்தனர்.

  அடுத்த ஐந்து ஆண்டுகள் அச்சிறுவர்கள் முதலாளியின் 600 ஆடுகளையும் பத்து மாடுகளையும் மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகள் மேய்க்கக் கிராமம் விட்டு கிராமமாகச் சென்று மேய்ச்சல் நிலங்களில் தங்கி தற்காலிகமாக போடப்பட்ட குடிலில் இரவு உணவினை சமைத்து வெட்ட வெளியிலேயே தூங்கியுள்ளனர்.

  கால்நடை மேய்க்கும் தொழில்

  தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகமான மேய்ச்சல் நிலங்கள் இருப்பதால் விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி மேய்க்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக விழுப்புரம், வேலூர், தர்மபுரி, விருதுநகர், சேலம், புதுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை, சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இத்தொழில் பிரதானமாக நடைபெறுகிறது.

  கிராமங்களிலுள்ள சிறார்களை வேலைக்கு அமர்த்தி சுமார் 50லிருந்து 1000 ஆடுகள் வரை மேய்க்கச் செய்கின்றனர். ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்திலிருந்து ஆறு பேர் வரை ஒரு குழுவாக அப்பணியில் ஈடுபடுகின்றனர்.

  தினமும் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை அச்சிறுவர்கள் வேலை செய்ய வேண்டும். ஆடுகளை எவ்வித விலங்குகள் மற்றும் பூச்சிகள் கடிக்காமலும் எங்கும் தொலைந்து போகாமலும் அவற்றைப் புல் வெளிகளில் மேய்த்துப் பாதுகாக்க வேண்டும்.

  ஆடு ஒன்று தொலைந்து போனாலும் அது கண்டுபிடிக்கப்படும் வரை அவளுக்கான இரவு உணவு வழங்கப்படாது. மேலும் ஆடுகளுக்கு நோய் ஏற்பட்டாலும் அதனை இவர்களே பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு இரவும் தற்காலிகமாகப் பட்டி அமைத்து ஆடுகள் வெளியே செல்லாதவாறு, மற்ற விலங்குகள் தாக்க முடியாதவாறு பாதுகாக்க அவற்றின் அருகிலேயே தூங்க வேண்டும். ஆடுகள் திருடு போகாமல் இருக்கச் சுழற்சி முறையில் கண்விழித்துப் பாதுகாக்க வேண்டும்.

  அந்த ஐந்து சிறுவர்களில் யாருக்காவது உடல் நலம் சரியில்லாமல் போனால் முதலாளி சில மாத்திரைகளை மட்டும் வாங்கி கொடுப்பார். ஒருபோதும் அவர்களை முறையாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில்லை. கடும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் மரத்தின் அடியிலோ அல்லது யாரோ ஒருவரின் கொட்டகையினுள் ஒதுங்க நேரும். குளிரான இரவுப் பொழுதுகளில் அவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வந்த போர்வைகள் மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு. உடுத்திக் கொள்ள இரண்டு மாற்றுத் துணிகளை வைத்திருந்த அவர்கள் செருப்புகள் தேய்ந்து போனாலும் புதிதாக எதையும் வாங்க முடிந்ததில்லை.

  எப்பொழுதாவது அவர்களுக்கான இரவு உணவினை முதலாளி சமைத்துத் தருவார். பெரும்பாலான சமயங்களில் அச்சிறுவர்களே தான் சுழற்சிமுறையில் சமைக்க வேண்டும். இரவு ஒரு வேளை மட்டுமே உணவைச் சமைத்து உண்டு அவற்றில் மீதமாகும் சோற்றைக் காலையில் கஞ்சியாகக் குடித்து விட்டு வேலையைச் செய்துள்ளனர். ஆடுகள் வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்குச் செல்வதாக இருந்தால் முதலாளி ஒரு சரக்கு வாகனத்தை கொண்டு வந்து அதில் ஆடுகளையும் அவர்களின் உடைமைகளையும் ஏற்றிக் கொண்டு செல்வார். அவர்களும் ஆடுகளைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும்.

  ஆடு மேய்க்கும் தொழிலில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அது ஆடுமேய்க்கும் சிறுவர்களைத் தவிர்த்து அதில் ஈடுபடும் அனைவருமே பயன் பெறுவார்கள். முதலில் பெற்றோர் வாங்கிய முன்பணத்திற்காகச் சிறுவர்கள் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பல ஆண்டுகள் ஆனாலும் அவர்களுக்கான கூலி என்பது பெற்றோர் வாங்கிய முன்பணம் மட்டுமே என்பதால் முதலாளி அதிக லாபம் அடைகிறார். ஆடு மேய்ச்சலுக்காக நிலத்தை விவசாயிகளிடம் கேட்டு பெரும் முதலாளி அவர்களுக்கு இவர்  எதுவும் தருவதில்லை. ஏனெனில் ஆட்டின் சானம் அதிக வளம் உள்ள ஒரு இயற்கை உரம். மேலும் ஆட்டின் சாணத்தை அதிக விலைக்கு மற்ற விவசாயிகளும் வாங்கிச் செல்கின்றனர். ஆடுகள் குட்டி ஈன்றால் அது ஆண் குட்டி எனில் விற்பனைக்கும் பெண்குட்டி என்றால் அதனை இனவிருத்திக்காக மந்தையிலே வைத்திருக்கின்றனர்.

  இரு ஆண்டுகளுக்கு முன்பு மாரியின் பெற்றோர் மாரியை அழைத்து அவருக்குத் திருமணம் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர். முதலாளி திருமணத்திற்குச் சென்று வர மாரிக்கு அனுமதி தந்தார். திருமணமாகி இரண்டு நாட்களே ஆன நிலையில் முதலாளி அவர் வீட்டிற்குச் சென்று மாரியை மேய்ச்சல் வேலைக்கு அழைத்து வந்துவிட்டார். கன்னியப்பனுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. மூன்று வாரங்கள் கழித்து அவரையும் வேலைக்கு அழைத்து வந்துவிட்டார் முதலாளி. திருமணம் முடிந்த இவ்விரு சகோதரர்களுக்குமே தங்களது மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் அமையவில்லை.

  முதலாளிக்கு தங்களது சொந்த கிராமம் மற்றும் இருப்பிடம் தெரியுமென்பதால் மாரியும் கன்னியப்பனும் தப்பித்து செல்ல ஒருபோதும் முயன்றதில்லை.

  சிறுவர்களைச் சொந்த கிராமத்திலிருந்து வெகு தொலைவான இடத்திற்கு அழைத்து வந்த முதலாளி அவர்கள் வேறு யாருக்காகவும் மற்ற வேலைகளைச் செய்ய அனுமதிக்கவில்லை.

  கன்னியப்பன் கூறும்போது, 'மழைக்காலத்தின் போது ஆடுகளை மேய்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். எங்குப் பார்த்தாலும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் ஆடுகள் மேயாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இரவில் மழை பெய்தால் படுக்க இடம் இல்லாமல் வயல் வரப்புகளில் அமர்ந்து கொண்டு இருப்போம். குளிக்க வேண்டுமானால் எங்காவது மோட்டார் பம்ப் அல்லது தேங்கிய குட்டையில் கிடைக்கும் மழைநீரில் தான் குளிப்பேன்" என்றார்.

  முதலாளிக்குத் தெரியாமல் ஒரு சிம் கார்டை வாங்கி தங்களது பெற்றோருடன் பேசி வந்துள்ளனர் அச்சிறுவர்கள். அவர்கள் படும் துன்பத்தைப்  பகிர்ந்து கொள்ளவே, பெற்றோர்கள் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இச்செய்தியை நாகை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது அந்த தொண்டு நிறுவனம். கடந்த 2019, ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று அச்சிறுவர்கள் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் அந்த ஐந்து சிறுவர்களுக்கும் அவர்களது மீதான கடன்கள் ரத்து செய்யப்பட்டதற்கான விடுதலை சான்றிதழ்களை வழங்கியது. இது அவர்களுக்கு ஒரு சுதந்திரமான புது வாழ்க்கையை அமைத்துத் தந்துள்ளது. தற்போது மூத்த சகோதரர்கள் தினக்கூலிகளாக மரம் வெட்டும் வேலைக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் பள்ளியில் சேர தயாராகவும்  மறுவாழ்வு திட்டங்களுக்காகவும் காத்திருக்கின்றனர்.

  உரிய நேரத்தில் வழங்கப்படும் மறுவாழ்வு, கல்வி, நிலையான உதவி ஆகியவற்றால் இனிவரும் காலத்தில் அவர்கள் சுதந்திரமாக இருக்க உதவும். இன்று கன்னியப்பன் பேசும்போது 'என் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அவசரத்தில் எடுத்த முடிவால் நானும் எனது சகோதரர்களும் பல ஆண்டுகள் அடிமைபட்டு கஷ்டப்படுவோம் என்று எனக்குத் தெரியாது. இன்று நான் என்ன நினைக்கிறேனோ அதைச் செய்கிறேன் என் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai