அணையின் மதகுகள் உடைப்பு: ஒதுக்கிய நிதியை என்ன செய்தது நீர்வள ஆதாரத் துறை?

பருவ மழை தொடங்கி, ஆற்றில் தண்ணீர் வரும் நேரத்தில் மிக முக்கிய அணையின் மதகுகள் உடைவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.நீர்வள ஆதார அமைப்பு
அணையின் மதகுகள் உடைப்பு: ஒதுக்கிய நிதியை என்ன செய்தது நீர்வள ஆதாரத் துறை?


பருவ மழை தொடங்கி, ஆற்றில் தண்ணீர் வரும் நேரத்தில் மிக முக்கிய அணையின் மதகுகள் உடைவது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.
நீர்வள ஆதார அமைப்பு

நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 82 அணைகள் /நீர்தேக்கங்கள் உள்ளன. 

தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் 38 அணைகளில்/நீர்தேக்கங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், நீர்தேக்கங்களை வந்தடைகிறது. இந்த அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் கீழ் கால்வாய் அமைப்புகள் மற்றும் ஏரிகள் உள்ளன. நமது மாநிலத்தில் மொத்தமுள்ள 39,202 ஏரிகளில் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மாநிலத்தின் நிகர பாசனப் பரப்பு 2008-09 ஆண்டில் 29.31 இலட்சம் எக்டேராகும். இதில் 7.66 இலட்சம் எக்டேர் கால்வாய்கள் மூலமும், 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலமும் 16.14 இலட்சம் எக்டேர் திறந்த வெளி மற்றும் குழாய்க் கிணறுகள் மூலமும் மீதமுள்ள 0.11 இலட்சம் எக்டேர் இதர ஆதாரங்கள் வாயிலாகவும் பாசனம் பெறுகின்றன. மாநிலத்தின் மொத்த பாசனப் பரப்பு சுமார் 39.33 இலட்சம் எக்டேராகும்.

இத்துறையின் முக்கிய பணிகள்

  • பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிப்பது
  • புதிய கூடுதல் திட்டங்கள், கட்டுமானங்களை உருவாக்கவும், பாசன ஆதாரங்களை மேம்படுத்துவது
  • நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்துவது
  • சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து, ஆய்வு செய்து, உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன்மூலம் அரசின் கொள்கைகள், உறுதிமொழிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவது
  • கட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீர்நிலையியல் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வது
  • நில நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலிப்பது.

தொடர்ச்சியான ஷட்டர் உடைப்புகள்
குடகனாறு அணை ஷட்டர்கள் ஏற்கனவே பல முறை உடைந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறுவது வாடிக்கையாகியுள்ளது. அணை மீண்டும் உடையும் அபாயம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. 27 அடி கொள்ளளவு உள்ள இந்த அணை, 1973ல் கட்டப்பட்டு திறக்கும் முன்பே 1977ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் உடைந்தது. இரண்டாவது முறையாக 2007ல் அணை நிரம்பிய நிலையில், முதல் ஷட்டர் உடைந்ததால் நீர் முழுவதும் வெளியேறியது. அதன்பின், மூன்றாவது ஷட்டரில் ஏற்பட்டுள்ள கசிவை அடைக்க முடியாததால், தண்ணீர் தொடர்ந்து வெளியேறியது. 

1988ல், முதன்முதலில், காவிரியின் குறுக்கே, செக்கானுார் கதவணை கட்டப்பட்டது. தலா, 7 மீட்டர் உயரம், 50 டன் எடையுள்ள, 18 ஷட்டர்கள் போட்டு, காவிரியாற்றில், 0.45 டி.எம்.சி., நீரை தேக்கும் அளவிற்கு, கதவணை அமைக்கப்பட்டது. ஜூன் , 2015 இல், 'ஷட்டர்' உடைந்ததில், காவிரியில் தேக்கி வைத்திருந்த, ஒட்டுமொத்த தண்ணீரும் வெளியேறியதால், மின் உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து, 10 கி.மீ., துாரத்திலுள்ள செக்கானுாரில், காவிரி குறுக்கே, 30 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கதவணை மின்நிலையம் உள்ளது. இதுபோல், மேட்டூர் முதல், கரூர் வரை, காவிரி ஆற்றின் குறுக்கே, ஏழு கதவணை மின் நிலையங்கள் உள்ளன. செக்கானூர் கதவணையில் உள்ள ஷட்டர்களில், 10 நாட்களுக்கு முன் தான், பராமரிப்பு பணி நடந்தது. இதையடுத்து, காவிரியில் தண்ணீர் தேக்கி, கடந்த சில நாட்களாக, 4 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 

ஒட்டுமொத்தமாக... அதிகாலை, 3:00 மணிக்கு, மூன்றாவது ஷட்டர் உடைந்து விழுந்ததில், தேக்கி வைத்திருந்த, 0.30 டி.எம்.சி., தண்ணீரும், ஒட்டுமொத்தமாக வெளியேறியது.

கிருஷ்ணகிரி அணை ஷட்டர் உடைப்பு
கே.ஆர்.பி. எனப்படும் கிருஷ்ணகிரி அணை, துடுகனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால், கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணையின் முதலாவது ஷட்டரில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.

கொள்ளிடம் ஷட்டர் உடைப்பு
கடந்த ஆகஸ்ட், 2018 இல்  தஞ்சை மாவட்டம் கீழணை வழியாக கடலூர் மாவட்டம் கடைமடை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கொள்ளிடம் வழியாக நாகை மாவட்டம் கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் தண்ணீர் கலக்கிறது. ஆனால், முகத்துவாரம் தூர்ந்துபோயுள்ளதால் தண்ணீர் கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் தண்ணீர்  பழைய கொள்ளிடம் ஆற்றில் நிரம்பியது. இந்தநிலையில், நேற்று மாலை கொள்ளிடம் வழியாக சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. கொள்ளிடம் ஆறு வல்லம்படுகை ரயில்வே கேட்டு அருகே உள்ள ஒரு ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டது.

மூலத்தர தடுப்பணை ஷட்டர் உடைப்பு
தமிழக எல்லையில் கோபாலபுரம் அருகே உள்ள மூலத்தர தடுப்பணை வழியாக கேரளவுக்கு செல்கிறது. ஆழியாற்றில் 20,000 கனஅடிக்கு தண்ணீர் செல்வதால், மூலத்தர அணையின் இருப்பக்கத்திலும் நேற்று உடைப்பு ஏற்பட்டது.


ஊராட்சிக்கோட்டை கதவணை ஷட்டர் உடைந்தது
நேற்று 04-09-2019 ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிக்கோட்டை கதவணை நீர் மின்நிலையத்தில் வலுவிழந்து இருந்த இரும்பு ஷட்டர் உடைந்ததால் 1.5 டிஎம்சி தண்ணீர் வீணாக வெளியேறியது. காவிரி ஆற்றில் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, குதிரைகல்மேடு, ஊராட்சிக்கோட்டை, சமயசங்கிலி, வெண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கதவணை நீர் மின் நிலையங்கள் உள்ளன. இங்கு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டையில் கடந்த 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கதவணை நீர்மின் நிலையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் இரும்பினாலான 17 வது ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, வலுவிழந்து காணப்பட்ட இந்த ஷட்டர் உடைந்ததால் தண்ணீர் வெளியேறியது. ஆற்று வெள்ளத்தின் வேகத்தில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு ஷட்டர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து நீர் மின் நிலைய ஊழியர்கள் அபாயச் சங்கை ஒலித்து எச்சரிக்கை விடுத்தனர். ஷட்டர் உடைந்ததால் தேக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டிஎம்சி தண்ணீரும் வெளியேறியது. சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள் பிற ஷட்டர்களை திறந்து விட்டு நீரின் அழுத்தத்தை குறைத்தனர்.
 


பராமரிப்பு இன்மை
வனத்துறையின் மூலம் சுற்றுலாத்தலமாகவும் பல அணைகள் மாற்றப்பட்டது. இதன் பிறகு பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளும் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் அணை பராமரிப்பு, கால்வாய்கள் தூர்வாருதல் ஆகியவற்றிக்கு வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டியிருப்பதால் பராமரிப்பு பணிகள் தாமதமாகப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த அணையில் ஷட்டர்கள் பராமரிக்கப்படுவதில்லை. நீர்வள ஆதார அமைப்பு மணல், வைக்கோல், தார்பாய்களை கொண்டு அடைக்க முயற்சிப்பது அந்த செலவை அரசின் தலையில் கட்டும் நிலையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பெரும்பாலான பணிகள் காகிதத்துடன் முடித்து ஒப்படைக்கப்படுகிறது. அரசு ஒதுக்கும் கோடான கோடி பணம்... என்ன ஆனது. நிலத்தடி நீர் சரிவுக்கு நீர்வள ஆதார அமைப்பின் மெத்தனமே காரணமில்லையா...?

இன்னும் எத்தனை ஷட்டர்கள், அணைகள் உடையுமோ?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com